அடர்வனம் நிகழ்வு அட்டகாசமாக அமைந்துவிட்டது. மிகத் திருப்தி. செங்கல்பட்டிலிருந்து ஜெயராஜும் அவரது நண்பர்களும் வந்திருந்தார்கள். ஜெயராஜ் தனது அனுபவத்தை மின்னஞ்சலாக அனுப்பியிருந்தார். அவரது அனுபவம் முதலில்.
அன்பிற்கினிய மணிக்கு அன்பும் வாழ்த்தும்......
அன்பிற்கினிய மணிக்கு அன்பும் வாழ்த்தும்......
அடர்வனம் நிகழ்வில் கலந்துகொண்ட மன நிறைவோடு இரவு ஒன்பது மணிக்கு நானும் நண்பர்களும் (அட்வகேட் சீனிவாசன், லயன். முருகன் மற்றும் ஆசிரியர் ஆனந்தன்) அச்சிறுப்பாக்கம் வந்து சேர்ந்தோம். அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், பெரியவர்கள், கிராம இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என கலந்துகட்டிய ஒரு பெரும் கூட்டத்தை கூட்டி 2000 மரக்கன்றுகள், அடர்வனம் என எல்லாவற்றையும் நிகழ்த்திவிட்டு ஒன்றுமே தெரியாத சிறு பிள்ளை போல் நீங்கள் உலாவிக்கொண்டிருந்தது பார்க்க உண்மையிலேயே ரொம்ப அழகாகவும், ஈர்ப்பாகவும் இருந்தது.
மணி... இந்த எளிமைதான் உங்களின் மிகப்பெரிய பலம்.
மரக்கன்றுகளை நட்டுக்கொண்டிருக்கும் போது அந்த கிராமத்து அம்மா ஒருவர் 'நாற்பது வருசத்துல முதல் முறையா ஒரு மரக்கன்று நடுறேன்..... இங்க கொஞ்சம் உரம் கொடு கண்ணு.....' என்று கேட்டது என்னை நிறைய யோசிக்க வைத்தது. மரம் மனிதனுக்கு மிக அவசியமானது. அப்படி இருந்தும் வாழ்நாள் முழுமைக்கும் ஒரு மரத்தை கூட நடாத மனித வாழ்க்கை எவ்வளவு பாவமானது? அப்படியிருக்க நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடி மரம் நட்டு வனத்தை அமைத்த நிகழ்வு கிராமத்திற்கான வரம்.
மணி, அடர்வனம் அமைக்க மூன்று மாதங்களாக பெங்களூர்- கோட்டுப்புள்ளாம் பாளையம்– மரக்கானம் என நீங்கள் உழைத்த உழைப்பை நான் நன்கு அறிவேன். 'மரக்கானத்தில் இருந்து மரக்கன்றுகளை வாங்கி அனுப்பிவிடுகிறேன்' என்று நான் சொன்ன போதும் கூட இரவோடு இரவாக பெங்களூரில் இருந்து அரசு பேருந்து ஏறி மரக்கானம் வந்து நீங்கள் பார்த்து பார்த்து மரக்கன்றுகளை தேர்வு செய்தது என்னையும் என் நண்பர்களையும் மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.
'செய்வன திருந்த செய்’ என்பதற்கு மிக சிறந்த உதாரணம் நீங்கள். உங்களோடு இணைந்து இந்த மாபெரும் காரியத்தை செய்து முடித்திருக்கக்கூடிய ஆனந்துக்கு எங்களின் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள். அடர்வனம் குறித்த அவரின் அறிவும் ஈடுபாடும் மரம் நடுவதற்கான குழிகளில் லேயர் லேயராக தெரிந்தது. அரசு தாமஸ் அய்யாவையும் கேட்டதாகச் சொல்லுங்கள். மிக சிறந்த வரவேற்பும் உபசரிப்பும் அவருடையது.
கல்லூரி மாணவர்களை வழி நடத்தி ஒவ்வொரு மரக்கன்றுகளையும் பார்த்து பார்த்து மிகுந்த அக்கறையோடு நட்ட கிராமத்து இளைஞர் இளம் பெண்களுக்கு எங்கள் சல்யூட்.
நெடும் தொலைவில் இருந்து வருகை தந்திருந்த நிசப்தம் வாசகர் திருப்பதி மகேஷ் உடனும் அவரது தம்பி உடனும் பேசியதில் மக்க மகிழ்ச்சி.
மணி.....
என் மகன் ஏழாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பிற்கு சென்று இருக்கிறான். அவன் ஆளுமை வளர்ச்சிக்காக இரவில் நான் அவனுக்கு கதைகள் சொல்லுவது வழக்கம்.
இப்பொழுது உங்களைப் பற்றியும் உங்கள் செயல்பாடுகளைப் பற்றியும் ஒரு கதையைப் போல் அவனுக்கு சொல்லி வருகிறேன். எப்பொழுது நாம் அடுத்தவர்களுக்காக வாழ்கிறோமோ அப்பொழுதுதான் உண்மையில் நாம் நமக்காக வாழ்கிறோம் என்பார்கள். அடுத்தவர்களின் நலனுக்காக வாழ்கின்ற நீங்கள் பெரும் மன நிறைவோடு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
மணி நேற்று உங்களை ஒரு நிமிடம் கட்டிப்பிடித்து ஆரத்தழுவி மனதார ஒரு வாழ்த்து சொல்லனும்ன்னு நெனச்சேன். அது மட்டும் மிஸ்ஸிங்..... எங்கய்யா நீ ஒரு இடத்துல நின்ன?
மாநாடு நடப்பது போல் வரிசைகட்டியிருந்த வாகனங்களுக்கு நடுவில் ஊர்ந்து வந்து கோட்டப்புள்ளாம் பாளையம் கிராமத்துக்குள் வந்த போது உண்மையில் நான் நேற்று மிகவும் உணர்ச்சிவயப்பட்டிருந்தேன். கோட்டுப்புள்ளாம் பாளையத்தில் காரில் நான் வந்து இறங்கிய அடுத்த கணமே என் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கிவிட்டது. தலைமை ஆசிரியர் அரசு தாமஸ் அவர்கள் மைக்கில் இந்த மரக்கன்றுகள் சாதாரனமானவை அல்ல. ஒவ்வொரு மரக்கன்றும் விலை மதிப்பற்றவை என்ற அறிவிப்பை தந்துகொண்டிருந்தார். விழாவின் பிரமாண்டம், வெற்றி இவைமட்டுமே அதற்கு காரணம் இல்லை.
இப்பொழுது அமைச்சர் மரக்கன்றை நடுவார், மாவட்ட ஆட்சியர் மரக்கன்று நடுவார் என்ற அறிவிப்பின் வரிசையில் 'அத்தனைக்கும் காரணமான நிசப்தம் வா. மணிகண்டன் அவர்கள் இப்பொழுது மரக்கன்றை நடுவார்' என மைக்கில் அறிவித்தவுடன் இளைஞர்கள் விசிலடித்து கைத்தட்டி ஆரவாரம் செய்ததைப் பார்த்து என் கண்கள் கலங்கிவிட்டது. மணி நீங்கள் அந்த ஊருக்கும் மக்களுக்கும் உன்மையாய் இருந்ததற்கான அங்கீகாரம் அது .
மிகுந்த அன்புடன்,
அ.ஜெயராஜ்
10 எதிர் சப்தங்கள்:
எத்தனை விலை மதிப்பு மிகுந்த பரிசும் பரிவான தலை கோதலுக்கு ஈடாகாது.
மயிலிறகின் வருடலில் கண்மூடி கிடத்தல் போன்ற கிறக்கத்தை தரக்கூடியது.
அது போன்றது தான் இந்த பாராட்டும்
போராளி
சேவகன்
கலைஞன்
இவர்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கு வேறெதுவும் ஈடே ஆகாது.
அந்த பாராட்டை சரியான சமயத்தில் சிறப்பாக செய்து சின்னையா வை கௌரப்படுத்தியதற்கு
நன்றி அ.ஜெயராஜ்
//'அத்தனைக்கும் காரணமான நிசப்தம் வா. மணிகண்டன் அவர்கள் இப்பொழுது மரக்கன்றை நடுவார்'//
சின்னையா!
நீங்க நட்ட மரத்தின் பெயர் என்ன?
Great effort Mani
படிக்க படிக்க கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் ஆதங்கம் ஆக உள்ளது.ஓரளவு விரிவாக எழுதிய அ.ஜெயராஜ்-க்கு நன்றி, வாழ்க வளமுடன்.அனைத்து உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மணி, நீங்களும் இன்னும் விபரமாக பதிவு இடலாமே..
இந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அண்ணா...
Great! Man(i)y more wishes to continue the effort.
ஜெயராஜ் எண் கிடைக்குமா.
இம்முயற்சி வெற்றியடைய உழைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்,, அடர்வனம் ஓரளவு வளர்ந்த உடன் அதற்கு அருகில் அமைந்திருக்கும் மற்ற கிராமங்களின் இளைஞர்களுக்கும் இது ஒரு தூண்டுகோலாக அமையும் என்று நம்புகிறேன், அவர்களும் இம் முயற்சி எடுக்ககூடும், அந்த நேரங்களில் இப்போது ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை மற்ற ஊர்களுக்கும் செய்து நல்லவழிகாட்டியாக செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்,,,
You deserve it sir.
//மணி நீங்கள் அந்த ஊருக்கும் மக்களுக்கும் உன்மையாய் இருந்ததற்கான அங்கீகாரம் அது .//
உண்மையான அர்பணிப்புக்கு கிடைத்த பரிசு, இதற்கு விலையில்லை. இதை படிக்கும் போது காமராஜர் அவர்களைப்பற்றி கேட்ட தகவல்கள் எல்லாம் மனதில் வந்து போகிறது.
Post a Comment