Oct 15, 2018

சங்கர்- கனவுகளின் நாயகன்

வருடத்தின் தொடக்கத்தில் அனேகமாக பிப்ரவரி மாதமாக இருக்கக் கூடும். சங்கர்  ஐ.ஏ.எஸ் அகடமியிலிருந்து அழைத்திருந்தார்கள். ‘உங்க கூட சார் பேசணும்ன்னு சொன்னாரு...எந்த டைம்ல கூப்பிடணும்ன்னு கேட்டார்’ என்றார்கள். சங்கர் பற்றி ஏற்கனவே நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நேர்காணல்களையும் வாசித்திருந்தேன். அன்றைய தினம் மாலை ஐந்து மணிவாக்கில் அவரே அழைத்தார்.


‘நீங்க கோபியா? ரொம்ப சந்தோஷம்’ என்று புன்னகையுடன் ஆரம்பித்தார். சூப்பர் 16 என்று கிராமப்புற இளைஞர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வழியாக பயிற்சியளிக்கும் திட்டம் பற்றிய கட்டுரையை யாரோ அவரிடம் அளித்திருக்கிறார்கள். அதன் பிறகு நிசப்தம் கட்டுரைகளில் சிலவற்றை வாசித்திருக்கிறார். ‘ரொம்ப நல்லா செய்யறீங்க’ என்றார். என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டுவிட்டு ‘நீங்க ஒண்ணும் யோசிக்காதீங்க..பசங்களை அனுப்பி வைங்க...நம்ம அகடமியில் படிக்க வைப்போம்’ என்று சொன்னார்.

‘சார்...நாங்க எடுத்திருக்கிற பசங்களுக்கு அடிப்படையான தைரியமே குறைவா இருக்கு’ என்றேன். 

‘புரியுதுங்க...நானெல்லாம் கூட அந்த மாதிரியான பேக்ரவுண்ட்தான்.. ஆரம்பகட்ட பயிற்சியைக் கொடுங்க...அவங்களுக்கு கொஞ்சம் தைரியம் வரட்டும்...நானே கூட நல்ல பயிற்சியாளர்களை அனுப்பி வைக்கிறேன்..தொடக்கப் பயிற்சிக்குப் பிறகு அகடமியில் சேர்த்துக்கலாம்’என்றார். இப்படியெல்லாம் ஒருவரைத் தேடிப்பிடித்து பேச வேண்டும் என்கிற அவசியமேயில்லை. ஆனால் தொடர்ச்சியாகப் பேசினார். எனக்கும் அது நல்ல திட்டமாகத் தெரிந்தது. ஆனால் கட்டணம் எவ்வளவு கேட்பார்கள் என்ற பயமிருந்தது. தனியார் நிறுவனங்களுக்கு அறக்கட்டளையிலிருந்து பணம் கொடுப்பது சரியாக இருக்காது என்ற தயக்கம்தான் காரணம். அதை நேரடியாகக் கேட்பது சரியா என்றும் தெரியவில்லை. அவரேதான் சொன்னார். ‘ஃபீஸ் பத்தியெல்லாம் எதுவும் யோசிக்காதீங்க...நீங்க கைகாட்டுற பசங்களுக்கு கம்ப்ளீட் ப்ரீ’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். அதன் பிறகு ஒன்றிரண்டு முறை அலைபேசியில் பேசியிருக்கிறேன். சில திட்டங்களைச் செயல்படுத்தச் சொன்னார். ‘தமிழ்நாட்டுக்குள்ள வந்துடுங்க மணி...இன்னமும் நிறையக் காரியங்களைச் செய்ய ஏதுவாக இருக்கும்’ என்று சொன்னவர்களில் அவரும் ஒருவர். தேர்வுகள் குறித்தான எந்தச் சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்பதுண்டு. என்னைவிட வயதில் மூத்தவர். அண்ணா என்று விளிப்பது வழமையாகியிருந்தது. நான் மட்டுமில்லை நிறையப் பேர் அவரை அப்படித்தான் அழைத்தார்கள்.

சென்னை வரும் போது ஒரு நாள் நேரில் சந்திக்க விரும்புவதாகவும் சொல்லியிருந்தார். எனக்கும் விருப்பம்தான். ஆனால் பெரிய மனிதர்களைச் சந்திக்கும் போது அவர்கள் சொன்ன வேலையை முடித்துவிட்டுச் சந்திக்க வேண்டும் என நினைப்பேன். நான்கைந்து மாணவர்களின் பட்டியலைத் தயாரித்துவிட்டு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவரைச் சந்திக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். நீண்டகாலத்துக்கு சங்கருடன் தொடர்பு இருக்க வேண்டும் எனவும் அதன்வழியாக நிறையப் பேரை வெற்றியாளர்களாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையிருந்தது. 

எல்லாமும் உடைந்து நொறுங்கிவிட்டது.

சங்கர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து மனம் பேதலித்துப் போனது. உண்மையாகவே ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. எவ்வளவு சுலபமாக ஒரு ஜாம்பவானின் வாழ்க்கை முடிந்துவிட்டது? பறவையின் சிறகு உதிர்வதைப் போல. கடந்த பதினைந்தாண்டுகளில் அவர் கிட்டத்தட்ட மெளனப்புரட்சியைச் செய்திருக்கிறார். எத்தனை பேர்களை மிகப்பெரிய அதிகாரிகளாக்கியிருக்கிறார்கள்? அதில் பலருக்கும் எந்தக் கட்டணமுமில்லாமல் பாடம் நடத்தியிருக்கிறார்.  ‘சங்கர் அகடமியில் சேரணும்’ என்று கனவுளுடன் பேசிய மாணவர்கள் எவ்வளவு பேர்? அத்தனை பேர்களின் கனவுகளும் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

அவரது மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும், அவரை நம்பிய பல நூறு மாணவர்களுக்கும் மனப்பூர்வமான ஆறுதல்கள். 

சங்கரின் மரணத்துக்குள் சென்று விசாரணை நடத்த விரும்பவில்லை. குடும்பப்பிரச்சினை, அன்றைய தினம் குடித்திருந்தார் என்று செய்திகள் வருகின்றன. எந்தச் செய்தியின் மீதும் எனக்கு முழுமையான நம்பிக்கையில்லை. என்ன காரணமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். சங்கர் இந்த வயதில் இறந்திருக்கக் கூடாது. அவர் இன்னமும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். சங்கரின் மரணம் என்பது தனிமனிதனின் மரணமில்லை. சமூகத்துக்கான இழப்பு. தமிழகம் தனது தூண்களில் ஒன்றை இழந்திருக்கிறது. தமிழகத்து இளைஞர்கள் மிகப்பெரிய பொறுப்புகளை அடைய வலுவான ஏணி அவர். சங்கரைப் போன்ற இன்னொருவர் உருவாகி வர நூறாண்டுகாலம் தேவைப்படலாம். ஒருவேளை அப்படியொரு மனிதர் எந்தக் காலத்திலும் உருவாக சாத்தியமில்லாமலும் போகலாம். 

9 எதிர் சப்தங்கள்:

Gopi said...

A really terrible loss. Deep condolences to his family and his students. Hope he has groomed someone to take up his role. Let god bless his soul with all the peace for his service to society.

செல்வேந்திரன் பொங்கியண்ணன் said...

சங்கர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து மனம் பேதலித்துப் போனது.எனக்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இதுவரை இல்லை.அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.என்னுடைய புரிதலின் படி மிகவும் இயல்பான மனிதர்.உதவும் எண்ணம் உடையவர்.வரலாறு படைத்தவர். நிறைய இழப்புகளை சந்தித்தவர்.
அவரது இழப்பு பெரிதும் விரக்தி அடைய செய்கிறது.அவரது மரணம் வெகுவாக பாதிக்கிறது.
என் உடன் இருந்த ஒரு உறவு இல்லாமல் போனதை விட பெரிய வலியை மனம் உணருகிறது.
இந்த மாறி ஒரு மரணம் அவருக்கு நிகழ ஒரு துளியும் வாய்ப்பு இல்லை என்றே மனம் சொல்கிறது.

"என்ன காரணமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். சங்கர் இந்த வயதில் இறந்திருக்கக் கூடாது. அவர் இன்னமும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்.
சங்கரின் மரணம் என்பது தனிமனிதனின் மரணமில்லை. சமூகத்துக்கான இழப்பு. "
"சங்கரைப் போன்ற இன்னொருவர் உருவாகி வர நூறாண்டுகாலம் தேவைப்படலாம். ஒருவேளை அப்படியொரு மனிதர் எந்தக் காலத்திலும் உருவாக சாத்தியமில்லாமலும் போகலாம். "

சேக்காளி said...

//சங்கரின் மரணம் என்பது தனிமனிதனின் மரணமில்லை. சமூகத்துக்கான இழப்பு. தமிழகம் தனது தூண்களில் ஒன்றை இழந்திருக்கிறது. தமிழகத்து இளைஞர்கள் மிகப்பெரிய பொறுப்புகளை அடைய வலுவான ஏணி அவர். சங்கரைப் போன்ற இன்னொருவர் உருவாகி வர நூறாண்டுகாலம் தேவைப்படலாம். ஒருவேளை அப்படியொரு மனிதர் எந்தக் காலத்திலும் உருவாக சாத்தியமில்லாமலும் போகலாம்.//
நூறு சதவீதம் உண்மை.
ஒரு வயதான கிழவி இறந்தால் அத்தோடு நூறு சொந்தங்களை இழந்து விடுவோம் என்று.
அதேபோல் அந்த மௌனபுரட்சி முடிவுற்று விட்டது.

Kumar AK said...

Really feeling painful... It's should not be happened...

Bala's Blog said...

Very true Mani. Well said.

Selvaraj said...

செய்தியில் வந்தபிறகுதான் இவரை பற்றி தெரியும். இவரை போன்ற உதவும் குணம் படைத்த ஆளுமை தற்கொலை செய்தது நிச்சயம் வருந்தத்தக்கது,மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை சீர்குலைவையும் விரக்தியையும் ஏற்படுத்திவிடும்.இவரின் குடும்பத்தினர் இந்த பெருந்துயரத்திலிருந்து விரைவில் மீண்டுவருவார்களாக...

Anonymous said...

Anin Manam Oru pakkam thelivagavum oru pakkam kozhaiyagavum ulladhu enbadhu therigiruathu.

Anonymous said...

Do Not Stand At My Grave And Weep
By Mary Elizabeth Frye

Do not stand at my grave and weep
I am not there; I do not sleep.
I am a thousand winds that blow,
I am the diamond glints on snow,
I am the sun on ripened grain,
I am the gentle autumn rain.
When you awaken in the morning's hush
I am the swift uplifting rush
Of quiet birds in circled flight.
I am the soft stars that shine at night.
Do not stand at my grave and cry,
I am not there; I did not die.Jaypon , Canada said...

I read him about after his death only. Very sad. This news would totally give negative impact on the service he had been giving to the society. A big loss to Tamil society. May his soul rest in peace.