Jun 12, 2018

குப்பை

வணக்கம் மணி,

சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். கடந்த சில வருடங்களாக நிசப்தம் வாசித்து வருகிறேன். நிசப்தப்தின் சமூக பங்களிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. குறிப்பாக அடர்வனம். வாழ்த்துக்கள் மணி.

நேராக  விஷயத்துக்கு வருகிறேன். தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை குறித்த செய்திகளை பார்த்து இருப்பீர்கள். ஓரளவிற்கு நிச்சயம் நடை முறை படுத்த முடியும் என்று நினைக்கிறேன் ஆனால் ஏன் அரசு மறுசுழற்சி  பற்றி பேசுவதில்லை. அரசு மட்டும் அல்ல எவருமே.

கழிவு  மேலாண்மை மற்றும் மறுசுழற்சி நம் நாட்டில் சாத்தியமே இல்லையா? ஒரு NGO கூட இதற்கு இதுவரை முயற்சி எடுக்கவில்லையா? Swatch Bharath - உம்  குப்பையை சேகரித்து நம் கண்ணுக்கு தெரியாத இடத்தில கொட்டுவதை தவிர ஏதும் செய்யவில்லை. நம்மிடம் நிபுணர்கள் இல்லையா இதற்கு?

சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் இணைப்பை பார்க்கவும்.

திரும்பத்  திரும்ப குப்பையை சேகரிப்பதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். வெளிப்படையாக Open Dumping என்று சொல்லுகிறார்கள். 

நீங்கள் பெருங்குடி சதுப்பு நிலத்தில் கொட்டப்படுகிற குப்பையை பார்த்ததுண்டா? ஒரு கணக்கெடுப்பின்படி இன்னும் ஐந்து வருடத்தில் இதன் உயரம் சென்னை ஒன்னின் உயரத்தை தாண்டுமாம். இவர்களின் சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் குறித்த அக்கறையின்மை பதட்டத்தை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு முறையும் அலுவலகம் செல்லும் போதும் இதற்கு என்னால் ஒரு தீர்வு தர முடியுமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.

முறையாக மக்கும்/மக்காத என்று பிரிக்கப்பட்ட குப்பைகளை மறுசுழற்சி  செய்வதே பெரிய சவால். ஸ்வீடன் இதைச் செய்கிறது. (கிட்டத்தட்ட 99% என்று புள்ளி விவரம் சொல்கிறது). ஸ்வீடன் அரசு குப்பைகளை எரிபொருள் உற்பத்திக்காக இறக்குமதியும் செய்கிறது. இதைப் பற்றி இணையத்தில் எண்ணற்ற கட்டுரைகள் கொட்டி கிடக்கின்றன. நாம் நம் குப்பைகளை ஏற்றுமதி தன் செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை. முதலில் சிறு நகரங்களில் ஏதாவது முயற்சி எடுத்தால் என்ன?

நிசப்தம் அல்லது நிசப்தம் வாசகர்கள்  மூலமாக  ஏதாவது செய்ய முடியுமா? இது விஷயமாக முதலில் உங்களைத்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். வேறு யாரிடம் பேசுவதென்று தெரியவில்லை .

இதுகுறித்து உங்களுடைய  எண்ணங்களை பகிர்வீர்களா மணி?

அன்புடன்,
அர்ச்சனா

அன்புள்ள அர்ச்சனா,

முன்பொரு சமயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது 'நாங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை குப்பைதான்' என்று அவர் குறிப்பிட்டது நினைவில் இருக்கிறது. இத்தனைக்கும் அவர் பணியாற்றிக் கொண்டிருப்பது கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. கிராமங்களிலேயே இதுதான் நிலைமை. அப்படியென்றால் பெருநகரங்கள் குறித்து நாம் முடிவு செய்து கொள்ளலாம். 

அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்றாலும் நீங்கள் குறிப்பிட்டது போல பெரும்பாலும் சேகரிப்பு குறித்துதான் அவர்களின் கவனம் இருக்கிறது. மறு சுழற்சி பற்றி அரசு என்னவிதமான எதிர்கால திட்டங்களை வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் மட்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் பணியை சில உள்ளாட்சிகள் செய்து வருகின்றன. 

அடர்வனம் அமைப்பதற்கு முன்பாக குப்பை குறித்தான எண்ணம் இருந்தது. ஆனால் செயல்வடிவத்துக்குக் கொண்டு வரவில்லை. தனிமனிதர்கள் இதில் எதைச் செய்ய இயலும் என்று தெரியவில்லை. உள்ளாட்சி அமைப்புகளும், அரசாங்கமும் இணைந்து செய்ய வேண்டிய பணி இது. நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பாக வேண்டுமானால் இருக்கலாம்.

உங்களின் மின்னஞ்சலை வாசித்த பிறகு ஒரு யோசனை உருவாகியிருக்கிறது. ஒரு மிகச் சிறிய கிராமத்தை தேர்ந்தெடுத்து சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம். குறைவான செலவில் சிறப்பான மறு சுழற்சி முறைகள் ஏதேனும் இருப்பின் அதனை சிறு ப்ராஜெக்ட்டாக செய்யலாம். அது சரியானதொரு வடிவத்தை அடையுமாயின் அரசாங்கத்தை அணுகி ஏதேனும் ஒரு கிராமத்தில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை யோசிக்கலாம். அரசு, அதிகாரிகளின் அனுமதியும் ஒத்துழைப்புமில்லாமல் இதனை சாத்தியப்படுத்துவது எளிதில்லை. அப்படி வெற்றி பெற முடிகிற பட்சத்தில் இந்த முறையை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்.

இதுவொரு தொடக்கம் என்பதால் நிறைய யோசிக்கவும் திட்டமிடவும் வேண்டியிருக்கிறது. இந்தக் கடிதத்தை நிசப்தத்தில் பிரசுரம் செய்கிறேன். நிபுணர்களின் அறிவுரை/வழிகாட்டுதல் கிடைக்குமானால் இதில் நம்மால் என்ன செய்ய இயலும் என்று விரிவாக ஆலோசித்து முடிவு செய்யலாம்.

நன்றி.

அன்புடன்,
மணிகண்டன்

11 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

நகரமாகட்டும், கிராமமாகட்டும், சாதாரண பாமரனுக்கு இருக்கும் அக்கறையில் 10ல் 1பங்கு கூட நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகளுக்கு இருப்பதில்லை. நீதி மன்றமோ அல்லது வேறு அதிகாரம் உள்ள அமைப்போ இது குறித்து கண்டிக்கும் போது இவர்கள் செய்யும் அதிகபட்ச செயல் புதிதாக இன்னொரு குப்பை கொட்டுமிடத்தை தேடுவது தான். அதுவும் ஏரியாகவோ! குளமாகவோ தேடிப்பிடித்து நாறடிக்கிறார்கள்.

Unknown said...

கடிதத்தை நிசப்தத்தில் பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி மணிகண்டன்.
வழக்கம் போல் இது போன்ற நுட்பமான விஷயங்களில் அரசு இயந்திரம் ஸ்தம்பித்து போகின்றது.மேலே இருந்து வருகின்ற கட்டளைகள் மட்டுமே நிறைவேற்றப் படுகின்றன.
எண்ணற்ற நடைமுறை சிக்கல்களால் நீங்கள் சொல்வது போல் பலபேருடைய ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியப்படும் . இமாலய முயற்சி இது.

Anonymous said...

தமிழக நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளும் பாமரர்களே. செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள் இல்லை. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதுமாதிரியான திட்டங்கள் சாத்தியமில்லை. திருச்சியும், சென்னையும் தமிழகத்தில்தான் இருக்கிறது. இரண்டுக்கும் சுகாதாரத்தில் எவ்வளவு வித்தியாசம். முதலில் குப்பைகளை பிரித்து போடுமளவிற்காவது ஒத்துழைப்பு தாருங்கள் மகாஜனங்களே...ஏன் நாளை குப்பை மறு சுழற்சிக்கான மையத்தை உங்கள் பகுதியில் அமைக்க வேண்டுமென்றால் ஒத்துழைப்பு நல்குவீர்களா? அதை எதிர்த்து போராட்டம் நடத்தமாட்டீர்களா என்ன? Everybody suffers Not in my backyard syndrome.

பொன்.முத்துக்குமார் said...

முதலில் இது வீட்டிலிருந்துதான் துவங்கவேண்டும். எல்ல்ல்லாவற்றையும் அரசே செய்யவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பது நல்லதல்ல. அதேபோல அரசும் கழிவு மேலாண்மையில் அப்-டு-டேட் ஆக இருக்கிறதா என்று தெரியவில்லை.

இங்கே அமெரிக்காவில் பார்த்திருப்பீர்கள். அனேகமாக அனைத்து வீடுகளுக்கும் இரண்டு குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டிருக்கும். மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை (தாள், அட்டை இன்னபிற), மற்றையவை என இருவகையாக பொதுமக்களே பிரித்து இரண்டு குப்பைத்தொட்டிகளில் நிரப்பி வெளியே வைத்துவிட கழிவகற்றும் நிறுவனம் வந்து அவற்றை சேகரம் செய்துகொள்ளும். (அவற்றை எப்படி மேலாண்மை செய்கிறார்கள் என்பதை நெருங்கிப்பார்த்தால்தான் தெரியும்)

இதை நாம் மிகக்கடுமையாக பின்பற்றவேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை தயங்காமல் செய்யவேண்டும். மட்கும் பொருட்களை உரம் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.

மதுரை கல்லூரிப்பேராசிரியர் திரு.வாசுதேவன் அவர்கள் ப்ளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து சாலை போடுவதில் பயன்படுத்தலாம் என்று நிரூபித்திருந்தார் நினைவிருக்கிறதா ? அதை பின்பற்றி உள்ளூர் சாலைகள் அமைப்பதற்கு ப்ளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். (ஆனால் இதுவும் சூழற்கேடு விளைவிப்பதே என்று படித்த நினைவு, நிபுணர்களே விளக்க இயலும்)

சில வருடங்கள் முன் சத்யவமேவ ஜெயதே நிகழ்ச்சியில் மும்பையை மையமாக வைத்து இதே பிரச்சினையைப்பற்றி அமீர்கான் பேசியிருந்தார். சில நிபுணர்கள் தீர்வுகளையும் வழங்கியிருந்தார்கள். அரசு எப்படி அதை படு கேவலமாக தட்டிக்கழிக்கிறது என்பதையும் தோலுரித்திருந்தார்.

இதை இப்போது சரிசெய்யாவிட்டால் அமெரிக்க மருத்துவமனை கழிவுகள் தூத்துக்குடியில் இறக்குமதியானது போன்ற நிகழ்வுகள் பெருகவே வாய்ப்பு.

இதைவிட பயங்கரமானது சமீபகாலமாக பெருகிவரும் இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவு.

Hari Prasad M said...

In India, Kumbakonam Municipality has setup a role model for this Recycling. Just last week there were few articles are published related to this.
FYI.

https://www.vikatan.com/news/tamilnadu/127086-kumbakonam-municipality-archives-through-2-lakhs-ton-dump-clear.html

https://www.deccanchronicle.com/nation/current-affairs/080618/kumbakonam-municipalitys-waste-recycling-model-brings-national-laur.html

அன்புடன் அருண் said...

இது ஏதாவது ஒரு வகையில் உதவுமா என்று பாருங்கள்..

https://www.vikatan.com/news/tamilnadu/127471-pyro-oil-extraction-from-plastic-wastes.html

Unknown said...

https://youtu.be/8hyoWKZkmno
This documentary will help. Vishnu Priya is working on this documentary.

Unknown said...

https://youtu.be/8hyoWKZkmno

சேக்காளி said...

ஒவ்வொருவரும் தனக்கென சொந்தமாக பையை யும்,தண்ணீர் பாட்டிலையும் உபயோகிக்க தொடங்குவதிலிருந்து ஆரம்பித்து அப்புறம் அடுத்தவருக்கும், அரசாங்கத்தும் யோசனை சொன்னால் நல்ல இருக்கும்.

நிகழ்காலத்தில்... said...

http://www.nird.org.in/nird_docs/sb/doc2.pdf

நிகழ்காலத்தில்... said...

https://goo.gl/Ak73g9