Jul 31, 2018

சுகவன முருகன்

'புது எழுத்து' மனோன்மணி என்றுதான் அவர் எனக்கு அறிமுகம். புது எழுத்து என்றொரு சிற்றிதழை நடத்தி வருகிறார். அவருக்குச் சுகவன முருகன் என்று வேறொரு பெயர் உண்டு. அதுதான் உண்மையான பெயரும் கூட. கிருஷ்ணகிரி பக்கம் இருக்கும் காடு மேடு மலையெல்லாம் சுற்றி- குகை ஓவியங்களைத் தேடுவது, கல்வெட்டுக்களைப்  படிப்பது, ஆதி மனிதனின் வாழ்விடங்களை நோக்கிப் பயணிப்பது என்று வெகு சுவாரசியமான மனிதர்.  சவளூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

எப்பொழுதும் சுகவன முருகனின் தோளில் ஒரு ஜோல்னா பை இருக்கும். 'எங்கயாச்சும் காடு மலைன்னு சுத்தும் போது கிடைக்கறதெல்லாம் எடுத்து போட்டுக்கிறதுங்க' என்பார். அவர் பொறுக்கியெடுப்பது பொன்னும் பொருளும் இல்லை. கற்கால ஆயுதங்கள், கருவிகள் என்பனவெல்லாம் அவர் கண்களில் படும். எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். தமது பள்ளி மாணவர்களிடமும் அவர் இப்படி எடுத்து வரச் சொல்வதுண்டு. இப்படியான ஆசிரியர்கள் வாய்ப்பது வரம். அந்த மாணவர்களில் நான்கைந்து பேருக்கு இதில் ஆர்வம் வந்தாலும் கூட போதும். அடுத்த தலைமுறைக்கு கடத்தியாயிற்று. 

யோசித்துப் பார்த்தால் ஆயிரமாண்டுகளாக நிலைத்து நின்றிருந்தவையெல்லாம் ஐம்பதாண்டுகளில் அழிந்து போகும் அவலத்தை நம் தலைமுறைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த தலைமுறை வரைக்கும் வீட்டு முற்றங்களில் சுவடிகள் தொங்கியதுண்டு. கான்கிரீட் வீடுகளுக்காக அத்தனை முற்றங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. அத்தனை சுவடிகளும் காணாமல் போய்விட்டன. ஆயிரமாண்டுகளாக சாலையோரம் கிடந்த நடுகற்களும் சுமைதாங்கிகளும் கடந்த நாற்பதாண்டு கால வளர்ச்சிக்கு இரையாக்கப்பட்டுவிட்டன. இப்படித்தான் இந்த மண்ணின் பெரும்பாலான அடையாளச் சின்னங்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. மலைகளும் ஆறுகளும் குளங்களும் குட்டைகளும் சிதைந்து கொண்டேயிருக்கின்றன. அதே போலத்தான் கிருஷ்ணகிரி மலைகளும். கிரானைட்டுகளுக்காக அசுர வேகத்தில் பெயர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஓவியங்கள் இருந்தால் என்ன, கற்படுகைகள் இருந்தால் என்ன? 

இந்தச் சூழலிதான் சுகவன முருகன் மாதிரியானவர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானவை. வெறுமனே புத்தகங்களில் ஆய்வுகளை நடத்தாமல் களத்தில் இறங்கி தேடுகிறவர்களின் தேவையை எந்த விதத்திலும் மறுக்க முடியாது. கல் திட்டைகள், கல் வட்டங்கள், பாறைகள் என்று எதையாவது புதிது புதிதாக வெளிக் கொணர்ந்தபடியே இருக்கிறார்கள். இவை பதிவுகளாகி வரலாறுகளாகின்றன. விட்டு வைத்தால் இன்னமும் சில ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் சிதைந்து போகக் கூடும். 

                    (கல்வெட்டை வாசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்)

சுகவன முருகன், தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் மட்டுமில்லாமல் அவை குறித்தான கருத்தரங்குகள், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளையும் சலிப்பில்லாமல் செய்கிறவர். அவர் மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறார் என்று சொல்லவில்லை. அவருக்குப் பின்னால் பக்கபலமாக இருக்கிற நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஒருங்கிணைப்பது, இழுத்துப் போட்டுக் கொண்டு பணிகளைச் செய்வது என முருகனின் உழைப்பு அசாத்தியமானது.  

அழிந்து கொண்டிருக்கும் இத்தகைய அடையாளங்களைத் தேடி எடுக்கும் சுகவன முருகன் மாதிரியான மனிதர்களின் செயல்பாடுகள் கவனிக்கப்படல் வேண்டும். கவனப்படுத்தப்படல் வேண்டும். தமிழ் இந்துவில் மாதராசன்பட்டணம் குறித்தான கல்வெட்டு பற்றிய செய்தி பிரதானப்படுத்தப்பட்டிருந்தது. வெகு சந்தோஷமாக இருந்தது. இதற்கும் சற்று முன்பாக அவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து கண்டறிந்த இசையெழுப்பும் பாறை குறித்தான செய்தி வெளியாகியிருந்தது.

வருகிற மாதங்களில் ஒரு சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அவருடன் சேர்ந்து ஒரு களப் பயணம் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவரிடம் ஒரு விரிவான நேர்காணலைச் செய்யவும் விருப்பமிருக்கிறது. அவரிடம் இது பற்றி இன்னமும் பேசவில்லை. ஒத்துக் கொள்வார் என நினைக்கிறேன். வர விரும்புகிறவர்கள் ஒரு மின்னஞ்சல் (vaamanikandan@gmail.com) அனுப்புங்கள். திரு.முருகனிடம் பேசிவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

மாதரசன்பட்டணம் குறித்தான செய்தியை வாசித்தவுடன் அவரை அழைத்து வாழ்த்த வேண்டும் எனத் தோன்றியது. கட்டுரையாகவே எழுதி பதிவு செய்துவிடலாம் என்று எழுதிவிட்டேன்.

வாழ்த்துக்கள் சார்! தொடர்ந்து இயங்குங்கள். அதற்கான உடல்பலமும் மனோபலமும் வாய்க்கட்டும்.

சுகவன முருகன் : 98426 47101

3 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

மேன்மை மிகுந்த சுகவன முருகன் அய்யா, இன்றைய நிசப்தம் பதிவில் தங்களை பற்றிய செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு புலவர். செ.இராசு அண்ணன் அவர்கள் அறச்சாலையூர்(அரச்சலூர்-தற்போது) சமணர்கள் படுக்கை? போன்ற கல்வெட்டுகளை எல்லாம் படி எடுத்து வெள்ளை ஆடை முழுவதும் செம்மண் பூசிய நிலையில் வந்த காட்சி என் மனக்கண்ணில் ஊசலாடுகிறது. தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்.பேராசிரியர்.கோபாலகிருட்டிணன்
9994240629 9344053440

Saravanan Sekar said...

சுகவன முருகன் ஐயா போன்ற ஆய்வாளர்களோடு ஒரு முறை உலா பொய் வருவது உண்மையில் பெரிய கற்றல் அனுபவமாக இருக்கும் .. என்னால் வர முடியாத சூழல், வெளிநாட்டு வாசம். நீங்க போய்ட்டு வந்து அனுபவத்தையும் கற்றதையும் பதிவு பண்ணுங்க .. எனக்கும் என்னை போலவே ஆர்வமிருந்தும் வர முடியாமல் இருப்பவர்களுக்கும் ஒரு உதவியாக இருக்கும்..
நன்றி

Anonymous said...

Wish to participate with his endeavours financially, let me know if any through your blog.. Anonymous