பவானி கரை கடந்து பாய்கிறது. காவிரி அகண்டு பெருக்கெடுத்திருக்கிறது. அமராவதியும் அப்படியே. இந்த ஆர்பரிப்பும் அழகும் கரையோரம் ஒட்டிய பகுதிகளில்தான். பவானி ஆற்றிலிருந்து வெறும் பதினைந்து கிலோமீட்டர் தெற்கே சென்று விசாரித்துப் பார்த்தால் வறண்டு கிடக்கிறது பூமி. ஆயிரம் அடி தோண்டினாலும் நீர் இல்லை. ஒரு பக்கம் அடித்துப் பெருக்கும் ஆறு; வெகு அருகாமையில் காய்ந்து கிடைக்கும் நிலப்பரப்பு. இப்படித்தான் இருக்கிறது நிலைமை.
மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து அதனால் நீர் பெருகி இந்த ஆறுகள் கரை புரளவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கேயோ பெய்த மழை. அணைகள் நிரம்புகின்றன. தேக்கி வைக்க வழியில்லாமல் திறந்து விடுகிறார்கள். அதுவும் 'முதலமைச்சரின் ஆணைப்படி'. அது அப்படியே ஆற்றின் வழியோடி கடலில் கலக்கிறது.
ஒரு கூட்டம் வந்து 'கடலில் கலப்பது தப்பில்லையே' என்று நமக்கு வகுப்பு எடுக்கும். தப்பில்லை. எப்பொழுது தப்பில்லை என்றால் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப நீரைப் பிடித்து வைத்துக் கொண்ட பிறகு எவ்வளவுதான் கலந்தால் யார் என்ன கேட்கப் போகிறார்கள்?
நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இயற்கை மனம் வைத்து இரவலாக வரும் நீரை எந்த சிரத்தையுமில்லாமல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள் என்பதுதான் பிரச்சினையே. பொதுவாக கர்நாடகத்திலும் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டெம்பர் வரைக்கும் நீடிக்கும். இந்த வருடம் நமக்கு ஜூலையிலேயே நீர் வரத் தொடங்கிவிட்டது. மூன்று மாதம் நீர் வரத்து இருக்கும்பட்சத்தில் அதற்குத் தக்கவாறு முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியதில்லையா?
நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இயற்கை மனம் வைத்து இரவலாக வரும் நீரை எந்த சிரத்தையுமில்லாமல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள் என்பதுதான் பிரச்சினையே. பொதுவாக கர்நாடகத்திலும் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டெம்பர் வரைக்கும் நீடிக்கும். இந்த வருடம் நமக்கு ஜூலையிலேயே நீர் வரத் தொடங்கிவிட்டது. மூன்று மாதம் நீர் வரத்து இருக்கும்பட்சத்தில் அதற்குத் தக்கவாறு முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியதில்லையா?
நேரடியாக ஆற்றில் விடாமல் கால்வாய்களைத் திறந்துவிட்டு அதன் வழியாக குளம் குட்டைகளை நிரப்பி வைத்திருக்க வேண்டும். பவானி ஆற்றின் கால்வாய்களில் சிறுவன் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு விட்டு வைத்திருந்தார்கள். விசாரித்தால் 'உத்தரவு வரவில்லை' என்று அதிகாரிகள் சொன்னார்களாம். தண்ணீர்தான் இருக்கிறதே பிறகு ஏன் தயங்குகிறார்கள் என்றால் உருப்படியாக மராமத்துப் பணிகள் செய்யவில்லை என்பதுதான் உண்மையான காரணம். புதரண்டிக் கிடக்கின்றன. ஆற்றிலேயே கூட ஆகாயத் தாமரை அடைத்துக் கிடக்கிறது. கால்வாய்களில் கரைகள் வலுப்படுத்தப்படவில்லை. மதகுகள் சரி செய்யப்படவில்லை. ஏமாந்தால் கரைகள் உடைந்துவிடும். அதனால்தான் தயங்குகிறார்கள்.
இந்த லட்சணத்தில்தான் ஆட்சியாளர்களுக்கு ஆங்காங்கே சில நாட்களுக்கு முன்பாக 'குடி மராமத்து நாயகன்' என்று பதாகைகள் வைத்தார்கள். நம் ஊருக்கு எங்கே நீர் வரப்போகிறது என்ற தைரியத்தில் வைக்கப்பட்ட பதாகைகள் அவை. இப்பொழுது நீர் பெருக்கெடுத்து ஓடும் போது பட்டப்பெயர் பல்லிளிக்கிறது.
நம்மிடம் நீர் மேலாண்மை என்பது கிஞ்சித்தும் இல்லை.
வருடத்திற்கு வெறும் இரண்டு டி.எம்.சி தண்ணீர் கேட்டு அவிநாசி அத்திக்கடவு போராளிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 முதல் 8 ஆம் தேதி வரையில் நான்கு நாட்களில் மட்டும் கடலில் கலந்த நீரின் அளவு 17 டி.எம்.சி. ஆனால் 2015 மற்றும் 2016- களில் குடிக்க தண்ணீர் இல்லை. ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமா?
இப்படித்தான் வெள்ளம் வரும் போதும் சரி; வறட்சி வரும் போதும் சரி- பேசிவிட்டு நகர்ந்துவிடுகிறோம். நமக்கு ஞாபக மறதி இருப்பதால் பிரச்சினையில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க போய்விடுகிறோம். ஆட்சியாளர்களும் இஷ்டத்துக்கு கப்ஸா அடித்து விடுகிறார்கள்.
அவிநாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் 2 டி.எம்.சியை அங்கே கொடுத்திருக்கலாம். பல தசாப்தங்களாக ஆட்சியாளர்கள் போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். மூன்று மாவட்டங்களில் இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தால் உதவ முடியும். இப்படி தமிழகம் முழுக்கவும் நீர் இல்லாத காலத்தில் சில திட்டங்களைச் செயல்படுத்தி வைத்திருந்தால் நீர் அபரிமிதமாக இருக்கும் போது பிரச்சினை இருக்காது. குறைந்தபட்சம் நிலத்தடி நீர் மட்டத்தையாவது உயர்த்தி வைக்கலாம். அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பஞ்சமிருக்காது. எங்கே செய்கிறார்கள்?
வளைத்து வளைத்து சாலைகளைப் போட்டால் நாற்பது சதவீதம் கமிஷன் அடிக்கலாம். ஆனால் நீர் மேலாண்மைத் திட்டங்களில் அவ்வளவு கமிஷன் சாத்தியமில்லை என்பதால் எதையுமே செய்யாமல் கணக்கு வேண்டுமானால் எழுதுகிறார்கள்.
ஒரேயொரு புள்ளி விவரம் போதும். 1960 களில் தமிழகத்தில் ஏரிப்பாசன நிலப்பரப்பு கிட்டத்தட்ட ஒன்பதரை லடசம் ஹெக்டேர். இன்றைக்கு அந்த அளவு நான்கரை லட்சம் ஹெக்டேர். என்னவானது? ஏரிகளை நிரப்பி பேருந்து நிலையங்களை அமைத்தார்கள். அரசு நிலமாக அரசே மாற்றியது. தனியார்கள் விடுவார்களா? மண்ணைப் போட்டு மூடி ஏரிகளைத் திருடிவிட்டார்கள். பிறகு பாசனப்பரப்பு குறையாமல் என்ன செய்யும்? திருடியது தொலையட்டும். மிச்சமிருப்பதில் எவ்வளவு ஏரிகளை சரியாக தூர்வாரி வைத்திருக்கிறார்கள்? மேட்டூர் அணைக்கும் பெரிய அணைக்கட்டுக்கும் இடையில் இருக்கும் ஏரிகள், குளம் குட்டைகளையாவது தயார் செய்து வைத்திருக்கலாம்.
இதையெல்லாம் எப்படி பேசாமல் இருக்க முடியும்? நிறைய பேச வேண்டியிருக்கிறது. வெள்ளம் பெருக்கெடுக்கும் காலத்தில் வெள்ளத்தைப் பற்றி பேசுகிறோம். வறட்சியின் போது பருவமழையைத் திட்டுகிறோம். இதனால் எந்த பலனுமில்லை. நம்முடைய சிந்தனையிலேயே மாற்றம் அவசியம். உருப்படியான திட்டங்கள், நீர் பாசன வசதி மேம்பாடுகள், இருக்கும் வசதிகளை சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி நிறையப் பேச வேண்டும்.
பருவத்தின் சுழற்சியில் மாறுதல் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் எல்லா பழியையும் பருவகாலத்தில் மீதே போட வேண்டியதில்லை. பருவத்தின் மாறுதலுக்கு ஏற்ப நம்மை எப்படி தகவமைத்துக் கொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய எதிர்காலம் அமைந்திருக்கிறது. நீர் இருக்கும் போது எப்படிச் சேகரிக்கிறோம் என்பது முக்கியம் இல்லையா? ஒரு பக்கம் ஆர்ப்பரித்து ஓடும் நீர். இன்னொரு பக்கம் வறட்சி. இந்த மாநிலத்தின் நிலப்பரப்பு பற்றி பரவலாகத் தெரிந்தவர்களுக்கு நிச்சயமாக வயிறு பற்றியெரியும் .
கிராமசபை கூட்டங்களில் இது குறித்தெல்லாம் விவாதிக்கலாம். அந்தந்த ஊர்களில் நீர் சேகரிப்புக்கான வாய்ப்புகளை பற்றி பேசலாம். மராமத்து பணிகள் குறித்தான தெளிவு நமக்கு வேண்டும். இளைஞர்கள்தான் ஆங்காங்கே முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் கேட்காவிட்டால் நாளை நிலைமை இன்னமும் மோசமாகும். இனியாவது ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்போம்-குறைந்தபட்சம் நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்தாவது.
10 எதிர் சப்தங்கள்:
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மிக அதிக அளவில் மக்கள் குடியேற்றம் நடந்த மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் .ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஏரிகளை கொண்ட மாவட்டம்.இப்போது இங்கு விவசாயமே வெகு அரிதாகி விட்டது.ஏரிகள் குறைந்ததால் ஏரி பாசனம் மூலம் பயிர் செய்யப்படும் நிலங்கள் குறையவில்லை.விளைநிலங்கள் வீடுகளாக மாறியதால் இந்த மாற்றம்
மாவட்டவாரியாக ஏரி பாசனம் குறைந்த பகுதிகளை பார்த்தால் இது தெளிவாக விளங்கும்.குறுக்கே ஆந்திராவில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் இது .நீர் மேலாண்மை என்ற பெயரில் நீர் வரும் வழியில் உள்ள பகுதிகள் தங்களுக்கே முதல் உரிமை என்று சொந்தம் கொண்டாட ,மீதமாவது,உபரி என்று கருதுவது தான் பிந்தைய பகுதிகளுக்கு எனும் மனப்பான்மை காரணமான பாதிப்பே மிக மிக அதிகம்.
//வளைத்து வளைத்து சாலைகளைப் போட்டால் நாற்பது சதவீதம் கமிஷன் அடிக்கலாம். ஆனால் நீர் மேலாண்மைத் திட்டங்களில் அவ்வளவு கமிஷன் சாத்தியமில்லை என்பதால் எதையுமே செய்யாமல் கணக்கு வேண்டுமானால் எழுதுகிறார்கள்.//
---தங்களுக்கு பிரயோஜனமில்லாத எந்த திட்டத்தையும் திராவிட ஆட்சியாளர்கள் கொண்டுவரவில்லை ..
கட்டுரை சரி......ஆனால் உங்கள் வருத்தத்திற்கு காரணமான திராவிட ஆட்சிகளை எதுவும் சொல்லமாட்டீர்களோ???? ஒருவேளை ஏரியா காரர் கே ஏ செங்கோட்டையன் கோவப்படுவார்னு நினைச்சிட்டீங்களோ..................என்ன ஒரு நடுநிலை....................முட்டுக்கொடுத்துக்கொண்டேயிருங்க ............ இன்னும் முப்பது வருசத்துக்கு அப்புறம் இதே கட்டுரையை மறுபடியும் பதிக்கலாம்........
நீங்கள் நிசப்தம் படிக்கிறீர்களா இல்லையா? செங்கோட்டையனுக்கு ஆதரவாக எழுதுகிறான் என்று சொன்னால் செங்கோட்டையனே நம்பமாட்டார். ஒன்றைச் சொன்னால் இன்னொன்றை ஏன் சொல்லவில்லை என்று கேட்பதை முதலில் நிறுத்துங்கள். செங்கோட்டையன் காரணம் என்றால் அதை கட்டுரையாக எழுதிக் கொடுங்கள். தரவுகள் சரியாக இருந்தால் பதிப்பிக்க எனக்கு ஒன்றும் தயக்கமில்லை. போகிற போக்கில் எல்லோரையும் பற்றி எல்லாவற்றையும் எழுத முடியாது.
செங்கொட்டையனை விடுங்க.திராவிட ஆட்சியாளர்கள் சரியில்லைன்னு மொத்தமாகவது சொல்லிருக்கலாமே...
#செங்கோட்டையனுக்கு ஆதரவாக எழுதுகிறான் என்று சொன்னால் செங்கோட்டையனே நம்பமாட்டார்#
உண்மை.. வாழ்க வளமுடன்
யார் கொடுத்த அழுத்தமோ விஜய் டிவியில் வேற மாதிரி சொன்னாங்களே நீயா நானா வில்.சந்தேகமாதான் இருந்தது. தமிழ்நாடு நீர் மேலாண்மையில் ஜூப்பராம்.
நாம முதல்ல என்னென்ன இருக்குது என தெரிச்சுக்கணும், அதையே மக்களாகிய நாம மறந்துட்டோம், அப்புறம் நாம எப்படி சரி பண்ணபோறோம் என்று யோசிப்போம், ஏன்னா இப்ப எதையுமே செயல்படுத்த உடனே முடியாது, மக்கள் அவ்வளவு விழிப்புணர்வோடு எதிர்க்கிறார்கள். தீவிர புரிதல் வேண்டுமென்றால், இதுபோல கட்டுரைகள் நிறைய வேண்டும்.
தாராபுரம் அமராவதி இன்று பத்து வருடங்களுக்கு பிறகு இப்படி கரை நிறைத்து போகிறாதாம். 35000 கன அடி என்ற கணக்கு. ஆனால் ஏன் சேர்ந்தாற் போல பழைய மற்றும் புது ஆயகட்டு எனப்படும் பாசன வாய்க்காலுக்கு திறந்து விடவில்லை என்று எனக்கு தெரியவில்லை. போலீஸ் காவல் உள்ளது முக்கியமான கரை ஒரங்களில். அருகில் ஒடும் ராஜ வாய்க்கால் எப்போதும் போல சாக்கடைஉடன். நாளை வரும் என சொல்லி கொள்கிறேன்.
உப்பாறு அணை ஒன்று உருவாகி ஒரு 35,40 வருடங்களுக்கு முன் நெல் போகம் நடந்த பாசனம். வெள்ளம் வரும் போது வாய்க்கால் வழி திருப்பி விட வழி ஒன்று உருவாகி இருந்தால், நிறையும் நீரில் மனம் நிறைந்து, மண் வாழும் பல கிராமங்கள்.
அமராவதி ஓடி கரூரில் காவிரிக்கு வலு சேர்க்கும்... எங்கு சென்று சொல்வது....
லிங்கராஜ்
மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும்
போதாதுதான். தவிர கொங்கு நாடு
மேட்டு நிலம். இயற்கை நில
அமைவை பற்றிய புரிதல் இல்லாத
கட்டுரை. நீரேற்று பாசனம், நதிகள் இணைப்பு
இவைகளெல்லாம் அபத்தமான
சிந்தனைகள். மனிதனின் மிகை நுகர்வு
வாழ்க்கை முறையை மாற்றவில்லையென்றால்
நூற்றி முப்பது கோடி மக்கள் தொகையுடைய
இந்த நாட்டின் இயற்கையை யாராலும்
காப்பாற்ற முடியாது. அடிப்படை பிரச்சனையே
அதுதான்
Post a Comment