பெரும்பாலான நண்பர்களைப் போலத்தான் பிரபுவும் பழக்கம். மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். வாழ்வும் அதன் அர்த்தமும் குறித்தான மின்னஞ்சல். அதன் பிறகு பதில் எழுதி அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு இரண்டொருமுறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். மிக எளிய மனிதர். ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. அம்மாவும் அப்பாவும் உடனிருக்கிறார்கள்.
'கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லுறாங்க' என்று அவ்வப்போது சொல்லுவார்.
'ஏன் செஞ்சுக்கல' என்று கேட்ட போது 'அமையும் போது பார்த்துக்கலாம்' என்று சொல்லிவிட்டார். திருமணம் என்பது தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்தது. அதிகமாக தலையிடாமல் விட்டுவிட வேண்டும். அவரைச் சந்தித்த வெகு நாட்களுக்குப் பிறகு பிரபுவின் அப்பா பேசினார். 'உங்களைப் பத்தி பேசுவான்..நீங்க சொன்னா கேட்டுக்குவான்..கல்யாணம் செஞ்சுக்க சொல்லுங்க' என்றார். இது ஒரு சிக்கலான விஷயம். ஒருவர் திருமணத்தை நிராகரிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கக் கூடும். நண்பர் ஜீவகரிகாலனிடம் 'திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று சொல்லி சலித்துப் போனவன் நான். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவார். பிரபுவிடமும் அதையே சொல்ல வேண்டுமா என்று தோன்றியது. சொல்லிப் பார்க்கலாம் என்று பேசினேன். இத்தகைய விஷயங்களை நேரில் அமர்ந்து பேச வேண்டும்.
திருவாலங்காடு சிவன் கோவிலில் அவரைச் சந்தித்த போது பேசினோம். வடாரண்யேஸ்வரர் கோவில். நடராஜரின் ஐந்து சபைகளில் இரத்தின சபை. பிரபு அரக்கோணத்தில்தான் பணியில் இருக்கிறார் என்பதால் சென்னை செல்லும் போது அரக்கோணத்தில் இறங்கி அவரோடு கோவிலுக்குச் சென்றிருந்தேன்.
திருமணம் பற்றிய பேச்சு வந்த போது 'ஏதாச்சும் அர்த்தம் இருக்கணும்' என்றார். எனக்குப் புரியவில்லை. 'முடியாத ஒரு பொண்ணுக்கு கடைசி வரைக்கும் உறுதுணையா இருக்கனும்ன்னு நினைக்கறேன்' என்றார். அவர் சொல்ல வந்த விஷயம் புரிந்தது.
'உண்மையாகவே அப்படிதான் நினைக்கறீங்களா? இல்ல..லட்சிய வேகத்துல பேசுறீங்களா' என்றேன். அவர் அப்படி லட்சிய வெறியில் பேசக் கூடிய ஆள் இல்லை. இருந்தாலும் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. உறுதியாகத்தான் சொன்னார். பொதுவாக ஆட்களை இணைத்துவிடுவதில் எனக்கு மச்ச நாக்கு. பலித்துவிடும். ஒருவருக்கு ஒரு தேவை இருக்கும். அது வேலையாக இருக்கும் அல்லது வேறு உதவியாக இருக்கும் . என்னிடம் பேசியிருப்பார். திடீரென்று அதைத் தன்னிடம் கொண்டுள்ள இன்னொருவர் பேசுவார். இருவரையும் கோர்த்துவிடுவதுண்டு. சில சமயங்களில் சரியாக அமையும். சில சமயங்களில் அமையாது.
பிரபு எதிர்பார்க்கும்படியான ஒரு பெண்ணை எனக்குத் தெரியும். விஜயலட்சுமி. தனியார் பள்ளியில் ஆசிரியை. போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்டவர். அவரும் மின்னஞ்சல் வழியாகவே அறிமுகம். அவர் திருமணம் ஆகாதவர் என்று தெரியும். ஆனால் திருமணம் செய்து கொள்ளுகிற விருப்பம் பற்றியெல்லாம் தெரியாது.
பிரபுவிடம் 'நீங்க பார்த்து பேசுங்க...ரெண்டு பேருக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கறேன்' என்றேன்.
'நீங்களும் வாங்க' என்று சொன்னார். விஜயலட்சுமி வேலூர் பக்கம். 'நான் வருவதை விட நீங்களே பாருங்க' என்று நாசூக்காகச் சொல்லியிருந்தேன். விஜயலட்சுமியிடமும் பிரபு பற்றிச் சொல்லியிருந்தேன். அதன் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பிடித்துப் போனது. பிடித்துப் போகும் என்று முன்பே உள்மனம் சொன்னது. திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
சனிக்கிழமை திருமணம். 'என்ன பிரபு ஆடி மாசம்?' என்றேன். சிரித்தார்.
'நாள் நட்சத்திரமெல்லாம் பார்க்க வேண்டாம்ன்னு தோணுச்சு சார்..வந்துடுங்க..நேர்ல வர மாட்டேன்' என்றார். பொதுவாக திருமணங்களுக்குச் செல்வத்தைத் தவிர்த்துவிடுவதுண்டு. சொந்தக்காரர்கள் திருமணத்தை தவிர்க்க முடியாது. பிறிதொரு முறை சந்திக்கும் போது பாராமுகத்தைக் காட்டுவார்கள். நண்பர்கள் திருமணம், அதுவும் பிரமாண்டமாக நடக்கும் என்றால் செல்வதில்லை. ஒன்றரை வினாடி முகத்தையும் முகத்தையும் பார்த்துக் கொள்வதற்காக அவ்வளவு தூரம் செல்ல வேண்டும். அதற்கு மேல் திருமணங்களில் எதைச் சாதிக்கிறோம்?
'யாரையுமே கூப்பிடலை..' என்று விஜயலட்சுமி சொன்னார்.
சனிக்கிழமை காலை அதே திருவாலங்காடு கோவிலில் திருமணம். திருமணம் என்றால் பிரபுவும் விஜயலட்சுமியும் மாலை மாற்றிக் கொண்டார்கள். என்னையும் சேர்த்துப் பத்து பேர் இருந்தோம். விஜயலட்சுமி தனது சக்கர வண்டியில் அமர்ந்திருந்தார். பிரபு மாலை அணிவித்தார். பிரபுவின் அப்பா கைகளைப் பற்றிக் கொண்டார். 'அவனோட அம்மாவுக்குத்தான் விருப்பமில்லை...ஆனாலும் பரவாலீங்க' என்றார். பிரபுவின் அம்மா அழுதபடியே நின்றிருந்தார்.
விஜயலட்சுமியின் பெற்றோர் பதற்றமாக இருந்தார்கள். பிரபுவின் அம்மாவிடம் சென்றும் 'ரெண்டு பெரும் நல்லா இருப்பாங்க' என்று மட்டும் சொன்னேன். அந்த இடத்தில எல்லோருக்குமே சந்தோசம் என்று சொல்ல முடியாது. வருத்தம் என்றும் சொல்ல முடியாது. ஒரு வகையான மனநிலைதான் எல்லோருக்கும் இருப்பது போலத் தோன்றியது.
எனக்குதான் வெகு சந்தோசம்.
எனக்குதான் வெகு சந்தோசம்.
கிளம்ப எத்தனித்த போது 'சாப்பிட்டு போலாம்' என்று எல்லோருமே சொன்னார்கள். எனக்கு வேறு சில வேலைகள் இருந்தன. அன்பளிப்பு கூட எதுவும் கொண்டு போயிருக்கவில்லை.
'ரெண்டு மூணு நாள் கழிச்சு போன் பண்ணுங்க' என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்களைத் தாண்டி வந்தவுடன் முதல் வேலையாக 'Connecting the people is the best service to mankind' என்று வாட்ஸாப்பில் மாற்றியிருக்கிறேன்.
'வாழ்க்கையின் அர்த்தம்' பற்றி பிரபு எழுதியது நினைவுக்கு வந்தது. எதை எதற்காகச் செய்கிறோம் என்றெல்லாம் குழம்ப வேண்டியதில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த கட்டுரையை எழுதுவது உட்பட ஒவ்வொரு சிறு காரியமும் அதற்கான அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் என்றுதான் நம்புகிறேன். வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டால் அது நம்மை சரியான திசை நோக்கித்தான் அழைத்துச் செல்லும். நாம்தான் அலட்டிக் கொள்கிறோம்.
12 எதிர் சப்தங்கள்:
மனித பிறப்பின் அர்த்தம் புரிந்து வாழ நினைக்கும் மனிதர்கள் மிகச் சிலரே. அப்படிப்பட்ட மனிதர்களை இச்சமூகத்திற்கு தெரியப்படுத்தும் வேலையைச் செய்பவர்களும் சிலரே. அதில் நீங்கள் செய்யும் இப்பணி மனங்கொள்ள வேண்டியதும் மதிக்கத்தகதும் என்று உணர்கிறேன்
இப்படிக்கு
தேவதை நிலவன்
"பொதுவாக ஆட்களை இணைத்துவிடுவதில் எனக்கு மச்ச நாக்கு"-
தேவை உள்ளோர் இடம் எல்லாம் உங்கள் மச்ச நாக்கு தன் வேலையை செவ்வனே செய்யட்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்
ரொம்ப சந்தோசமா இருக்கு.
வாழ்த்துக்கள்
பிரபு - விஜயலட்சுமி
வாழ்க! வளமுடன்!
நீங்கள் செய்தது சரியா, தவறா என்று சொல்ல தெரிய வில்லை. தவறு என்று எனக்கு படுகிறது, எனக்குத்தான்! அந்த பெண் மகிழ்ச்சியோடு இருக்கட்டும். நீங்கள் கடைசியாக சொன்ன விஷயம் மிகவும், மிகவும் பிடித்து இருந்தது.
"எதை எதற்காகச் செய்கிறோம் என்றெல்லாம் குழம்ப வேண்டியதில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த கட்டுரையை எழுதுவது உட்பட ஒவ்வொரு சிறு காரியமும் அதற்கான அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் என்றுதான் நம்புகிறேன். வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டால் அது நம்மை சரியான திசை நோக்கித்தான் அழைத்துச் செல்லும். நாம்தான் அலட்டிக் கொள்கிறோம்"
அற்புதம். அற்புதம்.
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் (அவரின் அம்மாவின் மனநிலையை புரிந்துக்கொள்ள முடிகிறது)
Best wishes for Mr.Prabu !!
புதுமண தம்பதிகளுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்.....
Great job, Mani. Best wishes to you and the newlyweds.
Thanks and Regards,
Radha Bala
i know at least four couples who are living very well
out of which one gentleman is a bhatnagar young scientist awardee and he wanted to marry a woman who requires a place in life and he did marry a crippled woman
i wish both prabhu and vijayalakshmi to lead a happy life
radhakrishnan
வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டால் அது நம்மை சரியான திசை நோக்கித்தான் அழைத்துச் செல்லும். நாம்தான் அலட்டிக் கொள்கிறோம். //// வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டால் அது நம்மை அல்லது என்னை பார், foreign சரக்கு, குடி, நண்பர்கள் அரட்டை என்று தான் கூட்டிட்டு போய்டும் :)
பிரபுவின் பெற்றோர் தான் உங்களை அவரிடம் பேச சொன்னார்கள். இந்த மாதிரி பெண் இருப்பதை அவர்களிடம் சொல்லி அனுமதி வாங்கினீர்களா என்று தெரிய வில்லை. அவர்களிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் நீங்கள் பிரபுவிடம் பேசி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் பேச சொன்னது அவர்கள்தான்!! எனவே அவர்களிடம் இந்த மாதிரி ஒரு பெண் இருப்பதை சொல்ல போகிறேன் மற்றும் உங்கள் மகன் இதில் உறுதியாக இருக்கிறார் என்று சொல்லி அனுமதி வாங்க வேண்டியது அவசியம். தவிர, இது ஒன்றும் காதல் கல்யாணம் இல்லையே!
Post a Comment