Sep 26, 2018

பயம்

ஒரு நண்பரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். வேளச்சேரியில் ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்தோம். வழமையான உரையாடலின் இடையில் ‘என்னவோ தெரியல...பயமாவே இருக்கு’ என்றார். பேச்சுவாக்கில் சொன்ன வாக்கியம் அது. சட்டென்று உறுத்தியது. பொதுவாக எல்லோரிடமும் இப்படிச் சொல்லத் தோன்றாது. ‘நான் வலுவானவன்’ என்று காட்டிக் கொள்ளவே மனம் எத்தனிக்கும். அடுத்த சில கணங்களுக்கு மனம் சலனமற்றுப் போனது. சலனமற்று என்றால் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் எதுவும் காதில் ஏறவில்லை.

சென்னையின் வெக்கை கசகசத்துக் கொண்டிருந்தது. 

குழந்தை மெல்ல எதையாவது பற்றத் தொடங்கும் தருணத்தில் ஆரம்பித்து மரணப்படுக்கையில் விழும் வரை- வீழ்ந்த பிறகும் கூட பயம் ஒரு நிழலைப் போல நம்மைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த உலகம் தொடர்ந்து நம்மை பயமூட்டியபடியே இயங்குகிறது. எல்லாவற்றிலும் அடையாளமில்லாத ஒரு பயமுண்டு. திடீரென்று எதையாவது நினைத்து மனம் பதறிப் போகும். ‘ச்சீ..அப்படியெல்லாம் நடக்காது’ என்று சுதாரிக்கும் போது அது ஒரு துர்கனவைப் போல நம்மை அலைகழித்திருக்கும். 

நண்பரிடம்  அடுத்துப் பேச வேண்டிய வாக்கியத்திற்கான சொற்களை மனம் துழாவிக் கொண்டிருந்தது. இப்படி யாராவது ஒன்றைச் சொல்லும் போது ‘நாமும் அப்படித்தானே’ என்று யோசித்துக் கொள்வேன். ஆமாம். யாருக்குத்தான் பயமில்லை? சம்பந்தமில்லாத பயம் வந்து போகும்.  ‘ஏன் இப்படி பயந்தேன்?’ என்று பிறிதொரு சமயத்தில் யோசிப்பதுண்டு.

‘உசுரைத் தவிர எல்லாமே மசுருக்குச் சமானம்’ என்றொரு சொலவடை உண்டு. உயிர் மட்டுமே மீட்டெடுக்க முடியாதவொன்று. இல்லையா? பிற எல்லாவற்றையும் திரும்ப அடைந்துவிடலாம் அல்லது இழந்ததற்குச் சமமான இன்னொன்றை நோக்கிப் பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். எப்பொழுதெல்லாம் பயம் பீடிக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த வாசகத்தை நினைத்துக் கொள்வதுண்டு. 

உதாரணங்கள் இல்லாமல் இல்லை. 

முந்தைய தலைமுறையில் இரட்டை மாட்டுவண்டி பூட்டிய சவாரி வண்டியில்தான் போவார்கள். செல்வந்தர் குடும்பம் அது.  சவாரி வண்டியின் பின்னால் குடுவையில் காபி எடுத்துக் கொண்டு ஓர் ஆள்காரன் மிதிவண்டியில் செல்வான் என்றால் பார்த்துக் கொள்ளலாம். அப்படி இருந்த குடும்பம் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டது. சம்பந்தமில்லாத தொழில் ஒன்றில் கால் வைத்தார்கள். யாரெல்லாமோ ஏமாற்றினார்கள். சில ஆண்டுகளில் தொழில் முடங்கி கடன் வளர்ந்தது. சொத்துக்கள் கரைந்தன. கடைசியாக ஒன்றரை ஏக்கர் நிலத்தை இருபது லட்சத்துக்கு விற்றார்கள். ஊரே பார்த்துக் கொண்டிருந்த போது குடியிருந்த வீடு கூட மிச்சமில்லை. ஓட்டாண்டி. 

அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் ‘செத்துப் போனாலும் போய்டுவாங்க’ என்று சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறது. பெரியவர் கிளம்பியவுடன் ‘ஏன் செத்துடுவாங்க?’ என்று அம்மாவிடமும் அப்பாவிடமும் திரும்பத் திரும்பக் கேட்டேன். அவர்கள் விளையாடச் சொன்னார்களே தவிர காரணத்தைச் சொல்லவில்லை. ஆனால் அடுத்த பதினைந்து வருடங்களில் கையூன்றி கர்ணமடித்து எழுந்துவிட்டார். எப்படிச் சம்பாதித்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. இன்னமும் ஊருக்குள் பல வதந்திகள் உலவுகிறது. பழையபடிக்கு இல்லையென்றாலும் மோசமான வாழ்க்கையில்லை. அவருக்கு இன்னமும் வயதிருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் புன்னகைக்கிறார். வாழ்க்கையின் விளிம்பைத் தொட்டுப்பார்த்துவிட்டு வந்தவரின் வறட்டுப் புன்னகை எனத் தோன்றும்படியான புன்னகை அது. இதைக் குறிப்பிடக் காரணம் - எப்படியும் சம்பாதித்துவிட முடியும். அவ்வளவுதான். அதற்காக முடங்கிப் போக வேண்டியதில்லை.

மரணப்படுக்கைக்குச் சென்றுவிட்டு கூட எழுந்து வந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எந்தத் தருணத்திலும் ‘அவ்வளவுதான் முடிந்துவிட்டது’ என்று நினைத்துவிடவே கூடாது. பற்றிக் கொள்ள சிறு கொடி கிடைத்தாலும் கூட பற்களை வெறுவிக் கொண்டு மேலேறி வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளே தகதகத்துக் கொண்டிருந்தால் போதும். அது மட்டுமே எந்தவொரு பயத்தையும் கட்டுக்குள் வைக்கும். கட்டுக்குள் வைக்கும் என்றுதான் சொல்கிறேனே தவிர பயமேயில்லாமல் செய்யும் என்று சொல்லவில்லை. பயமிருக்கும் வரைக்கும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்கிறோம் என்றுதான் அர்த்தம். நாம் எதையோ துணிந்து பார்க்கிறோம் என்று பொருள். வாழ்க்கை தேங்கிவிடாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது என்றுதான் அது நமக்கு உணர்த்துகிறது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் ‘மதிப்பெண் குறைந்துவிடுமோ’ என்கிற பயமிருக்கும் வரைக்கும்தான் அந்த மாணவன் மேலும் படிக்கிறான். இப்படித்தான் எல்லாவற்றிலும்- வேலை, தொழில் தொடங்கி சகலத்திலும். பயம் தவறேயில்லை. ஆனால் பயமே நம்மைத் தின்றுவிடக் கூடாது. 

Attitude is everything.

‘எனக்கு இதுவே போதும்’ என்பது கூட நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சமாதானம்தான். மரத்துப் போன ஒரேவிதமான வாழ்க்கையில் என்ன சுவாரசியமிருக்கிறது? சலிப்புத் தட்டிவிடும். ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ ‘இருப்பது போதும்’ என்ற மனநிலை நல்லதுதான். ஆனால் வாழ்க்கையில் நாம் அண்ணாந்து பார்க்கிற யாருமே பயங்களைத் தாண்டி வந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். உச்சத்தைத் தொட்டவர்கள் யாவருமே பயமூட்டும்படியான ஏதாவதொன்றைச் செய்து அதை வென்று வந்திருக்கிறார்கள். இல்லையென்று மறுக்க முடியுமா? ஏதாவதொரு வடிவில் பயந்திருப்பார்கள். அதை உள்ளே புதைத்து மேலேறியிருப்பார்கள். வென்ற பிறகு ‘அவன் எப்படி ஜெயிச்சான்னு தெரியாதா’ என்று பேசுகிறவர்கள்தான் அதிகம். ஆனால் அவன் உணர்ந்த மேடுபள்ளாங்கள் அவனுக்கு மட்டுமே தெரியும்.

ஒரேயொரு வாழ்க்கைதானே நமக்கு? அதிகபட்சம் எழுபதாண்டு காலம் வாழக் கூடும். பயம் இருந்துவிட்டுப் போகட்டும். உச்சத்தைத் தொட்டுப் பார்க்கவில்லையென்றாலும் அதற்கான முயற்சிகள் இருந்து கொண்டேயிருக்கட்டும். அடைந்தால் உயரம். இல்லையென்றால் அனுபவம். 

7 எதிர் சப்தங்கள்:

MURUGAN RD said...

இரண்டு வேறு வேறு தத்துவம் அல்லது அறிவுரை கருத்துக்களை ஒரே கட்டுரையில் கையாண்டிருக்கிறீர்கள், நீங்கள் சுட்டிக்காட்டிய ஒருவரின வாழ்க்கையைும் இதே கட்டுரையில் எழுதிவிட்டு அதற்கு நேர்எதிரிடையான ஒரு கருத்துதை தன்னம்பிக்கை வரிகளாக உயர்த்தி எழுதியிருக்கீங்க,,, அதனாலோ என்னவோ எனக்கு இது பொருத்தமில்லாமல் தோன்றுகிறது,, வீழ்ந்துவிட்ட பெரிய பணக்காரரை சுட்டிக்காட்டும்போது அவர் எழுந்துவிட்ட கதையையும் எழுதியிருப்பது தன்னம்பிக்கை தரும் கருத்தாக கொண்டாலும் அவர் எழுந்திருக்கும் விதம் பற்றி நாலுபேர் வேறுவிதமாக சொல்கிறார்கள் என்பது சற்று நெருடலாக இருக்கிறது,,, சரியான வழியில் முன்னேறியிருப்பவர்களை பற்றி நிச்சயம் ஊரில் அனைவரும் அப்படி பேசமாட்டார்கள், ஒரு சிலராவது அவர் மீண்டெழுந்ததன் காரணத்தை அறிந்திருப்பார்கள்,,,

மற்றபடி உயிரை தவிர மத்ததெல்லாம் மயிருக்கு சமானம் என்பது நூற்றுக்கு நூறு உண்மையே,,, செத்துப்பிழைத்துப் பார்த்தவர்களுக்கு புரியும்,,, எனக்கும்,,, அகல கால் வைக்காதே என்ற நம்மூர் பழமொழியெல்லாம் சாதாரண எளிய மனிதர்களுக்கான அறிவரை, அதாவது யாராவது அடுத்தர் ஒருவரை பார்த்து தானும் அதுபோல ஆகவேண்டும் என்று நினைத்து முயற்சிப்பவர்களுக்கும், முயற்சிக்காமலே வரவுக்கு மீறி செலவு செய்ய ஆசைப்படுபவர்களுக்குமானது,,

நாற்பது வயசுக்குள்ள முடிஞ்ச அளவு சம்பாதிச்சி முடிச்சிடணும்ங்கிறது பழமொழியல்லாத நம்மூர் முன்னோர்களின் அறிவரை,,, இதன் பின்னால் இருக்கும் நியாயமான காரணங்களை யோசித்துப்பார்த்தால் புரியும், ஆனால் நாமோ (பலர்) அந்த நாற்பது வயசுக்கு மேல்தான் சொந்த வீடு, வசதி, வாய்ப்புகளை சமூத்தில் தனக்கான அந்தஸ்த்தாக கருதிக்கொண்டு ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்க்கையுடனும், கடனுடனும், வட்டியுடனும் மல்லுக்கட்டிக்கொண்டு மனதிற்குள் பூட்டி வைத்துக்கொண்ட மனஉளைச்சலோடு வாழ்வின் இறுதிவரை இயந்திரதனமாக இருக்கிறார்கள்,,

அதே வெளிநாட்டில் நாற்பது வயசுக்கு மேல்தான் தனக்கான வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள், ஆனால் நாமே அந்த நாற்பது வயதில்தான் நோய்களுக்கும், பரபரபுக்கும் ஆளாகி கடமையே என இயந்திரதனமாக வாழ்க்கையில் அடித்துச்செல்லப்படுகிறோம்,,,

எதையும் கவனத்தோடு (சற்று பயத்தோடு) அணுகி, தன் மனதால், உடலால்,, பொருளாதார சூழ்நிலையால்,, உற்றார்,உறவினர்களின் (கிடைக்கும் பட்சத்தில்) உதவியால் எதிர்பாராதமல் நடக்கும் நெகட்டிவ் ரிசல்ட்டை தாங்க முடியுமா என்று யோசித்து செயல்படவேண்டும் என்பதே என் கருத்து,,,

Unknown said...

பில் கேட்ஸ் முதல் செங்கிஸ்கான் வரை.. உலகை ஆளும் பணக்காரர்கள்! - https://www.youtube.com/watch?v=wq7FKdYLEy8

Amanullah said...

உண்மை.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

ஒரேயொரு வாழ்க்கைதானே நமக்கு? அதிகபட்சம் எழுபதாண்டு காலம் வாழக் கூடும். பயம் இருந்துவிட்டுப் போகட்டும்..மணி நூற்றாண்டு காலம் வாழ்க. நோய் நொடியில்லாமல் வாழ்க. வாழ்க வளமுடன்

Siva said...

பயப்படறியா குமாரு?

Anonymous said...

That's not the reason for shedding fear, it's not someone regained from scratch to rich or just 70 years life, it's just looking inwards that it is just not aiding to live life, it deteriorates the NOW., LIVING., one can't attach rationale.,

Anonymous said...

ஒரேயொரு வாழ்க்கைதானே நமக்கு? அதிகபட்சம் எழுபதாண்டு காலம் வாழக் கூடும். பயம் இருந்துவிட்டுப் போகட்டும். உச்சத்தைத் தொட்டுப் பார்க்கவில்லையென்றாலும் அதற்கான முயற்சிகள் இருந்து கொண்டேயிருக்கட்டும். அடைந்தால் உயரம். இல்லையென்றால் அனுபவம். Thank you i was so depressed after reading this feeling much better