Jun 6, 2018

நிசப்தம்– விழியன்

'நிசப்தம்ன்னு ஒரு கதை எழுதி இருக்கேன்...காப்பி ரைட் பிரச்சினை வருமா?' என்று கேட்டு ஒரு செய்தி அனுப்பி இருந்தார் விழியன். எனக்கு அவர் உமாநாத் ஆக இருக்கும் போதிலிருந்து தெரியும். பிறகு விழியனாகி இன்றைக்கு பிரபலமான குழந்தைகள் கதை எழுத்தாளர் ஆகிவிட்டார்.

 'எனக்கு ராயல்டி மட்டும் கொடுத்துடுங்க' என்று சொன்னேன். 

எழுதியிருந்த கதையை அனுப்பி வைத்திருந்தார். கதையின் தலைப்பு நிசப்தம். அதில் வரும் பையன் பெயர் மணிகண்டன். எனக்கான ஒரு குட்டி அன்பளிப்பு என்றார். நன்றி. 

விழியன் பற்றித் தெரியாதவர்களுக்காக- 

கதை மட்டும் எழுதுவதில்லை. பாட புத்தகங்கள் குறித்து, குழந்தை வளர்ப்பு குறித்து என தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருப்பவர். மழலைக் கதை வரிசை என்று தொடர்ந்து கதைகளை வாட்ஸாப்பில் அனுப்பிக் கொண்டேயிருப்பார். இது குறித்து வெகு காலம் முன்பு நிசப்தத்தில் எழுதி இருக்கிறேன். இந்தக் கதைகளை வாசித்துவிட்டு நம்  குழந்தைகளுக்குச் சொல்லலாம். கதைகளை வாட்ஸாப்பில் பெற வேண்டுமானால் அவருக்கு உங்கள் எண்ணை அனுப்பி வைத்துவிடுங்கள். (+91 90940 09092) தனது 'ப்ராடகாஸ்ட்' பட்டியலில் இணைத்துக் கொள்வார். வாரம் இரண்டு கதைகளாவது புதிதாக வந்து கொண்டேயிருக்கும்.
                                            

 விழியனுக்கு மீண்டுமொரு நன்றி.                                 

                                                                            ***

நிசப்தம்– விழியன்
(சிறார் கதை)

அங்கம்மா கீழே விழுந்துவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் தலைமை ஆசிரியர் வகுப்பினை முடித்ததும் கிளம்பினார். ஏழாம் வகுப்பிற்கு அறிவியல் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். மணிகண்டன் அந்த வகுப்பில் தான் படிக்கின்றான். அந்த செய்தி வகுப்பினையே வருத்தத்தில் ஆழ்த்தியது. அங்கம்மா அந்த அரசுப்பள்ளியில் துப்புறவு பணி செய்யும் அக்கா. அவருக்கான சம்பளத்தினை அருகே இருக்கும் ஒரு கல்லூரி நிர்வாகம் கொடுக்கின்றது. பள்ளியில் அதற்கான ஏற்பாடு இல்லை. அங்கம்மாவின் வேலை நேரம் இரண்டு மணி நேரம் தான் என்றாலும் எந்நேரமும் பள்ளியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேலை செய்துகொண்டே இருப்பார்.

வாரம் இரண்டு முறை மைதானத்தை சுத்தம் செய்துவிடுவார். புதிய கட்டிடம் பழைய கட்டிடம் என எதிர்புறம் இருக்கும் எல்லா வரண்டாவின் வாசல்களையும் சுத்தம் செய்துவிடுவார். கழிப்பறையை அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார். இரவு வேளைகளில் ஊர் ஆட்கள் வந்து அசுத்தம் செய்கின்றார்கள் என்று தலைமை ஆசிரியரிடம் சொல்லி பூட்டு வாங்கிப்போட்டார். அதன் சாவி அவள் இடுப்பிலேயே தொங்கும். காலையில் கதவுகளை திறந்துவிட்டு சுத்தம் செய்வார் அதே போல மாலையும் சரியாக பூட்டிவிடுவார். பள்ளிக்கு அருகிலேயே அவருடைய வீடு இருந்தது. அங்கம்மாவின் கணவன் பற்றிய செய்தி எதுவும் யாருக்கும் தெரியாது. வேலை தேடி எங்கோ போனவர் திரும்பி வரவே இல்லை என்று ஊரில் பேச்சு.

மணிகண்டன் தன் நண்பர்களுடன் அங்கம்மா அக்காவை பார்க்கச்சென்றான். முதல் மாடியில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும்போது தவறி கீழே விழுந்துவிட்டார். கால் முறிந்துவிட்டது. நல்லவேளை பெரிய அடி எதுவும் இல்லை. கீழே மணல்மேடு இருந்ததால் தப்பித்தார். அங்கம்மாவின் வீட்டில் மேலும் இருவர் இருந்தார்கள். வயதான ஒரு தாத்தாவும் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் அகல்யாவும். மணிகண்டன் கொஞ்சம் பழங்களையும் வாங்கிச்சென்றான். அங்கம்மா அக்கா இன்னும் இரண்டு மாதத்திற்கு எழுந்து நடக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். முடியாது என்பதைவிட கூடாது என்பதே சரி. அங்கம்மா வேலை செய்தால் மட்டுமே வீட்டில் அடுப்பு எரியும். மணிகண்டன் மிகுந்த வேதனை அடைந்தான். அங்கம்மா அக்காவை அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். எப்போதும் அவனைப் பார்த்து சிரிப்பார் சாப்பிட்டியா மணி என விசாரிப்பார். அவனுக்கு மட்டுமில்லை அந்த பள்ளிக்கே அங்கம்மாவைப் பிடிக்கும். பள்ளி நேரத்தில் வகுப்பிற்கு வெளியே கண்ணை மூடி நின்றால் “அங்கம்மா..” என்ற குரல் எங்கேனும் கேட்டுவிடும்.

தன் வகுப்பில் அங்கம்மா அக்காவிற்கு உதவலாமா எனக்கேட்டான். எல்லோரும் அவர்கள் கையில் இருந்த சேமிப்பு காசினை கொடுத்தார்கள். அதனை அவனும் அவன் நண்பர்கள் மூவரும் அங்கம்மாவிடம் கொடுக்கச்சென்றார்கள். அப்போது அவர்கள் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டது “ஸ்கூல ஒழுங்கா சுத்தம் செய்யணும். பசங்க ஆரோக்யம் நமக்கு ரொம்ப முக்கியம். எதாச்சும் உடம்புக்கு வந்துட்டா படிக்கவரமாட்டாங்க. புரிஞ்சுதா?” என பக்கத்துவீட்டு அக்காவிற்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தார். அடுத்த இரண்டு மாதத்திற்கு அவர் தான் பள்ளியில் பணி செய்வார் போல. அவர்கள் பேச்சில் மருத்துவத்திற்கு நிறைய காசு தேவைப்படும் என்றும் அறிந்துகொண்டார்கள். கையில் இருந்த காசினை அங்கம்மா வாங்க மறுத்துவிட்டாள். மணிகண்டன் நிர்பந்தம் செய்து வாங்க வைத்தான்.

நண்பர்களுடன் நடந்ததைப் பேசினான், எல்லோரும் ஒன்றாக முடிவெடுத்தார்கள். அடுத்த மாதத்தின் முதல் தேதி அன்று ஏழாம்வகுப்பு மாணவர்கள் எல்லோரும் தலைமை ஆசிரியர் அறையில் நின்றார்கள். உள்ளே ஆசிரியர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.

“வா மணி “

“சார், இந்தாங்க நாலாயிரம் சேர்ந்துடுச்சு. நீங்களே அங்கம்மா அக்காகிட்ட கொடுத்திடுங்க” என்றான். ஆசிரியர்கள் எல்லோரும் என்னவென்று தெரியாமல் முழுத்தார்கள்.

“புரியலையா?” எனச்சொல்லி தன் இருக்கைக்கு பின்னால் இருந்த சன்னலைத் திறந்தார். “பாருங்க வெத்து நிலமா இருந்த இடத்தை நம்ம பசங்க எப்படி மாத்தி இருக்காங்க. அங்கம்மாவுக்கு செலவுக்கு என்ன செய்வாங்கன்னு தெரியல சார்ன்னு ஒரு திட்டத்தோட மணி வந்தான். பின்னாடி தரிசா இருக்க நிலத்தில காய்கறிகளை விளைவிச்சாங்க. பள்ளிக்கு ஒருமணி நேரம் முன்னரே வந்து ஆளாளுக்கு தங்களால முடிச்சதை செய்தாங்க. நேற்று ஞாயிறு சந்தையில் எல்லா காய்கறிகளையும் மூட்டைகட்டி வியாபாரிங்ககிட்ட கொடுத்து அதை காசா மாத்தி இருக்காங்க. அதைத்தான் இப்ப கொடுக்க வந்திருக்காங்க.”. மணி பணத்தை தலைமை ஆசிரியரிடம் கொடுத்தான். தலைமை ஆசிரியர் கண்களில் பெருமிதக்கண்ணீர். அவனை கட்டியணைத்தார்.

”இன்னும் ரெண்டு மாதத்தில் அங்கம்மா சரியாகிடுவா அப்புறம் என்னடா செய்யப்போறீங்க?” என்றார். 

மாணவ கூட்டத்தில் இருந்த அகிலா “சார், நாங்க வருஷம் முழுக்கவே இதை செய்யப்போறோம். எங்க கீழ் க்ளாஸ் பசங்களும் வரேன்னு சொல்லி இருக்காங்க. எல்லாரும் பகிர்ந்து தோட்டத்தை செழிப்பா வெச்சிப்போம். எங்க வீடுகள்லையும் தோட்டம் வளர்க்கப்போறோம். அதைல் வர்ற காசினை உங்களுக்கு தரோம், யாருக்கு தேவையோ நீங்களே பார்த்து செய்யுங்க.” என்றாள்.

“ஆமா சார் ஸ்கூலுக்கு நிறைய தேவை இருக்கு. க்ளாஸ் ரூம்ல..” என ஆரம்பித்த ஆசிரியரை ஒரு பார்வையால் அடக்கினார் தலைமை ஆசிரியர்.

“ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பசங்களா. உங்களுக்கு என்ன உதவி வேணுமோ நான் செய்யறேன். ஆசிரியர்களும் செய்வாங்க. யாருக்கு உதவணும்னு நீங்களே சொல்லுங்க. நாங்க தலையிடல” என்றார் தலைமை ஆசிரியர்.

எப்போதும் விறைப்பாக இருக்கும் கணக்கு ஆசிரியர் “சத்தமே இல்லாம சாதிச்சிட்டீங்கடா பசங்களா” என மணியின் முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டினார்

- விழியன்
06-06-2018
(மழலைகள் கதை நேரம் – 145)

7 எதிர் சப்தங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

SUPER. வாழ்த்துகள் விழியன்.கதாநாயக சிறுவனாக மணிகண்டன் பாத்திரப் படைப்பு பொருத்தமோ பொருத்தம்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

இந்த கதையை அவரிடம் இருந்து படிக்கும்போதே, மணி,உங்கள் நினைவு தான் துருத்தி கொண்டு வந்து சேர்ந்தது. தினமும் அவர் தளத்தில் மேய்கிறேன்..வாழ்க வளமுடன்

சேக்காளி said...

//“சத்தமே இல்லாம சாதிச்சிட்டீங்கடா பசங்களா”//
இதுதானே தலைப்பு

சேக்காளி said...

//'எனக்கு ராயல்டி மட்டும் கொடுத்துடுங்க' என்று சொன்னேன்.//
அதுக்கு முன்னால எனக்கு அந்த "எரநூறு ஓவா" ப்ரச்னையை முடிச்சு உடச் சொல்லுங்க அவைத்தலைவரே.

அன்பே சிவம் said...

// எனக்கு ராயல்டி மட்டும் கொடுத்துடுங்க' என்று சொன்னேன்.//
(அதுக்கு முன்னால எனக்கு அந்த "எரநூறு ஓவா" ப்ரச்னையை முடிச்சு உடச் சொல்லுங்க அவைத்தலைவரே.) ஊர்ல இருக்க்குற ரசிகக் குஞ்சுகளையெல்லாம் விட்டுட்டு இந்தாள ரெகமன்ட் பன்னி கொ.ப.செ. ஆக்குனதுக்கு நமக்கு இது வேணும். ஊர்ல எதிர்கட்சிக்காரன் பாத்தா என்ன நினைப்பான். அதனால அடுத்த பொதுக்குழு வர்ரதுக்குள்ள! (தைரியமா) இந்தாளு தொல்லைக்கு ஒரு முடிவெடுங்க தல. (Mind voice குடுத்து தன் தொலைக்கவும்)

அன்பே சிவம் said...

"வா மணி" இதுதான் நம் பணி.
மஹிக்கு படிக்க கொடுங்க.இதுதான சமூக கல்வி.

சேக்காளி said...

//. ஊர்ல எதிர்கட்சிக்காரன் பாத்தா என்ன நினைப்பான். //
உத்தரபிரதேச மொதல்வரு குடுத்த காசோலைக்கே பணம் குடுக்க மாட்டேன் ன்னு பேங்க் காரன் சொல்லிட்டானாம்.
அப்புறமா கல்வித்துறை கமுக்கமா துட்ட குடுத்து ப்ரச்னை யை தீ(ர்)த்து உட்டாங்களாம்.
அதுனால அதே மாதிரி எனக்கும் கமுக்கமா அந்த "எரநூறு ஓவா" ப்ரச்னைய முடிச்சி உடவும்.