Jun 24, 2018

அம்மாயி- அன்பரசு

அம்மாயிகிட்ட சொல்லீட்டு நாளைக்கு ஊருக்கு போலான்னுதா முந்தாநா வரைக்கும் நெனச்சிக்கிட்டு இருந்தேன். நா ஊருக்கு போய்ட்டா அதுதா பாவம் தனியா எல்லா வேலையும் செஞ்சு கஷ்ட்டப்படும். கோழிகூப்பட எந்திருச்சு பால கறந்து, மோர சிலுப்பி நாலூட்டுக்கு ஊத்தீட்டு,பண்டம் பாடி அவுத்து கட்டி, தீவனம் போட்டு, பெரியய்யன் கெணத்திலிருந்து முப்பது கொடம் தண்ணி சேந்தி தாளில ஊத்தீட்டு, கட்டுதரைல சாணி வளிச்சு, பட்டி ஆட்ட வெளிக்கொறைல உட்டுட்டு, ஊடு ஆசாரத்த கூட்டி கழுவி நருவுசு பண்ணி, நாய்க்கு சோறு போட்டுட்டு அப்பறந்தா கரசோறு சாப்பிடும். காச்ச தலவலின்னு ஒரு நாள் படுத்ததில்ல. வெள்ளிகெழம சந்தைக்கு தலைல கூட வெச்சுக்கிட்டு, சுருக்கு பைய இடுப்புல செறுகிட்டு  கூடய எறக்காம அஞ்சு கல்லு நடந்தே போய்ட்டு வந்துரும்.

அந்தகாலத்துலயே அம்பது பவுனு நகை போட்டு, பல்லாக்குல வெச்சு, வட்ட சொம்பு சாமானத்தோட சீறு வெச்சு  எங்கப்பிச்சிக்கு கட்டி குடுத்தாங்களாம் எங்க பாட்டைய்யன். அப்புச்சி இருந்தவரைக்கும் எல்லா பன்னாட்டும் அவுங்கதான். பண்ணயம் பாக்கறது, காசு பணம் கணக்கு வழக்குன்னு எல்லாம் அப்புச்சிதான். பக்கத்துகாட்டையனோட மாட்டு வண்டில வெறகு கட்டி, மாதாரி பயன தொணைக்கு கூட்டிட்டு மதர (மதுரை-தெற்குச்சீமை ) கட்டி போய்ட்டு வருவாங்களாம். சுருட்டு, பொகில, கள்ளு, சாராயம்னு ஒரு கெட்ட பழக்கம் கெடையாது. மூக்குபொடி மட்டும், அதும்மு வண்டிக்கு போனா ரவைக்கு தூக்கம் வரக்கூடாதுன்னு போடுவாங்களாம். ஊட்ல போயி கவுணுச்சிகிட்ட கேது சொல்லிறாதடான்னு மாதாரி பயனுக்கும் ஒரு டப்பா குடும்பங்களாம். ஊருக்குள்ள பங்கும்-பங்காளி மாம-மச்சனன்னு ஆரா இருந்தாலும் அப்புச்சீக்கண்டா அப்பிடி திரீவாங்களாம். அப்புச்சி இருந்தவரைக்கும் அம்மாயி ஊடுண்டு வேலையுண்டு இருந்திருக்கு. காடு கரைக்கு எட்டி பாக்க உடமாட்டாங்களாம்.

நல்லா இருந்த அப்புச்சி விசுக்குன்னு ஒருநாளு காச்ச வந்ததுன்னு படுத்திருக்காங்க, அடுத்த நாளே பெரியாத்தா வாத்திருக்கு. ஒடம்பு முழுசும் முத்து முத்தா காச்ச கொப்பளம். வேப்பம்தலைய வெச்சு, ஆசாரத்த கூட்டி, கொடத்துல வாசூர தண்ணி வச்சு, பதணஞ்சு நாளு படுக்க வச்சிருக்காங்க. எந்திருக்கவே இல்ல, அப்படியே போய்ட்டாங்க. அம்மாயி கும்படாத சாமியில்ல. மினீப்பனுக்கு பொங்க வக்கிற, பொடாராயன் கோயலுக்கு கெடா வெட்டறன்னு வேண்டியும் ஒரு புண்ணியமும் இல்ல. ஒரு கூட தீய ஒருமிக்கா கொட்னமாறி அப்புச்சி செத்துப்போய்ட்டாங்க. அப்புச்சி போயி பதனாறு நாலு, எல்லா பொறுப்பும் அம்மாயி தலைல. அப்ப எங்கம்மாளுக்கு எட்டு வயிசு, மாமனுக்கு பத்து வயிசு. பாட்டைய்யன் வந்து ஊருக்கு கூப்டாங்க, ஆனா அம்மாயி ஒரே மனசா வரமாட்டேன்னுட்டாங்க.

அப்பிருந்து இந்த காட்டுக்குள்ள படாத பாடு பட்டு, பயனையும், புள்ளையும் வளத்தி, எங்க மாமன பத்தாவது வரைக்கும் படிக்கவச்சு, எங்கம்மாளுக்கு முப்பது பவுனு நகை போட்டு கண்ணாலம் பண்ணி குடுத்திருக்கு. அதுக்குன்னு நல்ல துணிமணி இல்ல, நக நட்டு இல்ல. ரண்டு வெள்ள சீலைய வெச்சு மாத்தி மாத்தி கட்டிக்கும், சம்மிந்தி ஊருக்கு போறதுன்னா தனியா ஒன்னு. அந்த சீலைல எட்டணா முடிஞ்சு வெச்சு என்ன பாக்க வரும் போது ஆசையா குடுக்கும். இந்த வருஷம் முழுப்பரிச்சை லீவுக்கு அம்மாயிகூடத்தான் இருப்பன்னு அப்பாட்ட அடம் புடிச்சு அம்மாட்ட சண்டகட்டி இங்க வந்து மூணு வாரம் ஆச்சு. மூணு வராம அம்மாயிக்கு ஒரே சந்தோசம், பேத்திய பாத்து பூரிச்சு கெடக்குது. மாமவுக்கு பைய பொறந்துடனே அவங்க பள்ளிக்கூடம் தூரமா இருக்குன்னு காங்கயம் டவுனுக்கு போய்ட்டாங்க. அம்மாயிய தனியா உட்டுட்டு போறதுக்கு  மாமவுக்கும்  மனசில்லைதான்,  என்ன பண்றது, அத்தைய மீறி ஒன்னும் பண்றதுக்கில்ல. அப்பிருந்து தனியா ஒண்டிக்கட்டையாதான் இருக்கு.

நேத்து பொழுதோட என்னய தூங்க வெச்சிட்டு, மாட்டுக்கு தட்டு போடறதுக்கு தொண்டுப்பட்டிக்கு போயிருக்கு. இருட்டுக்குள்ள அரிக்கிள் லைட் எடுத்துக்கிட்டுதான் போயிருக்கு, இருந்தாலும் எப்படியோ தெரியாம தடத்துல கெடந்த வீரியம் பாம்ப முதிச்சு அது பாதங்கால்லயே கடிச்சிருச்சு. வெசம் தலைக்கேறி தொண்டுப்பட்டீலயே வெடிய வரைக்கும் கிடந்த அம்மாயிய காலைல பால் வாங்க வந்த செவட்டு முத்தன் பாத்துதான் தூக்கிட்டு வந்திருக்கான்...அங்கயே உசுரு போயிருச்சு.

ஆக்கம்: அன்பரசு சாமியப்பன்
anbu102@gmail.com

2 எதிர் சப்தங்கள்:

மதன் said...

அன்பரசு -

அப்டியே என்னோட சின்ன அம்மாயிய முன்னால கொண்டாந்து நிறுத்தீருக்கிங்க. கண்ல பொலபொலன்னு தண்ணி வந்துருச்சு!!

வாழ்த்துக்கள்!!

Murugan R.D. said...

அம்மாயி
வட்ட சொம்பு
பாட்டைய்யன்
அப்புச்சி
பெரியாத்தா
பயனையும், புள்ளையும்
சம்மிந்தி

மற்றும்
சுருட்டு, பொகில, கள்ளு, சாராயம்னு ஒரு கெட்ட பழக்கம் கெடையாது.
ஊருக்குள்ள பங்கும்-பங்காளி மாம-மச்சனன்னு ஆரா இருந்தாலும் அப்புச்சீக்கண்டா அப்பிடி திரீவாங்களாம்.
(இது போன்ற பெருமை பேச்சுகள்)
அத்தைய மீறி ஒன்னும் பண்றதுக்கில்ல (இது போன்ற குற்றம் சுமத்தும் பேச்சு வழக்கு)

இவற்றையெல்லாம் படிக்கும் போது
விருதுநகர் மாவட்ட எங்க சாதியினரின் வட்டார வழக்கு மாதிரி ‌இருக்கு,,, அதனாலோ என்னவோ எந்த இடத்திலும் இது என்ன வார்த்தைன்னு சந்தேகம் வரல,, இப்போது சில வார்த்தைகள் பயன்பாட்டில் இல்லையென்றாலும் கூட இதையெல்லாம் சிறுவயதில் கேட்டே வளர்ந்திருக்கிறேன்,