Jun 15, 2018

காலா

நிலத்தை அபகரிக்க நினைக்கும் பலம் வாய்ந்த வில்லன். ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்து போக அனுமதிக்க மாட்டேன் என்று எதிர்த்து நிற்கும் கிழட்டு சிங்கம். தமிழ் சினிமாவில் பார்த்து சலித்துப் போன கதைதான். ஆனால் ப்ளூ சட்டை மாறன் கவிழ்த்த அளவுக்கு பாடாவதி இல்லை. படம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. பொதுவாகவே திரைப்படங்களில் குறியீடு, அது இது என்று நம்மாட்கள் பேசினால் தவிர்த்துவிடுவேன் அல்லது எல்லோரும் பேசி முடித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடுவேன். காலா பார்ப்பதற்கான தருணம் இதுவெனத் தோன்றியது.


ஒரு கதையில் வில்லன் எவ்வளவுக்கு எவ்வளவு பலமுள்ளவனாக இருக்கிறானோ அப்பொழுதுதான் நாயகனை  அவ்வளவுக்கு அவ்வளவு வலுவுள்ளவனாக மாற்ற முடியும். பாட்ஷா ஆண்டனி தொடங்கி படையாப்பா நீலாம்பரி வரை தொண்ணூறுகளுக்குப் பிறகான ரஜினியின் படங்கள் பார்வையாளனின் ரத்தத்தை சூடேற்ற முக்கியமான காரணம் என்றால் வலுவான வில்லன்தான் என்று சொல்லலாம். காலாவில் வில்லன் பாத்திரம் அட்டகாசம். நானா படேகரின் நடிப்பு பற்றி சொல்லவா வேண்டும்? அவ்வளவு பலம் வாய்ந்த வில்லனுக்கு எதிரில் நிற்கும் நாயகன் பாத்திரம் வில்லனைவிடவும் வலுவுள்ளவனாக இருந்திருக்க வேண்டாமா? அங்குதான் ஏமாந்திருக்கிறார்கள்.

திரைப்படங்களில் நடிகர்களைத் தேர்வு செய்யும் 'காஸ்டிங்' போது 'இந்த பாத்திரத்தை அவர் தங்குவார், தாங்கமாட்டார்' என்று விவாதித்துதான் முடிவு செய்வார்கள். காலா ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ரஜினி எவ்வளவு பெரும் பாத்திரத்தையும் தாங்கக் கூடிய முரட்டுக் குதிரை. அந்தக் குதிரைக்கு ஏற்ற பாத்திரத்தை படைத்திருக்க வேண்டாமா?  பாத்திரம் என்றால் பேசுகிற வசனம் தொடங்கி, காட்சியமைப்பு வரை எல்லாவற்றையும் கவனித்திருக்க வேண்டும். 

'ரஜினி விசுவரூபம் எடுப்பார்' என்று நினைக்கிற இடங்களில் எல்லாம் 'அது கமல் படம் சார்' என்று சொல்லி அடுத்த காட்சிக்கு இழுத்துச் செல்கிறார்கள். ஒரு காலத்தில் திரையில் ரஜினியை நோக்கி யாராவது கை நீட்டுகிற போது எங்கள் ஊர் திரையரங்குகளில் செருப்பை எடுத்து வீசுவதை பார்த்திருக்கிறேன். வடிவுக்கரசி, பொன்னம்பலம் எல்லாம் எத்தனை வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்? அப்படியான ரஜினியை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிக்கிறார்கள். நானா படேகர் கீழே கிடக்கும் ரஜினியின் நெஞ்சுக்கு நேராக காலை உயர்த்துகிறார். ரஜினி அடியை வாங்கிக் கொண்டு அமைதியாக வருகிறார். 'என்னய்யா இது' என்றாகிவிட்டது.

தனது பழைய காதலியிடம் 'அவளுக்கு நான்தான் உலகமே' என்று தன் மனைவியைப் பற்றிச் சொல்லுகிறார். அப்பொழுது நானும் கூட கொஞ்சம் உருகி வேணிக்கு 'தூங்கிட்டியா' என்று கேட்டு மெசேஜ் அனுப்பினேன். அப்பேர்ப்பட்ட மனைவி செத்துப் போன அடுத்த காட்சியில் ரஜினி வில்லன் வீட்டுக்குச் செல்கிறார். அவன் மிகச் சாதாரணமாக  'உன்னைத்தான் கொல்லணும்ன்னு நினைச்சேன்..தப்பாகிடுச்சு' என்கிறான். ரஜினி வசனம் பேசிவிட்டு எழுந்து வருகிறார். என்ன காட்சி இது?

அண்ணாமலை படத்தின் பெயரைச் சொன்னவுடன் எந்தக் காட்சி நினைவுக்கு வரும்? படம் வந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் 'அசோக்..இந்த நாள்....உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்க' நினைவுக்கு வருகிறதா இல்லையா? அதுவும் நிலத்துக்கு எதிரான போர்தான். தனது குடிசையை இடித்ததற்கே அந்தப் போடு போடுவார். அந்த ரஜினியைத்தான் காலா முழுக்கத்  தேடிக் கொண்டிருந்தேன். மனைவியைக் கொன்றவனிடம் பேசி எழுந்து வருகிற ரஜினியை இல்லை. 

'வேங்கையன் மவன் ஒத்தையில் நிக்கேன்' என்ற வசனத்துக்குப் பிறகு புரட்டி எடுக்கும் ரஜினியை எதிர்பார்த்தால் அவரது மகன் வந்து காப்பாற்றி அழைத்துச் செல்கிறான். அப்புறம் எதற்கு ரஜினி? 

'நீங்கள் எதிர்பார்ப்பது மாஸ் ஹீரோ' ஆனால் 'நாங்க ரியாலிட்டியைத்தான் காட்டுகிறோம்' என்று சொன்னால் போராட்டத்தை ஏன் ரொமாண்டிசைஸ் செய்திருக்கிறார்கள்? உண்மையில் அவ்வளவு மக்களைத் திரட்டி நடத்துகிற போராட்டத்தை இவ்வளவு கொண்டாட்டமாக நடத்த முடியுமா? மக்கள் பொங்கல் வைக்கிறார்கள், ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். இதை ஷங்கரே  செய்துவிடுவார். பா.ரஞ்சித் எதற்கு?

இப்பொழுதெல்லாம் தண்ணீர் வரவில்லை என்று வீதிக்கு வந்தால் கூட அதிகாரத்தின் கோர முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்.  ஆளும் வர்க்கத்தின்  கூரிய பற்கள் கடித்துக் குதறிவிடும். தூத்துக்குடியில் பார்த்தோம் அல்லவா?  ஆனால் காலாவில் நாற்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வேட்டையாட விரும்பும் பெரும் அரசியல் நரிக்கு எதிரான போராட்டம் ஒரு குஷியான நிகழ்வாக இருக்கிறது. மாஸ் ஹீரோவை ரியாலிட்டி என்ற பெயரில் டம்மியாக்கி, போராட்டத்தை ஷங்கர் படக் காட்சியாக்கி - ரஞ்சித் குழம்பியிருக்கிறார் போலிருக்கிறது. மெட்ராஸ் படத்தில் ரஞ்சித் இருந்தார். அந்த வீடுகளையும், அறைகளையும் காட்டுகிற போது வடசென்னையை பதிவு செய்திருந்தார். தாராவியை டாப் வியூவில் காட்டுவது மட்டுமே தாராவியைக் கட்டுவது இல்லை அல்லவா? 

'உன் இஷ்டத்துக்கு நீ உள்ள வரலாம்..ஆனால் நான் சொல்லாம வெளியில் போக முடியாது' என்ற காட்சியில் மட்டும்தான் ரஜினி ரசிகனாக விசிலடிக்கத் தோன்றியது. மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை.

ஒரு படைப்பாக ரஞ்சித் எடுத்திருக்கும் இந்தக் களம் மிக முக்கியமானது. பெருநகரத்தின் விளிம்பு நிலை மக்களின் நிலம் சார்ந்த முக்கியமான பிரச்சினையைத் தொட்டிருக்கிறார். வசனங்கள் வலு சேர்க்கின்றன. ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு மிக எதிரான விஷயங்களை அவரை வைத்தே பேச வைத்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் இது மனதில் நிற்கும் படமாக இல்லை. 

பெரிய ஈர்ப்பு இல்லாத ஆனால் சலிப்பு தட்டாத படம். 

காலாவை ரஜினி படம் என்றெல்லாம் கொண்டாட முடியாது. அவரது நடிப்பு அட்டகாசம். ஆனால் ரஜினியை ரஜினியாகப் பார்க்க ஒரு அளவுகோல் இருக்கிறது. இருபத்தைந்து வருடங்களாக ரசிகனாக உருவாக்கி வைத்திருக்கும் அளவுகோல் அது. அதற்கென்று அவர் கத்தியை சுழற்றி வீசினால் அது தானாக கைக்கு வந்து சேர வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் திரையில் அவரால் மாயவித்தையைக் காட்ட முடியும். பெரும் கூட்டத்தை ஈர்க்கிற சக்தி அவருக்கு உண்டு. அதற்கான வாய்ப்பை இயக்குனர்கள் உருவாக்கித் தர வேண்டும் என்கிற எதிர்பார்ப்புதான். 

காலாவில் அதெல்லாம் எதுவுமில்லை. சத்யராஜ் மாதிரியான நடிகருக்கு என்ன மாஸ் காட்ட முடியுமோ அவ்வளவுதான் காட்டியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு மதுரை வீரன் மாதிரி ரஜினிக்கு காலா அமைந்துவிடும் என்றிருந்தேன். ரஞ்சித், தமது சித்தாந்தத்துக்கும், அரசியலுக்கும் தகுந்த ஹீரோவாக ரஜினியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ரஞ்சித்தை இந்தத் தருணத்தில் தமக்கு ஏற்ற இயக்குனராக பயன்படுத்துவதில் ரஜினி கோட்டை விட்டிருக்கிறார். இனி எந்த காலத்திலும் ரஜினி ரஞ்சித்துடன் இணைய வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறாராம். அதுவாவது ரஜினியின் படமாக இருக்க வேண்டும். ரசிகனாக அதை எதிர்பார்க்கிறேன். கார்த்திக் சுப்புராஜுவின் 'ஜிகிர்தண்டாவில்' பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் காமெடி செய்தது போல கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து காமெடி செய்துவிடாமல் இருக்க எல்லாம் வல்ல பாபாவை வேண்டிக் கொள்கிறேன். 

12 எதிர் சப்தங்கள்:

Suresh said...

கடவுளே....! கடவுளே.....!! கடவுளே.....!!!

மதன் said...

பாபா, லிங்கா வரிசையில் காலா என தோணுச்சு படம் பார்த்த போது...blue sattai review complete roaster :) :)

Murugan R.D. said...

இனி எந்த காலத்திலும் ரஜினி ரஞ்சித்துடன் இணைய வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.//////////// வயதோ 68 ஆகப்போவுது,,, இன்னும் எத்தனை காலம்தான் நடிக்கணும்னு ஆசைப்படறீங்க..... அதுவும் சூப்பர் ஸ்டார் என்ற சொல்லுக்கு ஏத்த மாதிரி பக்கா மாஸ் ஹீரோயிசம் காட்டணும்னு வேற ஆசையா?

படையப்பா வெற்றிக்குப் பிறகு ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி சந்திரமுகி மட்டுமே,, ரஜினி அதில் வந்து நின்றார், படத்திற்குள் ரசிகர்களோடு மக்களையும் உள்ளிழுத்தது அப்படத்தின் மற்ற சங்கதிகள் தான், வாசுவின் தெளிவான திரைக்கதை டைரக்சன் வடிவேலுவின் காமடி நாசர் போன்ற துணை நடிகர்களின் நடிப்பு படத்தில் இயல்பாக நடைஉடையில் வரும் பெண்கள் (மாளவிகா ஜோதிகா மற்றவர்களும்) ஜோதிகாவின் கலக்கலான (ஒவர்) ஆக்சன்,, வித்யாசகாரின் இனிமையான பாடல்கள் ஓரளவுக்கு (அந்தகாலகட்டத்தில்) அழகா தெரிந்த நயன்தாரா போன்ற மற்ற விசயங்களும் படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு முக்கிய காரணம்,, ரஜினி இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தால் நிச்சமாய் இதில் கால்வாசி கூட வெற்றி பெற்றிருக்காது, அது வேற விசயம்,, ஆனால் ரஜினியின் சர்க்கஸ் வித்தைக்காக ஓடிய படமில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும், இப்படத்திற்கு பின் வந்த அத்தனை ரஜினி படங்களும் அவரது ரசிகர்களுக்கு நிச்சயமாய் ஏமாற்றமே,,, அவர்களை ஏமாற்றியதில் சன் பிக்சர்ஸ் தாணு ஷங்கர் போன்றவர்களின் ஏமாற்று வெற்று விளம்பரங்களும் முக்கிய காரணம்,,,

Murugan R.D. said...

ரசிகராக உங்களுக்கு ஏமாற்றமிருக்கலாம்,,, ஆனால் ரசிகராக இல்லாமல் சினிமாவாக பார்ப்வர்களுக்கு ரஜினியைப்பற்றி பெரிய குறை ஒன்றும் தெரியவாய்ப்பில்லை,,, தவிர அவருக்கான ரசிகர்கள் அந்தளவிற்குதான் ஆக்டிவ் மோடில் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும், தியேட்டருக்கு ரஜினிரசிகர்கள் மட்டுமே போய்பார்த்தால் எப்படியிருக்கும் அவர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை எவ்வளவு தேறும் என்பதையெல்லாம் சந்திரமுகி படத்திற்கு பிறகு வந்த அவரின் படங்கள் எடுத்துக்காட்டிவிட்டன,, அவரின் ரசிகர்களுக்கு ஜீரணிப்பது கடினம் தான் என்ன செய்ய? நான் அவரின் ரசிகர் இல்லை அவர் படம் கடைசியாய் பார்த்தது நம்பினால் நம்புங்கள் அருணாசலம்,,, ஆனாலும் தொலைக்காட்சிகளில் எப்போது படம் போட்டாலும் எவ்வளவு நேரமானாலும் அவரின் சில படங்களை முழுவதுமாக பார்த்துவிடும் பழக்கம் என்னைப்போல பலருக்கும் உண்டு, அதில் தில்லுமுல்லு ஆறிலிருந்து அறுபதுவரை நெற்றிக்கண் மூன்றுமுகம் நினைத்தாலே இனிக்கும் (அவருக்காவும் பாடலுக்காகவும் மட்டுமே) போன்ற சில பல படங்கள் அடக்கம்,

மாற வேண்டியது அவர் இல்லை ரசிகர்கள்தான், சிவாஜிக்கு நீண்ட இடைவெளிக்குப்பிறகு முதல்மரியாதையில் க‌ிடைத்த வெற்றியையும் மரியாதையையும் எண்ணிப்பார்க்கவும்,,, சிறுவயதில் காமிக்ஸ் புக் படித்தேன் என்பதற்காக இந்த 45 வயதில் என்னைப் பார்க்க வரும் நண்பர்களோ மூத்தவர்களோ காமிக்ஸ் புக் கொண்டு வந்தால் எனக்கு எப்படி இருக்கும்,,, அதுபோலதான் ரஜினியின் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பதற்காக அவர்களின் இந்த முதுமை வயதிலும் (ஹாஹாஹஹா உண்மைதான?) ரஜினி வெறும் சூப்பர் மாஸ் ஆக்சன் காட்டிக்கொண்டிருந்தால் ரசிகர்களால் ஜீரணிக்க முடியுமா? வயது கூட கூட சாப்பாடு போன்ற இன்னபிற விசயங்களில் ஒரு கட்டுப்பாடு இயல்பாக ஏற்படுவதுபோல் ரசனையிலும் மாற்றம் ஏற்படவே செய்யும், ரஜினியும் டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும், இப்ப உள்ள ஜெனரேசன் பசங்களும் அவருக்கு ஆடியன்ஸா இருக்காங்களேன்னு கேட்பீங்க,, அதெல்லாம் விசிலடிச்சான் பஞ்சுகள் (கெட்டவார்த்தை தவிர்ப்போம்),,, ரஜினி படம் வெளிவரும் நேரம் அஜித் விஜய் படம் வெளியானால் அப்போது தெரியும் ரசிகர்களின் வண்டவாளம்,,, ரஜினி படத்திற்கு போகும் கூட்டத்தை விட இவர்கள் படத்திற்கு போகும் கூட்டம் அதிகமாகவே இருக்கும்,,, மறுக்க முடியுமா,, அப்படி ஒரு நிலை ஏற்படாதவாறு திரைமறைவில் ஒரு அருமையான நெட்வொர்க் மூலம் ரஜினி படத்திற்கு என்று ஒரு இமேஜ் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது என்பதே உண்மை,,


எனக்கு அர்னால்ட் ஜாக்கி போன்றோர் மிகவும் பிடிக்கும், இந்த வயதில் அவர்கள் முன்புபோல நடிக்க முடியுமா? நடித்தால் ஏற்றுக்கொள்வார்களா ரசிகர்கள் அப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்றால் இந்நேரம் அவர்கள் இளம்வயதில் நடித்ததைபோல படம் வந்திருக்க வேண்டுமே,,, ஆனால் தமிழ்நாட்டில் தான் சினிமாவையும் ஹீரோயிசத்தின் வீரியத்தையும் குறையாமல் காப்பாற்றுவதற்கு ஊடகங்களும் சமூகஊடகங்களின் மூலமாக விமர்சகர்களும் பணமுதலீடு செய்ய கருப்பு பணமுதலைகளும் மறைமுக அரசியல்வாதிகளும் நிறையவே உள்ளனர், அதன் தாக்கம்தான் தமிழகத்தின் சினிமா ஆர்வம்,,, இன்னும் நிறைய இருக்கு,,ஏக் தம்மில் டைப் அடிச்சது,,,,கை வலிக்கு

Raja said...

உலகம் முழுக்க வெளியாகும் படத்தில் மோடியை தாக்கும் இத்தனை காட்சிகள், வசனங்கள் வைக்கும் துணிச்சல் சம காலத்தில் ரஞ்சித் தவிர யாருக்கும் இருப்பதாக தெரிய வில்லை. கிளைமாக்ஸில் நிறங்களை அடிப்படியாக வைத்து ரஞ்சித் கையாண்டிருக்கும் கொலை உத்தி எத்தனை சிறப்பு!!

ரஞ்சித் தான் சொல்ல வந்த விஷயத்தில் மிக தெளிவாகவே இருக்கிறார். உண்மையில் ரஞ்சித் ரஜினிக்காக பல சமரசம் செய்து இருக்கிறார். ரஜினி அல்ல. மழையில் பாலத்தின் மீது எடுக்கப்பட்ட சண்டை காட்சி தூள் தூள் என்று எல்லோரும் அசந்தார்கள். ஆனால் குடையை வைத்து கொண்டு வில்லன் அடியாட்களை ரஜினி துவம்சம் செய்வது எல்லாம் ரஜினி ரசிகர்களுக்காக செய்யப்பட்ட வேலைதான். அதையே படம் முழுக்க கொடு என்றால் எப்படி. நீங்கள் ரவிக்குமார் படம்தான் பார்க்க வேண்டும். இது ரஞ்சித்!!

எல்லாவற்றையும் விடுங்க. இந்த பெண்களின் விமர்சனத்தை படியுங்கள்.

https://www.vikatan.com/news/miscellaneous/127096-a-look-at-portrayal-of-women-characters-in-the-movie-kaala.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

அன்பே சிவம் said...

தல அருணாச்சலம் part 2 ன்னு ஒரு அவுட்லைன் இருக்கு (சீரியசா சொல்றேன்) நீங்க திரைக்கதையும் வசனமும் எழுதி, நடிச்சா!, ஏக்ளாசா வரும். என்ன சொல்றீங்க.

சேக்காளி said...

//திரைப்படங்களில் நடிகர்களைத் தேர்வு செய்யும் 'காஸ்டிங்' போது 'இந்த பாத்திரத்தை அவர் தங்குவார், தாங்கமாட்டார்' என்று விவாதித்துதான் முடிவு செய்வார்கள். காலா ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ரஜினி எவ்வளவு பெரும் பாத்திரத்தையும் தாங்கக் கூடிய முரட்டுக் குதிரை. அந்தக் குதிரைக்கு ஏற்ற பாத்திரத்தை படைத்திருக்க வேண்டாமா? பாத்திரம் என்றால் பேசுகிற வசனம் தொடங்கி, காட்சியமைப்பு வரை எல்லாவற்றையும் கவனித்திருக்க வேண்டும்.//
குமாரு யாரு இவரு?

சேக்காளி said...

//ஆனால் திரையில் அவரால் மாயவித்தையைக் காட்ட முடியும். பெரும் கூட்டத்தை ஈர்க்கிற சக்தி அவருக்கு உண்டு.//
1."ஹாய் சிவாஜி! புள்ளைங்கல்லாம் நல்லா இருக்காங்களா??
நல்லா படிக்க வைக்கணும்.
பசங்கள நல்லா படிக்க வைக்கணும்.
எஜுகேசன் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட்"


2. அந்த கண்ராவி குடி
அன்னைக்கு மட்டும் குடிக்கலே ன்னா!
என் செல்வி ,என் தளபதி யை இழந்துருக்க மாட்டேன்.
போன்ற வசனங்கள் பெருங்கூட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த லேன்னா என்ன செய்ய?.

சேக்காளி said...

// இதை ஷங்கரே செய்துவிடுவார். பா.ரஞ்சித் எதற்கு?//
எந்திரன் 2.0 ஆரம்பிச்ச பிறகு காலா வை ஆரம்பிச்சு படத்தை ரிலீஸ் செய்து விட்டார்.

thiru said...

//..'ஜிகிர்தண்டாவில்' பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் காமெடி செய்தது போல கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து காமெடி செய்துவிடாமல் இருக்க..//
நான் இன்னும் படம் பார்க்கல. ஆனா நீங்க சொல்றத வச்சி பாத்தா ரஞ்சித்தே அந்த வேலையைத்தான் பண்ணியிருக்காருன்னு தோணுது..

Anonymous said...

I too think hence, perfectly indited post!

Anonymous said...

#காலா _Last_but_ not_least

பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க.

போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்?

ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க.

எப்டி..எப்டி?

வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான்.

இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு பிரிக்கணும்..அதானே?

இல்லை பாஸ்..நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிடுறீங்க.

ஏன்?

ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.

அப்புறம்?

வில்லன் உங்க அப்பாவை கொன்னுடறான்

ஹா..இப்போ நான் பொங்கி எழுந்து சும்மா..

பாஸ்...பாஸ்..அதெல்லாம் இல்லை. நீங்க உங்க ஏரியா பொடிசுகளோட கிரிக்கெட் விளையாடி க்ளீன் போல்டு ஆகிறீங்க.

ஏன்பா அப்படி?

ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான் பாஸ்.

இப்பவே கிர்ருங்குதே தம்பி..

இதுக்கே அசந்துட்டா எப்படி சார்..இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் வச்சிருக்கேன். வில்லன் இப்போ உங்க ஏரியா நிலத்தையெல்லாம் அபகரிக்க வர்றான்.

நான் ஒரு வீச்சரிவாளோட போய் அவனை..

நோ..நோ..வில்லனை நீங்க இப்போ ஒன்னும் செய்யக்கூடாது பாஸ்.

ஏன்?

ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.

ஹய்யோ..சரி சொல்லு.

அப்புறம், வில்லன் உங்க மூத்த மகனைக் கொன்னுடறான்.

இது சூப்பர் தம்பி...என் பிள்ளை மேலயா கைவச்சேன்னு துப்பாக்கியோட போய்...

பாஸ்...அதெல்லாம் இல்லை பாஸ்.

அதுவும் இல்லையா? ஏன்ன்ன்?

ஏன்னா நீங்க ஒரு......நீங்க ஒரு வித்தியாசமான டான். மறந்துட்டீங்களா பாஸ்?

ஏம்பா, வித்தியாசம் தான் இருக்கு. டானைக் காணோம்?

பொறுங்க பாஸ்..வில்லன் உங்க பொண்டாட்டியைவும் கொன்னுடறான்.

அவளையுமா? இப்பவும் நான் சும்மா இருக்கணும்...அதானே?

இல்லை பாஸ்...ஸ்லோமோசன்ல வில்லன் வீட்டுக்குப் போறீங்க.

ஹாஹா...தியேட்டர்ல சும்மா விசில் பறக்குது..

ஆமாம் பாஸ்...போய் வில்லனைப் பிடிச்சு ‘கறுப்பு உழைக்கும் வர்க்கத்தின் கலர்’ன்னு சொல்லிட்டு வந்துடறீங்க.

ஏன்..ஏன்...ஏன்?

ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான். அப்புறம், வில்லன் அடியாட்களை அனுப்பி, உங்க வீட்டைக் கொளுத்தி, ஏரியாவைக் கொளுத்தி உங்க உயிர் நண்பனையும், இளைய மகனையும் மண்டையைப் பொளந்துடறான்.

இப்போ என்ன, நான் உண்ணாவிரதம் இருக்கணுமா?

இல்லை பாஸ்...அந்த சிரமம்கூட உங்களுக்கு வேண்டாம்னு, வில்லன் ஆளுங்க உங்களையும் கொன்னுடறாங்க.

என்னையுமா?

ஆமா பாஸ்.

தம்பி, என்னையுமா தம்பி?

ஆமா பாஸ்

நாந்தான் ஒன்னுமே செய்யலையேப்பா?

ஆமா பாஸ்...ஆனாலும் நீங்க ஒரு வித்தியாசமான டான் இல்லையா? அதனால கொன்னுடறாங்க.

ஆஹாங்...அப்புறம்?

வில்லன் மறுபடியும் நிலத்தை அபகரிக்க வர்றான்..மக்கள் பொங்கி எழுந்து, வில்லன் மூஞ்சில கோலமாவைப் பூசி, அவனைக் கொன்னுடறாங்க பாஸ்.

மக்கள் என்ன தம்பி செய்யறாங்க?

வில்லனைக் கொன்னுடறாங்க சார்.

டேய்...இதைத் தானடா நான் முதல்லயே செய்யறேன்னு சொன்னேன். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இதே மக்களே முதல் சீன்லயே இதை செஞ்சிருப்பாங்களேடா...அப்படிப் பண்ணியிருந்தால், என் பொண்டாட்டி, பிள்ளைகள், ஆடியன்ஸ்ன்னு எல்லாருமே தப்பிச்சிருக்கலாமே? ஏண்டா இப்படிப் பண்ணே?

அதான் சொன்னேனே பாஸ்...நீங்க ஒரு வித்தியாசமான டான்னு..அதனால தான்!!