நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து அறுபது சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண் கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில மாணவர்களின் நேர்காணல்களை வாசித்தவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். 'பழைய கேள்விதாள்களுக்கு விடை எழுதிப் பார்த்தேன்' என்று ஒருவர் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு இது பெரிய சவால். தமிழில் நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் எதுவுமே இல்லை. வினாத்தாள்களை விட்டுவிடலாம். சரியான புத்தகம் கூட இல்லை. அரசுப்பள்ளிகளில், தமிழ்வழிக் கல்வியில், கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களின் மிகப்பெரிய பிரச்சினை 'எதை வெச்சு படிக்கறதுனே தெரியல' என்பதுதான். தமிழ்வழி கல்வி மாணவர்களுக்கு அரசாங்கம் தயாரித்துக் கொடுத்த ஒரு புத்தகம் தவிர பெரிய அளவில் எதுவும் சந்தையில் இல்லை. ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு அப்படியில்லை. ஏகப்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன.
பலரும் சொல்வது போல பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு போதுமானவை என்று சொல்ல முடியாது. சி.பி.எஸ்.இயின் பிற வகுப்புகளிலிருந்தும் கூட கேள்விகள் வருகின்றன. அது மட்டுமில்லாமல் நீட் மாதிரியான தேர்வுக்கு தனித்த கவனத்துடன் படிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
'ப்ளஸ் டூவில் அவனுக்கு படிக்கிறதை விட்டா என்ன வேலை? ஒழுங்கா உக்காந்து படிக்க வேண்டியதுதானே' என்று மேம்போக்காக சொல்லிவிடலாம். அமர்ந்து படித்தால் மட்டும் மதிப்பெண் வாங்குகிற சூட்சமம் நீட் தேர்வில் இல்லை. இயற்பியல், வேதியியல் பாடங்களில் நெகட்டிவ் மதிப்பெண்கள் வாங்கியவர்கள் எண்ணிக்கை வெகு அதிகம். எல்லாவற்றையும் திருகி, நுணுக்கி கேட்டு வைக்கிறார்கள். கேள்விகளை புரிந்து கொள்கிற பயிற்சி கூட நம் மாணவர்களுக்கு இல்லை என்பதுதான் நிஜம். ஏன் இல்லையென்றால், நம்முடைய கல்வித் திட்டம் அப்படியானதாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொழிக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு தினசரி வகுப்பு, வார இறுதியில் வகுப்பு என்று வறுத்து எடுக்கிறார்கள். சூட்சமங்களை சொல்லித் தருகிறார்கள். பழைய கேள்விகளைக் கொடுத்து அவற்றை தீர்க்கச் சொல்கிறார்கள். இதெல்லாம் கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?
தனியார் பயிற்சி நிறுவனங்களில் நீட் தேர்வுக்கு என்றே பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை ராஜஸ்தானிலும் ஆந்திராவிலுமிருந்தும் அழைத்து வருகிறார்கள். அவர்களின் முழுநேரத் தொழிலே இதுதான். வெவ்வேறு வினாத்தாளின் விடைகளோடு தயாராக இருக்கிறார்கள். இவர்களோடுதான் இன்னமும் நீட் தேர்வுக்கான வினாக்களை தகர்க்கும் பயிற்சியில்லாத நமது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் போட்டியிட வேண்டியிருக்கிறது. சரியான புத்தகம் இல்லாமை, படிக்கும் முறை தெரியாதது, சொல்லித் தரும் ஆசிரியர்களிடமிருக்கும் குறைப்பாடுகள் என சகலமும் சேர்ந்து கிராமப்புற மாணவர்களைத் திணறடிக்கின்றன. பத்தாம் வகுப்பில் நானூற்றைம்பது மதிப்பெண்கள், பனிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்தை தாண்டியிருந்தாலும் கூட நீட் தேர்வில் எழுநூற்று இருபதுக்கு நூறைக் கூடத் தாண்ட இயலாததன் பின்னால் இருக்கும் காரணங்கள் இத்தகைய குரூரமானவை. நகர்ப்புறங்களில் கடுமையான பயிற்சி பெற்ற மாணவர்களுடன் கிராமப்புறங்களில் படித்த மாணவர்களை ஓடச் செய்வது என்பது உசைன் போல்ட் மாதிரியான ஓட்டப்பந்தய வீரருடன் ஓடச் சொல்லி வெறும் பாதத்துடன் களத்துக்குள் அனுப்புவது போலத்தான்.
சிவக்குமார் என்றொரு மாணவர் கொல்லிமலையைச் சார்ந்தவர். எஸ்.டி பிரிவு. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள். தமிழ் வழிக்கல்வியில் படித்து நீட் எழுதினார். தேர்ச்சி அடையவில்லை. 'அடுத்த வருஷம் நீட் எழுத்தட்டுமா?' என்றார். 'உனக்கு நம்பிக்கை இருக்கா?' என்றால் அவரால் உறுதியான பதிலைச் சொல்ல முடியவில்லை. மேற்சொன்ன அத்தனை காரணங்களும் சேர்ந்து அவர் முன் பூதாகரமாக நிற்கின்றன. மாணவர்களை மனோரீதியில் சுருங்கச் செய்துவிடுகிறது என்ற எண்ணம்தான் மேலோங்குகிறது.
நீட் தேர்வில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை பேசுகிற அதே சமயம் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே உருவாகி இருக்கும் இத்தகைய அச்ச உணர்வு பற்றியும் நாம் பேச வேண்டியிருக்கிறது. 'அது தேறவே இயலாத தேர்வு' என்று பெரும்பாலான மாணவர்கள் நம்புகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் இருக்கும் குழப்பங்கள் தொடங்கி தேர்வறைகளில் காட்டப்படும் கண்டிப்பு வரை எல்லாமே கிராமப்புற மாணவர்களுக்கு மிரட்சியை உருவாக்குகின்றன. வெளியுலகத்தை இதுவரை பார்த்திராத பிஞ்சு மனதில் உருவாகும் இந்த பயமே பல மாணவர்களை மனதளவில் வீழ்த்திவிடுகிறது. இதையெல்லாம் சரி செய்யாமல் 'பாடத் திட்டத்தை மாற்றினால் போதும்' என்று பேசுவது அபத்தம். பாடத்திட்டத்தை மாற்றுவது என்பது வெறும் கண் துடைப்பாகவே இருக்கும். எந்தக் காலத்திலும் கிராமப்புற மாணவர்கள் வசதி வாய்ப்புகளுடன் இருக்கும் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டி போட முடியாது போலிருக்கிறது.
'இதற்கு என்ன தீர்வு' என்று கேட்டால் உடனடியாக எதையும் சொல்லத் தெரியவில்லை. நீட் நமக்கு முன்பாக உருவாக்கியிருக்கும் சவால்கள் மிகச் சிக்கலானவை. பல காரணிகள் பின்னாலிருக்கின்றன. மேற்சொன்ன ஒவ்வொன்றாகத் தீர்க்க வேண்டும். அதற்கு பல வருடங்கள் ஆகக் கூடும். அதுவரை பல்லாயிரம் மாணவர்கள் தமது கனவை இழப்பார்கள். களத்தில் இறங்கி பார்ப்பதற்கு முன்பாக இதுவொன்றும் பெரிய காரியமில்லை என்றுதான் தோன்றியது. கடந்த ஒரு வருட அனுபவத்தில்,மாணவர்களிடம் பழகியதிலிருந்து ஒன்றைச் சொல்ல முடியும்- நீட் என்பது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரானது. அடித்தட்டு மக்களின் மருத்துவ கனவை அடித்து நொறுக்கக் கூடியது. பொதுவாகவே நுழைவுத் தேர்வு என்று ஒன்றை நடத்துவதாக இருந்தால் அது சகலமானவர்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு சாராரை நசுக்குவதாக இருந்தால் அத்தகைய தேர்வு முறைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். இன்றைய சூழலில் நீட் அப்படியானதொரு தேர்வு. அரசு சட்ட ரீதியாக போராடி நீட் தேர்வை ரத்து செய்வதுதான் இப்போதைக்கு ஒரே வழியாகத் தெரிகிறது.
(காமதேனு இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை)
8 எதிர் சப்தங்கள்:
அதே வழியில்,அதே முறையில் பயணிக்கும் போது மாற்றங்களை உருவாக்க முடியாது.
#அரசு சட்ட ரீதியாக போராடி நீட் தேர்வை ரத்து செய்வதுதான் இப்போதைக்கு ஒரே வழியாகத் தெரிகிறது#
என்ன போராடினாலும் மத்திய அரசு ஒத்து உழைக்குமா என்பது ..?
வாழ்க வளமுடன்
It is high time to change the learning methodology, that is medium, why can't the government start English medium , In medical college, r the lessons being taught in Tamil? For now, reliable source materials in English can be kept as guidance and can be translated in Tamil.
>>'இதற்கு என்ன தீர்வு' என்று கேட்டால் உடனடியாக எதையும் சொல்லத் தெரியவில்லை
பனிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்று, பணம் கொடுத்து தனியார் கல்லூரிகளில் சேருபவர் மட்டும் இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றால் தான் தொடர்ந்து படிக்கலாம் என்று மாற்றலாம்..
நீங்கள்ஃ நினைப்பதெல்லாம் நடக்குமா, மணிகண்டன்.ஏதாவது உருப்படியான வழியாகச் சொல்லித்தாருங்களேன். எதிர்மறையான எண்ணங்களே விதைக்கப்பட்டு வீண் ஆத்திரம் கொள்வதுதான் கண்ட பலன்
உருப்படியான வழியை முயற்சி செய்து பார்த்துவிட்டுத்தானே சொல்கிறேன்?
'நீட்' தேர்வு ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது?
சமீபத்தில் நடந்த 'நீட் 2018' கேள்வித்தாளை ஒரு முறை பார்வையிட்டேன். 'தெர்மோடைனமிக்ஸ்' என்ற பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட ஒரு வினாவினை ஆராய்ந்தேன். ஒரு பொறியியல் கல்லூரி பேராசிரியர் என்ற முறையில், அந்த வினா கேட்கப்பட்ட ஆழத்தினை என்னால் அறிய முடிகிறது. அந்த கேள்விக்கு விடை அளிப்பதர்க்கு, பகுத்தறிவுத்திறன் (Analytical skill) தேவைப்படுகிறது. ஆனால், மனப்பாடக் கல்வியில் படித்து வளர்ந்த நம் மாணவர்களால், அதற்க்குறிய சரியான விடையை கண்டுபிடிக்க முடியவில்லை.
தவறு எங்கே உள்ளது?
கற்பிக்கும் முறையில் தான் உள்ளது. இதைப் புரிந்து கொள்ள, அந்த வினாவினை ஒரு முறைப் பார்த்து விடுவோம்.
----------------------------------------------------------------------------
The efficiency of an ideal heat engine working between the freezing point and boiling point of water is
(1) 6.25% (2) 20% (3) 26.8% (4) 12.5%
இந்த கேள்விக்கு சரியான விடை அளிப்பதர்க்கு,
(1) ஒரு ‘பார்முலா’ தெரிந்து இருக்க வேண்டும் [(T1 – T2)/T1] x 100
(2) Freezing point and boiling point of water தெரிந்து இருக்க வேண்டும் (Freezing point = 0 degree centigrade and boiling point = 100 degree centigrade)
(3) Freezing point and boiling pointஐ degree centigrade scale -லிருந்து Kelvin scaleக்கு மாற்றத் தெரிந்து இருக்க வேண்டும் (kelvin = 273 + degree centigrade)
(4) T1 என்பது higher temperature (100 degree) மற்றும் T2 என்பது lower temperature (0 degree). இதை சரியாக புரிந்து இருக்க வேண்டும்.
விடை: 26.8%
----------------------------------------------------------------------------
ஆனால், நமது மாணவர்கள், இந்த கேள்விக்கான விடையினை மனப்பாடம் செய்யும் விதமாக கற்பிக்கப் படுகிறார்கள். இதே கேள்வியை T1 மற்றும் T2 மதிப்பை மாற்றி வேறு விதமாகவும் கேட்கலாம் (உதாரணமாக, T1 = 80 degree & T2 = 50 degree). அப்பொழுது விடை மாறும் (விடை: 8.49%), மார்க்கும் மாறும்!
//அந்த கேள்விக்கு விடை அளிப்பதர்க்கு, பகுத்தறிவுத்திறன் (Analytical skill) தேவைப்படுகிறது. ஆனால், மனப்பாடக் கல்வியில் படித்து வளர்ந்த நம் மாணவர்களால், அதற்க்குறிய சரியான விடையை கண்டுபிடிக்க முடியவில்லை.
தவறு எங்கே உள்ளது?
கற்பிக்கும் முறையில் தான் உள்ளது//
√
Post a Comment