அந்தப் பெரியவருக்கு ஏதாவது பெயர் இருந்திருக்கும். ‘விறகுக்கடை அய்யன்’ என்றுதான் எனக்குத் தெரியும். ஏதோவொரு காலத்தில் பக்கத்து ஊரில் இருந்த விறகுக் கடையொன்றில் மரம் பிளக்கும் வேலையைச் செய்து வந்தவர். அந்தக் கடை மூடப்பட்ட பிறகு அவருக்கு நிரந்தர வேலை என எதுவுமில்லை. தனது மிதிவண்டியின் பின்புறத்தில் கோடரியை மாட்டிக் கொண்டு வந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்பார். யாராவது விறகு பிளந்து தரச் சொல்லிக் கேட்டால் மிதிவண்டியை எடுத்துச் சென்று பிளந்து தருவார். எத்தனை மனுவு பிளக்கிறாரோ அதற்கேற்ப பணம். விறகை மனுவுக் கணக்கில் எடைபோடுவார்கள். ஒரு மனுவுக்கு சுமார் பத்து கிலோ எடை தேறும்.
எங்கள் வீட்டிலும் பிளந்திருக்கிறார். வெறும் கோவணத்தோடு அவர் கோடரியை ஓங்கி விறகின் மீது போடும் ஒவ்வொரு முறையும் ‘உஷ்ஷ்’ என்ற சப்தத்துடன் காற்றை வாய் வழியாக வெளியிடுவார். எந்த வேலையைச் செய்தாலும் அவரைப் போலவே ‘உஷ்’ என்று திரிந்திருக்கிறேன். அய்யனுக்கு வயதாகியிருந்ததன் தளர்ச்சி தெரிந்தாலும் புஜங்கள் கட்டுடன் இருக்கும். காலங்காலமாக உழைத்த உடல்.
(Art: Gregory Radionov)
அய்யனுக்கு வாரிசு இல்லை. மனைவி இறந்த பிறகு மறு திருமணமும் செய்து கொள்ளவில்லை. பக்கத்து ஊரில் வாடகைக்கு ஓர் அறை பிடித்துத் தங்கியிருந்தார். விறகுக்கடை இருந்தவரை கடையிலேயே தங்கியிருந்திருக்கிறார். விறகுக்கடைக்காரரின் மகன் தலையெடுத்த பிறகு கடையில் ஓட்டமில்லை என்று அந்தத் தொழிலை நிறுத்திவிட்டார். அய்யனுக்கு போக்கிடமில்லை. அப்படித்தான் வாடகைக்கு அறை பிடித்திருந்தார். அதன் பிறகும் அவருக்கு அந்தக் கோடரி மட்டுமே சோறு போட்டுக் கொண்டிருந்தது.
இருபதாண்டுகளுக்கு முன்பாக உள்ளூரில் உணவகங்களில் சமையலுக்கும் விறகுதான் பயன்படுத்தினார்கள் என்பதால் அய்யனுக்கு நிறைய வேலை இருக்கும். ‘கெழவனுக்கு வெகு கிராக்கி..ஆள் சிக்கறதேயில்ல’என்பார்கள். அதுவும் மழைக் காலமாக இருந்தால் எப்பொழுதாவது வெட்டாப்பு விட்டு வெயிலடிக்கும் போது விறகைப் பிளந்து போட்டுக் காய வைத்தால்தான் உண்டு. இல்லையென்றால் அடுப்பெரிக்க வெகு சிரமம் ஆகிவிடும். அய்யனைப் பிடிக்க ஆளாய் பறப்பார்கள்.
இதே போன்ற மழைக்காலம் அது. ஆயுத பூஜை தினம். காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் வாய்க்காலுக்குக் குளிக்கச் சென்றிருந்தோம். கரை ததும்ப செந்தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுதென்றால் இறங்கவே மனம் யோசிக்கும். அந்த நீர் எதையெல்லாம் அடித்து வருகிறதோ என்ற தயக்கம் வந்துவிடுகிறது. அப்பொழுது அதெல்லாம் பொருட்டேயில்லை. ‘சளி புடிச்சுக்கும்டா’ என்று வீட்டில் சொன்னாலும் காதிலேயே விழாது. பெரியவர்கள் சொல்வது போல சளியும் பிடிக்காது. உச்சியில் வெயில் ஏறும் வரைக்கும் வாய்க்காலிலேயே கிடப்பதில் தனிச் சுகம்.
நாங்கள் சென்ற போது காலை எட்டு மணியிருக்கும். நான்கைந்து பையன்கள் சென்றிருந்தோம். அய்யனும் அங்கேதான் இருந்தார். எங்களைப் பார்த்துவிட்டு ‘இங்க வாங்கடா’என்றார். நாவல் மரத்தடியில் அமரச் சொல்லி ஆளுக்குக் கொஞ்சம் பொரி கொடுத்தார். பொரிக்காகிதத்தில் (மெல்லிய பாலித்தீன் பை) கட்டி வைத்திருந்தை அவிழ்த்து கைகளைக் குவிக்கச் சொல்லி அள்ளி வைத்தார். அன்றைய தினம் பக்கத்துத் தோட்டத்திலிருந்து வாழையின் பக்கக்கன்றுகள் இரண்டை அறுத்தெடுத்து வந்து கோடரியின் இரண்டு பக்கமும் வைத்து பூசை செய்து முடித்திருந்தார். நாவல் மரத்தடியில் ஒரு பிள்ளையார் உண்டு. அந்தப் பிள்ளையார் முன்பாக கோடரி இருந்தது. ‘புஸ்தகத்துக்கு பூசை செஞ்சு ஒழுங்கா படிச்சுட்டீங்கன்னா புத்தியை வெச்சு சம்பாதிச்சுக்கலாம்...ஏமாந்து கோட்டை விட்டுட்டீங்கன்னா உடம்பை வெச்சுத்தான் சம்பாதிக்கோணும்...அதுக்குத்தான் சரஸ்வதி பூசையும் ஆயுத பூசையும் ஒட்டுக்கா வருது’என்றார்.
எதிர்பாராமல் கிடைத்த பொரி அது. அய்யனைவிடவும், அய்யன் சொன்னதைவிடவும் எங்களுக்கு அவர் கொடுத்த பொரி பற்றித்தான் கவனமிருந்தது. நாங்கள் குதூகலத்தோடு தின்னத் தொடங்கியிருந்தோம். அய்யன் அங்கேயிருந்த பிள்ளையார் திண்டு மீது அமர்ந்தபடி அழுதார். சப்தமில்லாத விசும்பல். அவ்வளவு வயதானவர் அழுவதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. எங்களுக்குள் சைகை காட்டிக் கொண்டோம். மெல்ல எழுந்து குளிக்கச் சென்றுவிட்டோம்.
காலம் வேகமாக மாறத் தொடங்கியிருந்தது. எரிவாயு பரவலான பிறகு வீடுகளில் கூட விறகு வாங்குவது வெகுவாகக் குறைந்து போனது. உணவகங்களிலும் கூட எரிவாயுதான் பிரதானமாகியிருந்தது. அய்யன் அதன் பிறகும் வெகு காலம் உயிரோடிருந்தார். ஆனால் மிதிவண்டி இல்லாமல் நடந்து செல்வார். தோளில் துண்டு கிடப்பது போல கோடரி கிடக்கும். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அய்யனின் அந்தக் கோலம்தான் துலக்கமாக நினைவில் இருக்கிறது. ‘பஞ்சத்துக்கு சைக்கிளைக் கூட வித்துட்டாரு’ என்று சொன்னார்கள். அவர் இன்னமும் கூடுதலாகத் தளர்ந்திருந்தார்.
வாழ்க்கையில் சில மனிதர்களை மறக்கவே முடியாது. அவர்களோடு பேசியிருக்க மாட்டோம். பழகியிருக்க மாட்டோம். ஆனால் அவர்களது ஏதாவொரு செய்கை அல்லது பாவனை பசுமரத்தில் அடித்த ஆணியென மனதுக்குள் பதிந்துவிடும். விறகுக்கடை அய்யனின் அந்தக் கண்ணீரும் அப்படித்தான். எதற்காக அழுதிருப்பார் என்று இப்பொழுது கூட யோசிக்கத் தோன்றும். எந்தக் காரணத்தை முடிவு செய்தாலும் அது நம்முடைய கற்பனைதான். அதையெல்லாம் தாண்டிய வேறொரு காரணத்திற்காகவும் அவர் அழுதிருக்கக் கூடும்.
மனிதன் சிரிப்பதற்கும் அழுவதற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன.
மனிதன் சிரிப்பதற்கும் அழுவதற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன.
அய்யனின் கடைசிக்காலம் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் அவருக்கு அந்திமக்காலத்தில் அவருக்கு அரசாங்கத்தின் ஆதரவற்றோர் நிதி வந்து கொண்டிருந்தது. அதில் கொஞ்சம் மிச்சம்பிடித்து ஒரு கடைக்காரரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் தன்னுடைய இறுதிக் காரியத்துக்கு அந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி சொல்லியிருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள். கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அய்யன் இறந்து போனார். அவர் பணம் கொடுத்து வைத்திருந்தவரே முன்னின்று எல்லாக் காரியத்தையும் செய்தாராம். அந்தக் கோடரி பற்றித் தெரியவில்லை.
இன்றைக்கும் ஆயுத பூஜையின் போது அய்யனின் கோடரி நினைவுக்கு வந்துவிடுகிறது. என்றைக்கும் நினைவில் நிழலாடும்.
அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்.
4 எதிர் சப்தங்கள்:
//அய்யன் அங்கேயிருந்த பிள்ளையார் திண்டு மீது அமர்ந்தபடி அழுதார். சப்தமில்லாத விசும்பல். அவ்வளவு வயதானவர் அழுவதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது.//
அய்யன் பற்றிய அனுபவ பகிர்வுக்கு நன்றி
"எத்தனை மனுவு பிளக்கிறாரோ அதற்கேற்ப பணம். விறகை மனுவுக் கணக்கில் எடைபோடுவார்கள். ஒரு மனுவுக்கு சுமார் பத்து கிலோ எடை தேறும்."
மனுவுக்கு என்ற சொல்லாடலை, படித்தவுடன் மஸ்கட்டில் இருந்து ஈரோட்டுக்கு ஒருமுறை வந்து விட்டு போனது போல் இருந்தது. ஆரம்ப பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அருகாமையில் இருக்கும் மர அறுப்பு மில்லிற்கு அடிக்கடி போவேன். அங்கே உள்ள கிணற்றில் தண்ணி சேந்தி தான் எங்கள் வீட்டு தொட்டியில் உபயோகத்திற்கு நீர் நிரப்புவார்கள். ஆனாலும், நான் அங்கே போவதற்கு ஒரு முக்கிய காரணம், அங்கே, மில் ஓனர் தினசரி பேப்பர் வாங்குவார். வெள்ளி கிழமைகளில் இலவச இணைப்பாக "சிறுவர் மலர்" வரும் . அதை படிப்பதற்கு வீட்டுக்கு எடுத்து செல்லலாம்.இதற்காகவே, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்கே ஆஜர் ஆகிடுவேன்.
இயந்திரங்களை கொண்ட அறுப்பு மில் அது , அங்கே அந்தமான், மலேயா மரங்கள் வெட்டப்பட்டு திரும்ப வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். மிச்சம் விழும் மரத்துண்டுகளை மனுவுக்கு இத்தனை ரூவா னு சொல்லி உள்ளூரில் வாங்கிட்டு போவாங்க. அங்கே வேலை பார்த்த ஒருவர் (இவர் தான் எனக்கு சிறுவர் மலர் எடுத்து தருபவர்), எங்களுக்கு மிச்சமான ஒரு ரீப்பரில் கிரிக்கெட் மட்டை செய்து கொடுத்தார். அதை வைத்து நான் எனது பள்ளி நண்பர்களோடு தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்போம். இப்படியாக நிறைய நினைவுகள்.. இங்கே இத்தோடு போதும்..
ஒரு சொல் எவ்வளவு நினைவலைகளை கிளப்புகிறது.
ஆயுத பூஜை - ஒரு மத சடங்கு என்பதையெல்லாம் தாண்டி , உழைக்கும் மக்களின் உயர்வான ஒரு திருவிழாவாகவாக கொண்டாடுவோம்.
உலக தொழிலாளிகள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
-சே சரவணன்
அவர் தனியாக அழுது விசும்பியதுதான் திரும்ப திரும்ப நினைவில் வருகிறது.எதற்கு அழுதிருப்பார் தன் தனிமையை நினைத்தா? முதுமையில் தனிமை கடினம்தான். தன் இறுதி சடங்கிற்காக இன்னொருவரிடம் சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைத்திருக்கிறாரென்றால்...
sir
ithu pola than yenakummm oru kodari vetupavarai theriyummmmm...kadaisi natkalil unavu thanthal kuda unavu vankamal veta yethavathu iruka yena ketttaarrr
Post a Comment