Jun 18, 2018

லிங்கம்மா

'செருப்பு தொட்டுக்க' என்றுதான் எங்கள் ஊரில் சொல்வார்கள். அப்படித்தான் நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் 'செருப்பு போட்டுக்க' என்று மாற்றிவிட்டேன்.  'போவோணும்' என்பதுதான் கொங்கு வழக்கு. நண்பர்கள் 'போகணும்' என்று மாற்றிக் கொண்டார்கள். வெளியூர்வாசிகள் என்றில்லை- உள்ளூரிலேயே கூட அப்படிதான் பேசுகிறார்கள். வட்டல் என்பது தட்டு என்று மாறிவிட்டது. லோட்டா டம்ளர் ஆகிவிட்டது. நிறைய நிறைய.   

நமக்கென்று ஒரு வட்டாரம், அதற்கென்று ஒரு பேச்சு வடிவம் என்று இருந்தது. இன்றைக்கு அது கரைந்து கொண்டிருக்கும் வேகம் அசுரத்தனமானது. பட்டிக்காட்டான்தான் வட்டார வழக்கில் பேசுவான் என்ற எண்ணத்தின் காரணமாகவோ, நாம் பேசுவது வேறு ஊர்க்காரங்களுக்கு புரிவதில்லை என்ற காரணத்திற்காகவோ பொதுமைப்படுத்தப்பட்ட வழக்குக்கு மாறிக் கொண்டிருக்கிறோம். அடுத்த ஐம்பதாண்டுகளில் வட்டார வழக்கும், சொற்களும் இல்லாமல் போய்விடக் கூடும். 

பெங்களூரில் காமதேனு இதழ் எளிதில் கிடைப்பதில்லை. நீட் தேர்வு குறித்தான கட்டுரை எழுதியதற்காக ஒரு பிரதியை அனுப்பி வைத்திருந்தார்கள். பேருந்தில் வரும் போது வாசித்துக் கொண்டிருந்தேன். காமதேனுவில்  தமிழச்சி தங்கபாண்டியன் வட்டார வழக்கில் எழுதி வரும் சொட்டாங்கல் தொடரில் 'லிங்கம்மா' என்ற பெண் குறித்து எழுதியிருந்தார். லிங்கம்மாவை விடவும் கட்டுரையின் மொழி, தமிழச்சி பயன்படுத்தியிருக்கும் சொற்கள் ஆச்சரியமூட்டச் செய்தன. உண்மையிலேயே இவ்வளவு சொற்களை நினைவில் வைத்திருக்கிறாரா என்று சந்தேகம் கூட உருவானது. அவருக்கும், காமதேனு இதழுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் உள்ளூக்காரனை எழுப்பிவிடுகிற பத்தி இது. இன்றைக்கு வட்டார வழக்கில் எழுதுகிறவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அதுவும் இணையம் பரவலான பிறகு இந்த எண்ணிக்கை அருகிக் கொண்டே போகிறது. காமதேனு ஆன்லைனில் கிடைப்பதில்லை. இல்லையென்றால் இணைப்பைக் கொடுத்திருக்கலாம். முழுமையான கட்டுரை இது. மற்ற வட்டாரத்தைச் சார்ந்தவர்களுக்கு சற்று கடினமாக இருக்கக் கூடும். ஆனால் வாசிப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். மிகச் சிறப்பு. 

சிறு அழைப்பு விடுக்கலாம் என ஆசை. இது போட்டியில்லை. அவரவர் வட்டார மொழியில் முன்னூறு சொற்களுக்கு குறைவில்லாமல் எழுதி அனுப்பினால் - சிறுகதை, பத்தி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  முயற்சித்துப் பார்த்தால் நாம் பால்யத்தில் புழங்கிய  எத்தனை சொற்களை மறந்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ளலாம். 

சுவாரசியமானவற்றை இங்கு பிரசுரம் செய்யலாம்.  இது இணையவெளியில் நம்முடைய முயற்சியாக இருக்கட்டும். 

vaamanikandan@gmail.com

                                                                    *** 
லிங்கம்மா- தமிழச்சி தங்கபாண்டியன் 

“கெப்புலிங்கம்பட்டி தா எங்கவ்வா ஊரு செமதி. கொலசாமி பேரத் தா எனக்கு வச்சுருக்கு. என்னயப் போலவே எஞ்சாமிக்கும் செவப்புக் கலரும், பச்சரிசிக்  கொழக்கட்டையும் னா உசிரு”னு வா லிங்கம்மா. பொழுதன்னிக்கும் எதையாச்சும் அதக்கி மென்னுகிட்டே தா இருப்பா. “உறங்கறப்பயும் கடவாப் பல்லக் கடிச்சுகிட்டே, நாக்க மென்னுகிட்டே தா ‘கேடுத’ கெடப்பா”னு மொட்டையவ்வா செல்லமா வையும். லிங்கம்மாக்குப் பல்ல வௌக்கமுன்னயும் கடுங்காப்பி ஒரு சொம்பு நெறய கொதிக்கக் கொதிக்க இருக்கணும். அதக் குடிச்சுட்டுப் பொட்டுக்கடலையும், தேங்காச் சில்லையும் சுருக்குப் பைல போட்டுக்கிட்டு காட்டு வேலைக்குக் கௌம்பிருவா. அந்தச் சுருக்குப் பையச் சணல் கயத்துல கட்டி ரெண்டு சுத்தா பாவாடைக் கயத்தோடச் சுத்தி வச்சிருப்பா.

அவளுக்குப் பள்ளியோடம்னாலே பச்சநாவி. அவ அம்மா எத்தன அடி நொங்கெடுத்தாலும் பள்ளியோடத்துக்குப் போக மாட்டேனுட்டா. பால்பவுடரு, மக்காச்சோள வடை போடற அன்னிக்கு மட்டும் காட்டு வேலைய முடிச்சுட்டு வட்டுலோட மதியமா வந்துருவா. அவ வர்றதக் கணக்கு வச்சுச் சத்துணவு கண்ணம்மாக்கா சோத்துக் குண்டானையும், பருப்பு அண்டாவையும் வௌக்காமப் போட்டு வச்சுருக்கும். எனக்கு அவள இப்டி வேல வாங்குதே கண்ணம்மாக்கான்னு கோவம் வரும். “கெடக்குது செமதீ. நெதமுந்தா அது கழுவித் தேய்க்குது. நா வர்றன்னிக்கு ஒத்தாச பண்ணா என்ன - ஒன்னாட்டமா தேஞ்சுடப் போறேன்”னு என்னிய நக்கலடிப்பா.

லிங்கம்மா வர்ற அன்னிக்குச் சத்துணவு தின்னுப்புட்டு வெளியே ஓடாம, அவளோட பாத்திரம் வௌக்க ஒக்காந்துருவோம் நானும், கீதாவும். கீதாக்குக் கோழின்னாலே வாயூறும். “இவ கோழிப் பீயக் கூட மசலாத் தண்ணி சேத்தா திம்பாப்ல”னு லிங்கம்மா கீதாவ லந்தடிப்பாப்ல. “ஒன்னிய மாரி நானென்ன ரைஸ்மில்லா?”னு கீதா மல்லுக்கு நிப்பா. “தேங்கா நார வச்சுக் குண்டான வௌக்கங்குல்ல நமக்கெல்லாம் ஒடம்புல குத்தாலம் கொட்டும். ‘அண்டா’ மட்டும் அலுங்காம வௌக்கிக் கவுத்துறா பாரு”ன்னு ஒல்லி சுப்பு சொன்னதுக்கு, அவ நெத்தி மேல ஒரு தண்ணி லோட்டாவ விட்டெறிஞ்சுட்டா. ‘அண்டா’ங்கிறது லிங்கம்மாவோட பட்டாப் பேரு. பள்ளியோடத்துல ஆராச்சும் அப்டிக் கூப்புட்டா பையத் திரும்பி, ஒதட்டோரமா வக்கணம் காட்டிட்டு விட்டுறுவா. வெளிவாசல்ல ஆராச்சும் ‘அண்டா’னுட்டா, அவுக தலைய ஆஞ்சுப்புடுவா.

லிங்கம்மா சட்டிகள தேங்கா நார வச்சு அரக்கித் தேப்பாப்ல. அதுக்கு எல்லா முஸ்தீபையும் நானும், கீதாவுந்தா செய்யணும். கண்ணம்மாக்கா சாம்பலக் கொட்டி வச்சிருக்கச் சாக்குல இருந்து செரட்டைகள்ல அத அள்ளிட்டு வரணும். மேலாக்கத் தூசு, தும்பெல்லாம் சலிச்செடுத்துட்டு லேசா மொர, மொரங்கிற சாம்பல மட்டும் அவ கைவாகுல எட்டற மாரிக் கொட்டி வக்கணும்.  லிங்கம்மா பரபரன்னு தேச்சுப் போட்டா, டிப்பருல தண்ணிய ஊத்தி நா கழுவுறதக், கீதாக்கோழி போய்க் கவுத்தி வைப்பா. கீதாக்கு அம்புட்டு நல்லாப் பாட்டு வரும். ஆனாக்க சினிமாப் பாட்டு ஒத்த வரி கூடத் தெரியாது.

“அண்டா, நீ சினிமாப்பாட்டு பாடேன்”னுவா கீதா.

“எம்.சி.ஆரு பாட்டுத்தான”னு கேட்டுகிட்டே, ஒரக்கக் “கடலோதம் வாங்கிய காத்து”னு தொடங்குவா லிங்கம்மா. அவளுக்கு ‘ர’னா ‘று’னா வராது. “புதிதாக இருந்தது நேற்று”ன்னா அவ மூஞ்சி சொணங்கிடும். “புதிதாக இருந்தது நேத்து”னு தா நா பாடணும். பாடிக்கிட்டே அவ சாம்பத் தேச்சு வச்ச பாத்திரங்களத் தண்ணியச் சேந்தி ஊத்தி நா கழுவுனா, “சின்னஞ்சிறு பெண் போலே”னு கீதா எடுத்துகிட்டுப் போய்க் கவுத்துவா.

மதியம் எப்பவுமே மொத வகுப்பு ‘டிராயிங்’தா. சீத்தாராமன் வாத்தியாருக்குக் கலர்ப் பென்சிலுங்கள மொனை முறியாமப் பளபளன்னு வச்சிருக்கணும். வகுப்பு தொடங்குனவுடனேயே அவுகவுக டப்பாவத் தொறந்து காமிக்கணும். மேசை, நாற்காலி, குதிரை, மரம், சூரியன் - எல்லாம் வரைஞ்சு முடிச்சுட்டுக் கரும்பலகைல வாத்தியார் எப்பவுமே ஒரு கண்ணாடிய வரைவாரு. அப்பல்லாம் அது ‘காந்தித் தாத்தா’ வோட கண்ணாடின்னு எங்க ஆருக்கும் தெரியாது. வாரத்துக்கு ஒரு வாட்டி டிராயிங் நோட்ட வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாம். திங்கக்கெழமை ஏதாச்சும் புதுசா அதுல வரைஞ்சிருக்கணும்.

லிங்கம்மாக்கு வரையறுதுனா அம்புட்டுப் புடிக்கும். “சூடு ஈ பிடனி. ஒத்த புள்ளி வச்சுக் கோலத்த இழுக்கக் கூடத் தெலியது. பள்ளியோடத்துக்கும் போக மாட்டா. ஆனாக்க நெட்டுவாக்கு நோட்டு மட்டும் அடுகி”னு லிங்கம்மாவோட சித்தி அலுத்துக்குவா. அதுல ஃபுல்லா லிங்கம்மா வெதவெதம்மா ‘கடல’த்தா வரைஞ்சு வச்சுருப்பா. எங்க டிராயிங் நோட்டப் பாத்தே அச்சொட்டா கடலு, மலைய மட்டும் வரைஞ்சுருவா, கருசக்காட்டுக்காரவுகளுக்குக் கடல் னா அம்புட்டு ஆச. “நம்மூரு ஊருணிகள விட அம்மாந்தண்டில கரையே இல்லாம இருக்குமாம்ல செமதி. ஒருக்கா பாத்து உப்புத் தண்ணில கால நனைச்சுரணும்”னுவா.

எல்லாக் கலருலயும் கடலை வரையக் கூடாதுன்னா “ஏன்”னுவா. பச்சைக் கலர், செவப்புக் கலர்ல அலையலையா வரைஞ்சு என்னிய அது மேல ஓரமாக் ‘கடல்’னு எழுதச் சொல்லுவா. திருச்செந்தூருக்கு சஷ்டிக்கு நடந்து போயிட்டு வர்ற மீனாக்காவ, அவ திரும்பி வந்தவொடனே ஒரு வாரத்துக்கு ஒக்கார விடாமக் கடல் கதையக் கேப்பா. “இவ ரோதனை பெரிய இம்சையால்ல இருக்கு. கடலுத் தண்ணில கால நனைச்சுட்டு அரோகரான்னு முருகரப் பாத்தோம்னா கேக்காளா... முங்குனியா, அமுங்கினியானுட்டு இம்புட்டு இம்சிக்காளே”னு மீனாக்கா அவளப் பாத்தாக்க அந்தாக்குல ஓடிரும்.

லிங்கம்மாக்கு அப்பா மேசை மேல இருக்கிற ‘சங்கு’ பேப்பர் வெயிட்டு மேல அம்புட்டு ஆசை. அதப் பாக்கணும்னு ஞாயித்துக் கெழம மட்ட மதியானத்துலதா வூட்டுக்கு வருவா. ஆள் கூட்டம் எதுவுமில்லாம வேலன் மாமா மட்டும் அரைத் தூக்கத்துல இருப்பாப்ல. இவளப் பார்த்ததுமே “ஏ, ‘அண்டா’, ரைஸ் மில்லப் பூட்டுன மாரி வாய அடைச்சுக்கிட்டு பொன்னம் போல வர்ற”னு வாயாடிகிட்டே வழிய விடுவாரு. லிங்கம்மா கண்ணெல்லாம் அந்த சங்கு மேலங்கிறதால பட்டாப் பேர சொன்னாக்கூட அப்ப மட்டும் சிரிச்சுக்குவா. ரெண்டு கண்ணாமுழியையும் விரிச்சுக்கிட்டுப் பைய “வாழ்க வளமுடன்”னு எழுதிருக்கிற சங்க எடுப்பா. “பாத்துக்க”ன்னு எங்கிட்ட சொல்லிக்கிட்டே காதுல பூப் போல வச்சுக்குவா. “நெதமும் பாக்கிறது தான”னு நாஞ்சொன்னா; “பாக்கிற ஆனாக்க கேக்கறயா”னுவா. செத்த நேரம் கண்ண மூடி சொவத்துல சாஞ்சுக்குவா.

பூவரசம் பூவுல பீப்பி ஊதுறதுல லிங்கம்மா கில்லாடி. எப்படின்னாக்க, பூவரசம் பூவ வாயில சும்மா வச்சு வச்சு எடுத்துட்டு, எடையில சீப்புல ஒரு பேப்பர மடிச்சு மவுத் ஆர்கன் மாரி வாசிப்பா. கண்ணசையாம நா பாத்தாக்க, ‘டிரிக்கு’னு கோண வலிப்பா. அவளுக்குப் புடிச்ச எல்லா எம்.சி.ஆரு பாட்டையும் அந்த சீப்புல பேப்பர வச்சு எப்பிடித்தா வாசிக்காளோன்னு கீதா வாயப் பொளப்பா. லிங்கம்மாகிட்டக்க அந்த ‘டிரிக்க’ எப்படியாச்சும் கத்துக்கணும்னு நானும் வாட்டர் கலர் டப்பா, கலர் பென்சிலுக எல்லாம் வாங்கித் தருவேன். “இந்தாக்குல பேப்பர சீப்புல மடிச்சு, அந்தாக்குல வாயில வை”னுவா. ஆனாக்க, அவ பூவரசம் பீப்பிய வச்சு எடுத்த சீப்புக்குள்ளாற மட்டுந்தே பாட்டு வரும். 

லிங்கம்மாவுக்குச் ‘செவ்வாக்கெழமை கொழக்கட்டை’ன்னா உசிரு. கெப்புலிங்கம்பட்டித் திருழாக்குப் போலைன்னாலும், ‘செவ்வாக்கெழமை கொழக்கட்டை’ கும்பிடறத அவ அம்மா நிறுத்துனதேயில்ல. வெறும் பொம்பளயாளுக மட்டுந்தா அதக் கும்பிடணும். அதுக்காக, அவ அம்மா மொத நாளே பச்சரிசிய ஊறப் போட்டு வச்சுருவாப்ல. முழுசா ஊறாம, லேசா உப்பிட்டு வர்றங்குள்ளயுமே லிங்கம்மா கூடையில துணிக்குள்ளாற அதப் பொதிஞ்சு எடுத்துகிட்டு வீரம்மாக்கா வீட்டுக்கு வந்துருவா. மத்ததுக்கெல்லாம் தெரு முக்குல இருக்கிற பொது ஆட்டுரலு, அம்மி தா. ஆனாக்க இந்தப் பச்சரிசிய மாவாக்கி அள்ளறத யாரும் பாக்கக்கூடாதுன்னு வீரம்மாவோட உள்வீட்டு திருகைல தா அரைப்பா.

வீரம்மா வூட்டுல அப்ப திருப்பதி, கொண்டல்ராசுனு யாராச்சும் ‘எட்டுக்காலுத் தாயம்’ ஆடிட்டு இருப்பானுக. மத்த நாளுனா பாதி அரிசிய அதக்கி அரைச்சுருப்பா. ‘செவ்வாக்கெழமை கொழக்கட்டை’க்குன்னு ஒத்த அரிசியக் கூடத் தொட மாட்டா. சுருக்குப் பையில சாஸ்தியா பொட்டுக் கடலையப் போட்டு வச்சுக்குவா. என்னியப் போயி முல்லைக்கனி அண்ணாச்சி கடைல ரெண்டு தேங்காச் சில்லு வாங்கியாரச் சொல்லுவா. நா வர்றங்குள்ளயும் அந்தப் பயலுகள வெரட்டி விட்டுட்டுத், திருகையக் கழுவிச், சுத்தி வல்லுசாத் தொடச்சு வச்சுருவா.

வீரம்மாக்கா வூட்டுப் பெரிய கதவுல தாப்பா கெடயாது. பெரிய செங்கல்ல தா அண்டக் கொடுத்து இருக்கும். கண்பார்வைல என்னிய அங்க காவலுக்கு நிக்கச் சொல்லிட்டுப் பாவாடைய நல்லாச் சுருட்டித் தொடைக்குள்ள சொருகிகிட்டு ஒக்காந்துக்குவா. “அந்தக் கொழக்கட்டைக் கதையச் சொல்லு”ன்னாக்க, “இந்த வாட்டி ஒறங்காமக் கேட்டுட்டு வாரேன்”னுவா. ஒரு நா ராத்திரி முழுக்க வெறும் பொம்பளையாளுக மட்டும் சேந்து, ஒக்காந்து, உப்பில்லாத பச்சரிசிமாவுல வெதவெதமாப் பொம்மை பிடிச்சு, அத தேங்காச்சில்லோட அவுகவுகளுக்குப் பொதுவான பொம்பள சாமிக்குத், தீவம் பொருத்திப் படைச்சுட்டுப், பெறகு கதை பேசி முடியங்குள்ள விடிஞ்சுரும்.  ஆம்பளயாளுக யாரு கண்ணுலயும் படாமப் பச்சரிசிய மாவாக்கிக் கொழக்கட்டயப் புடிக்கணும். ஆம்பிளயாளுக கண்ணுல படாமத் தா அத திங்கவும் செய்யணும். விளக்குப் போலப் புடிச்சு வச்சிருக்கிற கொழக்கட்டைகள்ல நெய்ய ஊத்தி, தீவத்தப் பொருத்தி ரவை முழுக்க எரிய விடுவாங்க. மக்கா நாளு அந்தக் கொழக்கட்டைகள அக்கம், பக்கம் எல்லாப் பொம்பிளகளுக்கும் தேங்காச்சில்லுகளப் போட்டு பகுந்து கொடுத்து அனுப்புவாங்க. எனக்கு அந்தப் பொம்மைகள் ஒவ்வொன்னையும் பாக்குறப்ப திங்கவே மனசு வராது. ஆனாக்க, நெய் வாசனை அடிச்சுகிட்டு, தீவத்துல லேசாக் கருகிப்போன மொனைபோட இருக்கிற வௌக்குப் பொம்மைய மட்டும் மொதல்ல ருசிச்சுத் திம்பேன்.

“செங்கலு அண்டக் கொடுத்துருக்குன்னு அசால்டா நிக்காத செமதி. கொண்டல்ராசு துடிப் பய. திறவோலு ஓட்ட வழியாப் பாப்பாப்ல. கண்ணு வச்சுக்கோன்னு” சொல்லிக்கிட்டே கல் திருகைல அரைச் சுத்தா பச்சரிசியப் போட்டு அரைப்பா. முழுச் சுத்துனாக்க அரிசியத் தொவட்டற பக்குவம் வராதும்பா. திருகைக்குக் கீழ சாக்குத் துணிதா. லிங்கம்மா அதுமேல அளவாக் கிழிச்சு வச்ச அவ அம்மாவோட பழந் துணியப் போட்டுட்டு தா திரிக்க ஆரம்பிப்பா. எப்பவுமே எம்.சி.ஆரு பாட்டப் பாடறவ அப்ப மட்டும் “செல்லாத்தா எங்க கண்ணாத்தா” பாட்டப் பாடுவா.

நான் முதன்முதலில் பார்த்தது திருச்செந்தூர்க் கடல் தான். பிற்பாடு விருதுநகர் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சென்னைக்கு ‘இன்பச் சுற்றுலா’ சென்றபோது இரண்டாம் முறையாகக் கடலைப் பார்த்தேன். இரண்டு முறையும் “அத்தாத்தண்டி ஊருணியா? அலை ஒசரம் நம்மூருப் பனை ஒசரமிருக்குமா?” என்று ஊரிலிருந்து கேட்டபடி, லிங்கம்மாவும் என்னருகே கால் நனைத்தாள். ‘அண்டா’ எனப்பட்ட என் லிங்கம்மா ஏதோ ஒரு குடும்பத் தகராறில் கல்லைக் கட்டிக் கிணற்றில் குதித்துச் செத்துப் போய் வருடங்கள் ஓடி விட்டன. அவளறிந்த கடல் அது தான்.

9 எதிர் சப்தங்கள்:

தோட்டம் சிவா said...

எவ்வளவு ஊர் பாஷை பேசுறோம்னு தெரியலை.. ஆனா ரெண்டு வார்த்தை பேசினாலே இன்னைக்கும் 'நீங்க திருநெல்வேலியா'ன்னு நெறைய பேரு கேக்கறது சந்தோசமா இருக்கும்.. அது அங்கன தான் நிக்கு.. நிக்குல்லா.. இப்படி 'நிக்கு' (நிற்கு) என்கிற ஒரு வார்த்தையை வச்சே.. 'லே.. நீ திருநெல்வேலியா' ன்னு சொல்லுவாங்க..
காலேஜ் படிக்கும் போது பயபுள்ளைங்க நாம 'காணோம்.. காணோம்' (போதும்.. போதும்') என்று சோறு போடும் போது சொல்லுவதை.. எத காணோம்-னு கிண்டலடிக்க .. மெதுவா நாமே அப்படி பேசுறத கம்மி பண்ணி.. நம்ம ஊர் பாஷை எல்லாம் காணாம போயிருது..

Jaypon , Canada said...

கன்னட சாயல் ரொம்ப அடிக்குதோ? எனக்கு 30 சதவீதம் புரியலை. ஒரு வேளை கொங்கு வட்டார மாநாடு இருந்தா சுலபமா புரிந்திருக்குமோ?

சேக்காளி said...

//மற்ற வட்டாரத்தைச் சார்ந்தவர்களுக்கு சற்று கடினமாக இருக்கக் கூடும்.//
எங்கவ்வா (எங்கம்மா வா இருக்கும்),சூடு ஈ பிடனி மற்றும் பச்சநாவி தான் புரியல
மத்தபடி இந்த திருநவேலியானுக்கு நல்லா வே கத புரிஞ்சுச்சு
தாப்பா, அண்ட, (தெரு) முக்கு, அதக்கி, பீப்பி, திருகை(திருவ),வலிச்சம்,தேங்கா சில்லு,வள்ளுசா,திறவோலு( தொறவா) இதெல்லாம் புரியறத வச்சு பாத்தா நான் இன்னும் விலகி போயிரல

ramesh said...

" சூடு ஈ பிடனி” - "paaru indha pullaya” apdinu artham.. idhu Telugu

Raja said...

அற்புதமாக எழுதி இருக்கிறார். இப்படித்தான் கதை இருக்க வேண்டும். இதுதான் எழுத்து. 5 தடவை படித்து விட்டேன். மனம் முழுக்க ஒரு விதமான...சொல்ல தெரிய வில்லை.

நன்றி, மணிகண்டன் இந்த கதையை இங்கு பதிப்பித்தற்கு.

Raja said...

தி ஜானகிராமனின் "கொட்டு மேளம்" படித்து முடித்து எத்தனையோ வருடங்கள் கழித்தும் சில கதா பாத்திரங்கள் என் நினைவில் இருக்கின்றன. வெறும் திருநெல்வேலிக்காரனாக மட்டும் இந்த கதையை பாராட்ட வில்லை. நெறய இருக்கலாம். எனக்கு தெரிய வில்லை. நானறிந்த கடல் அவ்வளவுதான்!!

Murugan R.D. said...

படிக்கிறதுக்கு ரொம்ப கடினமாகதான் இருந்திச்சி,, இருந்தாலும் தொடர்ந்து படிச்சிட்டேன், முழுவதுமாக புரிந்ததா ?சுவராஸ்யமாகவோ அல்லது எளிமையாகவோ இருந்ததா? என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்,,,, இத்தனைக்கும் விருதுநகர் வட்டார வழக்கு சொற்களும் இதில் இருக்கிறது,,,, நெல்லை வட்டார வழக்கு சொற்கள் என்று இங்கு கமண்டில் குறிப்பிட்டதை யோசித்துப்பார்த்தால் எனக்கு நெல்லை வட்டார கதை போல தோன்றவில்லை,,,
இன்னும் கொஞ்சம் எளிமையா பத்தி அளவு குறைத்து வந்தால் நன்றாகயிருக்கும்,,,, அதாவது மற்ற வட்டார மக்கள் படிப்பதற்கு,,, இதுபோல வெவ‌்வேறு வட்டார சொற்களை கொண்டு கதை அவ்வப்போது வெளியிடுவதும் உபயோகமான விசயமே,,

இதுவரைக்கும் நான் படித்த வட்டார வழக்கு கதைகளில் திரு, நாஞ்சில் நாடன் எழுதிய ஒரு கதையும் திரு, மேலான்மை பொன்னுசாமி அவர்கள் எழுதிய ஒரு கதையும் தான் எனக்கு நினைவில் வருகிறது, அவ்விரண்டும் தான் நான் கொஞ்சமும் ஆர்வம் தொய்வின்றி திருப்தியாக எளிதாக புரிந்து படிக்க முடிந்த இரண்டு நூல்கள்,, திரு, மேலான்மை பொன்னுசாமி அவர்களின் நாவல் அப்படியே என் கண்முன் அந்தந்த கேரக்டர்களின் வாழ்க்கை முறையை உலவவிட்டது,, கேரக்டர் பேசும் பேச்சுகளும் அந்த நேரங்களும் அதாவது அதிகாலையோ சுட்டெரிக்கும் மதிய வெயிலோ சூரியன் மறையும் மஞ்சள் மாலையோ அவ்வளவு தத்ரூபமாக உணரமுடிந்தது,

நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய ஒரு நாவல் பெயர் தெரியவில்லை ஒதுக்கப்பட்டவர்களில் துடிப்பான ஒருவரின் கீழ் அந்த ஒதுக்கப்பட்ட மக்கள் அரசாங்க நிலத்தில் தோட்டம் போடடுவதையும் இன்னொரு குறிப்பிட்ட சாதியினரில் சில பணக்கார மனிதர்கள் (அநேகமாக அவர்களை பிள்ளை என்ற சாதியாக காட்டியிருப்பார் என்று நினைக்கிறேன்) அந்த ஒதுக்கப்பட்ட எளிமையா மனிதர்களின் இதுபோன்ற சுய முயற்சி மற்றும் வளர்ச்சியை பொறாமையோடு ஆதிக்க மனோபாவத்துடனும் ஒடுக்க நினைத்து செயல்படுத்தும் திட்டங்களுமாக நாவல் நகரும்,, அவ்வளவு இயல்பான எழுத்துநடையில் எவரும் அந்த நாவலின் நிஜதன்மையை மனதால் உணர முடிகிற அளவிற்கு இருந்தது,,,

Anonymous said...

Right here is the right site for everyone who hopes to find
out about this topic. You know a whole lot its almost tough to argue
with you (not that I personally would want to?HaHa).
You definitely put a new spin on a topic that has been written about for decades.

Great stuff, just excellent!

Muthu said...

Mani...you had collected a list of words in your blog...if I remember correctly...