Jun 19, 2018

எட்டு வழிச்சாலை

ஒரு கூட்டம் பிக்பாஸ் படம் ஓட்டிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை பிரச்சினை பற்றிய விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசியாக பியூஸ் மானுஷை கைது செய்திருக்கிறார்கள். சென்னை- சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்ததற்காக இந்த கைது நடவடிக்கை. அவர் இந்தத் திட்டம் குறித்து பேசிய சில வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பேசியதில் நிறைய தகவல் பிழைகள் இருந்தன. அது இப்போதைக்கு அவசியமானதில்லை எனத் தோன்றுகிறது. 

சென்னையிலிருந்து சேலம் வரைக்கும், வந்தவாசி, திருவண்ணாமலை, அரூர் வழியாக 274 கிலோமீட்டர் சாலையை அமைக்க பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இவ்வளவு பணம் தேவைப்படுமா என்று சந்தேகமாக இருந்தது. இணையத்திலேயே நிறைய புள்ளி விவரங்கள் இருக்கின்றன. நான்கு வழிச்சாலை அமைக்க கிலோமீட்டருக்கு பத்து கோடி ரூபாய் ஆகிறதாம். அதுவே எட்டு வழிச்சாலை என்றால் இருபது கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். இருநூற்று எழுபத்து நான்கு கிலோமீட்டர் என்றால் அதற்கே கிட்டத்தட்ட 5500 கோடி ரூபாய். 

நிலம் கையகப்படுத்த தனிக் கணக்கு. கிராமப்புறமாக இருந்தால் ஒரு தொகை நகர்ப்புறமாக இருந்தால் இன்னொரு தொகையைக் கொடுக்க வேண்டும். இந்தச் சாலை அமைப்புக்காக சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்படும் என்றும் இதில் சுமார் ஆயிரம் ஏக்கர் அரசாங்கத்தின் நிலம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிலத்தில் தென்னை மரம் இருந்தால் ஒரு மரத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இவை தவிர எக்ஸ்பிரஸ் வே என்றால் நினைத்த இடத்தில் வாகனங்கள் நுழைய முடியாது. இருபக்கமும் தடுப்பு இருக்கும். தடுப்பு அமைக்கும் செலவு இருக்கிறது. பெரிய பட்ஜெட் திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

ஆனால் இந்தத் திட்டம் இவ்வளவு அவசரமாக அவசியமா என்பதுதான் விவாதத்திற்குரியது.

'நமக்கு வளர்ச்சி வேண்டாமா? சாலை வசதிகள் அவசியம் இல்லையா?' என்று கேட்டால் வளர்ச்சித்திட்டங்கள் அவசியம்தான். சாலை வசதிகள் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. ஆனால் அவை பல்வேறு காரணிகளை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும். சூழலியல் வெகுவாக சீரழிந்து கொண்டிருக்கும் போது அவை பற்றிய தெளிவான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். திட்டம் செயல்படுத்தப்படுவதால் உண்டாகும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் என்ன விதமான மாற்று நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது என்று தெரிவிக்க வேண்டும்.

ஈரோட்டில் தொடங்கி மேட்டுப்பாளையம் வரைக்கும் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக ஆயிரத்து சொச்சம் மரங்கள் வெட்டப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. தன்னார்வலர்கள் கணக்கு எடுத்துப் பார்த்தால் எட்டாயிரத்துச் சில்லறை மரங்கள் இருக்கின்றன. இதுதான் பதட்டமடையச் செய்கிறது. வனப்பகுதியில் மட்டுமே 121 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் மரங்கள் போகும் என்று தெரியவில்லை. 'குறைவான மரங்கள் வெட்டப்படும்' என்று சொல்லியிருக்கிறார்களே தவிர எண்ணிக்கையைச் சொல்லவில்லை. 

வனம் அழியும் போது வெறும் பச்சை மட்டும் அழிவதில்லை. அதைச் சார்ந்திருக்கும் பல்வேறு உயிரினங்கள் அழிந்து போகும். வேறு பல்வேறு உயிரினங்கள் புதிய வாழிடம் நோக்கி நகரும்.  சூழலியல் சமநிலையின்மை என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லையா? ஏற்கனவே தமிழகத்தின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் பருவமழை பொய்த்துப் போகிறது. இந்தச் சூழலில் இத்தகைய திட்டங்களை ஆரம்பிக்கும் போது பல்வேறு ஆயத்த நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியதில்லையா? 

சாலைக்காக நான்கு மரங்களை வெட்டினால் அதற்கு பதிலாக நான்கு மரங்களை நட்டுவிட்டு அரசாங்கம் வேலையைத் தொடங்க வேண்டும். நடுவது மட்டுமே பெரிய காரியமில்லை. அந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு மரங்களை வெட்டத் தொடங்கட்டும். இரண்டாண்டுகளுக்கு  முன்பாக ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக 66 லட்சம் மரக்கன்றுகள் தமிழகம் முழுக்கவும் நடப்படும் என்று அறிவித்தார்கள். உண்மையில் அவற்றில் எவ்வளவு மரங்கள் தப்பியிருக்கின்றன? 'மரத்தை நட்டுகிறோம்' என்று சொல்லிவிட்டு பணியைத் தொடங்கினால் அப்படித்தான் ஆகும். மரங்கள் வளர மூன்றாண்டுகளாவது ஆகும். அது வரைக்கும் பொறுத்திருக்க எந்த அரசியல்வாதிக்கு மனம் இருக்கும்? மனமிருந்தால் மார்க்கமுண்டு.

சரணாலயம் இருந்தால் அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளி சாலையை அமைப்போம் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். சரணாலயம் மட்டுமே பிரச்சினையில்லை. மலைகள், காடுகள் வழியாக சாலை அமைப்பதே மிகுந்த பரிசீலனைக்குரியதுதான். இன்றைக்கு பெங்களூர்- சேலம் சாலையில் தினசரி அடிபட்டுச் சாகும் குரங்குகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் இருந்தால் எடுத்துப்பார்க்கலாம். மக்கள் வீசுகிற பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்கள் எழுப்புகிற ஓசை, கசியவிடுகிற புகை என எல்லாவற்றையும்தான் பரிசீலிக்க வேண்டும்.

சூழலியல் மட்டுமில்லை- நிலம் கையகப்படுத்துதல் பற்றியும் பேச வேண்டும். பத்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிடம் இரண்டு ஏக்கரைப் பறித்தால் பிரச்சினையில்லை. அவன் பிழைத்துக் கொள்வான். ஒன்றரை ஏக்கரும் இரண்டு ஏக்கருமாக வைத்திருக்கும் குறு விவசாயிடம் மொத்தமாக பறிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு ஏக்கருக்கு இருபது லட்ச ரூபாய் கூட கொடுக்கலாம்தான். ஆனால் விவசாயம் தவிர வேறு எதுவுமே தெரியாத பல்லாயிரக்கணக்கான உழவர்கள் நம் ஊரில் உண்டு. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? அவர்களை திடீரென சிக்கலில் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்? 

இன்னொரு பிரச்சினை- வேகம். 196 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் 2017 ஜனவரி தொடங்கி ஜூன் வரைக்குமான ஆறு மாதங்களில் மட்டும் 432 விபத்துக்கள் நடந்திருக்கின்றன. தொடங்கியதிலிருந்து ஐந்தரை ஆண்டு காலத்தில் 4500  விபத்துக்களில் 626  பேர்கள் இறந்திருக்கிறார்கள். மும்பை- புனே சாலையின் புள்ளிவிவரங்களும் இப்படித்தான் இருக்கின்றன. ஆக்ரா- லக்னோ சாலையின் புள்ளிவிவரங்களும் அப்படித்தான். இதற்கெல்லாம் என்ன தீர்வை வைத்திருக்கிறோம்? 

எந்தவொரு வளர்ச்சித்திட்டத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுத்த வேண்டியதில்லை. எண்ணித் துணிக கருமம்.  எட்டு வழிச்சாலை திட்டத்தை அப்படித்தான் செயல்படுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. 'அடுத்த இரண்டு ஆண்டுகளில்' முடித்துவிடுவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இவ்வளவு அசுர வேக வளர்ச்சியை யாருமே கேட்கவில்லை.

அரசாங்கம் ஒவ்வொரு செயலிலும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியதில்லை. மக்களின் அனுசரிக்கும் அரசாங்கம் என்ற பெயரை எடுப்பதும் சிரமமான காரியமும் இல்லை. திட்டம் சரியானதாக இருப்பின் அரசாங்கம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். குழப்பங்களைக் களைய வேண்டும். மக்களின் ஒத்துழைப்பை முழுமையாக பெற வேண்டும். அதுவரையிலும் பொறுத்திருங்கள். தூத்துக்குடியில் இதில்தான் கோட்டைவிட்டார்கள். இந்தத் திட்டமும் அப்படியானதொரு திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறதோ என்று பதற வேண்டியிருக்கிறது.  

10 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//2017 ஜனவரி தொடங்கி ஜூன் வரைக்குமான ஆறு மாதங்களில் மட்டும் 432 விபத்துக்கள் நடந்திருக்கின்றன. தொடங்கியதிலிருந்து ஐந்தரை ஆண்டு காலத்தில் 4500 விபத்துக்களில் 626 பேர்கள் இறந்திருக்கிறார்கள். மும்பை- புனே சாலையின் புள்ளிவிவரங்களும் இப்படித்தான் இருக்கின்றன. ஆக்ரா- லக்னோ சாலையின் புள்ளிவிவரங்களும் அப்படித்தான்.//
இதெல்லாம பாகிஸ்தானின் சதி

சேக்காளி said...

//எண்ணித் துணிக கருமம்//
கான்ராக்டு அதானிக்காம்.
சப் கான்ராக்டு எடப்பாடி பழனிச்சாமி சொந்தத்துக்காம்.இறங்குறதுக்கோ, கவுறுததுக்கோ முன்னால கையெழுத்த போட்டுட்டா காசு கணக்குல ஏறிரும்.
இதுங்காட்டியும் என்ன த்த எண்ணி துணிய.

Unknown said...

என்னுடைய கருத்தோடு ஒத்துப்போகின்றீர்கள். சேலம், மதுரை, கோவை உட்பட நகரங்களுக்குள் உள்ள நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ, டிராம், monorail போன்ற செலவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். இது போன்ற விரைவு போக்குவரத்து சாலைகளுக்கு இவ்வளவு தொகை ஒதுக்க என்ன அவசரம்? சென்னை செங்கல்பட்டு சாலையில் உள்ள போக்குவரத்தை கட்டுப்படுத்த என்ன திட்டங்கள் உள்ளது? ஏன் மக்கள் கருத்து கேட்க மறுக்கின்றது அரசாங்கம்?

Murugan R.D. said...

ரொம்பவும் பயமாக இருக்கிறது,,, இத்திட்டங்களை நினைத்து மட்டுமல்ல,,,

இதுபோல இயற்கைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேட்டுவைக்கும் பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியா கொண்டுவந்து அதை எதிர்க்கும் சூழ்நிலைக்கும் மக்களில் பலர் தள்ளப்படுவதையும் அப்படி எதிர்க்கும் மக்களின் போராட்டங்களால் இதே தமிழக மக்களின் இன்னொரு கூட்டம் அலுத்துக்கொண்டு இவர்களுக்கு (போராடுபவர்களுக்கு) வேறு வேலையே இல்லையா என்று எண்ணுவதற்கும் அவர்களை கொண்டே நியாயமான காரணங்களுக்கு போராடுபவர்களை விமர்சிப்பதற்கும் நேரிடையான அரசாங்கமும் மறைமுக நிழல்உலக கார்ப்பரேட் அரசியலும் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது,,,

ஏற்கனவே தூத்துக்குடியில் கூடங்குளத்தில் போராடியவர்களை எல்லாம் கிறிஸ்தவர்கள் வெளிநாட்டு பணம் வாங்கிகொண்டு குழப்பத்தை விளைவிக்கிறார்கள் என்கிற அளவுக்கு நிறைய சாதாரண மக்களிடம் கூட விச கருத்தை விதைத்துவிட்டார்கள்,,, இது தொடர்ந்தால் தமிழத்தின் சுற்றுச்சூழல் வாழ்வாதாரத்திற்கு போராடுவதற்கோ இணையும் மக்களின் எண்ணிக்கை குறையதொடங்கிவிடுமோ என்ற அச்சமும் உண்டாகிறது,

Murugan R.D. said...

சாலை விபத்துக்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்,, ஆனால் யாருமே சாலை விபத்து உயிரிழப்பு பற்றி பெரிய ஆதங்கத்தையோ அதை குறைக்க எப்படி செயல் பட வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு திட்டத்தையோ பெரிய அளவில் விவாதிக்கவில்லை என்றே தோன்றுகிறது, பொத்தாம் பொதுவாக ஹெல்மெட் போட்டுக்கொள்ளச் சொல்லியும் சீட் பெல்ட் போட்டுக்க சொல்லியுமே சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு கணக்கு காட்டபட்டு பணம் சுருட்டப்பட்டு முடிந்துவிடுகிறது,, அதை தாண்டி சாலை விபத்துக்களை குறைக்க என்ன செய்யணும் என்று அரசாங்க தரப்பிலிருந்தும் சரி தன்னார்வ நிறுவனங்களிடமிருந்தும் சரி எந்த திட்டமும் வெளியிடப்படவில்லை,,, ஒரிருமுறை காவல்துறை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரம் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு டீ காபி இலவசமாக வழங்கியதாக செய்திதாளில் வந்தது, இது ஒரு உபயோகமான அணுகுமுறையும் கூட், இதைப்போல செல்ப் டிரைவிங் சென்று விபத்துக்குள்ளாகுபவர்களை அல்லது விபத்து ஏற்படுத்துபவர்களையும் வேறுசில விதங்களில் கையாண்டு அவர்களுக்கு மனரீதியாக பாதுகாப்பான பயணத்தை பற்றிய விழிப்புணர்வையும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்ற ஆலோசனையையும் வழங்க வேண்டும்,,, உதாரணத்திற்கு நான்குவழிச்சாலைகளில் அதிவேகமாக விரைந்து செல்லும் செல்ப் டிரைவிங் கார்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே சாலையின் நடுவில் மித வேகம் நன்று, மகிழ்ச்சியான குடும்பம் என்று அழகான புன்சிரிப்போடு கூடிய சிலரை கொண்டு விளம்பர பலகை வைக்கலாம்,, ‌டோல்கேட் அருகில் நிற்கும் அந்த சிறிய நேரத்தில் பெரிய போர்டுகளில் விழிப்புணர்வு வாசகங்களை ஓரிரண்டு வார்த்தையில் எளிமையாக அமைத்து வைக்கலாம், உதாரணத்திற்கு

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை
உங்கள் பாதுகாப்பானா டிரைவிங்கில்

என்பது போன்ற குறைந்த எண்ணிக்கை வார்த்தைகளில் இன்னும் பல்வேறுவிதமாக நாலைஞ்சு கிலோமீட்டருக்கு ஒருமுறை பளிச்சென கண்ணில் படும்படியாக போர்டு வைக்கலாம்,, இதுபோல செல்ப் டிரைவிங் மற்றும் அனைத்து வாகன ஒட்டிகளின் குடும்பத்தினரை மனதில் நினைத்து பார்த்து தன்னை அறியாமல் பாதுகாப்பா டிரைவிங்கிற்கு தயாராகும்படி உளவியில் ரீதியாக அணுகும் வாசகங்களை விளம்பரப்படுத்த வேண்டும், இன்னும் ஆழமாக சிந்தித்தால் நிறைய ஆலோசனைகள் எல்லோருக்கும் ஏற்படகூடும்,, குறிப்பாக செல்ப் டிரைவிங் பண்ணுவோருக்கும் நிதானமில்லாத அனுபவமில்லாத வாகனஓட்டிகளுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு செய்திகள் மாறி மாறி சென்றடைய வேண்டும், தவிர வாடகை வாகனங்களில் குடும்ப சுற்றுலா செல்ல நினைப்போர் தங்கள் பயணதிட்டத்தை நள்ளிரவுக்கு முன்னதாக முடித்துக்கொள்ளவோ அல்லது அதிகாலை நன்றாக தூக்கம் கலைந்தபிறகோ நம்பிக்கையான வாகன ஓட்டிகளை கொண்டு தொடங்க வேண்டும்,,, ஆர்வக் கோளாறால் ஏதோ ஒரு வண்டியை புக் பண்ணிவிட்டு நடுஇரவில் கிளம்பி அதிகாலையில் சென்று சேரும்படியான பயணதிட்டத்தை வகுக்காமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,,,

Murugan R.D. said...

மற்றபடி என்னைப்பொறுத்தவரைக்கும் இத்திட்டம் அவ்வளவு அத்தியாவசியமான திட்டம் இல்லை என்பதே என் கருத்து, தனி ஒரு தனியார் நிறுவனத்திற்காக ஆரம்பிக்கபடுகிறது என்று நம் எதிர்ப்புகளை எடுத்துரைக்க ஆரம்பித்தால் பெருகிவரும் பொருளாதார புலிகள் நம்மை விவரம் இல்லாத மனிதர்களாகவும் நாடு போற போக்க புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் முட்டாள்களாகவும் எண்ணி ஏளனம் செய்யக்கூடிய அளவிற்கு இன்றைய தமிழ அரசியல் சூழல் அமைந்துள்ளது வேதனையாக உள்ளது. அவர்கள் கண்களுக்கு இந்தியா ஐரோப்பிய நாடுகளை போல வளர்ச்சியடைவதை நாம் விரும்பாதவர்களாகவும் இத்திட்டங்களை வெளிநாடுகள் சதி செய்து உள்ளூர் ஆட்கள் மூலமாக தடை ஏற்படுத்துவதாகவும் நம்புகின்றனர்,

வெளிநாட்டின் பரப்பளவு எவ்வளவு?
மக்கள் தொகை எவ்வளவு?
மக்கள் நெருக்கம் எவ்வளவு?
அங்குள்ள தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படும் கடுமையான சுற்றுச்சூழல் விதிகள் எப்படிப்பட்டது அதில் எத்தனை சதவீதம் இங்கு ‌நடைமுறையில் கடைபிடிக்கபடுகிறது?
தொழிற்சாலைகளிலிருந்து எவ்வளவு தூரம் நகரம். மற்றும் மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது அதுவே நம்நாட்டில் எவ்வளவு தூரத்தில் உள்ளது?
அங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகளின் கழிவுகள் எப்படி சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்படுகின்றன?
அதுவே இங்கு எப்படி வெளியேற்றப்படுகிறது (நொய்யல் ஆறு உதாரணம்)
அங்கு அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள் நீராதாரங்களை மறிக்காமல் எப்படி கட்டப்பட்டுள்ளன?
இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகள் எப்படி நீராதாரங்களை மறித்துகட்டப்பட்டிருக்கின்றன,, நீராதாரங்களை தங்கள் கழிவுகளால் எப்படி பாழாக்கி நீராதாரத்தை நாளுக்கு நாள் குறைத்துக‌்கொண்டு வருகின்றன என்ற எந்த அடிப்படையான விசயத்தையும் கணக்கில் கொள்ளாமல் தொழில்கள் வேலைவாய்ப்புகள் அதன் மூலம் வரும் வரிவருவாய் என சப்பாணி போல பேசியதையே திரும்ப திரும்ப பேசிக்கொண்டு திரிகின்றனர்,,,

அன்பே சிவம் said...

இத்தனை கோடிகளை கொட்டி 6 வழி சாலை, 8 வழி, 10 வழி சாலை என மக்களை தலைப்பைக் காட்டிலும், மாற்று இணைச் சாலை அமைப்பதே அறிவார்ந்த செயல்.

Anonymous said...

ஜெயலலிதாவின் 68ஆவது பிறந்த நாளன்று(2016 ஆம் ஆண்டு) 68லட்சம் மரங்கள் நடப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக 61 கோடி செலவிடப்பட்டது.

அதே போல முந்தைய வருடங்களிலும் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன.
2015 - 67 லட்சம் மரங்கள்.
2014 - 66 லட்சம் மரங்கள்.
2013 - 65 லட்சம் மரங்கள்.
2012 - 64 லட்சம் மரங்கள்.

ஆக மொத்தம் - 330 லட்சம் மரங்கள். (ஆதாரம்: https://timesofindia.indiatimes.com/city/chennai/Jayalalithaa-launches-drive-to-plant-68-lakh-saplings-across-Tamil-Nadu/articleshow/50982626.cms?from=mdr ).

அந்த ஐந்து ஆண்டுகளில் நடப்பட்ட மரங்களின் தற்போதைய நிலை என்னவென்பதை கணக்கெடுப்பு செய்து அறிவிக்கட்டும் தமிழ்நாடு அரசு. அதன்பின்னர் சென்னை-சேலம் சாலை குறித்து பேசட்டும்.

- Guru

sairamakoti said...

இரண்டு சாலைகள் ஏற்கெனவே இருக்க இந்த திட்டம் எதற்கு? இரண்டிலும் 1.6pcu & 2pcu க்கு அதிகம் ஆகிவிட்டதால் மற்றொரு சாலை வேண்டும் என்ற வாதம் சரியா?ஏன் இவ்வளவு அவசரம்?
மத்திய அரசு infrastructure develop செய்ய பணம் உதவும் போது உபயோகப்படுத்தி கொள்வது புத்திசாலிதனம் தான்.Traffic அதிகம் இருக்கும் வேறு மார்க்கங்களை ஆராயலாமே?

David D C said...

https://m.youtube.com/watch?v=3WBlqDeHiXI

எளிதாக விளக்கும் ஆவணப்படம்

காலம் மாறலாம் காட்சிகள் மறைவதில்லை