Jun 27, 2018

ஷோல்டரை இறக்குங்க..

ஒருவரை வாரி விட வேண்டும் என்றால் முகத்தை படு சீரியஸாக வைத்துக் கொண்டும் வாரிவிட முடியும். ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. 'அய்யா  அவர்களுக்கு வணக்கம்' என்று பவ்யமாகத் தொடங்கியிருந்த அந்தக் கடிதத்தில் 'விஜய் மல்லையா தமது சொத்துக்களை விற்பதாகச் செய்தி வந்திருந்தது..எவற்றையெல்லாம் விற்கிறார் என்று தெரியுமா' என்று கேட்டிருந்தார். முதலில் எனக்கு உறைக்கவில்லை. நாம்தான் ஆல்- இன்-ஆல் அழகு ராஜாவாயிற்றே என்ற நினைப்பில் பதில் எழுதக் கூடத் தொடங்கிவிட்டேன். பெங்களூரில் அவருக்கு என்ன சொத்துக்கள் இருக்கின்றன என்று இணையத்தில் தேடவும் ஆரம்பித்திருந்தேன். நல்லவேளை- எனக்குள் தூங்கி கொண்டிருந்த சோனமுத்தான் திடீரென்று எழுந்து 'அடேய்..உன்னை கலாய்க்கிறாங்கடா' என்று சொன்னதால் தப்பித்தேன். எங்க இருந்துய்யா வர்றீங்க? 

நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் ஆசிரியர் ஒருவர் இருந்தார். எல்லா வேலைகளையும் மெதுவாகச் செய்வார். நத்தை வேகம். சரக்கடிப்பார் என்று சொல்வார்கள். ஆனால் பள்ளியில் அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டார். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அவருக்கு நரம்பு தளர்ச்சி இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அவரை எவ்வளவுதான் ஓட்டினாலும் கண்டு கொள்ளவே மாட்டார். அவர் பிரிவேளை வரும் போது கையில் நான்கைந்து எறும்புகளை பிடித்து வைத்துக் கொள்வோம். அவர் வருவதற்கு சற்று முன்பாக எறும்புகளைக் கொண்டு வந்து மேசையில் விட்டுவிட்டால் போதும். அந்த எறும்புகள் தானாக இறங்கி கீழே போகும் வரைக்கும் அமர மாட்டார். ஊதியும் விடமாட்டார். வேடிக்கை பார்த்துக் கொண்டே நிற்பார். எங்களுக்கு பயங்கரமாக சிரிப்பு வந்துவிடும்.  வெகு காலத்துக்குப் பிறகு அவரை நேரில் பார்த்த போது 'நம்மை வெச்சு காமெடி பண்ணினா பசங்களுக்கு சந்தோஷமா இருக்குதுன்னா இருந்துட்டு போகட்டுமே..குறைஞ்சா போயிடுவோம்' என்றார். அது எவ்வளவு பெருந்தன்மை? 

தம்மைத் தாமே பகடி செய்து கொண்டு அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்துவது ஒரு கலை. எல்லோருக்கும் அது வராது. தமிழ் சினிமாவில் ஒரு காமெடியன். காமெடிக்காக திரையில் தன்னைக் கலாய்க்க எல்லோரையும் விட்டுவிடுவார். ஆனால் உள்ளுக்குள் பயங்கரமாகக் குமுறுவாராம். 'என்னைப் பார்த்த அப்படியா இருக்கு..இவனுக மதிக்கிற மாதிரி ஒரு இடத்துக்கு வந்து காட்டுறேன் பாரு' என்று குடிக்கும் போது அதை மட்டுமே பேசிக் கொல்லுவார் என்பார்கள். செந்தில் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அவரில்லை. ஈகோவை ஓரங்கட்டிவிட்டு 'என்னை நக்கலடிக்கணும்..அவ்வளவுதானே.... அடிச்சுக்குங்க' என்று சொல்வது வடிவேலுவுக்கு அனாயசமாக வந்து கொண்டிருந்தது. என்ன இருந்தாலும் அவர் பிறவிக் கலைஞன்.

அல்சூரில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் இருக்கிறார். வயது எழுபத்தைந்தைத் தாண்டியிருக்கும். காங்கோவுக்கு சென்ற இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர். அவருடைய மருமகன் எனக்கு நண்பர். ஒரு நாள் மதியம் வரச் சொல்லியிருந்தார். ராணுவக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது  சோம்பே (Tshombe ) என்ற பெயரை அவர்தான் அறிமுகப்படுத்தினார். கட்டாங்கா பகுதியின் கட்டுப்பாடு சோம்பே வசமிருந்தது. கட்டாங்கா என்பது காங்கோவின் தெற்குப்பகுதி. தாது வளம் நிறைந்த பகுதி. 

அமெரிக்க-ரஷ்யாவுக்கிடையிலான பனிப்போர் உச்சக்கட்டம் அடைந்திருந்த காலம் அது. தாதுவளம் மிக்க பகுதி. விட்டு வைப்பார்களா? கட்டங்காவின் மீது உலக நாடுகள் கண் பதித்தன. அப்படி பிரச்சினை பெரிதான போதுதான் இந்தியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளை 'அமைதியைக் காப்பாறுங்கள்' என்று ஐ.நா அனுப்பி வைத்தது. சோம்பே 'கட்டங்காவை தனி நாடு என்று அறிவித்துவிடுங்கள்' என்று கேட்டதை ஐ.நா பொருட்படுத்தவில்லை. பிரச்சினை பெரிதாகி, போர் நடந்து, சோம்பே தோற்கடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டது- அது தனி வரலாறு. கட்டங்காவில் ஒரு வானொலி நிலையத்தை கைப்பற்றிய குழுவில் இந்த இராணுவ வீரர் இருந்திருக்கிறார். 

பிரச்சினை நடந்து இப்பொழுது ஐம்பதாண்டுகளுக்கு மேலாகிறது. இந்தியா திரும்பிய பிறகு மன அழுத்தம் அதிகமாகி சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்பொழுது நன்றாக இருக்கிறார். 'அப்போ என்ன ஆச்சு' என்று கிளறக் கூடாது என்று மருமகன் முன்பே சொல்லியிருந்தார். மேம்போக்காக பேசலாம். ஆனால் வெகு ஆழமாகச் செல்லாமல் பேசலாம் என்பதுதான் நிபந்தனை.

வகை தொகையில்லாமல் கலாய்ப்பார். அடுத்தவர்களையும் விடுவதில்லை. தன்னையும் விட்டு வைத்துக் கொள்வதில்லை. அவர் பேசும் போது  'நான் டிப்ரஸன்ல தற்கொலை செஞ்சு இருக்க வேண்டியவன்..இந்த காமெடி மட்டுமில்லைனா செத்து இருப்பேன்' என்றார். அது பொய் இல்லை. 

பிறரை சிரிக்க வைத்துப் பழகிவிட்டால் போதும். பல பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். 'அது எப்படி பழகுறது?' என்றால் எப்பொழுதும் ஷோல்டரைத் தூக்கியபடி விறைப்பாக இருக்காமல் கொஞ்சம் இலகுவாக இருந்தால் நகைச்சுவை தானாக வரும். நம்மைவிடவும் நமக்கு முந்தைய தலைமுறையிடம் நுண்ணுணர்வு அதிகமாக இருந்தது. நாம்தான் எல்லாவற்றிலும் வெகு 'ப்ரொஃபஷனல்' ஆகிவிட்டோம். எங்கள் அலுவலகத்தில் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்று நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். கதை சொல்ல வேண்டும். இல்லையென்றால்  எதையாவது பேசுவார்கள். 'எதையாவது பேசுவது' என்பதே கூட ரொம்ப முக்கியமானது. அந்தக் காலத்தில் திண்ணையிலும் டீக்கடையிலும் அமர்ந்து பேசினார்கள். அடுத்தவர்களை கிண்டலடிக்கவும் தமது சுமைகளை இறக்கி வைக்கவும் வாய்த்திருந்தது. இன்றைக்கு ஒரு நாளில் நாம் வேலை தவிர்த்து, குடும்பம் தவிர்த்து பொதுவானவற்றை எவ்வளவு நேரம் பேசுகிறோம்? நாம்தான் இருபத்து நான்கு மணி நேரமும் மொபைலுக்குள் தலையை விட்டு உள்ளுக்குள் பாரத்தை சுமந்து கொண்டே திரிகிறோமே.

'விஜய் மல்லையா எந்த சொத்தை விற்கிறார்' என்று கேட்ட அந்த பெரிய மனிதருக்கு நன்றி. 'ஒரு சதவீதம் கமிஷன்னா சொல்லுங்க...முடிச்சு கொடுத்துடுறேன்'.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// 'ஒரு சதவீதம் கமிஷன்னா சொல்லுங்க...முடிச்சு கொடுத்துடுறேன்'.//
அந்த கமிசன் கிடைச்ச பெறவாவது எனக்கு சேர வேண்டிய எரநூரு ஓவாவை குடுத்துரும் ய்யா.

சேக்காளி said...

// இந்தியா திரும்பிய பிறகு மன அழுத்தம் அதிகமாகி //
இதற்கான காரணத்தையும் ஒரு கட்டுரை எழுதி அலசலாமே.

Vaa.Manikandan said...

அதைத்தான் கிளறக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களே...வேணும்னா வாங்க..ரெண்டு பேருமா பேசிப் பார்க்கலாம்..

Murugan R.D. said...

ஈகோவை ஓரங்கட்டிவிட்டு 'என்னை நக்கலடிக்கணும்..அவ்வளவுதானே.... அடிச்சுக்குங்க' என்று சொல்வது வடிவேலுவுக்கு அனாயசமாக வந்து கொண்டிருந்தது. என்ன இருந்தாலும் அவர் பிறவிக் கலைஞன். //////////// அதேதான்

நாம் வாழ்வில் நேரிடையாக பார்த்து ரசித்த பொதுபடையான புத்தி தோற்றத்திலிருந்து வேறுப்பட்டவர்களின் செயல்பாடுகளை உருவஅமைப்புகளை கொண்டு அமைக்கப்பட்ட காமடி காட்சிகள் தான் என்றும் நிலைத்து நிற்கும்,,

செந்தில்
வடிவேலு போன்றவர்கள் மிகச்சிறந்த உதாரணம்,

ஆனால்

செந்தில்
வடிவேலு
கவுண்டமணி தவிர்த்து
மற்றவர்களின் நகைச்சுவை காட்சிகள் காலம் கடந்து மறந்து போவதற்கு காரணம் நகைச்சுவை என்பதை ஒரு எழுத்தாற்றல் ஸ்கிரிப்ட் மிமிக்ரி என்ற வட்டத்திற்குள் சிக்க வைத்து வெகுஜன முகபாவம் கொண்ட தனித்தன்மையான பாடிலாங்வேஜ் இல்லாதவர்களை வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டதும் முக்கிய காரணம், இதில் ஒய்ஜி மகேந்திரன் சின்னி ஜெயந்த் தாமு வையாபுரி போன்ற ஓரளவுக்கு அதிக படங்களில் நடித்தவர்களும் அடக்கம்,

விவேக் பரபரப்பான காமடியனாக சாதித்தாலும் வடிவேலு கவுண்டமணி காமடிக்கு முன்னால் அவரும் தோற்றவராகிவிடுகிறார்,,, ஆனாலும் அவரின் நடிப்பு மற்ற பல காமடியன்களை காட்டிலும் சிறப்பானதாகவே இருந்தது,

70 டூ 80 காலட்டத்தில் பிறந்தவர்கள் எந்தஊர்க்காரர்களாக இருந்தாலும் செந்தில் போன்ற உருவஅமைப்பும் குணாதிசயமும் கொண்ட ஆண்களை தங்கள் ஊர்களிலோ ஏன் பக்கத்து வீடுகளிலோ கூட பார்த்தே வளர்ந்திருப்பார்கள், செந்தில் கவுண்டமணி காமடி ஹிட் ஆனதற்கு அதுவே முக்கிய காரணம்,

வடிவேலு எல்லாம் தனி ரகம்,, மனிதன் தன்போக்கில் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவித்த ஏளனங்களை மக்களின் மனதில் மற்றவர்களை பற்றி எழும் கிண்டல்களை எல்லாம் இயல்பாகவே யோசித்து காட்சியாக வைப்பதாலும் வித்தியாசமான அவரின் பாடிலாங்வேஜ்ம் (மதுரை மண்ணுக்கே உரிய அந்த வெத்து அலட்டல் ஜகா வாங்குறது பார்வை) அவரை மக்கள் மனதில் நல்லதொரு காமடியனாக எந்த நேரத்தில் நினைத்தாலும் சிரிக்கும்படியான மனநிலையை வரவைத்துவிடுகிறது,,,

நேட்டிவிட்டி நேட்டிவிட்டிதான்
மண்வாசனை மண்வாசனை தான்,,,

திரைப்படம் என்பது நம் நிலத்தில் நாம் பார்த்து வளர்ந்த வாழ்க்கைமுறையாகவும் அதில் நடிக்கும் முகங்கள் நமக்கு பழக்கப்பட்டதாக அந்நியராக தோன்றாமலும் இருக்க வேண்டும், அப்போதுதான் மக்கள் மனதில் இடம்பெறும்,, இந்த காலகட்டதில் சசிகுமார் படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெறுவதற்கும் அதுதான் காரணம்,

தமிழ்திரை படங்களில் மலையாள வெற்றிப்பட இயக்குநர்கள் பலர் எடுத்த படங்களை அந்த காலகட்டங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களை மீண்டும் இப்போது சிறிது நேரம் கூட காண முடியாது, உதாரணம் பாசில்,, அவரின் எந்த ஒரு படத்தையும் மீண்டும் நான் பார்க்க விரும்புகிறேன் என்றோ பார்த்திருக்கிறேன் என்றோ எவரும் சொல்லி நான் கேட்டதில்லை, ஏன்னா அவர் படத்தில் நடித்த மலையாள முகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும்,,
வருசம் 16. காதலுக்கு மரியாதை (நானே பத்து தடவைக்கு மேல் பாத்திருக்கிறேன்) பொம்முக்குட்டி அம்மா என்று எந்த ஒரு படத்தையும் மீண்டும் முழுவதுமாக பார்க்க பழைய ரசிகர்களுக்கு முடியவே முடியாத காரியம்,,

வடிவேல் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றதற்கு அவரின் அச்சு அசலாக உணரப்படுகிற மதுரைக்காரன் நேட்டிவிட்டியும் முக்கிய காரணம்,,,

சேக்காளி said...

//அதைத்தான் கிளறக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களே//
அவருகிட்ட கேக்கணும் னு இல்ல.படித்த கேட்ட சம்பவங்களை தொகுத்து ன்னு வச்சுக்கோங்க.
//வேணும்னா வாங்க..ரெண்டு பேருமா பேசிப் பார்க்கலாம்//
நேரம் காலம் சொல்ல முடியாத சூழ்நிலை.ஆனா கண்டிப்பா உங்கள பாப்பேன்.