Sep 20, 2018

புதிய பாதை

கல்யாணமாகாத வரைக்கும் வீடு மாற்றுவது பெரிய காரியமேயில்லை. பெரும்பாலும் ஒட்டுண்ணி வாழ்க்கைதான். பெருநகரங்களின் ஓரமாக யாராவது நண்பர்கள் அறையெடுத்துத் தங்கியிருப்பார்கள். ஒரு பையைத் தூக்கிக் கொண்டு போனால் ஒட்டிக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்கள் மட்டும் மனம் கொஞ்சம் விட்டேத்தியாக இருக்கும். அதன் பிறகு சகஜமாகிவிடும். 

அழுக்கு முடையேறிய அந்த  அறை நம் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிடும். எல்லாக்காலத்திலும் அழியாத பசும் நினைவுகள் அந்த அறைகளில்தான் கிடைக்கும். அந்த அறையை விட்டு கிளம்பி வருவதாக இருந்தாலும் அதே பையை எடுத்துக் கொண்டு வந்தால் போதும். அறையில் நாம் சேரும் போது இருந்தவர்களில் பலர் மாறியிருப்பார்கள். முன்பிருந்தவர்கள் காலி செய்துவிட்டு புதிதாக யாரோ இணைந்திருப்பார்கள். அங்கேயிருக்கும் வாளி முதல் பிரஷர் குக்கர் வரைக்கும் யாருடையது என்றே தெரியாது. மூதாதையர் காலத்துப் பொருட்கள் போல அவை நம்மோடு பந்தம் கொள்ளும். அந்த வீட்டு உரிமையாளராகப் பார்த்து ‘தம்பி, காலி செஞ்சு கொடுங்க’ என்று சொல்லும் வரை அதுவொரு சங்கிலித் தொடர். சென்னை, ஹைதராபாத் என எல்லா ஊர்களிலும் இப்படித்தான். அதையெல்லாம் வீடு மாறுதல் என்று சொல்லவே மாட்டோம். ‘ரூம் மாறுதல்’தான்.

குடும்பம் என்றாகிவிட்ட பிறகு அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை. வீடு பார்ப்பதிலேயே தாவு தீர்ந்துவிட்டது. வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஆளுக்கு ஒரு தேவை. ஆளுக்கொரு ரசனை. எங்கே போய் தேடுவது? அப்படியே எல்லோருக்கும் பிடித்த மாதிரி அமைந்தால் வாடகை வாயைப் பிளக்க வைக்கிறது. இரண்டு மூன்று சனி, ஞாயிறுகளில் மண்டை காய்ந்து கடைசியாக வீட்டைப் பிடித்து அட்வான்ஸ் கொடுத்த பிறகு ‘ஏழெட்டுப் பேரா? அய்யோ பெரிய குடும்பமாச்சே’ என்று திருப்பி வாங்கிக் கொண்டது கூட நிகழ்ந்தது. ‘எனக்கு பெங்களூர்ல இன்னொரு பேரு இருக்கு’ என்று கூடச் சொல்லிப் பார்த்தேன். ‘எனக்கு கோயமுத்தூர்ல ஒரே பேருதானுங்க’ என்று சொல்லி பல்பு கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.  அதன் பிறகு  பெங்களூரிலிருந்து கோவைக்கு பொருட்களைச் சுமந்து வர வண்டி பிடித்து அவர்கள் ஒவ்வொன்றாய் கீழே இறக்கும் போது ‘அய்யோ...அது மரச்சாமான்..உரசாம எடுங்க’ என்று கதறி  ‘இது கண்ணாடி சார்’ என்று விழி பிதுங்கி அப்படியும் உடைந்து நொறுங்கி உயிர் போய் உயிர் வந்து புது வீட்டில் பிரித்து வைத்து..ஷ்ஷ்ப்பா.

ஆறாவது மாடி. நல்ல வெளிச்சம். நல்ல காற்று. அப்பவும் கூட அம்மாவைப் பொறுத்தவரை ‘கொஞ்சம் எடங்கோடாத்தான் இருக்குது..சொந்த வூட்ட கட்டி வெச்சுட்டு வாடகை கொடுக்க வேண்டிய பொழப்பா இருக்குது’ என்கிறார். அப்படித்தான். ஆறு மாதத்திற்குப் பிறகு சிறியவன் - திருவாசக நந்தன், மாமனார் பெயர் திருஞானம். அப்பா வாசுதேவன். இருவரையும் இணைத்து திருவாசக நந்தன்- வீடு வந்து சேர்ந்திருக்கிறான். அவனை எடுத்துக் கொண்டு காலையில் ஒரு நடை. காகம் பார்த்து குருவி பார்த்து மயில் பார்த்து வந்து கிளம்பி இனி வேலையைப் பார்க்க வேண்டும். 

எழுதுவதில் சிறு இடைவெளி விழுந்துவிட்டது. இனி பழையத் தொடர்ச்சியை உருவாக்க வேண்டும். 

‘பழைய சம்பளத்துக்கு குறைவில்லாமல் வரும்ன்னு நினைக்கிறேன்’ என்று என்று நான்கைந்து பேர்கள் கேட்டுவிட்டார்கள். அக்கறையில்தான் கேட்கிறார்கள். ஆனால் ஒருவிதமான அழுத்தம் இது. புதிய நுட்பம், புதிய பணி. கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. நான்கைந்து புள்ளியியல் புத்தகங்களை வாங்கி விடிய விடிய படித்துக் கொண்டிருக்கிறேன். ஹடூப் என்றும் ஹார்ட்டன் என்றும்  எதையெல்லாம் லேப்டாப்பில் நிறுவ வேண்டும் எனத் துழாவிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே சொன்னது போல பணம் பொருட்டே இல்லை. எப்படியும் சம்பாதித்துவிடலாம். நம்முடைய அறிவும் தன்னம்பிக்கையும்தான் முக்கியம். தன்னம்பிக்கை நிறைய இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். எந்தவொரு ஆணிடமும்   ‘எவ்வளவு சம்பாத்தியம்’ என்று தயவு செய்து எத்தகையை வடிவிலும் கேட்காதீர்கள். அது நடிகையிடம் வயதைக் கேட்பது போல. 

புதிய பாதையொன்றில் பயணிக்க விரும்புகிறவனிடம் இந்தச் சமூகம் முன் வைக்கும் முதல் கேள்வியே இதுதான் -‘எவ்வளவு சம்பாதிக்க முடியும்?’. இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தருணமும் அவனுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச தைரியமும் உடைந்து போய்விடும். ‘இப்போ சம்பாதிக்கிற அளவுக்குக் கூட சம்பாதிக்க முடியாமல் போய்விடுமோ’ என்று நான்கடிகள் பின்னால் நகர்வதற்கு காரணமே இந்தக் கேள்விதான். ஒவ்வொருவருமே சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். வருமானம் பார்த்துவிடத்தான் விரும்புவார்கள். குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைதானே எல்லோருக்கும் இருக்கும்? துணிகிற ஒருவனிடம் வருமானத்தை முன் வைத்துக் கேள்விகேட்டால் ‘இருப்பதே போதும்’ என்றுதான் அவனுக்குத் தோன்றும். சிறகுகளைக் கத்தரித்து குண்டுச்சட்டிக்குள்ளேயே அடைத்து வைப்பதற்கான முதல் கேள்வியே இதுதான்.  

வேலையை ராஜினாமா செய்த பிறகு ஒரு நிகழ்ச்சியில் பேச அழைத்தார்கள். அந்த மேடையில் பேசிய பெரிய மனுஷன் ‘தெரிந்த வேலையை விட்டவன் கெட்டான்’ என்று ஒரு பழமொழியைச் சொன்னார். கடுப்பாகிவிட்டது. அந்த ஆள் மேடையில் இருந்திருந்தால் எதையாவது சொல்லித் திட்டியிருப்பேன். பெரிய மனிதர்கள்தான் பேசிய பிறகு இறங்கிச் சென்றுவிடுவார்கள் அல்லவா? சென்றுவிட்டார். தப்பித்தார்.  உண்மையில் இன்றைய நவீன யுகத்தில் தெரிந்ததை மட்டுமே வைத்துக் கொண்டு தேய்த்துக் கொண்டிருந்தால் வம்பு வந்து சேரும்.  சில மாதங்களுக்கு முன்பாக மேலாளர் அழைத்து ‘நீ ஆர்க்கிடெக்ட் ஆகுற வழியைப் பாரு; டெக்னாலஜியில் புதுசா படி’ என்றார். அப்பொழுதே முடிவு செய்து கொண்டேன். எப்படியிருந்தாலும் படிக்கத்தான் வேண்டும். நமக்கு எதுவுமே தெரியாத புதிதாக ஒன்றைப் படிக்கலாம் என்று. அப்படித்தான் இந்தப் பாதை. 

புதிய தொழில் தொடங்குவது மட்டுமே ரிஸ்க் இல்லை. இருக்கும் வேலையை மாற்றுவது தொடங்கி சமநிலையைக் குலைக்கும் எதுவுமே ரிஸ்க்தான். ஆனால் அதுதான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. என் வயதையொத்தவர்கள், எனக்கு பிறகான தலைமுறையிலிருந்து ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன.  உத்வேகம் கிடைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். சந்தோஷம். ஏற்கனவே சொன்னதுதான்- எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். நான்கு பேருமே வேலையில் இருக்கிறோம். அதனால் என்னுடைய கால்கள் நிலத்தில் சற்று வலுவாக இருப்பதாக உணர்கிறேன். துணிந்து சில காரியங்களைச் செய்யும் போது விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. துணிவதற்கு முன்பாக இந்தவொன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மற்றபடி ஒன்றும் பிரச்சினையில்லை.

ஆயிரத்தெட்டு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. 

10 எதிர் சப்தங்கள்:

thiru said...

//..ஏற்கனவே சொன்னதுதான்- எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். நான்கு பேருமே வேலையில் இருக்கிறோம். அதனால் என்னுடைய கால்கள் நிலத்தில் சற்று வலுவாக இருப்பதாக உணர்கிறேன். துணிந்து சில காரியங்களைச் செய்யும் போது விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. துணிவதற்கு முன்பாக இந்தவொன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்...//

மிக மிக முக்கியமான செய்தி இது. நீங்கள் செய்து விட்டீர்கள் என்பதாலேயே பிறர் இதை எடுத்துக்காட்டாக கொள்ள முடியாது.

- ஒற்றைச் சம்பளம் .. வீட்டு வாடகை/மாத வாங்கி தவணை,பிள்ளையின் ஸ்கூல் பீஸ்,மளிகை செலவு,கரண்ட் பில்,மொபைல் பில்,பெட்ரோல் செலவு .. இத்யாதி என்று இருப்பவர்கள் இந்தத் துணிவை பெற முடியும் என்று நினைக்கிறீர்களா ?
புதிய வேலை/தொழில் நுட்பம் என எது மாறினாலும் மாத செலவுகள் பயமுறுத்துமே. வெகு சீக்கிரம் பழைய இயல்பிற்கு வர வேண்டிய கட்டாயம் உந்தித் தள்ளுமே.சமூகத்தை விடுங்கள் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்.ஆனால் நிதர்சனம் நிசப்தமாக இருக்காதே. உரக்கக் கத்தி ஊரைக் கூட்டிவிடுமே ..

உங்கள் அதிர்ஷ்டம் நீங்கள் துணிந்து செய்ய ஏதுவாக ஒரு பக்க பலம் இருக்கிறது. வேலை என்று மட்டும் இல்லை, பொது வெளியில் உங்கள் இயக்கத்திற்கும்,எழுத்திற்குமே இந்தக் கூட்டுக் குடும்ப அமைப்புதான் ஆதாரம். வாழ்த்துக்கள் மணி !!

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

திருவாசக நந்தன் வாழ்க வளமுடன்..பொது வெளியில் உங்கள் இயக்கத்திற்கும்,எழுத்திற்குமே இந்தக் கூட்டுக் குடும்ப அமைப்புதான் ஆதாரம். வாழ்த்துக்கள் மணி !!...வாழ்க வளமுடன்

September 20, 2018 at 11:09 AM

shivabi said...

உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் தினம் ஏதாவது எழதி இருக்கிங்களானு பார்க்கிறது, வீடு வேலை எல்லாம் சீக்கிரம் செட்டில் ஆகி இந்த ஆளுக்கு எல்லாத்தையும் குடு இறைவானு தான கேட்பதுதான் உங்கள் பலம்.

Unknown said...

ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை தன்மை உள்ளது. யதார்த்தம் இருப்பதே உங்களை பின்தொடர்ந்து படிப்பதே பெருமையாகி விட்டது. // தன்னம்பிக்கையும்தான் முக்கியம். தன்னம்பிக்கை நிறைய இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.// வாழ்வின் யதார்த்தம். எழுத்து என்ற பெயரில் மேடை பேச்சாக இல்லாமல் அனுபவமே தங்களின் யதார்த்தம்

vijay said...

வாழ்க நலமுடன் வளமுடன்

vic said...

Blogger thiru said...Blogger Gopalakrishnan P said...
Blogger Sachithanandam Sivanantham said...Blogger Unknown said...Blogger vijay said...யா யா யா எல்லா பின்னுட்டமும் சூப்பர், நீங்க பின்றீங்க நா லண்டன்ல செட்டிலாக முடிவெடுத்து வீடு வாடகைக்கு எடுத்து 3000 கிட்ட சிலவு நிரந்தர வேலை விட தயக்கம் சொந்தவீட்ட விற்பதா வாடகைக்கு விடுவதா என தடுமாற்றம் கடசியில் 3000 கோவிந்தா லண்டன் போகேல்ல (7வருடத்துக்கு முன்ன)

Kumar said...

வாழ்த்துக்கள் மணி. உங்கள் மாற்றம் நல்ல வெற்றியை கொடுக்கட்டும்.

திருவாசக நந்தன். அழகான பெயர்.

// - ஒற்றைச் சம்பளம் .. வீட்டு வாடகை/மாத வாங்கி தவணை,பிள்ளையின் ஸ்கூல் பீஸ்,மளிகை செலவு,கரண்ட் பில்,மொபைல் பில்,பெட்ரோல் செலவு .. இத்யாதி என்று இருப்பவர்கள் இந்தத் துணிவை பெற முடியும் என்று நினைக்கிறீர்களா ? //

எல்லா சாதனைகளும் வெளிச்சத்திற்கு வந்ததற்குப் பின் தான் கவனிக்கப்படுகின்றன. மணி அவர்கள் இன்னொறு பதிவில் சொல்லி இருந்தார். இரண்டு மூன்று வருடங்களாக இந்த சிந்தனை இருந்தது என்று. அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிருக்கும். இதையே இரண்டு நாட்களில் முடிவெடுத்து செயல்படுத்தியவர்கள் இருக்கலாம், ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டவர்கள் இருக்கலாம். ஆனால், இந்த சிந்தனை வற்றாமல் வைத்துக் கொள்வதே முதல் வெற்றி. இனி அவ்வளவுதான், திரும்பிப் போக முடியாத தூரம் என்ற நினைப்பு வராமல் பார்த்துக் கொண்டாலே அது மாற்றத்திற்கான கதவுகளை மூடாமல் வைத்திருக்கிறோம் என்று தான் அர்த்தம்.

இன்னொன்று.. பலம் என்பது ஒவ்வொருக்கும் வேறுபடும். சிலருக்கு குடும்ப அமைப்பு, சிலருக்கு நட்பு வட்டம், சிலருக்கு அலுவலகத்தில் / நிறுவனத்தில் ஆதரவு, இப்படி. சுமார் 15 வருடங்களாக ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நண்பர், ஒவ்வொரு இரண்டு / மூன்று வருடங்களுக்கு ஒரு முறை, அந்த நிறுவனத்திற்குள்ளேயே, வேறு துறைக்கு வலிந்து தன்னை மாற்றிக் கொள்வதாகச் சொன்னார். அவருக்கு, அவர் நிறுவனத்தில் நீண்ட காலமாக பணி புரியும் காரணமாகவும், நேர்த்தி காரணமாகவும், மேலிடத்தில் ஏற்படுத்திக் கொண்ட நம்பகத் தன்மையும், ஆதரவும் தான் பலம்.


vic said...

ஒரு பியுன் வேலைக்கு 3000 பேர் போட்டி போடுர நாட்டில 4 பேர்

வேலையை விட்டுட்டு புதுவேலை எடுப்பதே மிகப்பெரிய சாதனை

சேக்காளி said...

//அந்த ஆள் மேடையில் இருந்திருந்தால் எதையாவது சொல்லித் திட்டியிருப்பேன்//
நமக்கெதுக்கு வம்பு. கம்முனு இருந்துருவோம்.

Anonymous said...

If possible, kindly publish/share the books or courses you follow for this new career path. It might be helpful for each other and we can also share our comments in that post. Thanks.