Oct 19, 2018

தொரவலூர் சம்பத்

தொரவலூர் சம்பத் பற்றி எழுத வேண்டும் என வெகு நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். திருப்பூர் மாவட்டத்தில் அநேகம் பேருக்கு அவரைத் தெரிந்திருக்கும். கிராமிய மக்கள் இயக்கம் என்று ஓர் அமைப்பை வைத்திருக்கிறார். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்த குழுவினரில் முக்கியமான ஒருவர். தனது மணிக்கட்டில் எப்பொழுதும் அவிநாசி அத்திக்கடவு திட்டம் என்று எழுதப்பட்ட ஒரு ‘Band’அணிந்திருப்பார். இது அவரைப் பற்றிய பரவலான அறிமுகம்.


இதையெல்லாம்  தாண்டி அவர் செய்யும் சில காரியங்கள் முக்கியமானவை. 

சகட்டுமேனிக்கு மரங்களை நடுகிறார். யாராவது உடன் வருகிறார்களா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை.  அதுவும் சமீபகாலத்தில் இந்த வேகம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. முரட்டுத்தனமான வேகம்.  ‘ஆயிரம் செடி வைத்தால் பத்தாவது பிழைக்குமல்லவா?’ என்று கேட்கும் நம்பிக்கையே அவரை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

பொதுவாகவே மழைக்காலம் தொடங்கும் போது நிறைய நண்பர்கள் ‘இந்த வருஷம் மரம் நட ஆரம்பிக்கணும்’ என்று பேசத் தொடங்குவார்கள். மழைக்காலம் முடியும் வரைக்கும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். பேசிக் கொண்டேயிருப்பார்கள். பேசிக் கொண்டேயிருப்பார்கள். மழை நின்றுவிடும். அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. பெரும்பாலானவர்கள் அப்படித்தான். பொதுக்காரியங்களைப் பொறுத்தவரைக்கும் பெரிய அளவில் யோசிக்காமல் களத்தில் இறங்கிவிட வேண்டும். ஆற அமர்ந்து திட்டமிட்டுக் கொண்டிருந்தால் சத்தியமாக ஒரு இன்ச் கூட நகர மாட்டோம். 

சம்பத் அப்படியானவர்தான். எதைப் பற்றியும் யோசிப்பதில்லை.  கடந்த பதினைந்து வாரங்களில் தொடர்ச்சியாக குளம் குட்டைகளாகப் பார்த்து பனைவிதைகளை நடுவது, மரக்கன்றுகளை நடுவது என அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான விதைகளை மண்ணில் புதைத்திருக்கக் கூடும். அவரிடம் ஒரு பழைய மகிழ்வுந்து இருக்கிறது. அதன் பின்புறம் எப்பொழுதும் கடப்பாரை, மண்வெட்டி, கொத்து மாதிரியான ஆயுதங்கள் கிடக்கின்றன. தனது பணியாளர் பழனியை சேர்த்துக் கொண்டு விதைகளை நடுவதும், மரங்களை நடுவதும் என சலிப்பில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். செலவு மொத்தமும் சொந்தக் காசு.

‘புதுப்பாளையத்தில் ஒரு குட்டை இருக்குதுங்கண்ணா...நூறு விதை போடலாம்’ என்று சொன்னால் போதும். நாள் குறித்துவிடுவார். 

‘ஆளுங்க இருப்பாங்களா?’ என்பார். 

இருக்கிறார்கள் என்று சொன்னால் ஆட்களின் எண்ணிக்கையை வைத்து மணிக்கணக்கு போட்டுவிடுகிறார் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை அவருக்கு. ‘நானு, நீங்க, பழனி மூணு பேரும் போதும்...மூணு, நாலு மணி நேரத்துல முடிச்சுடலாம்’ என்று அசால்ட் ஆறுமுகமாகிவிடுவார். நமக்குத்தான் இடுப்பு எலும்பு கழன்றுவிடும்.  கடந்த வாரம் அவரோடு சென்றிருந்தோம். பனைவிதை நடவுதான். நல்லவேளையாக கோபி கலைக்கல்லூரி மாணவர்களும் வந்திருந்தார்கள். அவர்களோடு கொஞ்ச நேரம் நிற்பதற்குள்ளேயே வெயிலில் தாவு தீர்ந்துவிட்டது. சம்பத்துக்கு வெயிலும் பொருட்டில்லை; முள்ளும் பொருட்டில்லை. 

‘எப்படி இந்த மனுஷன் ஓயாமல் அலைகிறார்’ அவரைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

சம்பத் தனது  ஊரில் அடர்வனம் அமைத்திருக்கிறார். பொது இடம்தான். அநேகமாக ஆயிரம் மரங்கள் இருக்கக் கூடும். வறக்காடு. இதுவரைக்கும் டேங்கர் நீருக்கு விலை கொடுத்து வாங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கில் செலவு பிடிக்கும். ‘வீட்ல ஒண்ணும் சொல்லமாட்டாங்களாண்ணா?’ என்று பொறுக்காமல் கேட்டே விட்டேன். வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரது மனைவி இவரைவிட வேகமாக இருக்கிறார். ‘மழைக் காலம் வர வரைக்கும் ஊத்திட்டா அப்புறம் உசுரு புடிச்சுக்குமுங்க’என்றார். இத்தகைய காரியங்களில் ஒருவன் எவ்வளவுதான் ஆர்வமிக்கவன் என்றாலும் வீட்டில் முகம் சுளிக்காதவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். 

பொதுவாகவே சமீபகாலமாக பசுமை, மரம் வளர்ப்பு குறித்தான ஆர்வமும் பரவலாகவே பெருகியிருக்கிறது. பேருந்துகளிலும் தொடரூர்திகளிலும் செல்லும் போது கவனித்துப் பார்த்தால் தெரியும். பெரும்பாலான இடங்கள் பச்சையடிக்கின்றன. இன்னமும் பத்திருபது வருடங்களுக்கு இந்த விழிப்புணர்வு தொடர்ந்தால் ஓரளவு தப்பிவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. சம்பத் மாதிரியானவர்கள் பசுமை இயக்கத்தில் முக்கியமானவர்கள். தனிமனித இயக்கமாகச் செயல்படுகிறவர்கள். சம்பத்துக்கு மக்களிடையேயும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று கணிசமாக நம்புகிறார்கள். பெரிய எதிர்பார்ப்பில்லாமல் தொடர்ந்து களமாடுகின்ற சம்பத் போன்ற மனிதர்களுக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கும். எல்லாக் காலத்துக்கும்.

(திரு.சம்பத் அவர்களின் எண்: 93630 00750)
பழனியும் சம்பத்தும் செஃல்பி :) 


10 எதிர் சப்தங்கள்:

Dr. K. Kalaiselvi said...

Super sir..

Saravanan Sekar said...

திரு. சம்பத் பற்றி படித்தவுடன் உடலிலும் மனதிலும் ஒரு 100 யானை பலம் வருதுங்க.. Superb.

Selvaraj said...

ம்ம்ம் சுயநலமில்லாத மனிதர்கள். தனக்கு தனக்கு என்று ஓடுபவர்களுக்கு மத்தியில் பொதுக்காரியங்களுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் இவர்களைபோன்றவர்கள் நம்மை வெட்கப்படவைத்துவிடுகிறார்கள். . எங்கள் ஊரில் மரங்களுக்கு ஒன்றும் குறைவில்லை ஆனால் இப்போது பெரும்பாலான நிலங்களில் வாழைமரங்களையும் வளர்ந்த தென்னைமரங்களையும் அழித்துவிட்டு ரப்பர் மரங்களை மட்டுமே நட்டிருக்கிறார்கள்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அன்பிற்கினியீர்,இன்றைய நிசப்தம் பதிவில் உங்கள் சமுதாயப் பணி தொடர்பான செய்தி அறிந்து மனம் நெகிழ்ந்து போனேன். பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.பேராசிரியர்.கோபாலகிருட்டிணன்
9994240629 9344053440
#தொரவலூர் சம்பத்துக்கு அனுப்பிய குறுந்தகவல்#

Unknown said...

Truly amazing.....

Jaypon , Canada said...

தொரவலூர் சம்பத் வாழ்க வளமுடன்

Unknown said...

வணக்கம்,நான் தொரவலூர் சம்பத்.நம்முடைய நிசப்தம் திரு.மணிகண்டன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.என்னை பற்றி இந்த அளவு கவனித்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை.நான் மேலும் நிறைய விசயங்கள் செய்ய திரு.மணி அவர்களுடைய பதிவு உந்துகோலாக அமையும் என்றே கருதுகிறேன்.மேலும் நான் என்னை தயார் படுத்துக் கொள்ள இது உதவும்.தொரவலூர் கிராமத்தில் இருக்கும் சம்பத்தால் செய்ய முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது என்று சிந்தியுங்கள்.பசுமை படைப்போம் சுற்றுச்சூழல் காப்போம் அனைவருக்கும் நன்றி,பசுமை வணக்கம்.வாழ்க வளமுடன்

Unknown said...

இவர் செய்யும் இந்த நற்செயல் அடுத்த தலைமுறை மக்கள் இயற்கை வளமோடு வாழ... அடுத்த தலைமுறைக்கும் இவர் எங்களோடு இருக்க அந்த இயற்கை கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

SK APPARELS said...

சம்பத் அண்ணணின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

Unknown said...

வணக்கம் நான் தொரவலூர் மணிகண்டன்... கடைசியாக பதிவிட்ட தகவல்(12.45am) திரு.சம்பத் அண்ணன் அவர்களுக்காக.......மணி-9788797007