Jun 22, 2018

Energetic Boy

ராஜேந்திரனுக்கு இன்று நிசப்தம் அறக்கட்டளையின் ஒரு காசோலையை அனுப்புகிறேன். மிகச் சந்தோசமாகவும் திருப்தியாகவும் அனுப்புகிற காசோலை அது. ஐ.ஐ.டியில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக (பி.ஹெச்டி) இடம் கிடைத்துவிட்டது. சேர்க்கைக்கான பணம் அது. இதற்குப் பிறகு ராஜேந்திரனுக்கு  பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. HTRA என்ற திட்டத்தில் சேர்கிறார். மாதம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் உதவித் தொகை கிடைத்துவிடும். 

ராஜேந்திரன் பி.எஸ்.சியில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் ரேங்க் பெற்ற மாணவன். காந்திகிராம பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி படித்தார். கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் மின்வசதி கிடையாது. நம்பியூருக்கு பக்கத்தில் எலத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர். மழையே பெய்யாத ஊரில் தப்பித் தவறி பெய்துவிட்டால் கூரை ஒழுகும். ராஜேந்திரன் உதவி கேட்டு வந்த போது ரமேஷ்தான் ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்றார். 

பார்த்துவிட்டு வந்து 'அண்ணா..ரொம்ப கொடுமையா இருக்கு..கட்டாயம் உதவனும்' என்றார். அப்பொழுதிருந்து ராஜேந்திரனுக்கு நிசப்தம் ஒரு பற்றுக் கோல். 

அதற்கு முன்பு வரை ரசிகர் மன்றம், கட்சிக்காரர்கள் என்று பல தரப்பிடமிருந்தும் பணம் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தவரிடம் 'பணத்தை பத்தி யோசிக்காத..படிக்கிறதுல மட்டும் கவனம் செலுத்து' என்று சொல்லி அனுப்பினேன். இதை அத்தனை மாணவர்களிடமும் சொல்ல முடியாது. தகுதியான மாணவர்களிடம் மட்டுமே சொல்ல முடியும். ராஜேந்திரன் அப்படியான மாணவர். 

எம்.எஸ்.சி படிக்கும் போது வாரம் இரண்டு முறையாவது பேசிக் கொள்வோம். உத்வேகம் அளிப்பதைத் தவிர வேறொன்றும் நான் செய்ததில்லை. சில போட்டித் தேர்வுகளில் தோற்றுவிடும் போது 'விடு ராஜேந்திரன்..அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்' என்று சொல்வேன். அவ்வளவுதான்.  எந்த நேரமும் நூலகம், தேர்வுக்குத் தயாரித்தல் என்று வெறியெடுத்துத் திரிந்தான். ஒரு தேர்வையும் விட்டு வைத்ததில்லை. அவனது உழைப்பு, குடும்பப் பின்னணி தெரிந்த பலரும் உதவினார்கள். வி.ஐ.டி பேராசிரியர் ஸ்ரீராகவன் போன்றவர்களைக் குறிப்பிட்டாக வேண்டும். ராஜேந்திரனுக்கு அவனது இளங்கலை ஆசிரியர் இலவசமாக பயிற்சியளித்தார். இன்னொரு பேராசிரியர் தனது வீட்டில் தங்கி படிக்கச் செய்தார். இப்படி எத்தனையோ உதவிகள்.

ராஜேந்திரன் அடைந்திருக்கும் வெற்றி ராஜேந்திரனுடையது மட்டும்தான். அந்த அர்ப்பணிப்பு உணர்வைத்தான் பிற மாணவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். கேட் (GATE ) தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது. எம்.எஸ்.சி படிக்க படிக்கவே கேட்டில் ஸ்கொர் அடித்தது பலருக்கும் ஆச்சரியம்தான். எனக்கு ராஜேந்திரன் மீது நம்பிக்கை இருந்தது. 

நிசப்தம் சூப்பர் 16 மாணவர்களில் ராஜேந்திரன் ஒருவர். அந்தச் சந்தோசம் எனக்கு இருக்கிறது. 

பல மாதங்களுக்கு முன்பாக ராஜேந்திரனிடம் பேசிக் கொண்டிருந்த போது 'வெளிநாடெல்லாம் போக வேண்டியதில்லை.. இங்கேயே சம்பாதிச்சு நம்ம ஊருக்கு நாம செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு...களத்துல நின்னு செய்யணும்' என்று சொல்லியிருக்கிறேன். பொதுவாக இதை பெரும்பாலான மாணவர்களிடம் சொல்வதுண்டு. அதை ராஜேந்திரன் பிறிதொரு சமயங்களில் சொல்லிக் காட்டியிருக்கிறான். என்னை சந்தோஷப்படுத்தச் சொல்லுகிறான் என்று நினைத்ததுண்டு. 

கேட் தகுதி தேர்வில் ராஜேந்திரனுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்தவுடன் எப்படியும் ஐ.ஐ.டியில் இடம் கிடைத்துவிடும் என்று தோன்றியது.  'எந்த ஐ.ஐ.டி கிடைச்சாலும் போயிடு' என்று சொன்ன போது 'இல்ல சார்.. வடக்க போகல....ஊருக்கு பக்கமா இருந்துக்கிறேன். அப்போதான் அடுத்தடுத்து வர்ற பசங்களுக்கு வழிகாட்ட சௌகரியமாக இருக்கும்' என்றான். மனப்பூர்வமாக இதைச் சொல்கிறான் என்று தெரியும். இதுவரை நான் பார்த்த மாணவர்களில் ராஜேந்திரன் ஒரு ஜெம். 

வாழ்த்துக்கள் ராஜேந்திரன்! உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. 

ராஜேந்திரன் - 082202 56900

14 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Dear Mr. Manikandan, I am very glad for the achievements of Mr. Rajendran. Many of us know that research is entirely different from book. Since he cleared gate exam, he is very good at basics. Now he has to connect the dots which requires broad cutting edge domain knowledge. Based on my experience, I stongly suggest him to try for PhD exchange programs / joint PhD programs to study in abroad. These programs are fully funded. IIT Madras has many such programs. Even during the summer, he should take short term research internships at IISc / CSIR laboratories. In PhD program, many of the things depend on PhD guide. I know few are very arrogant in Chemistry department - IIT Madras. Some times treat the students inhumanly. So please enquire about the guide before choosing one. Best wishes for him.

Dr. K. Kalaiselvi said...

All the very best Mr.Rajendiran

raki said...

super

and many kudos for the sustained efforts put in by sri rajendran

worth the efforts and will be an ideal role model for others to look upto and emulate

sincere greetings rajendran

radhakrishnan

viswa said...

இந்த மாதிரி தகவல்களை படிக்கும் போது ஏன் கண்ணீர் வருகிறது? தெரியவில்லை

விஸ்வநாதன்

Selvaraj said...

தனது துறையில் உச்சம் தொட தம்பி ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள். திரு.மணிகண்டன் அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

Siva said...

Did he got seat at Madras IIT ?

சேக்காளி said...

//அடுத்தடுத்து வர்ற பசங்களுக்கு வழிகாட்ட சௌகரியமாக இருக்கும்' என்றான்.//
இதுதான் உருவாக்கம்.
எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.ஆனாலும் இதுக்கு சொல்லுறது ல ஒண்ணும் குறைஞ்சிடாது.
வாழ்த்துக்கள் சின்னையா

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

ராஜேந்திரனுக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தி:
முனைவர் பட்ட ஆராய்ச்சி.. முயற்சி திருவினையாக்கும்..வாழ்க வளமுடன்.பேராசிரியர்.கோபாலகிருட்டிணன்
9994240629 9344053440

Anonymous said...

திரு.ராஜேந்திரன் வாட்ஸப்பிற்கு அனுப்பியது-

வணக்கம்
வாழ்க வளமுடன் ராஜேந்திரன்,
இப்போதுதான் நிசப்தத்தில் உங்களை பற்றி வாசித்தேன்.
எல்லா வளங்களையும் பெற இறையருளும்,குருவருளும் துணை செய்யட்டும்.
சரவணகுமார் ஹேமா சிங்கப்பூர்

Yarlpavanan said...

மாணவர் தம்பி ராஜேந்திரனுக்கு வாழ்த்துகள்.
ஐயா!
தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

Swamy said...

முதல் பின்னூட்டத்தில் இருப்பவரின் கருத்துடன் உடன்படுகிறேன். வேதியியலில் பெங்களூர் IISc சிறப்பான இடத்தில இருக்கின்றது. ராஜேந்திரன் அதனையும் கருத்தில் கொள்வது நல்லது.

தமிழக, தென்னிந்திய சூழலில் இருப்பது மனதுக்கும், வளர்ச்சிக்கும் பாதுக்காப்பானது. முக்கியமாக, வடஇந்தியாவில் இருக்கும் உயர்கல்விநிலையங்களில் இருக்கும் தமிழர் துவேசம், பாகுபாடு, எதிர்கலாச்சார மனோபாங்கு, இனக்குழு மனப்பாங்கு, மேல்தட்டு மேலாதிக்கம் போன்றவைகள் பற்றிய அறிதல் அவசியம்.

ராஜேந்திரனுடன் தொலைபேசியில் சற்றுநேரம் பேசினேன். என்னுடைய பார்வையையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டேன். இத்தகைய அடித்தட்டு மக்களின் வளர்ச்சியிலும் மேன்மையிலும் தான் நமது சமூகத்தின் உண்மையான வளர்ச்சி இருக்கும் என்று திடமாக நம்புகின்றேன்.

எல்லாப்புகழும் மணிகண்டனுக்கே! நன்றிகள் பல மணி!

Jaypon , Canada said...

Kudos to Nisaptham team for choosing him to help and to Rake for his achievements.

M.Sekhar said...

//.. முக்கியமாக, வடஇந்தியாவில் இருக்கும் உயர்கல்விநிலையங்களில் இருக்கும் தமிழர் துவேசம், பாகுபாடு, எதிர்கலாச்சார மனோபாங்கு, இனக்குழு மனப்பாங்கு, மேல்தட்டு மேலாதிக்கம் போன்றவைகள் பற்றிய அறிதல் அவசியம்....,//.சுவாமி அவர்கள்
வட இந்தியாவில் எங்காவது கல்வி நிலையத்தில் படித்தார் அல்லது பணி புரிந்தாரா என்று தெரியவில்லை. என் மிக நீண்ட அனுபவம் மிக வேறுபட்டது. இது போன்ற பின்னூட்டங்கள் மனதைப் புண் படுத்துகின்றன.

சேக்காளி said...

சேகர் சார்,
"அறிதல் அவசியம்" என்று தானே சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவம் படிக்க சென்ற இரண்டு மாணவர்களை இழந்திருக்கிறோம்.
பயம் வருமா வராதா?
இல்லை எனும் பட்சத்தில் உங்கள் நீண்ட அனுபவத்தை எழுதி தெளிவு படுத்தலாமே.