Jun 28, 2018

கொரவலியைக் கடி

லியோ டால்ஸ்டாயின் ஒரு கதை- ஆண்குதிரையும் பெண்குதிரையும் ஒரு தோட்டத்தில் இருந்தன. பெண் குதிரை வேலையே செய்யாது. இரவும் பகலும் புல்வெளியில் மேய்ந்து கொண்டேயிருக்கும். ஆண் குதிரை அப்படியில்லை. இரவில் மட்டும் மேயும். பகல் முழுக்கவும் கடினமாக உழைக்கும். பெண் குதிரை ஒரு நாள் ஆண்குதிரையிடம் 'நீ என்ன லூஸா? இவ்வளவு வேலை செய்யுற..நான் பாரு எவ்வளவு ஜாலியா இருக்கேன்..முதலாளி சாட்டை எடுத்து அடிச்சா நான் எட்டி உதை...கம்முனு போயிடுவான்' என்று சொன்னது. ஆண் குதிரை இதையே நாள் முழுக்கவும் யோசித்துக் கொண்டிருந்தது. பிறகு முடிவுக்கு வந்த ஆண் குதிரை, தனது எஜமானனிடம் பெண் குதிரை சொன்னதையே செய்தது. உதை வாங்கிய குதிரைக்காரன் கடிவாளத்தை பெண் குதிரையில் மாட்டினானாம். 

நாம் யாருக்கு சூட்சுமத்தைச் சொல்லித் தருகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கதையைச் சுட்டிக் காட்டலாம். எல்லாவற்றையும் ஒருவனுக்கு சொல்லித் தந்துவிட்டால் அவனே கூட நமக்கு எதிரியாக வந்துவிடுவான்.

கார்பொரேட் நிறுவனங்களில் சில கில்லாடிகள் இருப்பார்கள். மேலாளர் அழைத்து 'இவருக்கு சொல்லிக் கொடுத்துடுங்க' என்று சொன்னால் எந்த சுளிப்பும் இல்லாமல் தலையை ஆட்டிவிடுவார்கள்.  சொல்லித் தருவது போலவே இருக்கும். ஆனால் முழுமையாகச் சொல்லித் தந்திருக்க மாட்டார்கள். நிறுவனத்துக்கு அவர்கலின் தேவை எல்லாக் காலத்திலும் தேவை இருப்பது போல பார்த்துக் கொள்வார்கள். 'அவர் கிரிட்டிக்கல் ரிசோர்ஸ்' என்ற பிம்பம் இருந்து கொண்டே இருக்கும். இதெல்லாம் கார்பொரேட் தந்திரம். ஆனால் இதை எல்லோராலும் செய்ய முடியாது. 'எதை பிடித்து வைத்துக் கொள்வது' என்ற குழப்பத்திலேயே எல்லாவற்றையும் சொல்லித் தந்துவிடுகிறவர்கள்தான் அதிகம். 

இதற்கு முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் இருந்த  முதுநிலை மேலாளர் ஒருவர் 'பேங்க் லாக்கர்ல ஒரு சாவி நம்மகிட்ட கொடுத்துடுவாங்க...ஆனா இன்னொரு சாவி அவங்ககிட்டவேதான் இருக்கும்..அவங்க இல்லாம திறக்கவே முடியாது' என்பார். நாமே வைத்துக் கொள்ளக் கூடிய சாவி எது என்பதுதான் கணக்கு. அந்த சாவியை கண்டுபிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

யாருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றில்லை. ஆனால் அனுபவம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? இன்னொருவரை விடவும் நாம் அதை அதிக நாட்கள் கற்று வைத்திருக்கிறோம். வேலை செய்திருக்கிறோம். வேண்டுமானால் அதை அடையும் வழியைச் சொல்லித் தரலாம். அந்த வழியில் அவர்கள் பயணிக்கட்டும். நாம் ஐந்து வருடங்களில் கற்றதை அவர்கள் நான்கு வருடங்களில் கற்க உதவலாம். ஆனால் ஆறே மாதத்தில் தந்துவிட வேண்டியதில்லை.  தூண்டிலை இப்படி வீசு என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட வேண்டும். மீனை அவன் பிடிக்கட்டும். நாமே மீனையும் பிடித்து பையையும் நிரப்பிவிட்டால் அவன் எப்பொழுது நம்மைக் குளத்துக்குள் தள்ளிவிடுவான் என்று தெரியாது.

ஒரு வருடத்துக்கு முன்பாக ஒருவர் அழைத்திருந்தார். பொறியியல் முடித்து நான்கு வருடங்கள்தான் ஆகியிருந்தது. AngularJS இல் கில்லாடி. சிறு நிறுவனம் ஒன்றில் வேலையில் இருந்தார். பேசிக் கொண்டிருந்த போது 'அண்ணா, கம்பெனி மாறப் போறேன்...பதினாறு லட்சம் கொடுக்கிறாங்க' என்று சொன்னார். பொதுவாக ஒவ்வொரு வருட அனுபவத்துக்கும் ஒன்றரை லட்ச ரூபாய் என்பதுதான் சம்பளக் கணக்கு. நான்கு வருட அனுபவம் என்றால் ஆறு லட்ச ரூபாய்  என்பது சரி. பத்து லட்சம் கூடுதலாக கொடுக்கிறார்கள். அதுவும் சிறிய நிறுவனம்தான். 

'அண்ணா டெக்னாலஜி அந்த மாதிரி..செம ஹாட்' என்றார். சந்தோஷமாக இருந்தது.

ஒரு வருடம் தொடர்பில் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக வேலையை விட்டு அனுப்பிவிட்டார்கள். அழைத்திருந்தார். 'ஒரு வருஷமா ட்ரெயினிங் ரிசோர்ஸ் மாதிரி வெச்சு இருந்தாங்க' என்றார். அவர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. கல்லூரியிலிருந்து அப்பொழுதுதான் படித்து முடித்து வந்திருந்த நான்கைந்து பேர்களை பிடித்து 'இவங்களுக்கு நீங்கதான் டீம் லீடர்' என்று சொல்லி அவர்களுக்கு சொல்லித் தர வைத்துவிட்டார்கள். எப்படியிருந்தாலும் நம் அணியைச் சார்ந்தவர்கள்தானே என்று இவர் மெனக்கெட்டிருக்கிறார். இந்த மாதிரி முக்கியமான நுட்பங்களில் பயிற்சி பெற வெளியாட்களைப் பிடித்தால் மாதம் பல லட்ச ரூபாய் கேட்பார்கள். கார்பொரேட் களவாணிகளுக்கு சொல்லித் தரவா வேண்டும்? விவரமாக ஒரு ஆளை வேலைக்கு எடுத்து 'சொல்லிக் கொடுத்துடு தம்பி' என்று கறந்துவிட்டு வெளியில் அனுப்பிவிவிட்டால் பத்து லட்ச ரூபாயில் நான்கைந்து புதிய ஆட்களை உருவாக்கிக் கொள்ளலாம். 

ஒரு அணியை உருவாக்குவதுதான் பெரிய காரியம். முதல் அணி உருவாகிவிட்டால் அதன் பிறகு அதில் சங்கிலியாக ஆட்களை தயார் செய்துவிடுவார்கள்.

'ஒன்னும் பிரச்சினை இல்லண்ணா..வேற பக்கம் வேலை வாங்கிட்டேன்' என்று சொன்னார். அது அப்படியான தொழில்நுட்பம். வேலை இல்லாமல் திணற வேண்டியிருக்காது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் அவர் கற்றுக் கொண்டது அவருக்கு சரியான அனுபவம். இதைத்தான் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 'இனி கவனமா இருந்துக்குங்க' என்றேன். எனக்கு இந்த லியோ டால்ஸ்டாயின் குதிரைக்கு கதைதான் நினைவுக்கு வந்தது. சொன்னேன். சிரித்தார். துன்பத்தில் சிரிக்கிற மனிதர். 

'நீங்க எப்படிண்ணா?' என்றார். 

'எனக்கு ஒன்றுமே தெரியாது..அதனால் பிரச்சினையில்லை' என்று சொல்லிவிட்டேன். 

ஐ.டி என்றில்லை- இந்தத் துறையிலும் இதுவொரு பாடம்தான். கொஞ்சம் ஏமாந்தாலும் சோலியை முடித்து கொரவலியைக் கடித்துத் துப்பிவிடுவார்கள்.

8 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

ஆகையால் யாரையோ ஏமாற்றியே ஆக வேண்டும்.
என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

Kannan said...

தவறான சித்தாந்தம். if you can't make yourself redundant, you can't be promoted too என்பதை நம்புபவன் நான். உலகம் பெரியது உங்களுக்கும் உங்கள் திறமைக்கும் ஒரு இடம் எப்பொழுதும் உண்டு. ஒரு கம்பெனியை நம்பி ஏன் இருக்கிறீர்கள்?

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

'எனக்கு ஒன்றுமே தெரியாது..அதனால் பிரச்சினையில்லை' என்று சொல்லிவிட்டேன்
-வாழ்க வளமுடன்

Bala said...

For technical resources this strategy will work out, but when it comes Management side one has to work to get maximum from the resource so that he can survive in that position. :)

Anonymous said...

The more you teach, the more you learn., you can only deliver knowledge, but expertise is not working, but problem solving. Knowledge used in problem solving alone is important. Here, as per you, it is create problems or anticipate problems that can be solved with existing knowledge. Who knows your friend could earn billions by being a mentor to thousands later in his life. If you are not flowing, you preparing to rot.

S.NEDUMARAN , said...

நேர்மை வளையுது
தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு
நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம்
பலியாச்சு - எங்கும்
வஞ்சகர் நடமாட
வழியாச்சு!

சோகச் சுழலிலே
ஏழைச் சருகுகள்
சுற்றுதடா - கண்ணீர்
கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி
இரையாகுதடா - அன்பை
அதிகார வெள்ளம்கொண்டு
போகுதடா (சோக)

பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா - நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா

Anonymous said...

Mani,

As a leader for several great activities and programs , this is not a right approach. When you mention corporate, it's just not MST, PSFT or big corporations, there are several smaller startups, organizations where team environment is beautifully constructed, productive and leadership takes a big leap. Knowledge is diversity and it only grows with spreading; Today it can be Angular JS, Big data, AI ; Tomorrow it can be something else ; Life is all about sharing and giving -Including knowledge - I respect you a lot for your immense sharing to community , but I request you to avoid contradicting thoughts like this. Never be destructive --Any small drop of knowledge shared to any starter can bow his life to extreme.

God bless

Thanks
Raj

nilakutti said...

இதில் எனக்கு முழு உடன்பாடில்லை.
கற்றுக் கொள்ளும் திறன் உள்ளவர்கள் எப்பிடியும் கற்றுக் கொள்வார்கள்.