பஞ்சுமிட்டாய் இதழ் பற்றித் தெரிந்திருக்கும். குழந்தைகளுக்கான இதழ். பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்துதான் சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியது. தமது அடுக்ககத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை கதை சொல்லுதல் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகளை பிரபு தனது நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பிரபுவை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருகிறவன் என்கிற முறையில் அவரது தேடலும் கற்றலும் ஆச்சரியமூட்டுகின்றன.
'பத்து குழந்தை பெத்தவளுக்கு ஒரு புள்ள பெத்தவ மருத்துவச்சியா?' என்ற சொலவடை ஒன்று உண்டு. குழந்தை வளர்ப்பு என்பதெல்லாம் அனுபவத்தில் வருவது என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதுவொரு நுணுக்கம். பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த குழந்தைகளுக்கும் இன்றைய குழந்தைகளுக்குமான வித்தியாசம் மிகப் பெரியது. கேள்வி கேட்டால் அலற வைத்துவிடுவார்கள். அவர்களின் அறிவும் செயல்பாடும் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இது மாறிக் கொண்டேதான் இருக்கும். குழந்தைகளின் உலகத்தோடு நெருங்கி உறவாடுகிறவர்களால் மட்டுமே குழந்தைகளுக்கு தேவையான உள்ளீடுகளை வழங்க முடியும். அப்படி உறவாடினால் மட்டும் போதாது; தம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த உலகம் நம்மை விட்டு வெகு வேகமாக விலகி விடும்.
இன்றைய குழந்தைகள் உலகில் தீவிரமாக இயங்கக் கூடியவர்களாக 'கதை சொல்லி' சதீஷ், விழியன், இனியன் மாதிரியான சிலரைச் சுட்டிக் காட்ட முடியும். பிரபுவும் அதைப் பட்டியலில் வரக் கூடியவர்தான். உண்மையில் இத்தகைய அற்புத மனிதர்களுக்கான தேவை முன் எப்பொழுதும் இருந்ததை விட இப்பொழுது அதிகம். நவீன உலகம் குழந்தைகளை நம்மிடமிருந்து வேகமாக அந்நியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் போன்றவர்களால் மட்டுமே அதன் வேகத்துக்குத் தடை போட முடியும்.
கடந்த சில ஆண்டுகளில் ஆர்வத்தின் காரணமாக பிரபு, தமது தொடர்புகளை விரிவாக்கிக் கொண்டார். குழந்தைகள் சம்பந்தமான நிகழ்வுகள் பலவற்றில் பார்வையாளராகக் கலந்து கொண்டார். பிறகு குழந்தை வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்களை வாசித்து அவை பற்றிய குறிப்புகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தார். அதே சமயம் குழந்தைகளுக்கான கதை சொல்லல், விளையாட்டு, குழந்தை வளர்ப்பு பற்றிய விவாதங்கள் என்பன வழியாக அவரது அனுபவமும் பெருகியது. பிரபுவுடன் நல்ல குழுவும் இணைந்திருக்கிறது.
அச்சாக வெளி வந்த பஞ்சுமிட்டாய் இதழில் குழந்தைகளின் ஓவியங்கள், கதைகள் இடம் பெற்றன. சில இதழ்கள் வெளியான பிறகு இப்பொழுது ஆன்லைனிலும் பஞ்சுமிட்டாய் வெளியாகிறது. கட்டுரைகளை வாசித்தேன். அச்சு இதழ் என்பது குழந்தைகளுக்கு மட்டுமானது. ஆன்லைனில் பெற்றோர், ஆசிரியர் என சகலருக்குமான விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இயங்க வாழ்த்துக்கள்.
சில அறிவுரைகளைச் சொல்ல வேண்டும்:
ஆன்லைன் இதழ்களில் தொடர்ந்து அப்டேட் இருக்க வேண்டும். வாரம் ஒரு முறை/மாதம் ஒரு முறை என்றால் வந்து வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை முதல் நாள் மட்டும் அதிகமாக இருக்கும் பிறகு படிப்படியாகக் குறைந்து விடும்.
வாசகர்களின் எண்ணிக்கை குறைவது என்பது நம்மை சற்று மனத்தளர்ச்சி கொள்ளச் செய்துவிடும். ஆன்லைனைப் பொறுத்த வரைக்கும் ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் படிப்படியாக வடிந்து போகவும் இதுதான் காரணம்.
தினசரி ஒரு கட்டுரை என்று தொடர்ந்து பதிவேற்றலாம். எது கடைசியாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரை என்பது தெளிவாக கண்ணில்படும்படி இருக்க வேண்டும்.
இத்தகைய செயல்பாடுகளில் வாசகர்களை நிகழ்த்த வழி வகை செய்தால் இன்னமும் நன்றாக இருக்கும். சந்தேகங்களுக்கு வல்லுநர் ஒருவர் பதில் சொல்வதும் சிறப்பாக இருக்கும்.
ஒரு வேண்டுகோள்- ஒரு ஆப் (app) வடிவமைக்க முடிந்தால் வடிவமைத்து வெளியிடவும். ஸ்மார்ட் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து வாசிக்க ஏதுவாக இருக்கும்.
பாராட்டப்பட வேண்டிய விஷயம்:
சமீபத்தில் ஓசூரில் நடந்த புத்தக கண்காட்சியில் தொடர்ந்து அத்தனை நாட்களும் குழந்தைகளுக்கான அரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதற்கெல்லாம் அசாத்திய பொறுமையும் மனம் தளராத ஆர்வமும் வேண்டும். அவை இரண்டுமே இந்தக் குழுவினரிடம் இருக்கிறது என்பதால் பஞ்சுமிட்டாய் வழமையான இணைய இதழ்களைப் போலில்லாமல் வெகு காலம் வெற்றிகரமாக இயங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
2 எதிர் சப்தங்கள்:
எத்தனை விதமான மனிதர்களை அறிமுகப் படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.
விரியட்டும் உலகம்
அருமையான பணி. வாழ்க வளர்க பஞ்சுமிட்டாய்.
Post a Comment