Jun 7, 2018

சிக்னல்

பெங்களூரில் கடந்த மாதம் சிக்னலுக்கு சிக்னல் தோசைக்கல் விற்றார்கள். 'இதை எதற்கு இவ்வளவு எண்ணிக்கையில் விற்கிறார்கள்' என்று மண்டை காய்ந்தது. அதுவும் வடநாட்டவர்கள். வடநாட்டவர்கள் என்று சொல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 'திராவிட ஆட்சியின் காரணமாகத்தான் தமிழன் நன்றாக இருக்கிறான்' என்று பொங்கல் வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு நாம் மல்லு கட்ட வேண்டும். இப்பொழுது அது பிரச்சினையில்லை. கடந்த மாதம் தோசைக்கல் விற்றவர்கள் இந்த மாதம் வண்ணக் குடைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வகை வகையான பொருட்களை எப்படித்தான் மொத்தமாக இறங்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சமயம் மகிழ்வுந்துகளில் செல்போன் மாட்டுகிற சாதனத்தை விற்றார்கள். இன்னொரு சமயம் பெரிய பலூன்கள். இப்படி நாம் யோசித்திருக்கவே யோசித்திருக்காத பொருளாக இருக்கும். அதுவும் ஊர் முழுக்கவும் ஒரே சமயத்தில் விற்பார்கள். 


இந்த மாதிரியான ஆட்களிடம் பேசலாம் என்று தோன்றும். பச்சாதாபம் எதுவுமில்லை. அவர்களின் நெட்வொர்க் ஆச்சரியப்படுத்தும். உள்ளூர்காரன் விற்பது வேறு கணக்கு. மொழி தெரியாத பெருநகரத்தில் மொத்தமாக பொருட்களை கொண்டு வந்து அதை நகர் முழுக்கவும் விற்பது என்பது சாதாரண நெட்வொர்க் இல்லை. எங்கே பொருள் வரும்? பொருட்களை எப்படி இவர்களுக்குள் விநியோகிக்கிறார்கள், ஒவ்வொருவரும் எப்படி ஏரியா பிரித்துக் கொள்கிறார்கள்? இதில் யாருக்கு இலாபம் அதிகம் என்பதெல்லாம் ஆச்சரியப்படுத்துகிற அம்சங்கள். 

என் ஹிந்திதான் தெரியுமல்லவா? 'கிதர்சே' என்று கேட்டால் 'கியாரே..' என்று ரஜினி மாதிரி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். 'உத்தர்பிரதேஷ் க்யா?' 'பீஹார் கியா?' என்று கேட்கும் போது 'உத்தர்பிரதேசமா?' 'பீஹாரா' என்று நாம் தமிழில் கேட்கும் போது எப்படி கேட்போமா அதே தொனியில் கேட்பேன். இவன் என்ன கேட்கிறான் என்று புரிந்து கொள்வார்கள். எந்த மாநிலத்தின் பெயரைச் சொன்னாலும் சரி 'பிஹார்மே கிதர்சே' என்று எனது ஹிந்தி புலமை விளையாடும். 

நேற்று எங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு வணிகவளாகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ரிஸார்ட்டுக்கு அழைத்துச் சென்றாலும் கூட நடிகர் சிவகுமார் சொல்வது மாதிரியெல்லாம் கசமுசா எதுவும் நடப்பதில்லை. அவர் பேசிய வீடியோவை பார்த்தீர்கள் அல்லவா? ஐ.டி நிறுவனங்களில் காண்டம் வெண்டிங் மெஷின் இருக்கிறது என்கிற ரீதியில் பேசியிருந்தார். ஏற்கனவே ஐ.டி துறை மக்களுக்கு ஊருக்குள் நல்லா பெயர். இதில் இப்படி சிலர் கிளப்பிவிட்டுவிடுகிறார்கள். அவரை விட்டுவிடலாம். அமெரிக்காவிலிருந்து இயக்குனர் வந்திருக்கிறார். அவர் வரும் போதெல்லாம் சாப்பிட அழைத்துச் செல்வார். இந்த முறை பவுலிங்குக்கு அழைத்துச் சென்றார். ஓரியன் மாலில் ப்ளூ-ஓ என்று பெயர். எனக்கு அப்படியொன்றும் விருப்பமில்லை. கொஞ்சம் ஏமாந்தாலும் பந்தோடு சேர்ந்து நானும் நழுவிடுவேன் போலிருந்தது. கெரகம், செம கனம்.

ராஜ்பவன் வழியாகச் செல்லும் பாதையைக் குறுக்காட்டிவிட்டார்கள். நேற்று கர்நாடகாவில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டிருந்தார்கள். சிவாஜி நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல். வண்டியை சிக்கனலில் நிறுத்திய போதுதான் குடை விற்கும் அந்த ஆளைப் பார்த்தேன். ஒரு குட்டிப்பையனை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார். அந்தக் கொஞ்சலை வர்ணித்துவிடுகிறேன். அவர் குந்த வைத்து அமர்ந்திருக்கிறார். நான்கு வயது பையன் அவரது பிடிக்குள் இருக்கிறான். அவர் பாடல் ஒன்றைப் பாடிய படியே அவனுக்கு முத்தமிட்டுக் கொண்டிருந்தார். எனக்கு மகியை நான் கொஞ்சும் நினைவு வந்துவிட்டது. எல்லா மனிதர்களுக்கும் மனம் ஒன்றுதானே? அவரைப் பார்த்து புன்னகைத்த போது அவர் பாடுவதை நிறுத்திவிட்டார். வண்டியை நிறுத்திவிட்டு 'ஜாதா டிராபிக் ஓகையா' என்று ஹிந்திவாலா ஆனேன். சிரித்தார். 

ஒரு குடை விற்றால் இருபது ரூபாய் நிற்குமாம். ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து குடைகள். குடும்பத்தில் நான்கு பேர்கள் விற்கிறார்கள். நானூறு முதல் ஆயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறார்கள். 'இதை உங்க ஊர்ல சம்பாதிக்க முடியாதா' என்று அவருக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அவர் என்ன சொன்னார் என்று புரியவில்லை. முடியாது என்பது மட்டும் புரிந்தது. 'திராவிடம்டா' கூட்டம் வருவதற்குள் அடுத்த பத்திக்கு தாவிவிடலாம்.

ஓரியன் மால் அட்டகாசமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டத்துக்கு அங்கேதான் திட்டமிடப்பட்டது. அப்பொழுது போராளி மோடில் இருந்ததால் வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் பெரிதாக இல்லை. வேடிக்கை என்றால் வேடிக்கைதான். நேற்று அப்படியில்லை. கண்கள் நன்கு குளிர்ந்தன. கண்டதையும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அவ்வளவு ஏ.சி. இரண்டு மணி நேரம் பவுலிங்கில் வீசினேன். எங்கள் அணியிலிருந்த ஐந்து பேர்களில் நான்தான் மிக்க குறைந்த புள்ளிகள்.  ஓர் ஆளுக்கு ஆயிரத்து அறுநூறு ரூபாயாம். ஐம்பது பேர்கள் சென்றிருந்தோம். கணக்குப் போட்டுக் கொள்ளலாம். இடையில் குளிர்பானங்கள் கொடுத்தார்கள். நொறுக்கு தீனி வைத்தார்கள். அதுக்கு இவ்வளவு செலவு. 

விளையாடிவிட்டு வெளியில் வந்த போது மணி எட்டை நெருங்கியிருந்தது. அதே சாலையில்தான் பயணித்தேன். வண்ணக் குடைகள் நினைவுக்கு வந்தன. இரண்டு மணி நேர விளையாட்டு அந்தக் குடும்பத்தின் நான்கு நாள் வருமானம் என்பது குற்றவுணர்ச்சியை உருவாக்கியது. இதற்குத்தான் தேவையிலலாமல் பேசக் கூடாது. அப்படியே பேசினாலும் சமயங்களில்  சுரனையற்றவனாக இருந்துவிட வேண்டும். சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் எதுவுமில்லை. நாம் அதிகம் பொருட்படுத்தாத அந்த மனிதர்களுக்கும் கனவுகள் இருக்குமல்லவா? தனது குழந்தையைக் கொஞ்சும் போதும் அந்த மனிதன் என்ன நினைப்பான்? அந்தக் குழந்தை உறங்கும் போது அதன் முகத்தைப் பார்க்கும் போது அவனுக்கு என்னவெல்லாம் தோன்றும்?

சிக்னல் வியாபாரிகள் மூன்று மடங்கு விலை வைத்து விற்பார்கள்தான். இல்லையென்று சொல்லவில்லை. 'ஆர்கானிக் உணவு' என்று சூப்பர் மார்க்கெட்டில் விலை வைப்பதில் தொடங்கி, 'எல்லா வசதிகளுடனும் வில்லா சார்' என்று ரியல் எஸ்டேட் ஆட்கள் வரைக்கும் எல்லோருமே விலை வைத்துதான் விற்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் நாமும்தான் விலை ஏற்றி விற்போம். எந்த மனிதனுக்குத்தான் கனவுகள் இல்லை? நமக்கு அதெல்லாம் கண்ணில்படுவதைவிடவும், விலை அதிகமாகத் தெரிவதைக் காட்டிலும் பூக்காரி முழத்துக்கு ஐந்து ரூபாய் ஏமாற்றியதும், தள்ளுவண்டிக்காரன் எடை ஏமாற்றுவதும்தான் தெரியும். மனித மனம் அப்படித்தான். 

மழைக் கோப்பாக இருந்தது.

சீக்கிரம் வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன். சிவாஜி நகரில் அதே நெரிசல்தான். குடை விற்பவர்கள் பிளாட்பாரத்தில் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு குழந்தை உறங்கி கொண்டிருந்தது. அந்த மனிதர் கொஞ்சிய குழந்தையாக இருக்க வேண்டும். சீக்கிரம் சிக்னல் விழுந்தால் இந்த இடத்தை தாண்டிவிடலாம் என மனம் பதறிக் கொண்டிருந்தது. 

10 எதிர் சப்தங்கள்:

Selvaraj said...

'திராவிடம்டா'
கூட்டம் வருவதற்குள் அடுத்த பத்திக்கு தாவிவிடலாம்.ஹா ஹா ஹா

Murugan R.D. said...

திராவிடர்களுக்கு வைக்கிற கொட்ட பாத்த சமயம் கிடைக்கிறப்ப எல்லாம் ஒரு சாத்து சாத்தணும்னு ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிட்ட மாதிரி தெரியுதே,
ஆதிக்கசாதிகாரனும் பார்ப்பானும் மட்டுமே விளையாடிகிட்டிருந்த பவுலிங்க உங்கள போல சாதாரண ஆளுங்களும் விளையாட முடியுதுன்னா,,,, அதுக்கு யார் காரணம்,,,,, அதே வெந்தாடி வேங்கை பண்ணிய புறட்சிதான் என்பதை மறந்துவிடவேண்டாம்,

சேக்காளி said...

சரக்கு ஒண்ணும் அவ்வளவு விசேசமா இல்லை.

vijay said...

//'திராவிடம்டா' கூட்டம் வருவதற்குள் //திராவிடம் இல்லையென்றால் நீயும் குடை விற்றுக்கொண்டிருப்பாய்.

Murugan R.D. said...

//'திராவிடம்டா' கூட்டம் வருவதற்குள் //திராவிடம் இல்லையென்றால் நீயும் குடை விற்றுக்கொண்டிருப்பாய். super....super...super இததான் எதிர்பார்த்தேன்,,,, உண்மையான திராவிடர்கள் எல்லாம் இப்படிதான் பேசுவார்கள்,
சரி இப்ப ஒரு கேள்வி
மூண தொட்டது யாரு,,,

அன்பே சிவம் said...

+Ve வை மட்டும் பார்ப்பதுதான் மணியின் பணி மற்றும் பார்வை என்பதுதான் நாங்களறிந்தது
அடுத்து 2000 வேலை நமக்கிருக்க,நமக்கெதுக்கு குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் வேலை.

மனிதரைத் தேடுவோம்.
மனிதத்தை விதைப்போம்.

மதன் said...

தாடி வச்சுருக்கறவனெல்லாம் தீவிரவாதி, ஐயர்கள் எல்லாம் ஆதிக்கவாதி அப்டினு generalize பண்ற mentality தான் திராவிடர்கள் எல்லாம் போராளி னு பகடி பண்ணுது. இந்த மாதிரி generalization ஐயும் பகடியையும் காலனி மக்களோட நிலமை தெரிந்த வா.ம கிட்ட இருந்து வருவதுதான் வருத்தமாக இருக்கு.

காலனி மக்கள வாசப்படிக்கு கீழ இன்னும் வச்சு பேசற சொந்தங்கள் பலர பார்த்துருக்கேன். அந்த மாதிரி ஒரு சாதியில இருந்து வந்த நான் சொல்வேன் - திராவிடம்மும் பகுத்தறிவும் இல்லேனா நானும் அப்டிதான் இருந்திருப்பேன்.

The guys who are born and brought up in cuties & metros will never understand their pain and little success. You can simply tag them as militant. Fringe group etc but you have to be in that position to realize how difficult it is. I know few people want to pickup and make jokes about it but my humble request is to have a chat with at least one impacted person...

Vaa.Ma -hope you will stop generalizing this.

Anonymous said...

Vaa.Ma -hope you will stop generalizing this.

my humble request is to have a chat with at least one impacted person...

THE EFFORTS VAA MAA HAVE TAKEN FOR SC/ST STUDENTS IS REMARKABLE.
NO BODY WILL DO THAT.(NEET COACHING )
DALIT LEADERS WERE RELUCTANT. EDUCATED/DOCTOR DALITS ARE WORSE.
DURING THIS PERIOD VAA MAA WOULD HAVE TALKED TO MANY impacted persons.
LET US NOT MISTAKE THIS GOOD MAN.
TO ME HIS PHILOSOPHY SEEMS TO BE
மனிதரைத் தேடுவோம்.
மனிதத்தை விதைப்போம்.
ANBUDAN,
M.NAGESWARAN.

SIV said...

Mr. Nageswaran,
Politically fighting for the requirements is different. Providing help to few to get their requirement is different.
Comparing both is meaningless

மதன் said...

I had only one line for Vaa.Ma in my comment - hope you will not generalize this. I know he is already close to the colony people and know their pain. I don’t ask him to talk to impacted people as he does that alread..I just felt bad That he is still generalizing dravidians and making fun of everyone. My point is - just because few are irritating you with posts, comments etc doesn’t mean that you can make fun of while Dravidian concept. That is my feedback.

I was requesting others who doesn’t understand this before simply commenting on Dravidian concept.