Aug 13, 2018

கேரளா

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம். 'ஏதாவது செய்யலாமா' என்று சிலர் கேட்டார்கள். என்ன மாதிரியான உதவியைச் செய்ய முடியும் என்று குழப்பம் இருந்தது. உமேஷிடம் தொடர்பு  கொள்ள முடிந்தது. அவரைப் பற்றி நிசப்தத்தில் முன்பு எழுதியிருக்கிறேன். வயநாட்டில் சார் ஆட்சியராக இருக்கிறார். இரண்டு முறை வயநாடு பகுதியின் வெள்ளம் பற்றி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நேற்றிரவு பேசிய போது வெள்ளத்தின் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கிறது என்றார். 



தமிழகத்தின் ஊடகங்கள்  பெரிய அளவில் இந்தச் செய்தியைப் பற்றி  இன்னமும் பேசாததால் நமக்கு கேரளாவின் வெள்ள பாதிப்பு புரியவில்லை எனத் தோன்றுகிறது. சமூக ஊடகங்களிலும் பெரிய அளவில் உரையாடல் இல்லை. தமிழக அரசு ஐந்து கோடி கொடுத்திருப்பதாகவும், திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடுக்கவிருப்பதாக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் இருபத்தைந்து லட்ச ரூபாய் கமல்ஹாசன் கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தத் தொகை பற்றிய விவாதம் எதுவும் அவசியமில்லை. அரசியல் அமைப்புகளும் திரைத் துறையினரும் பேச ஆரம்பிக்கும் போதுதான் வெகுஜன மட்டத்தில் பாதிப்புகள் குறித்தான புரிதல் உண்டாகும். ஊடகங்களும் இவற்றை பெருமளவில் கவனப்படுத்தும் என நம்பலாம்.

கடலூரிலும் சென்னையிலும் வெள்ளத்தின் போது கேரளாவிலிருந்து வந்து குவிந்திருந்த பொருட்களை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இப்பொழுது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியில்லை.  இதுவரையில் 37 பேர்கள் இறந்திருக்கிறார்கள். பலர் வீடுகளை இழந்துவிட்டார்கள். இன்னமும் மழை நின்றபாடில்லை. உமேஷிடம் 'என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படும்?' என்று கேட்ட போது 'எப்படிக் கொடுத்தாலும் சரி; பொருட்களாக இருந்தால் நிச்சயம் பேருதவியாக இருக்கும்' என்று  சொன்னார்.  

நாம் இந்தத் தருணத்தில் திட்டடமிடுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் பணியாற்ற களத்துக்கு ஆட்கள் தேவை.

1) தமிழகம் முழுவதும் ஆங்காங்கே  பொருட்களை வசூலித்து (பயன்படுத்திய பொருட்கள் வேண்டாம்- உதவுவதாக இருந்தால் புதிய பொருட்களாக வாங்கி கொடுக்கவும்) கேரளாவுக்கு அனுப்பி வைக்கலாம். 

2) பெங்களூரில் பொருட்களை பெற்று அதை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய தன்னார்வலர்கள் தேவை.
  • அலுவலகங்கள்/அடுக்கங்களில் பேசி பொருட்களை வாங்க வேண்டும்.
  • நன்கொடையாக  வரும் பொருட்களை பெற்றுக்  கொண்டு வந்து ஓரிடத்தில் தர வேண்டும்.
  • பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கவும், வாகனம் ஏற்பாடு செய்யவும், உடன் செல்லவும் ஓர்  அணி தேவை.
ஆர்வமும் செய்வதற்கு தயாரான மனநிலையும் கொண்ட ஒரு குழு அமைந்தால் அடுத்தடுத்த பணிகளைச் செய்யலாம். ஆர்வமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும். எந்த இடத்தில் பொருட்களை சேகரிப்பது என்று முடிவு செய்ய வேண்டும். தமிழ் சங்கத்தில் இன்று பேசுவோம். அவர்கள் மறுக்க மாட்டார்கள். விருப்பமிருப்பவர்கள் சொல்லுங்கள். மதியம் ஒரு மணிவாக்கில் தமிழ் சங்கத்துக்குச் செல்லலாம்.

முதல்வேலையாக ஒரு சரியான அணியை உருவாக்கி பொறுப்புகளை பிரித்துக் கொள்ள வேண்டும். அது பல வேலைகளை எளிதாக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

1. புதிய ஆடைகள்
2. அரிசி, பிஸ்கட், ரொட்டி
3. நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, பள்ளி புத்தகங்கள்
4. சானிட்டரி நாப்கின்
5. சுத்தம் செய்வதற்கான சானிட்டரி பொருட்கள்
6. செருப்பு
7.  படுக்கை, போர்வை
8. ஸ்வெட்டர்
9. வாளி, சோப், பிரஷ், பற்பசை
10. பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் 

இப்படியொரு செயல்பாடு நடக்கிறது என்பதனை  பரவலாகக் கொண்டு செல்வதும் கூட ஒரு வகையிலான பங்களிப்புதான். தமிழகம் முழுக்கவும் ஆங்காங்கே  முன்னெடுப்புகளைச்  செய்வார்கள்.

அடுத்தடுத்த நகர்வுகளை பதிவு செய்கிறேன். 

vaamanikandan@gmail.com

1 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

துன்பம் வரும்போது ஓடி உதவுவது மனிதாபிமான கருணை .