வெள்ளிக்கிழமை இரவு பெங்களூரிலிந்து கிளம்பி நேராக குளத்துக்குத்தான் சென்றேன். காலை ஒன்பது மணிக்கு வேலை ஆரம்பித்திருந்தார்கள். வாங்கி வைத்திருந்த இரண்டாயிரம் செடிகளையும் தனித்தனியாக பிரித்து வைக்கும் வேலையை மாலை ஆறு மணி வரைக்கும் செய்திருந்தார்கள். பிரித்து வைத்த செடிகளை நடுவதற்குரிய இடத்தில் வைப்பது அடுத்த வேலை. அதற்கு ஆனந்த் ஸ்கெட்ச் போட்டிருந்தார். இருபத்தைந்து சென்ட் இடத்தை ஏழு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் கயிறு கட்டி அடையாளப்படுத்தி ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் 'இந்தச் செடி இவ்வளவு எண்ணிக்கையில்தான் இருக்க வேண்டும்' என்கிற ஸ்கெட்ச் அது. வறட்சியை தாங்கக் கூடிய செடி ஓரத்தில், நிழல் பாங்கான இடம் தேவைப்படும் செடி நடுவில், பெரியதாக வளரக் கூடிய செடிக்கு கொஞ்சம் அதிகமான இடம், சிறிய செடிகளை சற்று நெருக்கமாக என ஏகப்பட்ட காரணிகள் இந்த பகுப்பில் இருக்கிறது.
மாலை ஆறு மணிக்கு மேலாக செடிகளுக்கு குழி தோண்ட ஆரம்பித்தார்கள். அதுதான் விடிய விடிய தொடர்ந்தது. இரண்டு மணிக்கு மேலாக 'தம்பி தூங்கிட்டு வந்து காலைல நடலாம்' என்று சொன்னால் 'தூங்குனா எந்திரிக்க மாட்டோம் அண்ணா, முடிச்சுடலாம்' என்று தொடர்ந்தார்கள். கிடைத்த இடைவெளியில் நாற்காலிகளில் அமர்ந்து தூங்கினார்கள். கடப்பாரை பிடித்து கையில் எரிச்சல் வந்தவர்கள் 'வீட்டில் போய் துணிய சுத்திட்டு வந்துடுறேன்' என்று போன வேகத்தில் திரும்பி வந்தார்கள். மிகக் கடுமையான உழைப்பு அதே சமயம் அர்ப்பணிப்புள்ள உழைப்பு. அதிகாலை ஐந்தரை மணிக்கு வீட்டுக்கு கிளம்பினோம். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீத வேலைகள் முடிந்திருந்தன.
'டேய் படுத்துடாதீங்க..குளிச்ச உடனே வந்துடனும்' என்று அவர்களுக்குள்ளாகவே உறுதி செய்து கொண்டு கிளம்பினார்கள். ஏழு மணிக்கு எல்லோரும் குளத்தில் இருந்தோம். இளைஞர்கள் பலரும் வேட்டி அணிந்திருந்தார்கள். 'வேலை செய்ய சௌகரியமாக இருக்காது' என நான் பேண்ட் அணிந்திருந்தேன். புது வேட்டி ஒன்றை எடுத்து வந்து கொடுத்து கட்டச் சொன்னார்கள். மாறிக் கொண்டேன்.
ஆரம்பத்தில் அழைப்பிதழ் அடிக்கும் திட்டமெல்லாம் இல்லை. ஆனால் இப்படியொரு நிகழ்வு வெளியில் தெரிந்தால்தான் கொஞ்சம் விழிப்புணர்வு உண்டாகும் என்று முடிவு செய்தோம் . சாதாரண தாளில் இரண்டு பக்கமும் அச்சடிப்பதாக முடிவு செய்திருந்தோம். அதை விநியோகிக்க தொடங்கிய போது 'மினிஸ்டரை கூப்பிடவில்லையென்றால் நன்றாக இருக்காது' என்று சில அதிகாரிகள் சொன்னார்கள். அதில் எந்தத் தயக்கமும் எங்களுக்கு இல்லை. ஊர்க்காரர்கள் பத்து பேர் சென்று அழைப்பிதழை அவரது தோட்டத்தில் கொடுத்து வந்தார்கள். நிகழ்வில் எந்த அரசியல் சாயமும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவு இருந்தது. பிற கட்சியின் முக்கியப் பிரமுகர்களையும் அழைத்துவிட்டார்கள்.
'அழைப்பிதழில் அமைச்சர் பெயர் இல்லை..அதனால் அவர் வர மாட்டார்' என்று சொன்னார்கள். அவர் இதையெல்லாம் எதிர்பார்க்க கூடிய அரசியல்வாதி இல்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது. பொய்க்கவில்லை. வந்துவிட்டார். பட்டாசு வெடிக்கவில்லை, நாங்கள் பதாகை எதுவும் கட்டவில்லை (கட்சிக்காரர்கள் மட்டும் ஒரு பதாகை கட்டியிருந்தார்கள்- ஆனால் அதை ஊரின் எல்லையிலேயே வைத்துக் கொண்டார்கள்). நிகழ்ச்சி என்ற அளவில் மிக எளிமையாக இருந்தது. ஆனால் கூட்டம்தான் நிகழ்வை பிரமாண்டப்படுத்தியது. காலையிலிருந்து மாலை வரை ஆயிரம் பேராவது வந்து போயிருப்பார்கள் என நினைக்கிறேன்.
திருப்பதியிலிருந்து மகேஷ், சாய், அச்சிறுபாக்கத்திலிருந்து ஜெயராஜ் குழு, காங்கேயத்திலிருந்து கிரிசூடன் குழு, சென்னையிலிருந்து தன்ராஜ், ஒட்டன்சாத்திரத்திலிருந்து விக்னேஷ் என்று நிசப்தம் வாசிக்கிறவர்கள் மட்டுமே முப்பது பேருக்கும் மேலாக இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்கள். 'நிசப்தம் படிப்பேன்' என்று சொல்லிவிட்டு சில கல்லூரி மாணவிகள் செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களைத் தவிர எம்.ஜி.ஆர் காலனி இளைஞர்கள், சூப்பர் 16 அணி என்று நிசப்தம் அறக்கட்டளையோடு நெருங்கியிருக்கும் இன்னொரு கூட்டம். அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது. எவ்வளவு பெரிய காரியத்தையும் துணிந்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை உறுதியாகியிருக்கிறது. இதைத் தவிர நமக்கு வேறு என்ன பலம் வேண்டும்?
உள்ளூர்வாசிகள் குடும்பம் குடும்பமாக வந்தார்கள். ஆளுக்கொரு செடியை நடச் சொன்னோம். ஒவ்வொருவரையும் தமது பெயரை ஒரு ஏட்டில் பதிவு செய்யச் சொன்னோம். 'இது உங்களின் குழந்தை' என்பதுதான் திரும்ப திரும்ப சொல்லப்பட்டது. முதல் நாற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நட்டுத் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என முக்கியபிரமுகர்களின் கூட்டமே வெகு அதிகமாக இருந்தது. திமுக, காங்கிரஸ், மதிமுக என பிறகட்சியினரும் வந்திருந்தார்கள்.
நிகழ்வில் எதிர்மறையான சிந்தனைகள் இல்லாமல் இல்லை. 'இதெல்லாம் எப்படி தப்பிக்கும்?' 'மனிதன் காட்டை உருவாக்க முடியாது' என்றெல்லாம் சிலர் சொன்னார்கள். அதற்கெல்லாம் காலம் பதில் சொல்லட்டும். நாம் கடமையை மட்டும் செய்தால் போதும். மேடையில் பேசும் போது 'கரை வேட்டி கட்டிக் கொண்டு அரசியல் செய்கிற ஆர்வமும் எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால் நம்மைச் சுற்றி நடக்கும் அரசியலை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னுடைய உழைப்பும் செயலும் அதை நோக்கித்தான் இருக்கும்' என்றேன்.
அடர்வனம் அமைக்கும் நிகழ்வு இப்படியொரு பிரமாண்டமான நிகழ்வாக நடக்கும் என்றெல்லாம் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உள்ளூர் இளைஞர்கள் தமக்குள்ளாக காசு திரட்டி, பந்தல், மைக் செட், உணவு என வெகு விமரிசையாக மாற்றிவிட்டார்கள். இத்தகைய செயல்களை தடுக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். இந்த உற்சாகம்தான் அவர்களை ஒன்றிணைத்திருக்கிறது. இந்த ஒன்றிணைப்பும் ஒற்றுமையும் வெகு அவசியம்.
இரண்டாயிரம் செடிகளையும் நட்டு, தரையில் வெயில்படாமல் இருக்க மூடாக்கு போட்டு, நீர் பாய்ச்சி என எல்லாமும் முடிக்க மாலை நான்கு மணி ஆகிவிட்டது. கலைக்கல்லூரி மாணவர்கள் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தார்கள். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு உள்ளூர் இளைஞர்களோடு பேசினோம். எதிர்கால திட்டம், எப்படி தொடர்ந்து இயங்குவது, கிராமத்துக்கு என்ன தேவை என்பது பற்றியெல்லாம் ஒரு விரிவான உரையாடல் அது. 'மாசம் ஒரு தடவை நீங்க வந்துடுங்கண்ணா..பேசலாம்' என்று சொன்னார்கள். நிச்சயமாகச் செய்ய வேண்டும்.
(கல்லூரி மாணவர்கள் - இடது ஓரம் ஆனந்த், வலது ஓரம் சம்பத்)
ஆனந்த், தொரவலூர் சம்பத் இருவரது உழைப்பும் மிரட்டக் கூடியது. முப்பத்தியாறு மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஓய்வில்லாத உழைப்பு. அவர்கள் இருவரும் இல்லையென்றால் இத்தகைய செயல்பாடு சாத்தியமே இல்லை. அரசு தாமஸ், கார்த்திகேயன், குமணன், எஸ்.வி.சரவணன் என்று எப்பொழுதும் உடன் நிற்கும் நண்பர்கள் இன்னொரு பக்கம்.ஆர்.டி.ஓ கோவிந்தராஜூ, தாசில்தார் பூபதி, பி.டி.ஓ சுமதி மற்றும் குணசேகரன் மற்றொரு பக்கம். அட்டகாசமான இளைஞர் படை கூடவே.
சலனப்படங்கள் (வீடியோஸ்) :
முந்தின நாள் இரவு முழுக்க உறக்கமில்லை. சனிக்கிழமை அமர கூட அவகாசமில்லை. அடர்வனம் வேலை எல்லாவற்றையும் முடித்துவிட்டு வந்த போது மழை தூறத் தொடங்கியிருந்தது. படுக்கையில் விழுந்த போது அடித்து போட்டது போல உறக்கம் வந்தது. அந்த அசதி ஒரு வரம். ஆத்ம திருப்தி நிறைந்திருந்த அசதி அது. எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கலாம்.
இந்த செயலுக்குப் பின்னால் ஏகப்பட்ட பேர்களின் உதவியும் ஆதரவுமிருக்கிறது. 'வேலூர்ல பஞ்சகவ்யம் இருக்காம்..வாங்கித் தர்றீங்களா?' என்று கேட்டால் எதை புரியும் யோசிக்காமல் கூரியரில் அனுப்பி வைக்கும் சிவசக்தி மாதிரியான நண்பர்கள், தனபால் மாதிரியான இளைஞர்களை திரட்டி தருபவர்கள், கணேஷ், மகேஷ், பொன்னுசாமி மாதிரியான களப்பணியாளர்கள், இளைஞகர்களின் பெரும்படை - துணை நின்ற ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி. வேறு என்ன சொல்லப் போகிறேன்? தொடர்ந்து செயல்பட ஆண்டவன் பலத்தையும், பெரியவர்கள் ஆசியையும், நண்பர்கள் ஆதரவையும் கொடுக்கட்டும்.
இந்த செயலுக்குப் பின்னால் ஏகப்பட்ட பேர்களின் உதவியும் ஆதரவுமிருக்கிறது. 'வேலூர்ல பஞ்சகவ்யம் இருக்காம்..வாங்கித் தர்றீங்களா?' என்று கேட்டால் எதை புரியும் யோசிக்காமல் கூரியரில் அனுப்பி வைக்கும் சிவசக்தி மாதிரியான நண்பர்கள், தனபால் மாதிரியான இளைஞர்களை திரட்டி தருபவர்கள், கணேஷ், மகேஷ், பொன்னுசாமி மாதிரியான களப்பணியாளர்கள், இளைஞகர்களின் பெரும்படை - துணை நின்ற ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி. வேறு என்ன சொல்லப் போகிறேன்? தொடர்ந்து செயல்பட ஆண்டவன் பலத்தையும், பெரியவர்கள் ஆசியையும், நண்பர்கள் ஆதரவையும் கொடுக்கட்டும்.
17 எதிர் சப்தங்கள்:
இத்தகைய விழாக்களை ஒருங்கிணைப்பது கடினம் அதுவும் பெருந்தலைகள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அனைவரும் இணைந்து மிகச்சிறப்பாக திட்டமிட்டு விழாவை ஒருங்கிணைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
நினைத்துப் பார்த்தால் மலைக்க வைக்கும் விடயம். அர்ப்பணிப்புடன் வேலை செய்த அத்தனை பேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
manam nirandha vaalthukkal Mani...
Such an inspirational event. 100 years down the road, this forest will stand to proclaim the effort and dedication of this group of volunteers.
Thanks and congratulations for your social commitments.
உங்கள் செயல்கள் பாராட்டுக்குரியது-அப்படினு சொன்னா க்ளிஷேவா இருக்கும். ஆனாலும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தேயாக வேண்டும் .. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . இது நிச்சயம் வெற்றியை தரும்.. மரங்கள் வளர்ந்து அடர்வனம் நல்லபடியா அமையும்.. இளைஞர்/நிசப்தம் நண்பர்கள் கூட்டம் மற்றும் உங்களின் உழைப்பின் பலன் + இயற்கை = அடர்வனம்
Congratulation to all.. It's a great event...
//நிகழ்வில் எந்த அரசியல் சாயமும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவு இருந்தது.
//முக்கியபிரமுகர்களின் கூட்டமே வெகு அதிகமாக இருந்தது. திமுக, காங்கிரஸ், மதிமுக என பிறகட்சியினரும் வந்திருந்தார்கள்
//'இதெல்லாம் எப்படி தப்பிக்கும்?' 'மனிதன் காட்டை உருவாக்க முடியாது' என்றெல்லாம் சிலர் சொன்னார்கள்.
//அடித்து போட்டது போல உறக்கம் வந்தது. அந்த அசதி ஒரு வரம்.
நீங்க செய்தது, செய்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய வேலை என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...
நிச்சயம் இன்னும் பல சாதனைகள் செய்யப்போகிறீர்கள்...
நீங்கள் ஒரு அசாதாரண ஆளுமை...உங்கள் எளிமையே உங்கள் பலம்...
உங்களை வாழ்த்துவதை விட உங்கள் குடும்பத்தினரை "வாழ்வாங்கு வாழ" வாழ்த்துவது சாலப்பொருத்தம் என எண்ணுகிறேன்...
Great job done, Mani. Keep going :) Best wishes, Radha
Congrats Mani Anna.
You & a team formed behind this did a great job..
Congratulations. Happy !!!
வாழ்த்துக்கள் அண்ணா.
dear brother
namasthe
it is very heartening to note that the motivational force in you has made wonders inspiring so many that too in such a rural background
now that the trees are planted it requires enough perseverance to maintain and preserve the trees for which you have already made preparations
with very many compliments
radhakrishnan
√
வாழ்த்துக்கள் மணி.
தேவா.
வாழ்த்துக்கள் மணி!!!! You are leading by example and hope these efforts get noticed and replicated in villages around this area.
வாழ்த்துகள் மணி.
Mr.Manikandan,
can u share sketch plan to plant the saplings , which is used in this event
Post a Comment