Jun 24, 2018

ஸ்டாலினின் அரசியல்

சேலத்தைச் சார்ந்த ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எட்டு வழிச் சாலை என்பதை கடுமையாக எதிர்க்கிறவர் அவர். 'கலைஞர் அரசியலில் இருந்திருந்தால் இந்த ஆட்சியை கலைத்திருப்பார்; ஸ்டாலின் விட்டுவிடுகிறார்' என்றார். 'அது எப்படிங்க சாத்தியம்?' என்றேன். 'எப்படியாவது கலைக்கணும்' என்கிறார். சீட்டுக்கட்டா அது?  இப்படித்தான் நிறையப் பேர்கள் சொல்கிறார்கள். அப்படியான பிம்பம் உருவாவதைதான் எதிர்கட்சியினரும் கூட விரும்புகிறார்கள். 'அவரளவுக்கு இவர் இல்லை' என்பதான பிம்பம்.  இதையே மக்களையும் நம்ப வைக்க சில ஊடகங்கள் படாதபாடு படுகின்றன.

ஸ்டாலின் மீது அதிகப்படியான அழுத்தம் உருவாக்கப்படுகிறது. அவர் இருக்கும் இடத்தில் யார் இருந்தாலும் இவ்வளவு அழுத்தத்தில் பதறித்தான் போவார்கள். மத்தியில் வலுவான ஆட்சி அமைந்திருக்கிறது. அவர்கள் தமிழகத்தில் எடப்பாடியின் ஆட்சி வேண்டும் என விரும்புகிறார்கள். மத்திய அரசின் உதவியில்லாமல் ஆட்சியைக் கலைப்பதற்கு எந்த சாத்தியமும் இருப்பதாகத் தெரியவில்லை. கூவாத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த போது வேண்டுமானால் ஸ்டாலின் பாஜகவுடன் பேரம் பேசி எதையாவது செய்திருக்கலாம். ஒருவேளை அந்தத் தவறை அவர் செய்திருந்தால் இப்பொழுது அவருக்கு அது மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கும்.

கடந்த ஒரு வருடத்தில் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எடப்பாடியின் அரசு மீது வெறுப்பு உண்டாகியிருக்கிறது. அதனால்தான் 'இந்த ஆட்சியை  இவர் ஏன் விட்டு வைத்திருக்கிறார்' என்று யோசிக்கிறார்கள்.  அந்த எதிர்பார்ப்புதான் 'கருணாநிதி இருந்திருந்தால் விட்டு வைத்திருக்க மாட்டார்' என்கிற பேச்சாக மாறுகிறது. அவராகவே இருந்திருந்தாலும் மத்திய அரசின் ஆதரவில்லாமல் ஆட்சியை கலைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.

இப்போதைக்கு ஸ்டாலினுக்கு முன்பாக சில வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒன்று:
நம்பிக்கை இல்லாத்  தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி அரசை தோல்வியடையச் செய்வது. சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பதினெட்டு எம்.எல்.ஏக்கள் குறித்தான தீர்ப்பு இதனைச் செய்யவிடாமல் இழுத்தடிக்கிறது. தீர்ப்புகள் குறித்தான பின்னணிக் காரணங்களைத்  தனியாக அலச வேண்டியதில்லை. அத்தனை பேருக்கும் தெரிந்ததுதான்.

இரண்டு:
திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா- இது எந்த விதத்திலும் அதிமுக அரசை பாதிக்காது. ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு திமுகவின் தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும். திமுக போட்டியிட்டு, செலவு செய்து, இதே எண்ணிக்கையில் மீண்டும் வென்று வந்தாலும் இதே அரசுதான் தொடரும். ஒருவேளை சில தொகுதிகளில் அதிமுக அரசு வெற்றி பெறுமானால் இப்போதைய மைனாரிட்டி அரசானது தன்னை மெஜாரிட்டி அரசாக மாற்றிக் கொண்டு தனது ஆட்சியைத் தொடரும். எனவே எனவே கூண்டோடு ராஜினாமா என்பது  முட்டாள்தனமான முடிவாக அமையும்.

மூன்று:
சட்டப்பேரவையிலும் மாநிலத்திலும் கலவரத்தை உண்டாக்கி ஆட்சியை கலைப்பதற்கான முகாந்திரங்களை உண்டாக்குவது. இத்தகைய செயலை ஸ்டாலின் செய்வார் என்று தோன்றவில்லை.

இன்றைய சூழலில் எடப்பாடி அரசும் மத்திய பாஜக அரசும் இறுக்கமாக பிணைந்திருக்கின்றன. மத்திய அரசின் முழுமையான ஆசி இருக்கும் வரைக்கும் இந்த ஆட்சி தொடரும். அதையும் மீறி இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டுமானால் ஸ்டாலினுக்கு  முன்பாக வேறு சில சாத்தியங்கள் இருக்கின்றன.

1) தினகரனுடன் கூட்டு சேர்ந்து சில ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்கலாம். 'ஒரு முறை நான் முதல்வராகிக் கொள்கிறேன். அடுத்த முறை நீங்கள் முதல்வர் ஆகுங்கள்' என்று பேரம் பேசலாம்.

(அல்லது)

2)  பாஜகவுடன் நேரடியான அல்லது மறைமுக கூட்டணிக்கு காய் நகர்த்தலாம். தமிழக அரசை கலைத்தால் பா.ஜ.வுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்று சிக்னல் கொடுக்கலாம். எடப்பாடியை விடவும் ஸ்டாலினின் ஆதரவு பாஜகவுக்கு சாதகமானதுதான். அவர்கள் ஒத்துக் கொள்ளக் கூடும்.

மேற்சொன்ன இரண்டில் எதுவுமே முறையற்ற செயல்கள்தான். இதைத்தாண்டி வேறு சாத்தியங்கள் எதுவும் இருக்கின்றனவா என்ன? எனக்குத் தெரியவில்லை.

அரசியல் ரீதியாக 'முறையான' எதிர்ப்பு அரசியலைச் செய்கிற அரசியல்வாதியாக மட்டுமே ஸ்டாலின் இருக்க வேண்டும் என உள்மனம் விரும்புகிறது. அவரும் அப்படிதான் இருக்கிறார்.

அரசியலில் ஹீரோயிசம் என்பதைவிடவும் இத்தகைய மேம்பட்ட போக்குதான் அவசியமும் கூட. 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரைக்கும் ஸ்டாலின் இப்படியே தொடர்வதுதான் சரி. மக்கள் தீர்ப்பு  பா.ஜ.கவுக்கு எதிராக வருமானால் எடப்பாடியின் அரசு தானாக கவிழும். ஒருவேளை மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்குமானால் மேலும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

'ஆட்சியைக் கவிழுங்கள்' என்று கேட்பது எளிது. ஆனால் அது அவசியமில்லை.  இப்போதைக்கு ஸ்டாலின் செய்யும் அரசியல்தான் சரி. சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளை பேசவே விடுவதில்லை. ஆனால் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. தமிழகத்தில் உருவாகும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிராக குரல் எழுப்புகிறார். போராட்டங்களை நடத்துகிறார். ஆனால் என்ன கொடுமையென்றால் தமிழகத்தில் தினசரி ஒரு பிரச்சினை முளைத்துக் கொண்டே இருக்கிறது.

வெறுமனே அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதையும் செய்துவிடலாம் என்று மாநில அரசு, மத்திய அரசின் கைப்பாவையாக  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், எதிர்கட்சிகளாவது முறையான செயல்களில் ஈடுபடட்டும். இல்லையென்றால் மக்களுக்கு வெறுத்துப் போய்விடும்.

'தொண்ணூறு எம்.எல்.ஏக்கள் நம் கைவசமிருக்கிறார்கள். எதையாவது செய்து ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம்' என்று கசமுசா வேலைகளில் ஸ்டாலின் இறங்காதிருப்பது பெரிய ஆசுவாசம். அப்படியான செயல்களில் இறங்கி தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தினால் அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்காவது ஆளாளுக்கு மாற்றி மாற்றி கோல்மால்களைச் செய்யத் தொடங்குவார்கள். ஸ்டாலின் எந்தவிதமான கீழ்நிலை அரசியலையும் செய்யாமல் இருப்பதை பாராட்டவே மனம் விரும்புகிறது. அது மிகப்பெரிய ஆசுவாசம். இந்த பக்குவத் தன்மைதான் அவருடைய பலமாகவும் இருக்கிறது. 

7 எதிர் சப்தங்கள்:

Gv said...

ஏதோ சுடாலின் கண்ணிய அரசியல் செய்கிறார் என்பது போல எழுத பட்டு உள்ளது. உண்மையில் கலைஞர் இருந்திருந்தசல் திமுகவை மையமாக வைத்து நிச்சயம் ஒரு அணியையாவது நிலை நிறுத்தி இருப்பார். முக்கியமாக அவரது பேச்சாற்றல், எழுத்தாற்றல் பலரால் கவனிக்க பட்டு அடுத்து திமுக தான் என்ற பிம்பத்தை யாவது கொண்டு வந்திருக்கும். ஸ்தாலினுக்கு இரண்டும் கை வரவில்லை. சட்ட மன்றத்தில் துரை முருகன் எங்கே ஸ்கொர் பண்ணிவிடுவாரோ என்ற கவலையில் வெளி நடப்பு செய்வது போல் உள்ளது. ஒரே ஒரு உறுப்பினர் பரிதி இளம்வழுதி சென்று கலக்கிய கட்சி.. ஸ்தாலின் தலைவர் ஆகி விட்டார்.. ஆனால் தலைமை பண்பு?போர்க்குணம்??

இரா.கதிர்வேல் said...

ஸ்டாலின் ஏதாவது தவறான முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் அது அவருடைய எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாதகமாகத்தான் முடியும். தி.மு.க எதிர்ப்பு என்கிற பெயரில் அரசியல் செய்பவர்கள்தான் தமிழகத்தில் அதிகம். அதற்காககவே சில கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன. ஸ்டாலின் ஏதாவது ஒன்றில் சறுக்கினால் அதை ஊதிப் பெருக்கி பரப்புரை செய்வதுதான் அவர்களின் முழு நேர தொழிலாக அரசியலில் இருக்கின்றது. தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் சரியானவையாகத்தான் தோன்றுகின்றன. பார்க்கலாம் மக்கள் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்று. அதிமுக தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் இழப்புகளை சரிகட்ட எவ்வளவு காலம் ஆகுமென்று தெரியவில்லை.

சேக்காளி said...

//தினகரனுடன் கூட்டு சேர்ந்து சில ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்கலாம். 'ஒரு முறை நான் முதல்வராகிக் கொள்கிறேன். அடுத்த முறை நீங்கள் முதல்வர் ஆகுங்கள்' என்று பேரம் பேசலாம்.//
நான் முதல்வராகிறேன் என சொல்லாமல் தினகரனை முதல்வராக்கி பார்க்கலாம்.
பாடி குரூப்பை விட வா தினகரன் நம்மை சோதித்து விடுவார்???

Murugan R.D. said...

ஜெ, இறந்தபின் இபிஎஸ்ஸ ஆட்சிஅதிகாரத்தில் உக்கார வச்சதிலிருந்து தொடர்ந்து பல அமைச்சர்களின் மீது வருமானவரி துறை சோதனையும் அதை பற்றி பிஜேபி ஆதரவு ஊடகங்களின் பெருங்கூச்சலுடன் கூடிய கட்டுரை தலையங்களும் நினைவுக்கு வருகிறதா,

ஓபிஎஸ் . இபிஎஸ் இணைப்பு சுபமாக முடிந்தபிறகு தினகரன் கூட்டத்தை கழட்டிவிட்டு தங்கள் சொல்பேச்சை கேட்டுகும் ஆட்களாக தமிழ அரசை மாற்றி விட்டது மத்தியில் ஆளும் பிஜேபி கூட்டம், சிறு உதாரணம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வருமான வரி சோதனை அந்த வழக்கு என்ன ஆனது? அதனை தொடர்ந்து அவரின் கடுமையான உத்தரவால் தமிழகம் முழுவதும் அத்தனை பள்ளி மாணவர்களுக்கும் கடும் எதிர்ப்பையும் மீறி ‌ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டதே ஏன்,,, அந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் விரிவாக்கப்படும் என்றார்களே,,, அப்படி எதுவும் நடந்ததா?

தமிழகத்தை யார் ஆண்டாலும் ஊழல் அராஜகம் என்று குறைசொல்லியே எழுதி பழக்கப்பட்ட தினமலம் என்று அன்போடு அழைக்கப்படும் தினமலர் தமிழகத்தின் ஒரே அறிவு ஜீவி சோ வின் துக்ளக் போன்ற பத்திரிக்கை ஊடகங்கள் இப்போது தமிழக அமைச்சரவையின் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்துவதில்லையே ஏன்? தங்கள் சொல்பேச்சை தண்டமிட்டு கேட்டு நடக்கிறார்கள் என்பதாலா?

ஆளுநரின் அத்துமீறிய ஆய்வு நடவடிக்கைகளை ஸ்டாலின் எதிர்க்கிறார் அதிமுகவினர் யாரும் எதிர்க்கவில்லையே ஏன்,, ஜெ,வுக்கு எப்படி பயந்து நடந்தனரோ அதுபோல இப்போது பிஜேபிக்கு பயந்து நடக்கின்றனர் அமைச்சர் பெருமக்கள், மத்திய அரசாங்கத்தின் ஒரு மிரட்டலான கட்டுக்குள் வந்துவிட்டார்கள்,, நாளை காங், அரசு மத்தியில் வந்தாலும் பிஜேபி பார்முலாவை கையிலெடுத்து இந்த தலையாட்டி ‌பொம்மைகளை காங்,கிரஸ் சொல்படியும் ஆட்டிப்படைப்பார்கள்,,,

காங்கிரஸ் பிஜேபி போன்ற கட்சிகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் வளர்ச்சிக்கு அவர்களின் சொல்படி நடக்கும் கட்சிகள்,,, இவர்களின் மூலமாக அதிமுகவும் கார்ப்பரேட் கன்ட்ரோலுக்கு போய்விடும், அதிமுகவின் ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்களும் முகச்சுழிப்புகளும் எரிச்சலும் மக்களிடையே ‌பெருகிவிட்டதென்னவோ உண்மைதான்,

கண்டிப்பாய் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பக்கோடா பார்ட்டி அதிமுகவுடன் மிரட்டி கூட்டணி வைத்து அதிமுகவின் செல்வாக்காலும் பணபலத்தாலும் கணிசமான சீட்டுகளை பெறுவது உறுதி, அப்படி நடக்கும் பட்சத்தில் அடுத்த சட்டசபை தேர்தலில் இன்னும் மிரட்டல் அதிகமாகி சட்டசபை தேர்தலிலும் கணிசமான தொகுதியை அதிமுகவிடமிருந்து பெற்று கூட்டணி அமைத்து ஓரளவுக்கு சீட்டுக்கள் பெற்றுவிட்டால் கர்நாடகா குமாரசாமி காங்கிரஸ் கணக்காக இங்கு எஸ்விசேகர் தலைமையில் பிஜேபி அதிமுக ஆட்சி அமையும் கண்றாவி காட்சிகளை கூட நாம் காண நேரிடலாம்,,, பார்ப்போம் வருங்காலத்தில் தமிழ அரசியல் தலையெழுத்து என்னவென்று,,,

கண்ணன் கரிகாலன் said...

எடப்பாடி ஆட்சியில் 8 வழிச் சாலை போட இடம் கேட்கிறார்.
கடந்த ஆட்சியில் அழகிரிகளும் ஈரோட்டு தாதாக்களும் , மக்களை மிரட்டி நிலம் பிடுங்கிய நிலை மறக்கவில்லை.

ஸ்டாலின் வந்ததும் நேரு ,கருப்பன் களை ஒதுக்கிவிட்டு, மணிகண்டன்களை மந்திரிகளாக்கப்போகிறார். கமிஷன் வாங்காத கக்கன்கள் , சகாயம் அமைச்சராகின்றனர்.
காவிரியில் பத்து மைல்களுக்கு ஒரு தடுப்பணை வரப் போகிறது.ஒவ்வொரு ஏரியும் அரசு செலவில் தூர்வாரி அடர் வனம் அமைக்கப்போகிறார்.

கோடிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கேடிகளை உயர் அரசு பதவிகளில் அமர்த்தும் இன்றைய நிலைக்கு முற்றுப்புள்ளி கட்டாயம் வைப்பார்.

புதிய முதல்வர் வந்ததும்
பட்டா மாற்ற பத்தாயிரம்
மின் இணைப்பு முப்பதாயிரம் என லஞ்சப் பிச்சை எடுக்கும் இந்த ஆட்சியின் இழிவு நிலை கட்டாயம் மாறிவிடும்​.

அடுத்த முதல்வர்
கொங்கு மண்டல மாநாடு சென்ற மாதம் நடத்தினார். கடைக்காரர், தொழில் நடத்துவோரை "அடுத்து எங்கள் ஆட்சிதான் என்று மிரட்டி" கட்டாய நன்கொடைகள் கணேசன்களால் வசூலிக்கப்பட்டது. என் செய்ய.

Selvaraj said...

தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டத்தை சார்ந்த அதிமுக MLA களை (திமுக சார்பாக மீண்டும் போட்டியிட ஸீட் தரப்படும் என்று உத்தரவாதம் அளித்து) ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் அடுத்து நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பாக அவர்களுக்கே ஸீட் கொடுத்து வெற்றி பெற வைத்தால் ஆட்சியை கவிழ்க்கலாம்.(இன்றைய தேதியில் அனைத்து அதிமுக MLA களின் அலைபேசி அழைப்புகளும் உளவுத்துறையால் நிச்சயம் ஒட்டுகேட்கப்படும்)

Anonymous said...

I could not resist commenting. Very well written!