Aug 2, 2018

காமம் - கல்வி

கல்லூரியில் முன்னாள் மாணவர் தினத்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அது முக்கியமில்லை. ஒருவேளை மேடையில் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எதைப் பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது 'ரெகார்ட் டான்ஸ்' எல்லாம் நினைவுக்கு வந்தது. விடுதியிலிருந்து இரவு நேரங்களில் தப்பிச் சென்று ஆத்தூர், தாரமங்கலம் என்றெல்லாம் பயணித்து ரெகார்ட் டான்ஸ், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என்று ஒன்று விட்டு வைத்ததில்லை. இதையெல்லாம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொன்றிலும் காமம்தான் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும். காமத்தை பகடியாக்கி இரட்டை அர்த்த வசனங்களால் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள்.  

குறத்தி வேடமிட்ட பெண்கள் பார்வையாளர்களாக இருக்கும் விடலைகளையும் சிறுவர்களையும் களத்துக்குள் இழுத்து கசமுசாவாகப் பேசுவார்கள். 'நம்மை இழுத்துவிடுவார்களோ' என்று பயமாகவும் இருக்கும்; 'நம்மை அழைக்கவில்லையே' என்று தவிப்பதாகவும் இருக்கும். குறவன்களிடம் சிக்கினால் சோலி சுத்தம். கலாய்த்துத் தள்ளிவிடுவார்கள். இத்தகைய கொண்டாட்டங்களை பற்றிச் சொல்வதற்காக இந்தப் பத்தியை ஆரம்பிக்கவில்லை. இவை எல்லாவற்றையும் பெண்களும் அமர்ந்து ரசிப்பார்கள். தீக்குச்சி நடனம் நடக்கும் இடங்களைத் தவிர பிற அனைத்து இடங்களுக்கும் பெண்கள் வந்திருப்பார்கள். தீக்குச்சி நடனம் என்னவென்று தெரியாதவர்களுக்கு தனியாக ஒரு நாள் வகுப்பு எடுக்கிறேன். இங்கு வேண்டாம். 

காமம் என்பதை மிக இயல்பான அம்சமாக எடுத்துக் கொண்டு சிரித்து வேடிக்கை பார்க்கும் இயல்புத்தன்மை மனிதர்களிடம் பரவலாகவே இருந்திருக்கிறது. அதைப் பகடியாக்கி, கலாய்த்து தாண்டிச் செல்கிறவர்களாக மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். கடந்த தலைமுறை வரைக்கும் பொதுவெளியிலேயே ஆண்களும் பெண்களும் பொடி வைத்துப் பேசுவதை கவனித்திருக்கக் கூடும். இப்படி இயல்பான ஒரு சங்கதி எப்பொழுது மூடு பொருளாக மாறிப் போனது என்று தெரியவில்லை.  இன்றைக்கும் கூட வயல்களில் வேலை செய்யும் போது பாடுகிற பாடல்களில் காமம் இருக்கும். ஆனால் அலுவலகத்தில் நடக்கும் ஆண்டுவிழாவில் இரட்டை அர்த்த நகைச்சுவை ஒன்றை உதிர்த்தால் அடுத்த நாள் மனிதவளத் துறையிலிருந்து அழைப்பு வந்துவிடும். காமத்தை பேசாமல் இருப்பதுதான் நாகரிகம் என்று கற்றுத் தந்திருக்கிறது இந்தச் சமூகம்.

ஒருவேளை  தொன்றுதொட்டே  காமத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளும் மனநிலை நம்மவர்களிடம் இல்லாமல் இருந்திருந்தால் கோவில் சிற்பங்களில் தொடங்கி, இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் காமம் மூடு பொருளாகவே இருந்திருக்கும். ஆனால் அப்பட்டமாக பேசியிருக்கிறார்கள். வெளிப்படையாக இருந்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில்தான் இது மூடு பொருளாகியிருக்கிறது. 

கல்வியும், கற்பிக்கும் முறையும்தான் நம்மை இப்படிப் பகுத்துவிட்டதோ என்று சந்தேகமில்லாமல் இல்லை. வகுப்பறைகளில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து அமர வைப்பதில் தொடங்கி ஆண்களுக்கான தனி கல்வி நிறுவனங்கள் அதே போல பெண்களுக்குத் தனி என ஆண்களையும் பெண்களையும் இருவேறு உலகங்களாக மாற்றிய பிறகுதான் ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் எட்டாத புதிர்களாகிவிட்டார்கள். எல்லாவற்றையும் பேசுவது போல காமத்தையும் இரு பாலினரும் இயல்பாகப் பேசுகிற சூழல் நிலவியிருந்தால் இவ்வளவு சிக்கல் உருவாகியிருக்காதோ என்றுதான் தோன்றுகிறது. 

நாம் ஸ்டீரியோடைப்பில் புலம்புகிறோமே 'கள்ளக்காதல் பெருகிவிட்டது' என்று அதற்கான ஆதிப்புள்ளியைத் தேடிப் போனால் இங்கேதான் போய் நிற்போம்.  'Corrupted to the core' என்று ஒரு நண்பர் சொன்ன போது படிப்புதான் அப்படி ஆக்கிவிவிட்டது என்றேன். இருக்கலாம் என்றார்.

எந்தவொரு மனிதனும் தனது ஆழ்மன இச்சைகளை வெளிப்படையாக பேசக் கூடாது என்று மிகப்பெரிய பெரிய சுவர் இங்கு எழுப்பப்பட்டிருக்கிறது. அதே சமயம் செல்போன் தொடங்கி, இணையம், சாலையோர பிரமாண்ட பதாகைகள் என சகல இடங்களிலும் மனிதர்களின் காம இச்சைகளைத் தூண்டி விடுகிற அம்சங்கள்தான் இருக்கின்றன. மார்பகப் பிளவுகளைக் காட்டுகிற பெண்ணுக்கு எந்தவிதமான தாழ்ச்சியுமில்லாமல் வெறும் உள்ளாடையோடு தொடைகளை விரித்துப் படுத்திருக்கும் ஆண்களின் படங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாகப்  பத்து பேர் பார்த்தால் ஏழு பேருக்காவது மனம் எதையெல்லாமோ யோசிக்கத்தானே செய்யும்?  ஒரு நாளைக்கு மனித மனதில் ஐம்பதாயிரம் எண்ணங்கள் தோன்றுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் பத்தாயிரம் எண்ணங்களாவது காமத்தைப் பற்றி மட்டுமே இருக்கும்படி நம் புறச்சூழல் அமைந்திருக்கிறது. ஆனால் பேசக் கூடாது. எல்லாவற்றையும் தூண்டிவிட்டு வடிகால் இல்லாத சூழலில் அத்தனை விவகாரங்களும் அரங்கேறுகின்றன. 

நம்முடைய எந்தவொரு உணர்ச்சியும் பேசுவதால் வடிந்துவிடக் கூடியவை. கோபத்தில் இருக்கிறவனை அமரச் செய்து பேசினால் அவன் கொஞ்சம் சாந்தமடைவான். வெறுப்பின் உச்சத்தில் இருப்பவனிடம் கூட பேசுவதால் அன்பை உருவாக்கிவிட முடியும். ஆனால் காமத்தின் உச்சத்துக்குச் செல்கிற மனிதன் இங்கே பேச என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? அதைப் பேசுவதுதான் தவறானதாகிவிட்டதே.

வெறும் பாடங்களில் மட்டுமில்லாமல் நம்முடைய கற்பிப்பு முறையிலும், கல்வி நிலைய அமைப்புகளிலும் பல மாறுதல்கள் அவசியம். ஆணுக்கும் பெண்ணுக்குமான பெரும் சுவர் தேவையில்லை. அவனும்/அவளும் நம்மைப் போன்ற சதைதான் என்கிற எண்ணம் உருவாக்கும்படி கல்வி நிலையச் சூழலை வடிவமைக்க வேண்டியது அவசியம். ஆணுக்கும் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் புரிந்து கொள்ளவே முடியாத புதிராகவே இருக்கும் வரைக்கும் சமூக ஊடகங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கும் ரகசிய வாய்ப்புகளின் வழியாக எதிர்பாலினத்தின் அந்தரங்கங்களுக்குள் மனம் நுழைந்து கொண்டேதான் இருக்கும். எதிர்காலத்தில் இதன் வேகமும் வீச்சும் இன்னமும் அதிகமாக இருக்கும். எந்தவொரு சிக்கலைத் தீர்க்கவும் அதன் ஆணி வேரைக் கண்டறிய வேண்டியது அவசியம். நம் சமூகத்தில் நிலவும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அந்தக் கண்டறிதல்தான் தீர்வைத் தரும்.

4 எதிர் சப்தங்கள்:

MURUGAN RD said...

இதில் கருத்து தெரிவிக்க எனக்கு ஒன்றும் தோன்றவில்லை,, என்றாலும் சி பத்தாம்பசலிதனமா உதாரணங்களே உங்களிடமும் ‌ரிப்பீட் ஆகுதோ என்று என் (சிற்)அறிவுக்கு தோன்றுகிறது,,

அதில் ஒன்று

வகுப்பறைகளில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து அமர வைப்பதில் தொடங்கி ஆண்களுக்கான தனி கல்வி நிறுவனங்கள் அதே போல பெண்களுக்குத் தனி என ஆண்களையும் பெண்களையும் இருவேறு உலகங்களாக மாற்றிய பிறகுதான் ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் எட்டாத புதிர்களாகிவிட்டார்கள்./////////////// இதெல்லாம் ஏற்படுவதற்கு முன்பு வரை ஆணும் பெண்ணும் அருகருகே உட்கார்ந்து படிக்கும், பழகும் சூழ்நிலையில் தான் வாழ்ந்தார்களா? ஆண் பெண் தனி தனி மூடுபொருளாக படுவதால் தானா எல்லா பாலியல் உறவுகளும் அத்துமீறல்களும் நடக்கின்றது? கொஞ்சம் ஆழமா யோசித்து பாருங்க,,,, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு விரும்பியோ விரும்பாமலோ அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன,,, அதன் விளைவுகளும் வெவ்வேறுவிதமாக இருக்கும்,,, அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக ரிலே ரேஸ் போல ஆணும் பெண்ணும் பிரித்து வைக்கப்படுவதால் தான் பாலியல் அத்துமீறல்கள் வரம்புமீறிய உறவுகள் நிகழ்கின்றன என்பது போன்ற எல்லோரும் ஒரே கருத்தை பரப்பிவருக்கின்றனர்,,,, இது ஒரு விதமான பொதுபுத்தியாகவே படுகிறது,,

இதற்கு இணையான இன்னொரு பொதுப்புத்தி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணி சொல்லியிருக்காங்கன்னு எல்லா விசயங்களயும் நம்புறது,,,,, இதற்கு உதாரணம் இதே கட்டுரையில் வந்த
ஒரு நாளைக்கு மனித மனதில் ஐம்பதாயிரம் எண்ணங்கள் தோன்றுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.////////// என்ற வரி தான்,,,, இது என்ன கணக்கு,,, யார் கண்டுபிடித்தது,,,, இப்படி எந்த எதிர் கேள்வியும் கேட்கப்படாது,,,நம்ம மனநிலையும் படிப்பறிவும் அப்படி mindset பண்ணிக் கொண்டது,

சென்ற ஆண்டு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயப்படுத்தி போடப்பட்ட ரூபல்ல தடுப்பூசி விவகாரத்தில் அதை எதிர்த்தவர்களுக்கு பலராலும் சொல்லப்பட்ட வார்த்தை மருத்துவத்தை பத்தி இதை எதிர்ப்பவர்களுக்கு என்ன தெரியும் என்ன கேள்விதான்,, மருத்துவம் தெரியாதுதான்,,,,ரூபல்லா வை எதிர்ப்பவர்கள் சொன்ன காரணம் இந்த தடூப்பூசிகள் எங்கிருந்து தருவிக்கப்படுகிறது ஏன் இலவசமா தமிழ்நாட்டில் மட்டும் அல்லது முதலில் போடப்படுகிறது இதன் அவசர தேவை ஏன் என்று எழுப்பிய கேள்விகள் தான்,,, ஆனா அறிவாளிகளா சிந்திக்கும் பலரும் சொன்ன காரணம் அது மருத்துவ ரீதியிலானது விஞ்ஞான ரீதியிலானது அதை விமர்சிக்கும் கூட்டத்துக்கு அந்த அறிவு இல்லை என்பதுதான்,, என்னுடைய கேள்வி விஞ்ஞானி ஆராய்ச்சி பண்ணிசொன்னான் என்பதற்காக அதை நம்புகிறவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் விஞ்ஞான அறிவு உண்டா? எந்த அடிப்படையில் விஞ்ஞான ஆராய்ச்சி என்று சொல்லப்படும் அனைத்து விசயங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள் செவப்பா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான் தியரிபடியா? விஞ்ஞான ஆராய்ச்சிய நாசா ஏத்துகிட்டது, ‌மருத்துவ ஆராய்ச்சி கழகம் சொல்லியது,,, உலக சுகாதார ‌அமைப்பு சொல்லுது என்று சில கருத்துக்கள் இங்கு ஊடகங்கள் மூலம் திணிக்கப்படும் போது அப்படியே அதை எதிரொலிக்கும் மனநிலைக்கு மக்களை மாற்றயமைத்தது எது?

பசி மயக்கத்துல சிந்தனையின் மீதி தொடர்ச்சி அறுந்துவிட்டது,,, இது போல இன்னும் பல கேள்விகள் சராசரி பொதுபுத்தியில் உறைந்து போன பல கருத்துகளின் மீது இருக்கிறது,,, இப்போதைக்கு எண்ட்,


அப்புறம் தீக்குச்சி நடனம்,,, இதை பற்றி இப்போது வரைக்கும் கேள்விப்பட்டதில்லை,,, தலையே வெடிச்சிடும் போல இருக்கு,,,, விரைவில் பதிவிடவும்,,,

dhana said...

I think you already wrote about தீக்குச்சி நடனம்.

Anonymous said...

http://www.nisaptham.com/2014/12/blog-post_2.html

சேக்காளி said...

Anonymous ஐயா அல்லது அம்மா
உங்கள் சிறப்பான பணி தொடரட்டும்.