Jun 18, 2018

குக்கூ

குக்கூ காட்டுப்பள்ளி பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். மைவிழி என்ற பெண் குக்கூவில் தன்னார்வலர். பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியில் இருக்கிறார். விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் குக்கூவுக்குச் சென்று விடுவார்.  'அண்ணா ஒரு நாள் மகியை கூட்டிட்டு போறேன்' என்று அடிக்கடி சொல்வார். முதலில் நாம் ஒரு முறை பள்ளியை பார்த்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். சனிக்கிழமை வாய்த்தது. யாவரும் சார்பில் சிறுகதை பட்டறையை நடத்தினார்கள். 'யாவரும் நடத்துறாங்க..நீங்க வர்றீங்களா?' என்று மைவிழி கேட்ட பிறகுதான் எனக்குத் தெரியும். ஜீவகரிகாலனிடம் 'எனக்கு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல' என்று கேட்டதற்கு 'ஏங்க.. நான்தான் ஃபேஸ்புக்குல  அழைப்பிதழ் போட்டு இருந்தேன்ல....' என்று கேட்டார். அதற்கு மேல் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.


இருபது வயதுகளில் இருக்கும் சிறுகதையாளர்கள் கூடியிருந்தார்கள். இப்பொழுதெல்லாம் இலக்கியக் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலான கூட்டங்கள் தனியொரு மனிதனை முன்னிலைப்படுத்துகிற கூட்டமாக இருக்கின்றன அல்லது அடுத்தவர்களை மயிலிறகால் வருடிக் கொடுக்கிற கூட்டமாக இருக்கின்றன என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. யாவரும் நடத்திய கூட்டம் அதிபயங்கரமான ஒழுங்கமைவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கார்பொரேட் நிறுவனங்களில் நடைபெறும் 'க்ரூப் டிஸ்கஷன்' போல. மிக நேர்த்தியாகத் தயாரிப்புகளை செய்து வந்திருந்தார்கள். தம்மை பிரஸ்தாபித்துக் கொள்கிற தன்மை யாரிடமும் இல்லை. இத்தகைய கூட்டத்தை இனி தொடர்ச்சியான இடைவெளியில் நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள். மிகச் சிறந்த முயற்சியாக இருக்கும். அப்படி நடக்கும் போது, பெருமளவில் பங்கேற்புகள் இருந்தால் தமிழ் சிறுகதை வெளியில் இதுவொரு சலனத்தை உருவாக்கக் கூடும். 

குக்கூ பள்ளி கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பாதையில் இருக்கிறது. சிங்காரப்பேட்டை என்ற ஊரில் இறங்கி ஆறு அல்லது ஏழு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். ஆட்டோ பிடித்துக் கொள்ளலாம். நூற்றைம்பது ரூபாய் கேட்கிறார்கள்.  ஜவ்வாது மலையின் அடிவாரத்திலேயே பள்ளி இருக்கிறது. பள்ளி என்ற உடனே ஏதாவதொரு கட்டிடத்தின் தோற்ற அமைப்பு நினைவுக்கு வந்தால் அதை அழித்துவிடலாம். ஐந்தாறு ஏக்கர் நிலத்தை வாங்கி குடில்களை அமைத்திருக்கிறார்கள். பழங்காலத்து முறையிலான குடில்கள். மின்சார வசதி இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சி கிடையாது. வானொலி கிடையாது. மின்விசிறி இல்லை. செல்போனுக்கு சிக்னல் கூட கிடைக்காது. இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பார்கள் அல்லவா? அப்படி.




மாடு வைத்திருக்கிறார்கள். பால் கறப்பதில்லை. கன்றுகுட்டிக்கே கொடுத்துவிடுகிறார்கள். கோழிகள் இருக்கின்றன. ஆனால் இறைச்சி சமைப்பதில்லை. பூனைகள், நாய்கள் என செளகரியத்துக்குத் திரிகின்றன. மிச்சமாகிற சோற்றை போட்டால் அவை தின்றுவிட்டு யாரையும் தொந்தரவு செய்வதில்லை.  தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு இல்லை. கிணறு வெட்டி இருக்கிறார்கள். அதில் நீர் இருக்கிறது. 

ஜவ்வாது மலையிலிருந்து விதைகளைச் சேகரிக்கிறார்கள். நர்சரி அமைத்துச் செடிகளை வளர்த்து அவற்றை மீண்டும் ஜவ்வாது மலையிலேயே நடுகிறார்கள். காய்கறிகளுக்கு வட்டப்பாத்தி அமைத்திருக்கிறார்கள். மூலிகைத் தோட்டம் ஒன்று இருக்கிறது. அவரவர் அவரவர் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தன்னார்வலர்களாகச் செல்கிறவர்கள் இதில் ஏதாவதொரு வேலையை எடுத்துச் செய்கிறார்கள்.

மைவிழி தனக்கு விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்றுவிடுவதாகச் சொன்ன போது 'அங்க அப்படி என்னதான் இருக்கு?' என்று நினைத்திருக்கிறேன். ஆனால் உண்மையிலேயே அற்புதமான இடம். அருமையான காற்று. அமைதியான சூழல். போக்குவரத்து நெரிசல்களிலும், அலுவலகப் பணிகளிலும், புகையிலும் கரியிலும் கிடந்து இதையெல்லாம் பார்க்கும் போது மதிமயங்கிப் போகிறது.  

அக்கம்பக்கத்து குழந்தைகள் வருகிறார்கள். வேளாண்மை செய்கிறார்கள். சிற்பங்கள், ஓவியம் என்று எதையாவது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். காட்டுக்குள் சுற்றலாம். ஏதாவது வேலையைச் செய்யலாம். குழந்தைகள் தாயக்கட்டம், பல்லாங்குழி என்று விளையாடலாம்.  குருவிகள் கத்துவதை, இரவில் மொட்டைவெளி வானத்தை என்று ரசிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன.


இப்பொழுதெல்லாம் விடுமுறைக்கு என்று எங்கே சென்றாலும் பெருங்கூட்டம்தான் இருக்கிறது. பெரும்பாலான இடங்கள் வணிகமயமாகியிருக்கின்றன. இவர்களிடமிருந்து எப்படி செலவைக் குறைப்பது என்கிற எண்ணம்தான் முழுமையாக ஆக்கிரமித்திருக்கும். போதாக்குறைக்கு செல்போன்தான் நம்மை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். குக்கூ அப்படியில்லை. 



ஒருவேளை ரிஸார்ட் போல இருக்குமோ என்கிற எண்ணமும் தவறு. குக்கூவில் எந்த வணிக நோக்கமும் இல்லை. 'ஒரு பிரேக் வேணும்ன்னு நினைக்கிறேன்' என்று சொல்கிறவர்கள் முயற்சித்துப்பார்க்கலாம் என்பதற்காக இதை அறிமுகப்படுத்தலாம். 'எனக்கு ஆர்.ஓ வாட்டர்தான் வேணும்' என்று ரிஸார்ட்டை எதிர்பார்க்கிறவர்களுக்கு இது சரிப்பட்டு வராது. 'எங்க தூங்கறது?' என்று கேட்டால் 'எங்க வேணுமானாலும் படுத்துக்கலாம்' என்று சொல்லிவிடுகிறார்கள். எந்த பயமுமில்லை. உணவு பற்றியும் எதிர்பார்ப்புகள் வேலைக்கு ஆகாது. தக்காளி சாதம் மாதிரி ஏதாவது கலவை சாதம் செய்து தருவார்கள். இரவு உணவு மிச்சமிருந்தால் காலையில் பழைய சோறு ஊற்றுவார்கள். 

பர்ஸைக் கூட அப்படியே போட்டுவிட்டு போகிற அளவுக்கான சுதந்திரம் அங்கே இருந்ததை உணர முடிந்தது. முத்து, சிவா, ரமேஷ், மணி என்று சிலர் இருக்கிறார்கள். தனித்திருக்கும் மனிதர்கள். நம்மிடம் காசு எதுவும் கேட்பதில்லை. எவ்வளவு உன்னதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றியது. ஆனால் பணம் கொடுக்காமல் தங்குவது சரியில்லை. உழைப்பு அவர்களுடையது. இரண்டு நாட்கள் தங்கினால் ஆளுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்துவிட்டு வரலாம் என்று நினைக்கிறேன். இன்னமும் கூடுதலாக கொடுக்க முடிந்தால் கொடுப்பது தவறே இல்லை. முன்பே அவர்களை அழைத்துச் சொல்லிவிட்டால் சரியாக இருக்கும். +91 8270222007. ஒருவேளை முத்துவின் எண் தொடர்பில் இருப்பின் அவரோடும் பேசலாம் (9787792229) அல்லது மைவிழி உதவக் கூடும். (myvizhiselvi@gmail.com)

தங்குகிறோமோ இல்லையோ- இத்தகைய செயல்பாடுகள் பரவலாக கவனம் பெற வேண்டும். இங்கே இப்படியொரு செயல்பாடு நடக்கிறது என்பதை திரும்பத் திரும்ப யாராவது பேசிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காகத்தான் எழுதத் தோன்றியது.


முக்கியமாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஒருவேளை குக்கூ செல்வதாக இருந்தால் முத்து என்றொரு இளைஞர் இருக்கிறார். அவரிடம் பாதங்களைக் கொடுத்து 'மசாஜ்' (Reflexology- பாத அழுத்த சிகிச்ச) செய்து கொள்ளுங்கள். பயிற்சி பெற்ற நிபுணர் அவர். அவராகவே பணம் எதுவும் கேட்பதில்லை. கொடுப்பதை வாங்கிக் கொள்வர். இருநூறு ரூபாய் கொடுத்தேன். அட்டகாசம். 

4 எதிர் சப்தங்கள்:

Murugan R.D. said...

பெரும்பாலான கூட்டங்கள் தனியொரு மனிதனை முன்னிலைப்படுத்துகிற கூட்டமாக இருக்கின்றன அல்லது அடுத்தவர்களை மயிலிறகால் வருடிக் கொடுக்கிற கூட்டமாக இருக்கின்றன என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது.///////////////


தொடர்ந்து ஒரு பத்துநாள் இலக்கிய ஜாம்பவான்களின் (அவர்களாக சொல்லிக்கொள்வது அல்லது மற்றவர்கள் சொன்னதாக சொல்லிக்கொள்வது) பிளாக்குகளை ‌படித்ததில் முற்போக்கு எழுத்து. இலக்கியம் என்றாலே தெறிச்சி ஓடும் எனக்கும் நீங்கள் மேலே குறிப்பிட்ட கருத்துதான் தோன்றியது,,,

சுயசொரிதல்களும் தாங்கள் தான் இந்த இலக்கிய உலகத்தை முதுகில் சுமந்திருக்கும் அட்லஸ்களாகவும் கற்பனை குதிரைகளில் மிதக்கிறார்கள்,,, முற்போக்கு எழுத்து இலக்கியம் என்பது சாதாரண மக்களின் வாழ்க்கை முறையை உளவியலை செயல்களை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கண்முன்னால் நிறுத்த வேண்டும்,,,, முற்போக்கு எழுத்து இலக்கியம் கவிதைகள் போன்றவை கம்ப்யூட்டரைஸ்டு ஆன பிறகு பல இலக்கியவாதிகளின் முக்கிய வேலையை அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளிலோ அல்லது பரபரப்பான ஏதோவதொரு சம்பவங்களில் முரண்பாடுகளான கருத்துக்களையோ அல்லது குடிபோதையில் சண்டையிடும் பாணியிலான சவால்களோதான் அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன,,,, ஏதோ ஒரு விதமான புகழ் போதையில் அவர்களின் உளவியல் தாறுமாறாக இயங்குகிறதோ என்று முகம்சுளிக்க வைக்கின்றது,,

Jaypon , Canada said...

அருமை. புதுமையாக இருக்கு. கட்டணம் நிர்ணயம் செய்தாலே டிஸ்கவுண்ட் கேட்கிறேன் நம்மக்களிடம் எப்படி இதை நடத்தி செல்வது.

சேக்காளி said...

Anonymous said...

Anna have you seen the higher secondary first year's new book?
what is your opinion about this video of IAS Udhayachandran "https://www.youtube.com/watch?v=BUSWyP8l2hE"