கொழுப்பு தொடர்பான உங்கள் கலக்கத்தையும் அது குறித்த கடிதங்களையும் கண்டேன். சமகாலத் தலைமுறையின் ‘நுண்ணறிவு’த் தள்ளாட்டங்களாகவே அவை எனக்குப் பட்டன. நுண்ணறிவை மட்டம் தட்ட வேண்டும் என்பது எண்ணமில்லை; அதன் போதாமையைச் சுட்டியாக வேண்டிய தேவை இருக்கிறது.
நான் மருத்துவன் அல்ல. வழிபாடு குறித்த ஐந்தாண்டு கால ஆய்வில் அதிகம் எனக்குக் கிடைத்தவை நோய் மற்றும் நல்வாழ்வு குறித்த தகவல்களே. வழிபாட்டுக்கு அடிப்படையான சமூகக் காரணங்களில் உடல், மன நோய் நீக்கமே முதன்மையாய் இருந்திருக்கிறது. சமூக வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கும் ஒருவரால், இதை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக, சமூக மருத்துவ முறைகளின்(சமூகப் பயன்பாட்டில் இருக்கும் மருத்துவ முறைகளைக் குறிக்கும் பொதுச்சொல்) பின்புலத்தை விளங்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். அவ்வகையில் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இங்கு நோக்கம்.
நோயும், மருத்துவமும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் வாழ்வில் இணைந்திருக்கின்றன. சங்க இலக்கியம் முதற்கொண்டு சமீபகாலம் வரை ”கடவுள் வழிபாட்டால் எங்கள் நோய் குணமாயிற்று” என்று சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். சமண சமயத்தில் இருந்த திருநாவுக்கரசரின் வெப்பு நோய் குணமானதால் சைவ சமயத்துக்கு அவர் மாறியதாக சான்று இருக்கிறது. அருணகிர்நாதரின் தொழுநோயை முருகனே குணப்படுத்தியதாக அவரின் திருப்புகழ்ப் பாடல்கள் தெரிவிக்கின்றன. பகழிக்கூத்தரின் தீராத வயிற்று வலியை திருச்செந்தூர் முருகனே சரி செய்தார் என்று அவரின் பாடல்கள் தெரிவிக்கின்றன. இப்பட்டியல் குமரகுருபரர், தேவராய சாமிகள், பாம்பன் சாமிகள், கிருபானந்த வாரியார் வரை நீள்கிறது. சமயச்சான்றோர்கள் என்றில்லை.. அம்மை நோய்க்கு அம்மனின் கோபமே காரணம் என நம்பும் சாமானியர்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். இத்தகவலை இங்கு குறிப்பிடக் காரணம்.. நோய்கள் ஏதாவது ஒருவகையில் நம்மைத் தொடர்ந்தபடியே இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள மட்டுமே. மற்றபடி, வழிபாட்டைப் பெருமைப்படுத்த அன்று(வழிபாட்டின் வழியாக நோய் நீங்குமா, நீங்காதா என்பது மற்றுமொரு விவாதம்).
மருத்துவத்துக்கு வருகிறேன். சமூக மருத்துவத்தை இரு பெரும் பிரிவுகளாய்ப் பகுத்துக் கொள்கிறேன். ஒன்று, நவீன மருத்துவம்; மற்றது மாற்று மருத்துவம். ஒவ்வொன்றைப் பற்றிய அடிப்படைகளையும் நாம் புரிந்து கொண்டால்தான், அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது குறித்த விழிப்புணர்வுக்கு நகர முடியும்.
முதலில், நவீன மருத்துவத்தைப் பார்ப்போம். நவீன மருத்துவம் மனிதனின் உடலை உடற்கூற்றியல் வழியாக முதலில் பாகங்களாகப் பிரிக்கிறது. பிறகு அதன் செயல்பாடுகளை உடற்செயல்பாட்டியல் வழியாகப் புரிந்து கொள்ளப் பார்க்கிறது. மேலும், இவ்விரண்டின் அடிப்படைகளைக் கொண்டே நோய்களையும் மருந்துகளையும் பரிந்துரைக்கிறது. நவீன மருத்துவம் தர்க்க அடிப்படையில் ஒரு மனிதனை உடலாக மட்டுமே பார்க்கிறது அல்லது உடலை மட்டுமே கருத்தில் கொண்டு நோய்களையும், மருந்துகளையும் தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சான்று. காய்ச்சல் என்று எடுத்துக் கொண்டால் மணியின் காய்ச்சலுக்கும், சத்திவேலின் காய்ச்சலுக்கும் ஒரே மருந்துதான். காய்ச்சலின் அளவைக் கொண்டு மருந்துகளில் வீரியம் கூடக் குறைய இருக்கும்; அவ்வளவுதான்.
நவீன மருத்துவத்தில் மற்றுமொரு சிக்கலாக எனக்குப் படுவது அதன் சிகிச்சை முறைதான். கண் மருத்துவர் என்பவர் கண்ணுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பவர். காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் என்பவர் அப்பாகங்களுக்கான மருத்துவர். இதயம், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கும் தனித்தனி மருதுவர்கள். தர்க்கப்படி ஒப்புக்கொள்ளக் கூடியதுதான்; நியாயமாகத் தோன்றுவதுதான். உண்மையில், கண்ணில் தோன்றும் பிரச்சினை என்பது கண்ணின் பிரச்சினை மட்டும்தானா? உடல் என்பது உறுப்புகளின் ஒன்றியம்தானே.. அவ்வகையில் உள் உறுப்பு ஏதாவது ஒன்றில் நிகழும் குறைபாடுகள் கண்ணில் வெளிப்படலாம்தானே.. கண் மருத்துவர் அப்படியா கவனித்துப் பார்க்கிறார். கண்ணைக் குறித்து மட்டும்தானே அவர் கவலை கொள்கிறார். கண்ணை முதன்மைப்படுத்தித்தானே அவர் சிகிச்சை அளிக்கிறார். இது அறிவியல்பூர்வமாக சரியானதுதானா?
நவீன மருத்துவத்தில் தரப்படும் மருந்துகளும் வேதியியல் கூடங்களில் செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை. சொல்லப்போனால், அவை வேதித்தூண்டிகளாகச் செயல்படும். எப்படி என்றால், ஒருவர் உடல்வலி என்று சொன்னால் அவ்வலியை மறக்கச் செய்யும்படியான் வேதிப்பொருளே மருந்தாகத் தரப்படும். அப்பொருளை உட்கொண்டால் வலி குறைந்த உணர்வு ஏற்படும்; உண்மையில் வலி குறையாது என்பதை நினைவில் வையுங்கள். மேலும், அவ்வேதிப்பொருட்கள் உடலின் இயற்கைத் தன்மையைச் சீண்டிப் பார்க்கவும் செய்யும். இயல்பான உடல் எதிர்ப்பாற்றலை நவீன மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாய் மழுங்கடித்துக் கொண்டே வரும். நவீன மருந்துகளைத் தொடர்ச்சியாய் பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டவன் நான். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நவீன மருந்துக் கடைகளில் பகுதி நேரமாகப் பணியாற்றியும் இருக்கிறேன்.
இயற்கையான ஆக்சிஜனுக்கும், மனிதன் ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கும் ஆக்சிஜனுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது வழியாக நவீன மருந்துகளின் அடிப்படைப் பொருட்களை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும். இரண்டிலும் கிடைப்பது ஆக்சிஜன்தான் என்றாலும், செயற்கை ஆக்சிஜன் ஓரளவே நமக்கு உதவும். அதிகப்படியாகும்போது அதுவே நமக்குக் கேடாகும். நமக்கு இரும்புச்சத்து வேண்டும் என்றால் பெர்ரஸ் சல்பேட் எனும் வேதிப்பொருளின் வழியே அதை நமக்கு நவீன மருத்துவம் வழங்கப் பார்க்கிறது. தர்க்க அடிப்படையில் சரிதான் என்றாலும்.. அது செயற்கையான இரும்புச் சத்து என்பதும் உடலால் அதை ஓரளவே ஏற்றுக்கொள்ள முடியும் என்பதும் நம்மில் எத்தனை பேருக்குப் புரியும்? இயற்கையான் இரும்புச் சத்தை முருங்கை இலை, அத்திப்பழம்(ஊற வைத்தது) போன்ற பழங்களின் வழியாக உடல் இயல்பாக எடுத்துக் கொள்கிறது. திரும்பவும் விளங்கிக் கொள்வோம். முருங்கை இலையில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்து இயற்கையானது; உடலால் இயல்பாக ஏற்றுக் கொள்ளக் கூடியது. நவீன மருந்துகளின் இரும்புச் சத்து செயற்கையானது; உடலால் ஓரளவே ஏற்றுக் கொள்ள முடிவது.
நவீன மருத்துவத்தைக் குறித்து மணிக்கணக்கில் பேசுவதற்குண்டான தகவல்கள் என்னிடம் உள்ளன. அவற்றைக் கொண்டு அம்மருத்துவத்தை நிர்மூலமாக்குவதோ. ஒதுக்கித்தள்ளுவதோ என் வேலையன்று. அம்மருத்துவத்தை எக்காலத்தில் பயன்படுத்த வேண்டுமோ, அப்போது மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் புரிதல். மற்றபடி, எடுத்த்துக்கெல்லாம் நவீன மருத்துவத்தை நாடுவது என்பது நமக்கு நாமே பறித்துக் கொள்ளும் குழியாகவே எனக்குப் படுகிறது. அம்மருத்துவம் தொடர்பான தகவல்களையும் பொதுப்புத்தி கொண்டு ஆய்ந்து பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் என் விருப்பம்.
நவீன மருத்துவத்தைக் குறித்து பலரும் சொல்லியாகி விட்டது என்றாலும், நினைவூட்டலுக்காக சொல்லியாக வேண்டி இருக்கிறது. நவீன மருத்துவம் நோய்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில்லை; மாறாக, பெருக்கிக் கொண்டே செல்கிறது. இங்குதான், அம்மருத்துவத்திற்குப் பின்னிருக்கும் பெருவணிகச் சந்தை குறித்த கேள்விகள் எழுகின்றன. இங்கு, சிலரைக் குறிப்பிட்டு இல்லுமினாட்டிகள், அவர்கள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறார்கள் என்றெல்லாம் ஜல்லியடித்துவிட மாட்டேன். நியாயமான சந்தேகத்தை உங்கள் முன் வைக்கிறேன்; அவ்வளவே.
மாற்று மருத்துவ முறைகளுக்கு வருவோம். முதலில், ஹோமியோபதி. ஜெர்மன் நாட்டில் தோன்றியது. புகழ்பெற்ற நவீன மருத்துவரான சாமுவேல் ஹானிமென் முன்வைத்த மருத்துவ முறை. நவீன மருத்துவம் மனிதனை உடலாக மட்டுமே கருத.. ஹோமியோபதி உடலின் நோய்களை மனதின் குறிகள் வழியாகப் பார்த்தது. சான்றாக், காய்ச்சலுக்கே மீண்டும் வருவோம். மணியின் காய்ச்சலும், சத்திவேலின் காய்ச்சலும் ஒன்றல்ல. அதாவது, வெறுமனே உடலை மட்டுமே கணக்கில் கொள்வதில்லை. காய்ச்சலின் போதான இருவரின் மனக்குறிகளைக் கொண்டே நோய் மதிப்பிடப்படுகிறது. மணியின் காய்ச்சல் குறித்து மணி சொல்பவனவற்றைக் கணக்கில் கொள்ளாமல், ஹோமியோபதியில் மருந்து தர மாட்டார்கள். மேலும், காய்ச்சலுக்கு என்று பொதுவான மருந்தை ஹோமியோபதி பரிந்துரைப்பதே இல்லை. காய்ச்சலின் போது ஒரு மனிதனின் மனதில் தோன்றும் நோய்க்குறிகளுக்கே மருந்து. ஹோமியோபதியைக் குறித்துப் பேசவும் தகவல்கள் நிறைய இருக்கின்றன என்றாலும், அவை இங்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்.
நவீன மருத்துவமும், ஹோமியோபதியும் மேற்கு நமக்களித்த கொடைகள். அக்குபஞ்சர் மருத்துவ முறை சீனா நமக்கு அளித்ததாக்ச் சொல்லப்படுகிறது. யுனானி கிரேக்க-அரேபிய மருத்துவ முறை. ரெய்கி ஜப்பானிய மருத்துவ முறை. ஆயூர்வேதம் வட இந்திய(சமஸ்கிருத) மருத்துவ முறை. மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிய விளக்கங்கள் கடிதத்தை நீளச் செய்து விடும் என்பதால், சுருக்கமாக ஒரு வரியில் சொல்கிறேன். நவீன மருத்துவமும், மாற்று மருத்துவ முறைகளில் சித்த மருத்துவம் தவிர்த்து மற்றவை எல்லாம் நமக்கு வெளியில் இருந்து வந்தவை. சித்த மருத்துவம் மட்டுமே நமக்கு மிக அணுக்கமான மாற்று மருத்துவ முறை.
சித்த மருத்துவம் தவிர பிற மருத்துவ முறைகள் முறைப்படியான அறிவியல் தர்க்கங்களைக் கொண்டு அறிவியலாக நிறுவப்பட்டுள்ளன. சித்த மருத்துவம் மட்டுமே இன்றளவும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. சித்த மருத்துவத்தை ’அறிவியல் தர்க்க மருத்துவமாக’ நிறுவிவிட இன்றைக்குப் பலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், அதை அப்படி அறிவியல் மருத்துவமாக நிறுவிவிட முடியுமா எனத்தெரியவில்லை. ஆனால், வாழ்வியல் மருத்துவமாகவே நம்மோடு அது உறவு கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
சித்த மருத்துவம் குறித்த எனது புரிதல்களை மட்டுமே நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பிற மருத்துவ முறைகள் எல்லாம் மனிதனை உடல் மற்றும் மனமாக மட்டுமே பார்க்க.. சித்த மருத்துவம் அவனை உடல், மனம் மற்றும் உயிர் என்பதாகப் பார்க்கிறது. மணி, மந்திரம் மற்றும் மருந்து என்பதான சித்த மருத்துவக் குறிசொற்களே அதற்குத் தகுந்த சான்று(சைவ சமயத்தை முன்வைத்து, இவற்றை விரிவாக விளக்க முடியும்).
சித்த மருத்துவத்தின் வரலாறை நிச்சயம் நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. அம்மருத்துவம் குறித்த தகவல்களை ஓரளவு தொகுத்துப் புரிந்து கொள்ளப்பார்க்கலாம். ”அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்” என்பது சித்த மருத்துவ மூல தத்துவம். எளிமையாகச் சொல்வதாயின், அண்டம் என்பது இயற்கை. பிண்டம் என்பது செயற்கை. இது ஓரளவுக்கே பொருந்தும் என்றாலும் புரிந்து கொள்வதற்காக இப்படித்தான் கொள்ள வேண்டி இருக்கிறது. அண்டமும், பிண்டமும் இணக்கமாக இருக்கும் வரை பிண்டத்துக்குக் கேடு வராது. அண்டத்தோடு பிண்டம் முரண்பட்டவுடன் அதற்குக் கேடு துவங்கி விடுகிறது. கேடு என்பது நோய் என்று சொல்லாமலேயே தெரிந்து கொண்டிருப்பீர்கள். இன்னும் எளிமையாகச் சொல்வதாயின், உடல் இயற்கைக்கு இணக்கமாக இருக்கும் வரை நம்மை நோய்கள் நெருங்கா. அவ்வியற்கைக்குக் கொஞ்சம் முரண்பட்டாலும் நோய்கள் தலைகாட்டத் துவங்கிவிடும். இங்கு நோய்கள் துன்பங்களே அன்று; உடல் இயற்கைக்கு நாம் முரண்பட்டிருக்கிறோம் என்பதைச் சுட்டும் அறிவிப்பான்கள்.
சித்த மருத்துவம் மனிதனின் நோய்களுக்கு வாதம், பித்தம், கபம் எனும் மூன்று காரணிகளை முன்வைக்கிறது. அவற்றை ஐம்பூதங்களின் கலவையாகவும் சொல்கிறது. ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் மண் எனும் ஐம்பூதங்களை நாம் அறிவோம். அவற்றில் மண்ணும், நீரும் கபத்துக்குக் காரணமாகின்றன. நெருப்பு பித்தத்துக்குக் காரணமாகிறது. காற்றும், ஆகாயமும் வாதத்துக்குக் காரணமாகின்றன. உடல் மண்ணும், நீருமால் ஆனது; மனம் ஆகாயம், காற்றால் ஆனது; உயிர் நெருப்பால் ஆனது. உயிர்ச்சூடு எனும் வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.
சித்தமருத்துவம் கணக்கிலடங்கா நோய்களைப் பட்டியலிட்டாலும் அவற்றை வாத, பித்த மற்றும் கப வகைகளுக்குள்ளாகவே அடக்கி விடுகின்றன. கபம் அதிகம் – கபம் குறைவு, பித்தம் அதிகம் – பித்தம் குறைவு, வாதம் அதிகம் – வாதம் குறைவு என்கிற பிரிவுகளுக்குள்ளாகவே நோய்களை அடக்கி விடுகிறது. நோய்களின் பெயர்களையோ அவற்றைக் கண்டு அஞ்சுவதையோ சித்த மருத்துவம் ஒப்புவதில்லை.
சித்த மருத்துவ மூன்று வகையான மருந்து வர்க்கங்களைப் பரிந்துரைக்கிறது. அவை – தாவர வர்க்கம், மாமிச வர்க்கம் மற்றும் தாது வர்க்கம். தாவர வர்க்க மருந்துகள் என்பவையே இன்றைய மூலிகை மருந்துகள் எனச் சொல்லப்படும் தாவர மூலிகை மருத்துவம்(கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியமும் அடங்கும்). ஆரம்பகட்ட நோய்த்தன்மை அல்லது எளிய நோய்களுக்கு மூலிகை மருந்துகளே போதுமானது. இங்கு ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். மூலிகை மருந்துகள்தான் என்றில்லை. உணவுக்கு நாம் பயன்படுத்தும் தாவரவகைப் பொருட்களைக் கொண்டும் நம் நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அதையே இன்று உணவு மருத்துவம், சுவை மருத்துவம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
மாமிச வர்க்க மருந்துகள் என்பவை விலங்குகளைக் கொண்டு சமைக்கப்படும் அல்லது தயாரிக்கப்படும் மருந்துகளைக் குறிக்கும். நோய்த்தன்மை நடுத்தர நிலையில் இருப்பவர்களுக்கு மாமிச வர்க்க மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆட்டுக் கறி, நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக்கால் சூப், நண்டு சூப் உள்ளிட்டவை உணவு வகையிலான மாமிச வர்க்க மருந்துகள். நோய்த்தன்மை கொஞ்சம் அதிகரித்து விட்டவர்களுக்கு இவை நல்ல பலன்களைக் கொடுக்கும்.
தாது வர்க்க மருந்துகள் எளிய மக்களால் உணவாகவே தயாரிக்க முடியாதவை. தேர்ந்த பாரம்படிய வைத்தியர்களால் தயாரித்து அளிக்கப்படும் செந்தூரம், பஸ்பம் போன்றவையே தாது வர்க்க மருந்துகள். நோய்த்தன்மை வெகுதீவிரமாக இருக்கும் நபர்களுக்கு, இவ்வித மருந்துகளே பயன்தரக்கூடியவை. உயிர் மற்றும் உடலின் உறுதிக்கு அடிப்படையாய் இருக்கும் ஏழு தாதுக்களில் குறைபாடுள்ளவற்றைச் சீர்படுத்தும் மருந்துகள் என்பதால் தாதுவர்க்க மருந்துகள் என்கிறோம்.
சித்த மருத்துவரை நாடும்போது பத்தியம் என்பதைப் பரிந்துரைப்பார்கள். வாத அதிகமானதால் நோய் எனும்போது, வாதத்தை மேலும் அதிகப்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்ப்பது சிறந்ததுதானே? பொதுவாகவே உப்பு, புளி மற்றும் கார(வரமிளகாய் மற்றும் மசாலா) வகைகளை விலக்கிக் கொள்வது பொதுப்பத்தியம். வாத, பித்த மற்றும் கப அளவுகளைக் கொண்டு ஒவ்வொருவருக்குமான தனித்தனிப் பத்தியங்கள் உண்டு. பத்தியத்தின் மனதுக்குத் தெம்பளிப்பதற்காய் ஜோதிடத்தைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்தினர். “இந்தக் கோவிலுக்குச் சென்று வாருங்கள்!” என்பது போன்ற பரிகாரங்கள் நோய்கொண்டவரின் மனதை உளவியல்பூர்வமாக உறுதிப்படுத்தியது(ஜோதிடத்திலும், சித்த மருத்துவத்திலும்ம் ஊடுருவிவிட்ட போலிகளால் அவை மூடநம்பிக்கைகளாகச் சிறுத்துப் போயின).
சித்த மருத்துவ முறையைக் குறித்த நூற்றுக்கணக்கான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசவும் இயலும். இங்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். சித்த மருத்துவ தத்துவம் நம் மண்ணுக்கு மிக அணுக்கமானது என்பதால், அதன்மீது எனக்குக் கொஞ்சம் பாசம் அதிகம். மற்றபடி, நவீன யுகத்தில் நோயாளியின் உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு அவருக்கு விருப்பமான மருத்துவ முறைகளைத் தெரிவு செய்வதே சிறப்பாக இருக்க முடியும்.
என்னளவில், வாழும் சூழலின் தன்மைகளைக் கருத்தில் கொண்ட மருத்துவ முறைதான் சிறந்தது. அவ்வகையில் சித்த மருத்துவம் மிகச்சிறப்பானது. மேலும், சித்த மருத்துவத்தை வெறுமனே சூரணம், லேகியம் என்ற அளவில் புரிந்து கொள்ளாமல் “உடல் இயற்கைக்கு இணக்கமாக வாழ்வதற்கு நம்மைத் தூண்டும் அணுக்கமான வாழ்வியல் முறை”யாகக் கருதிப் பயன்படுத்திக் கொண்டால் சிறப்பு. போலி சித்த மருத்துவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், உங்கள் ஊரிலேயே நீங்கள் அறியாமல் இருக்கும் ஒரு நல்ல சித்த வைத்தியரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதுவே, உங்களின் முயற்சியாக இருந்தால் போதுமானது.
எம்மருத்துவ முறைகளையும் புனிதப்படுத்துவது அவசியமற்றது. அதேநேரம், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்தில் நிலவும் மருத்துவ முறைகள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முயல்வதென்பதும் முக்கியம். அவ்வகையில் இக்கடிதம் மிகமிகமிகச் சுருக்கமான ஒரு திறப்பு மட்டுமே.
எம்மருத்துவ முறைகளையும் புனிதப்படுத்துவது அவசியமற்றது. அதேநேரம், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்தில் நிலவும் மருத்துவ முறைகள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முயல்வதென்பதும் முக்கியம். அவ்வகையில் இக்கடிதம் மிகமிகமிகச் சுருக்கமான ஒரு திறப்பு மட்டுமே.
சத்திவேல்
20 எதிர் சப்தங்கள்:
புதிய சிந்தனையை உருவாக்கியுள்ளது இந்த கட்டுரை
சல்யூட் சக்திவேல் சார்
ரவுடி யாரு, பிராடு யாருனு கிழி கிழினு கிழித்திருக்கார்..
நல்ல தமிழில் எழுதப்பட்ட ஒரு டுபாக்கூர் கட்டுரை.
<< நவீன மருத்துவமும், ஹோமியோபதியும் மேற்கு நமக்களித்த கொடைகள். -
நவீன மருத்துவத்தையும் , ஹோமியோபதியும் ஒரே மாதிரி பார்ப்பது??
ஹோமியோபதி ஒரு மோசடியான மருத்துவம.. period
ஒரு தலைபட்சமான முட்டாள்தனமான கட்டுரை மருந்தகத்தில் வேலை பார்த்தால் அனைத்தும் தெரிந்துவிடாது.
உண்மையான படித்த மருத்துவரால் மட்டுமே அனைத்தையும் கூறமுடியும்.
நவீன மருத்துவம் வந்த பிறகு தான் கொல்லை நோய்கள் கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது.
//கண் மருத்துவர் என்பவர் கண்ணுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பவர். காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் என்பவர் அப்பாகங்களுக்கான மருத்துவர். இதயம், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கும் தனித்தனி மருதுவர்கள். தர்க்கப்படி ஒப்புக்கொள்ளக் கூடியதுதான்; நியாயமாகத் தோன்றுவதுதான். உண்மையில், கண்ணில் தோன்றும் பிரச்சினை என்பது கண்ணின் பிரச்சினை மட்டும்தானா? உடல் என்பது உறுப்புகளின் ஒன்றியம்தானே.. அவ்வகையில் உள் உறுப்பு ஏதாவது ஒன்றில் நிகழும் குறைபாடுகள் கண்ணில் வெளிப்படலாம்தானே.. கண் மருத்துவர் அப்படியா கவனித்துப் பார்க்கிறார். கண்ணைக் குறித்து மட்டும்தானே அவர் கவலை கொள்கிறார். கண்ணை முதன்மைப்படுத்தித்தானே அவர் சிகிச்சை அளிக்கிறார். இது அறிவியல்பூர்வமாக சரியானதுதானா?//
இந்த மாதிரி அரைவேக்காட்டுக்கெல்லாம் ஒரு முழு பதிவையே குடுத்திருக்கீங்க, ஏங்க மணி?
இது போன்ற பிறரின் கருத்துகளையும் தொடர்ந்து பதிவிடுங்கள்..விவாதம் கலந்துரையாடல் ஒரு நல்ல புரிதலை உண்டாக்கும்...இந்த பதிவாளர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது
அன்புள்ள மணி,
மருத்துவ கட்டுரைகளை பதிவிடுவதாக இருந்தால், தக்க நிபுணர்களிடம் பெற்று பதிவிடுங்கள்.
இதில் இருக்கும் அபத்தங்களை எண்ண முடியவில்லை. ஒன்றே ஒன்று - செயற்கை ஆக்சிஜன் செயற்கை இரும்பு என்று எதுவும் இல்லை. எந்த தனிமத்தையும் மனிதனால் உருவாக்க இயலாது. பிற கலவைகளில் இருந்து பிரித்து சுத்தம் செய்தே கொடுக்க முடியும்.
தயவு செய்து இப்பதிவை நீக்கிவிடவும்.
நல்ல விவாதத்தை தான் தொடங்கி வைத்திருக்கிறார்,,,,
இதில் சிலர் அவர் மேல் காட்டமாக கருத்து தெரிவிக்க என்ன அவசியம் என்று புரியவில்லை,,,, எந்த மருத்துவத்தையும் ஏற்றுக்கொள்வதும் ஒதுக்குவதும் அவரவர் மனநிலை பொருளாதார நிலை வாழ்க்கை (வேலை. தொழில்) முறை சம்பந்தப்பட்டது என்பது என் கருத்து,,,, கட்டுரையாளரின் நோக்கம் நம் மண்ணில் பிறந்த சித்த மருத்துவத்தை விவாதித்து எல்லோரும் புரிந்து கொள்வது நலம் என்பதாகதான் இருக்கிறது,,,, இதற்கு இவ்வளவு கொதிப்பான எதிர்கருத்துக்கள் தேவையில்லை,,,,
உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தில் இருப்பதை போல மாற்று மருத்துவத்திலும் தனித்தனியா மருத்துவர்கள் செயல்படவேண்டும், அப்படிசெய்தால் தான் அந்த மருத்துவம் முழுமைபெறும் என்றும் தீவிரமான ஆராய்ச்சியையோ மருந்துகளையோ அந்த ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களால் பரிந்தரைக்கப்பட்டு ஆங்கில மருத்தும் போல எளிதில் நோயாளியை குணமடையவைத்து மக்களின் நம்பிக்கையை பெறமுடியும் என்றும் ஒருவரின் முகநூல் பதிவில் படித்திருக்கிறேன்,, ஆங்கில மருத்துவத்தை ஒதுக்கும் (வெறுக்கும் அல்ல) நானே கூட இக்கருத்தை ஏற்றுக்கொண்டேன்,,,
இவ்வளவு நாட்கள் கழித்து இப்பதிவின் மூலம்தான் ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்படும் பாதிப்பு அவ்வுறுப்பு சம்பந்தப்பட்டது மட்டுமில்லை என்பதை புரிந்துகொள்கிறேன் நான் ஏற்கனவே படித்த சில கருத்துக்கள் மீண்டும் நினைவுக்கு வந்ததன் வாயிலாகவும்,,,, மருத்துவத்தில் வணிக சந்தையின் கரங்கள் ராட்சததனமானது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம்,,, இந்த சர்க்கரை நோயின் அளவு உலக பொருளாதார கொள்கைகள் நடைமுறைக்கு வருவதற்க முன்பு 140 நார்மல் என்று இருந்தாகவும் அவற்றை ஒன்றிரண்டு மாதஇடைவெளிக்குள்ளாகவே நார்மல் அளவு 130 என்றும் அடுத்து 120 என்றும் இரு தடவையாக குறைத்தார்கள்,,
ஆங்கில மருத்துவம் தேவையில்லை என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,, ஆனால் எந்த நோய்க்கு எப்படிப்பட்ட சூழலில் தேவை என்பதே முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டும்,,,விபத்துக்கள் ரத்தக்காயங்கள் போன்றவற்றிற்கும் சில பல நோய்கள் முற்றிய நிலையிலும் தேவைப்படும்,, ஆங்கில மருத்துவத்தால் அதிலிருந்து மீண்டுவிட்டாலும் அம்மருத்துவம் ஏற்படுத்திய பக்கவிளைவுகள் பின்னாளில் வேறு உபாதைகளை கொண்டுவராமல் இருக்க மாற்று மருத்துவ முறைகளையோ உணவே மருந்து போன்ற கான்சப்ட்டுகளையோ பின்பற்ற வேண்டியது அவசியமே,,
ஆங்கில மருத்துவமுறை பெரும்பாலும் பெயின் கில்லர் அல்லது சரிஜரி முறைகளையே சார்ந்திருக்கிறது,,, நோயாளிகளுக்கு எளிதாக விளக்க சொல்ல ஸ்கேன் எக்ஸ்ரே ஆஞ்சியோ லேசர் போன்ற இன்னபிற மருத்துவசாதனங்களின் அவுட்புட்களும் ரிப்போர்ட்களும் உதவுகின்றன,,, நமது மருத்துவத்தில் அது இல்லை என்பதால் நவீன உலவின் வாழ்க்கை முறையில் மெஷினாக ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கும் சித்தா போன்ற மாற்று மருத்துவத்தின் மீது பெரிய அவநம்பிக்கை எழுவது சமூக உளவியல் ரீதியாக நடக்க கூடிய நிகழ்வே,,
ஆபத்து காலகட்ட சிகிச்சைகளில் ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்ளும் போது நம் உடல் அமைப்பில் இருக்கும் இயல்பான சில வலிகள் குறைகள் அந்நேரத்தில் ஏற்படாது, ஆங்கில மருத்துவம் ஓகே இந்த நோய் உனக்கு தீர்ந்துவிட்டது என்று சொல்லி மருந்து மாத்திரைகளை நிறுத்தும்போது இந்த ஆபத்துகாலட்டத்திற்கு முன் நம் உடல் சந்திக்கும் சில பிரச்சனைகள் மீண்டும் எழும்,,, ஆனால் ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் இருக்கும் ஒருவிதமான அசௌகர்யமான மனநிலை அதை நிறுத்தியபின்பு தோன்றாது,,, இதை அனுபரீதியா சிந்தித்துபார்த்தவர்களுக்கு புரியும், எனக்கு 3 மாதத்திற்கு முன்பு பேருந்து விபத்தின் போது ஏற்பட்ட (பலத்த) காயங்களுக்காக சிகிச்சை எடுத்த காலகட்டத்தில் காலை பகல் இரவு என மூன்று வேளையும் தூக்கத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது (ஆனால் நிஜத்தில் எனக்கு இரவு தூக்கம் வர வெகுநேரம் பிடிக்கும்) அந்த நேரத்தில் எனக்கு இயல்பாகவே இருக்கும் கழுத்துவலி முதுகுவலி போன்ற சிறிய வலிகள் அப்போது இல்லை ஆனால் சிகிச்சை முடிந்து மருந்துகளை நிறுத்திய பின் அந்த வலிகளை உணரமுடிகிறது,,,, ஆனால் சிகிச்சையின்போது நான் வலியில்லாமல் இருந்தாலும் என் மனநிலையும் எனக்கு முன்னே இருக்கும் உலகமும் சற்று அந்நியமாகவே சோர்வாகவே தெரிந்தது, மருந்துகளை நிறுத்தியபின்புதான் கொஞ்சநாளிலிருந்து மனமும் உடலும் வழக்கமான குணநலனோடு செயல்பட தொடங்கியது,, இது என் அனுபவ அறிவு,
நவீன மருத்துவம் மற்றும் மரபு மருத்துவம் என்று குறிப்பிட்டுஇருந்தால் தெளிவாக இருக்கும் . காரணம் நவீன மருத்துவமே மாற்று மருத்துவமாக வந்ததுதான் . நவீன மருத்துவத்திற்கு பின்புதான் நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகள் அதிகரித்து உள்ளது .
சக்திவேல் நல்ல தெளிவானதொரு பதிவு கொடுத்து உள்ளார். அவரது அடிநாதமாக உள்ள உணர்வை முழுமையான புரிதல் இல்லாமல் சாடுவது சரி என்று தோன்றவில்லை. பதிவு நீக்க வேண்டாம். ஆமாம்.. அவரது தொடர்பு எண் இருந்தால் எம் போன்றோருக்கு பயன் உள்ளதாயிருக்குமே..கிடைக்கும் தானே. வாழ்க வளமுடன்
எந்த மருத்துவம் சிறந்ததென்று மணியே சொல்லி இருக்கிறார்.. அவரது தந்தைக்கு மருத்துவம் பார்த்த அனுபவம் மூலமாக.. சித்தமருத்துவமோ, மாற்று மருத்துவமோ அனுபவித்தவர்கள் சொல்வதை நம்பிக்கையுடன் கேளுங்கள்.. அதை விட்டுவிட்டு ஏட்டிக்கு போட்டி பேசாதீர்கள். மருத்துவர் சி.பி. மேத்யூ, கோட்டையம் மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய்த் துறையின் தலைவராகவும் துணை முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அலோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத தீவிரமாகப் பாதித்தபுற்றுநோயைக் குணப்படுத்துவதில் சித்தமருத்துவத்தை முன்னிலைப்படுத்தும் மருத்துவர் சி.பி. மேத்யூ, ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற புதிய கண்ணோட்டத்தை மருத்துவ உலகிற்குக் காட்டிவருகிறார். அவரது மருத்துவம் குறித்த கட்டுரையை படிக்க. https://www.facebook.com/photo.php?fbid=1703808533001994&set=ms.c.eJw9zMkNwDAMA8GOAjKUKan~%3BxoL4~_g4Wy4QK5bA0RD9cMCSA3bGhiQnKU0SvohaQyB8ycGFOkb7Ativ4boBmwfAHMm0bDQ~-~-.bps.a.1703807629668751.1073741922.100001185906417&type=3&theater
திரு சக்திவேல் அவர்களின் கருத்தில் உடன்பாடில்லையென்றால் அவரின் கருத்தை மறுக்கலாம் அதைவிட்டுவிட்டு அவரை விமர்சிப்பது சரியல்ல.ஆங்கில மருத்துவத்தை இவர் குறையாக சொல்லவில்லை.
நிசப்தம் திரு வா .மணிகண்டன் அவர்களின் அப்பாவிற்கும் மாற்று மருத்துவத்தில் நம்ப முடியாத அளவிற்கு முன்னேற்றம் கிடைத்தததை ஆதாரத்துடன் இந்த தளத்தில் பகிர்ந்திருந்ததையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இந்த கட்டுரை சொல்ல வருவது;
1) கண்ணுக்கு மருத்துவம் பார்ப்பவர் கண்ணை மட்டுமே பார்க்கிறார். அது தவறு என்பது மருத்துவம் பயின்ற அவருக்கோ, பல வருடங்களாக அவர் போன்ற பலருக்கு படம் நடத்தும் மருத்தவ பேராசிரியர்களுக்கோ தெரியாது.
ஆனால் நவீன மருந்துகளைத் தொடர்ச்சியாய் பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டு, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நவீன மருந்துக் கடைகளில் "பகுதி நேரமாகப்" பணியாற்றியும் இருப்பவர்க்கு தெரியும்.
2) இயற்கை ஆக்சிஜன் நல்லது, செயற்கை (?) ஆக்சிஜென் கேட்டது. அதாவது தண்ணீர் நல்லது, H2O கெட்டது, ஏனெனில் H2O கெமிகல்.
3)ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அவர் உடலுக்கு மருந்து தேவை இல்லை. ஹோமியோபதி மருத்துவர், நோயாளியின் மனதை படித்து, மனதிற்கு மருந்து கொடுப்பார்.
4)சைக்கிள் மட்டுமே போய்கொண்டிருந்த ஊரில், கார், பஸ், இரயில் ஆகியவை வந்தால் அது முன்னேற்றம்.ஆனால் சித்த வைத்தியர் இருந்த ஊரில் கிளினிக், ஆஸ்பத்திரி வந்தால் அது கெடுதி.
ஏனெனில் வெறும் வாதம் பித்தம் கபம் என்று எளிமையாக இருந்த மருத்துவத்தை, பாக்டீரியா, வைரஸ், ஸ்கேன், எக்ஸ் ரே என்று புதிய புதிய விசயங்களால் மேலும் சிக்கலாக்குகிறார்கள்.
புத்தி உள்ளவர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும்.
//இயற்கை ஆக்சிஜன் நல்லது, செயற்கை (?) ஆக்சிஜென் கேட்டது. அதாவது தண்ணீர் நல்லது, H2O கெட்டது, ஏனெனில் H2O கெமிகல்//
வயிறில் சுரக்கும் அமிலமும் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் அமிலமும் ஒன்றல்ல . உணவு பொருளில் இருந்து உடல் உருவாகும் கால்சியமும் செயற்கையாக தயாரிக்கப்படும் கால்சியமும் வேறுபட்ட தன்மை கொண்டவை .
மழைநீரும் கேன் நீரும் பயன்படுத்தி பார்த்தால் உடலில் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ளலாம் .
Blogger rdmuruganvps said...
//சிலர் அவர் மேல் காட்டமாக கருத்து தெரிவிக்க என்ன அவசியம் என்று புரியவில்லை,,,, எந்த மருத்துவத்தையும் ஏற்றுக்கொள்வதும் ஒதுக்குவதும் அவரவர் மனநிலை பொருளாதார நிலை வாழ்க்கை (வேலை. தொழில்) முறை சம்பந்தப்பட்டது என்பது என் கருத்து,,,, கட்டுரையாளரின் நோக்கம் நம் மண்ணில் பிறந்த சித்த மருத்துவத்தை விவாதித்து எல்லோரும் புரிந்து கொள்வது நலம் என்பதாகதான் இருக்கிறது,,,, இதற்கு இவ்வளவு கொதிப்பான எதிர்கருத்துக்கள் தேவையில்லை,,,,//
ரிப்பீட்டு.
யோவ் அவைத்தலைவா!!!!
இங்க வெட்டு குத்து கலவரம் நடந்துட்டுட்டு இருக்கு. எங்கே ய்யா போனேரு?
இவண்:
கொபசெ
வாம பாறைகள்
///செயற்கையாக தயாரிக்கப்படும் கால்சியமும்///
\\\
செயற்கை ஆக்சிஜன் செயற்கை இரும்பு என்று எதுவும் இல்லை. எந்த தனிமத்தையும் மனிதனால் உருவாக்க இயலாது. பிற கலவைகளில் இருந்து பிரித்து சுத்தம் செய்தே கொடுக்க முடியும்.
\\\
Haters if this article should watch videos of Dr. B.M. Hegde in youtube. How the ex-vice Chancellor of Manipal medical college reveals the conspiracy of allopathy. Period.
//எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளருக்கு ஐ.டி ஆட்கள் மீது என்ன வெறுப்போ தெரியாது- எப்பொழுது பேசினாலும் 'இன்னொரு பத்து வருஷம்..ஐ.டி அவ்வளவுதான் இல்லையா' என்பார்.//
The "bank manager's" comment, which is part of another article has evolved as an article. :)
Post a Comment