May 23, 2018

நேர்காணல்

கடந்த வாரம் ஈரோட்டிலிருந்து சில நண்பர்கள் வந்திருந்தார்கள். ஜெயமோகனின் தீவிர வாசகர்கள். கிருஷ்ணன்- இவரை பத்து வருடங்களுக்கு முன்பாக இருந்து ஜெயமோகனுடன் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு நாள் அழைத்து ஈரோட்டில்  'Meet the Author ' என்று எழுத்தாளர்களை அழைத்து அவர்களுடன் ஒரு நாள் முழுவதுமிருந்து உரையாடுவதாகவும் அதற்கு ஒரு நாள் வர இயலுமா என்று கேட்டார். எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. ஒரு நாள் பேசுகிற அளவுக்கு என்ன செய்திருக்கிறோம் என்கிற குழப்பம் அது. யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு அடுத்தநாள் அவரிடம் பேசும் போது ஜூன் மாதம் வருகிறேன் என்று சொன்னேன். சனிக்கிழமையன்று ஈரோட்டிலிருந்து வந்துவிட்டார்கள். ஜூன் மாத நிகழ்ச்சிக்கு முன்னோட்டம் என நினைக்கிறேன். அப்பொழுது சூப்பர் 16 மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவர்களும்  மாணவர்களுடன் பேசினார்கள். பிறகு கிளம்பி கோட்டுபுள்ளாம்பாளையம் குளத்துக்குச் சென்றோம். கருக்கல் ஏறிக் கொண்டிருந்தது. 


'உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும்' என்றார்கள். வைரவிழா தொடக்கப்பள்ளிக்கு திரும்பி வரும்போது கனத்த மழை. மழை சத்தத்திலேயே ஒரு வகுப்பறையில் அமர்ந்து பேசினோம். பேசும்போது விளம்பரப்படுத்திக் கொள்வதாக இருந்துவிடக் கூடாது என்றும், அளவு தாண்டி பேசிவிடக் கூடாது என்றும் ஓர் எச்சரிக்கையுணர்வு இருந்து கொண்டேயிருக்கும். இந்த நேர்காணலிலும் இருந்தது. இப்பொழுது வாசிக்கும் போது ஒரு திருப்தியான நேர்காணல் என்றுதான் உணர்கிறேன். 

எனது செயல்களைத் தொடர்ந்து பாராட்டும் எழுத்தாளர் ஜெயமோகன் தனது தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மீது தனித்த அன்பு உண்டு. அவருக்கும், நேர்காணலை நடத்திய நண்பர்களுக்கும் நன்றி. ஒரு வகையில் உற்சாகமாகவும் உணர வைக்கிறது. 

                                                                ***

நிசப்தம் அறக்கட்டளை வா மணிகண்டன் இணையத்தில் அறிமுகமான பெயர் தான் என்றாலும் இவரை அணுகி அறிய ஒரு முறைபப் படுத்தப்பட்ட சந்திப்பும் கள நேர் காணலும் தேவையாகிறது. கடந்த 19-5-2018 சனி அன்று கோபி வைரவிழா துவக்கப் பள்ளியில் சில கல்லூரி மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த  அவரை சந்தித்தோம்.  ஈரோடு மாவட்டம்  கோபி அருகே கோட்டுபுள்ளாம்பாளையம்  என்கிற கிராமத்தில்  அடர் வனம் அமைந்து கொண்டிருக்கும் குளத்திற்கு நேரில் சென்று அவருடன் நாங்கள் நான்கு நண்பர்கள் உரையாடினோம்.

வருகிற 9-6-2018 அன்று அவர் ஈரோடு வருகிறார் அப்போது அவரின் படைப்புகள் மற்றும் அறக்கட்டளை செயல்பாடடுகள் குறித்து பிற நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்த இருக்கிறோம்.   அவரின் பொதுப்பணிகள் என்பது மருத்துவ உதவி , கல்வி உதவி மற்றும் சூழலியல் செயல்பாடுகள் என்கிற தளத்தில் இயங்குகிறது.  இப்போது அவரின் படைப்புகள் குறித்து உரையாடவில்லை, பொதுப்பணி குறித்து மட்டும் உரையாடினோம்.  

கிருஷ்ணன், பாரி, சிவா, ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஈரோடு நண்பர்கள்.
                                                     
                                                                   ***

நீங்கள் எவ்வளவு ஆண்டுகளாக இந்த பொதுப் பணியில் இருக்கிறீர்கள் ?

நான் பெங்களூருவில் நிலையமைந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது, அப்போதிலிருந்து பெரும்பாலான சனி ஞாயிறும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் சுற்றியிருக்கிறேன். மிகுதியாக கோபியிலும் இருப்பேன். எனக்கு நினைவு உள்ளவரை அலுவலக பணி இல்லாத சமயம் தவிர்த்து எந்த ஒரு வார இறுதியிலும் பெங்களூரில் இருந்தது கிடையாது.

அறக்கட்டளை செயல்பாடுகள் எப்படி துவங்கின ?

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ஒன்பதாயிரம் ரூபாய் வசூல் செய்து கொடுத்தேன். அதன்பிறகு 2007 வாக்கில் ஒரு கல்லூரி மாணவன் ஜப்பானில் நடைபெறும் ஒரு ரோபோ செயலரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்துள்ளதாகவும் அதற்கு நிதி உதவி தேவை எனவும் அணுகினான். நானும் எனது வலைப்பூவில் ஒரு பதிவை இட்டேன் , எதிர்பாராவிதமாக நிதி வந்து சேர்ந்தது, உதவ விரும்புபவர்களை அம்மாணவனையே நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு தொடர்பை ஏற்படுத்திவிட்டேன், அம்மாணவனும் ஜப்பான் சென்று திரும்பினான், அதன் பிறகு இதுபோன்ற மருத்துவ/பொறியியல்  கல்வி உதவி தொடர்ந்தன. அப்போதெல்லாம் ஒரு முறைப்படுத்தப்பட்ட செயல்பாடு இருந்ததில்லை.

எப்போது முறைப்படுத்தப்பட்ட செயல்பாடு என்பதை கொண்டு வந்தீர்கள் ?

ஓரிரு ஆண்டுகள் இவாறு உதவி தேவைப்படும் நபர்களை உதவும் நபர்களிடம் நேரடியாக இணைத்துவிடுதலில் சில பின்னடைவுகள் இருந்தன. உதவி தேவைப்படுவோர் உதவுகிறவர்களிடம்  மேலும் நிதி கேட்டு தொந்தரவு செய்யத் துவங்கினர், கிடைக்கிற நிதியை சொகுசாக செலவழிக்கத்   துவங்கினர், இது அதிகரித்ததனால், 2010 வாக்கில் இருந்து இந்த நேரடி பயனாளி -நிதியாளர் இனிப்பை தவிர்த்து நானும் நண்பர்களும் கண்காணிக்க ஆரம்பித்தோம், பிறகு உரிய நபர்களுக்கு தேவையான தொகை மட்டும் அளிக்கத்  தூங்கினோம் , அப்போதில் இருந்து பணிச்சுமை கூடியது.

இந்த பொது செயல்பாடு என்பது உங்கள் எழுத்து வாழ்க்கையை பாதிக்கவில்லையா, இரண்டில் ஒன்றுதான் இயலும் என்கிற ஒரு இக்கட்டை சந்திக்க வேண்டியிருந்ததா , இரண்டில் எதோ ஒன்று என  முடிவெடுக்கவேண்டிய நிலையை நீங்கள் அடையவில்லையா ?

ஆம், ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு ஒரு முடிவை எடுக்க வேண்டி இருந்தது, கண் முன் காணும் கல்வி, மருத்துவ பயனாளிகளின் இக்கட்டும், உதவுவதால் ஏற்படும் நிறைவும் இலக்கியத்திற்கு மேல் என எண்ணுகிறேன், போக நானொன்றும் விஷ்ணுபுரம், நெடுங்குருதி போன்ற நாவல்களை படைக்கும் ஆற்றல் மிக்கவனல்ல என்பதும் எனக்குத் தெரியும், என் உயரம் எனக்கு தெரிந்ததால் நான்  பொதுசேவையை தேர்வு செய்தேன். ஆனால் எழுத்துதான் அடிநாதம். தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை எப்பொழுதும் விடமாட்டேன். கவிதைகளை எழுதுவதில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு.

பெரும்பாலான அறிவு ஜீவிகளும், பொதுசேவையாளர்களும் இந்த இணைய உலகை எதிர்மறையாகவே பார்க்கின்றனர், நீங்கள் எப்படி ?

எனக்கு இதன் மீது பெரிய புகார்கள் கிடையாது, எனது வலைப்பூவின் வழியேதான் எனது அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகிறது, அனைத்து தொடர்புகளும் கிடைக்கிறது.  பெங்களூரில் ஒரு சூழியல் அமைப்பு உள்ளது , சில இளம் கல்லூரி மாணவிகள் இதில் உள்ளனர், அதன் நிர்வாகி அவர்கள் பத்துபேரை முகநூல் மூலம் அழைப்பு விடுத்து களத்திற்கு வரச் செய்வார், அவர்களை பின் தொடர்ந்து சுமார் 40 பேர் களத்திற்கு வருகிறார்கள்.  அவர்களுக்கு மனித நேரம் பற்றாக்குறையாக இருந்ததே இல்லை. இதுவும் சமூக வலைத்தளம் மூலம்  தான் சாத்தியமாகிறது.

நீங்கள் இந்த மருத்துவம், கல்வி, சூழல்  என மூன்று துறைகளை  தேர்வு செய்தது எப்படி ?

மருத்துவ உதவி என்பது முழுக்க முழுக்க மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான், ஒப்பு நோக்க இதை குறைவாகவே செய்கிறோம். கல்வி உதவி என்பது நான் அத்தகைய மாணவர்களை  நேரில் தொடர்ந்து பார்க்கிறேன், உதாரணமாக இப்போது நீங்கள் சந்தித்த ஒரு கல்லூரி மாணவனின் தாய் தந்தை இருவருமே மனநோயாளிகள்,  அவர்களை கட்டித்தான் வைத்திருக்கிறார்கள், இவர்களை பராமரித்து படிப்பையும் தொடர்கிறான். இன்னொரு மாணவனின் வீட்டில்  ஒழுங்கான கதவு கிடையாது, பாதி வீட்டுக்குத்தான் கூரை உள்ளது, தனது பாடப் புத்தகங்களை பாலிதீன் பையில் இட்டு கட்டி வைத்திருக்கிறான், மழை அவனை அச்சுறுத்துகிறது. இவர்களுக்கு உதவுதல் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடியது. ஒரு சுய திருப்திக்காக இதை செய்துகொண்டிருக்கிறேன். இதையே நான் மிகுதியாக செய்கிறேன். சூழல் பணிகள் , இந்த குளங்களை தூர் வாருவது போன்றவை  தானாக மக்களால் எழுப்பப்பட்ட கோரிக்கை. நான் களத்திற்கு சென்று உள்ள சொற்ப ஆட்களை வைத்து வேலையை துவங்கிய பின்னர் ஓரிரு வாரங்களில் கிராம மக்களின் உதவி கிடைக்கத் தொடங்குகிறது. அறக்கட்டளையில் இருந்து சிறிது நிதி ஒதுக்குகிறோம், அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெறுகிறோம், பணி நிகழ்கிறது.

ஏதாவது எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு கிடைத்துள்ளதா ?

கிட்டத்தட்ட அனைத்துமே அப்படிதான், இப்போதும் உதவி தேவைப்படுகிறவர்களை விட உதவுபவர்களின்  எண்ணிக்கையே எனக்கு அதிகம். எனது வலைப்பூவை படித்துவிட்டு அரசு அதிகாரிகள் , ஆசிரியர்கள் தொடர்புகொண்டு அரசு அனுமதிபெறுவது போன்ற பணிகளை செய்து தருகிறார்கள் , கணக்கர் ஒருவர் தானாக தொடர்புகொண்டு அறக்கட்டளைக் கணக்குகளை இலவசமாக பார்த்துத் தருகிறார். இப்போது நீங்கள் சந்தித்த கணேசமூர்த்தி, மகேஷ் ஆகியோர் குளத்தை தூர்வார தாமாக முன்வந்து இப்போது அவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள், விரைவில் இங்கு அடர்வனம் அமையும்.

ஏதாவது எதிர்பாரா எதிர்ப்புகள், முட்டுக்கட்டைகள் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா ?

பெரிதாக எதுவும் இல்லை, ஆனால்  சாதிப் பிரிவினை கிராமங்களில் பெரிய இடையூறு என நினைக்கிறன், அனைத்துச்  சாதியினரும் இணைந்து செயல்படமாட்டார்கள், நம்மிடம் சரி எனச் சொல்வார்கள், பின்னர் வரமாட்டார்கள், இது எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. அரசியல் கட்சிகள் அவர்களை அழைக்கவில்லை என்றால் சாத்தியமானவரைக்கும்  இடையூறு செய்வார்கள், அவர்களுக்குத் தேவை இதை அவர்கள் தலைமையில் அல்லது உதவியில் செய்கிறோம் என கிராமம் அறியச் செய்ய வேண்டும் என்பது. இப்போது பணிகளை நாங்கள் செய்து பெயரை அவர்களுக்கு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. அவர்களை எதிர்த்தோ தவிர்த்தோ நாம் இயங்க முடியாது. மேலும் ஒரு கள அனுபவம் இன்னொன்றுக்கு உதவாது, ஒவ்வொரு இடத்திலும் புதிதாக ஒரு இடையூறு வரும், ஆனாலும் பொதுவான அனுபவம் கைகொடுக்கிறது.

நீங்கள் தொடர்ந்து இயங்கினால் இடையூறுகளைவிட உதவிகள் மிகுதியாக வரும். நம்ப முடியாத தீவிரத்த்துடன் உதவுபவர்கள் இருக்கிறார்கள். உயர்  அதிகாரிகள் எனது வலைப்பூ வழி தொடர்பு கொண்டு சொந்த செலவில் பஸ்ஸிலும் மூன்றாம் வகுப்பு ரயிலிலும்  வந்து, ஈரோட்டில் சொந்தச்செலவில் தங்கி களைப்புடன்  இங்கு வந்து மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

நீங்கள் பொதுவாழ்வில் முன் மாதிரி என யாரை கொள்கிறீர்கள் ?

பொது வாழ்வில் எங்கள்  பகுதியைச் சார்ந்த  லக்ஷ்மண அய்யர்

நீங்கள் பிற என்ஜிஓ- களுடன் நிலையான தொடர்பில் இருக்கிறீர்களா ?

அவ்வாறு இல்லை, நன் கூடுமானவரை பொதுத் தொடர்புகளை தவிர்க்கிறேன், உதவிகேட்டு ஏராளமானவர்கள் தொடர்புகொள்கிறார்கள், சில இலக்கியவாதிகளுக்கும் தனி நபர்களுக்கும் உதவி செய்து அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்திய அனுபவமும் எனக்குண்டு. கூடுமானவரை நான் தனித்தே இயங்குகிறேன். நிசப்தம் என்பது என்.ஜி.ஓ இல்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். 

உங்களுக்குள்ள அரசியல் எதிர்ப்புகள் ?

கடந்த சட்டமன்ற  தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிட்ட திரு. சரவணனுக்காக நண்பர்களுடன் பிரச்சாரம் செய்தேன், அவர் வாக்குக்குப் பணம் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தோற்றார். எனது தந்தைக்கு சில உறுதியான அதிமுக தொடர்புகள் உண்டு. ஆகவே அவருக்கு  இதில் மட்டும் என் மீது லேசான அதிருப்தி  உண்டு. மற்றபடி பெரிய எதிர்ப்புகள் இதுவரை இல்லை, ஆனால் நான் எதிர்பார்க்கிறேன்.

உங்கள் செயல்பாடுகளில் ஒரு சித்தாந்த நம்பிக்கையோ அல்லது சீர்திருத்தத் திட்டமோ இருப்பது  போலத் தெரியவில்லை, வேண்டுமென்றே கருத்தியலை தவிர்க்கிறீர்களா ?  

எனது தந்ததையார் இறந்த போது துக்கம் விசாரிக்க எம் ஜி ஆர் காலனியை சேர்ந்த லம்பாடி இனத்தவர் வந்திருந்தனர். அவர்கள் திண்ணையில் சமமாக அமர்ந்தனர், எனது உறவினர்களில் சிலர் தாமாக கலைந்து சென்றுவிட்டனர். எனது வீட்டில் கூட , சாதியில் முன்மாதிரியாக ஒரு மாற்றத்தை கொண்டுவருவதே என்னால் இயலவில்லை, இதில் சமூக மாற்றம் குறித்த சிந்தனை எல்லாம் எனது சாத்திய விளிம்புக்கு அப்பாற்பட்டது. எதுவானாலும் முன்மாதிரியாக நான் என்னிலும் எனது சுற்றத்திலும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிவிட்டே வெளியில் முயல வேண்டும். இன்னமும் காலம் இருக்கிறது. தீவிர அரசியல், கருத்தியல் என்பதெல்லாம் நம்மில் எதிர்மறைப் பாதிப்பை செலுத்தி தேக்கமடையச் செய்துவிடும், அது போக மனச் சோர்வையும் ஏற்படுத்தும் என நான் அஞ்சுகிறேன். இப்போது குன்றா ஊக்கத்துடன் செயல்பாட்டுக் கொண்டிருக்கிறேன். 

நீங்கள் எதிர்காலத்தில் உள்ளாட்சி தேர்தல் போன்ற ஏதேனும் அரசியலில் செயல் படும் திட்டம் உள்ளதா ?

தேர்தல் பிரச்சாரமே அரசியல்தானே? அதை எப்பொழுதோ தொடங்கிவிட்டேன். சாசுவதமான முன்மாதிரியான செயல்பாடுகளை சில ஆண்டுகளில் செய்துவிட்டு தேவைப்பட்டால் அதில் ஈடுபடலாம்.

நீங்கள் உங்கள்  பயனாளிகள் குறித்து சில எதிர்மறை விமர்சனங்களை உங்கள் வலை பூவில் பதிவிட்டதை நான் படித்திருக்கிறேன் ? (பயனாளிகளை புனிதப்படுத்தும் எண்ணம் இல்லாதது குறித்து இக்கேள்வி) 

ஆம், பயனாளிகளில் சுமார் 5 சதத்திற்கும் குறைவாகவே பயனடைந்த பின்னர் நிசப்தத்தைத் தொடர்புகொள்கின்றனர். நல்ல பணியில் அமைந்த மாணவர்களை, தற்போதைய மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறு நாங்கள் கோருவோம், மிகச் சிலரே ஏற்றுக்கொண்டு இதை செய்கிறார்கள், இதனால் உதவி பெறும் தற்போதைய மாணவர்கள் சலிப்படைகிறார்கள். வேறு நபர்களுக்கு அவர்கள் உதவுதல் குறைவே, பயன் பெற்றுவிட்டு சுவடற்று மறைத்தல் என்பதே மிகுதி. நிசப்தம் எதிர்பார்ப்பதெல்லாம், பயனாளிகள் தங்களது நிலை சீரமைந்துவிட்ட பின்னர் குறைந்த பட்சம் இருவருக்கு தாமாக அதேபோல உதவ வேண்டும் என்பதே.

அனுபவம் கற்றுக்கொடுத்ததால் இப்போது மாணவர்களிடம் நிலையான ஒரு தொடர்பையும், வட்டத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம், எதிர்காலத்தில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்.

இப்பபோது என் ஜி ஓ மற்றும் அறக்கட்டளை என்றாலே, ஊழல், வரி ஏய்ப்பு என்கிற அர்த்தம் வருகிற படி அவர்கள் செயல்பாடுகள் உள்ளது, இதுபற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் ?

இதில் நான் உடன்படுகிறேன், எனக்குத் தெரிய சென்னை வெள்ளத்தில் ஒரு அமைப்பு 3 கோடி நிதி சேர்த்து, ஆனால் என்ன ஆனது என்கிற தகவல் இதுவரை இல்லை, கணக்கும் இல்லை.

உங்கள் குழு உறுப்பினர்களின் உற்சாகத்தையும் கட்டுக் கோப்பையும் எப்படி தக்கவைக்கிறீர்கள் ?

உண்மையில் எங்கள் குழு உறுப்பினர்கள் இதுவரை ஒரு கூட்டம் போட்டு ஒரே சமயத்தில் அனைவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. எல்லாமே இணையம், செல் பேசி மூலம் தான். அனால் அப்பகுதி பணிகளை அவர்கள் செய்து விடுகிறார்கள், பெரிதும் இது பயனாளிகளை விசாரிப்பது தொடர்பானது, எனவே எனக்கு பணிச்சுமை பெரிதும் குறைகிறது.

எதிர்காலத்தில் நிசப்தத்தை மாற்றி அமைதிக்கவோ விரிவாக்கம் செய்யவோ ஏதேனும் திட்டம் உள்ளதா ?

அவ்வாறு எதுவும் இப்போதைக்கு இல்லை, ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

தற்போதைய சமூக போக்கு மற்றும் மக்களின் நடத்தை குறித்து உங்களுக்கு திருப்தி உள்ளதா ?

50% ஆம் 50 % இல்லை. ஆனாலும் இந்த நான்கைந்து ஆண்டுகளாகத்தான் சமூகத்தை நேரடி அனுபவம் சார்ந்து கவனிக்கிறேன். வரவேற்கத்தக்க பல மாற்றம் வந்துள்ளது. பொதுவாக எனக்கு திருப்தியே.

நீங்கள் சந்தித்ததிலேயே மிகப் பெரிய இக்கட்டு என்பது என்ன அதை எப்படி கடந்து வந்தீர்கள் ?

3 ஆண்டுகளுக்கு முன் எனது தந்தைக்கு ஈரல் புற்று நோய் இருப்பது அறிந்தோம், அப்போதே அது அபாய எல்லையை கடந்து விட்டது. கோவை,பெங்களூர் கோபி என அலைந்து கொண்டிருந்தேன், கோவை மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். கோபி மருத்துவ நண்பர் ஒருவர் நீ அழைத்து வா நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். அது பலனளிக்கத்  துவங்கியது, நிசப்தததுடன் தொடர்புடைய பெரியவர் ஒருவர் உனது தந்தை ஒருவாரத்தில் எழுந்து நடந்து விடுவார் பார் என்றார், இணையம் வழி  தொடர்பில் உள்ள நண்பர்கள் உடன் இருந்தார்கள், எனது தந்தை ஒரு வாரத்தில் தானாக நடக்கும் அளவுக்கு தேறி விட்டார். அந்த ஒரு வருட காலத்தில் இதை நிறுத்தி விடலாமா என எண்ணினேன். ஆனால் நண்பர்கள் தான் உறுதியாக உடன் இருந்தனர், இந்த செயல்பாடுகள் பெரிதும் எனக்கொரு ஊக்கமாக இருந்தது, அந்த ஒரு வருட காலத்தில் கூட நிசப்தம் பணிகளை நான் நிறுத்தவில்லை. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் எனது தந்தையர் இறந்துவிட்டார்.

உங்கள் கனவுத் திட்டம் ?

ஒரு கிராமத்தை தத்தெடுத்து சூழலை வளப்படுத்தி அதை ஒரு சுய சார்புள்ள கிராமாக மாற்றுவது.

மருத்துவ உதவி கோரும் பயனாளிகளின் சோர்வூட்டும் கதைகளை   கேட்க நேர்வதால் அந்த மனச்சோர்வு உங்களுக்கும் தொற்றும் வாய்ப்புண்டா ?

ஆம், பெரிதும் இப்போது இதை குறைத்துக்கொண்டுள்ளோம், கல்வி உதவியில் அதிக கவனம் செலுத்துகிறோம். உதவி தேவைப்படும்  நபர் அல்லது குழந்தையின் படத்தை அனுப்புகிறார்கள். இது நம்மை உணர்ச்சிகரமாக பாதிக்கக்கூடியது. இதில்  இருந்து தப்புவது கடினம். மேலும் பலருக்கு நாம் இயலாது என்கிற பதிலை சொல்ல வேண்டி இருக்கிறது, அப்போது நானே ஈரமற்றவனாக மாறிக்கொண்டிருக்கிறேனா என்கிற ஐயம் எனக்கு வரும். அது உண்மையும் கூட, ஆனால் அதை தவிர்க்க இயலாது. இப்போதெல்லாம் நான் கவிதைகள் எழுதாததற்கு இதுவும் ஒரு காரணம்.

அறக்கட்டளைக்கு வரப்பெறும் நிதியின் மூலத்தை கண்காணிக்கும் வழக்கம் இருக்கிறதா? குறிப்பாக அந்நிய தேசத்து நபர்கள் / அமைப்புகளிடமிருந்து நிதி பெறப்படுமாயின் அதை கண்காணிப்பது அவசியம் என கருதுகிறேன்.

அறக்கட்டளைக்கு பல்வேறு தளங்களிலிருந்து நிதி வருகிறது. 500 ரூபாயிலிருந்து 4 லட்சம் வரை ஒரு நபரிடமிருந்தே நிதி வரப்பெற்ற அனுபவம் உண்டு. தான் மாதந்தோறும் தொழிலில் அடையும் லாபத்தில் பத்து சதத்தை நிசப்தத்திற்கு அனுப்பி வைக்கும் நபர்களை அறிவேன். திரும்பி வராது என நினைத்த கடன்தொகை கிடைக்கப்பெற்றால் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கும் நண்பர்களை அறிவேன். ஒருவகையில் திருப்பதி உண்டியல் போல நிசப்தம் ஆகிவிட்டதாக நண்பர்களிடம் கிண்டலாக சொல்லிக் கொண்டிருப்பேன்.

நிதியின் மூலத்தை பொறுத்தவரை அதை குறிப்பிட்டு கண்காணிக்கும் வழக்கம் இதுவரை இல்லை. ஆனால் பெறப்படும் நிதி அனைத்தும் மின்னணு பரிவர்த்தனை(online transaction) மூலமாக மட்டுமே பெறப்படுவதால் இதில் தவறு நேர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். வெளிப்படையாக இருப்பதால் அனுப்புகிறவர்களும் தயங்கக் கூடும்.  இதுவரை ஒரு ரூபாய்கூட பணமாக (cash) பெற்றுக் கொண்டதில்லை. மேலும் இதுவரை அந்நிய அமைப்புகள் எதுவும் நிசப்தத்திற்கு நிதி அனுப்பியதில்லை என்று சொல்ல முடியும்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு பயிற்சி, நீட் தேர்வுக்கான பயிற்சி, ஐஏஎஸ் தேர்வுகளுக்கு பயிற்சி போன்றவை அறக்கட்டளையின் சார்பில் முன்னெடுக்கப்படுகின்றன. இவை மறைமுகமாகவேனும் மாணவர்களிடம் மதிப்பெண் பெறும் பந்தயத்தில் ஓடுவதையோ அல்லது உயர்லட்சிய வேலைகளை நோக்கி ஓடுவதையோ மட்டும் ஊக்குவிப்பதாக ஆகாதா? என் உதவிபெறும் ஒரு மாணவர் சராசரி மதிப்பெண்கள் பெற்று சராசரி லடசியங்கள் கொண்டிருக்கக் கூடாது?

பயிற்சி வகுப்புகள் மதிப்பெண்களுக்காக மட்டும் நடப்பதாக சொல்ல முடியாது. அது ஒரு முகாந்திரம் மட்டுமே. இந்த வருடம் ‘சூப்பர் 16′ பயிற்சி பெறும் மாணவர்களையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பின்னணியும் லட்சியங்களும் உண்டு. விளையாட்டில் சாதிக்க விரும்பும் ஒருவர், ஐஐடியில் இடம்பெறும் லட்சியத்துடன் ஒருவர், விவசாய படிப்பு, மீன்வளத் துறை படிப்பு என கலவையான மாணவர்களே உள்ளனர். பத்தில் நான்கு மாணவர்கள் சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு தயாராவதால் அதுசார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

உதவிபெறும் பெரும்பாலான மாணவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு புறவுலக அறிமுகமற்றவர்கள் இவர்கள். முக்கியமாக இப்பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு உலகை துணிவுடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை அளிப்பதையே பிரதானமாகக் கொள்கிறேன். மற்றபடி உயர்ல்டசிய வேலைகள் மட்டும் என்றில்லை, நிசப்தம்வழி உதவிபெற்று படித்த மாணவனொருவன் உள்ளூர் நிறுவனமொன்றில் கணக்காளராக பணிபுரிவதை உதாரணமாக சொல்ல முடியும். அந்த வேலையே தனக்கு நிறைவளிப்பதாக அந்த மாணவன் சொல்லிவிட்டான். அதில் எனக்கும் உடன்பாடே.

பெரும்பான்மை மக்கள் பச்சாதாபம் காட்ட முடிகிற விஷயங்களுக்கு மட்டுமே நிசப்தம் உதவுகிறதா? கல்வி, மருத்துவம், சூழியல் என அனைத்தும் popular activism வகைமையில் வருவதாக தெரிகிறதே.

கல்வி, மருத்துவம் சார்ந்த உதவிகளை செய்வது மிகவும் இயல்பாய் அமைந்ததே. இதை நான் திட்டமிடவில்லை. தொடர்ந்து அதுசார்ந்த மறுக்கமுடியாத கோரிக்கைகளையும் மனிதர்களையும் சந்தித்து வருவதால் இதை செய்து வருகிறேன். பொது சமூகம் விரும்பும் விஷயங்களுக்கு மட்டும் அறக்கட்டளை உதவுவதாக சொல்லமுடியாது. உதாரணமாக எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த கழைக்கூத்தாடி மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி, விளையாட்டு சார்ந்த உதவிகளை செய்து வருவதை சொல்லலாம். இது popular activism வகைமையில் வராது என்றே நினைக்கிறேன். அப்படி கட்டாயம் உதவி தேவைப்படும் பிரபலமல்லாத கோரிக்கை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். பரிசீலித்து செயல்பட நான் தயாராகவே இருக்கிறேன்.

                                                                       ****

குன்றா ஊக்கத்துடன் 10 ஆண்டுகள் செயல்படுவது என்பது அசாதாரணமானது, மேலும் முதலில் மாற்றம் என்னில்  இருந்து துவங்க வேண்டும் அதை முன்வைத்தே பிறரை அணுகவேண்டும் என்கிற கொள்கைக்கு மணிகண்டன் உதாரணம். பெரிய இலக்குகள் இல்லை கண்முன் உள்ள சிறிய இலக்குகளை நோக்கி சிறிது சிறிதாக முன்னேறுதல் என்பது அவருக்கு இது வரை பலனளித்துள்ள  கொள்கை.  இதெல்லாம் காந்தியிடம் இருந்து இவர் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.   

கிருஷ்ணன்    

9 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆக உங்களையும் உங்கள் செயல்பாடுகளையும் புரிந்து கொள்வதற்கு இது அனைவருக்கும் உதவி செய்யும். வாழ்க வளமுடன்

senthilkumar said...

சொல்ல வார்த்தைகள் இல்லை. வளர்க உமது பணி. உங்களைப்போன்று பன்முக சிந்தனையும், மற்றவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து ஆக்கப்பூர்வமான விமர்சங்களை விவாதிக்கும் திறமையும் உங்களை முழுமனிதனாக என்றோ தயார்படுத்திவிடாது.

//ஒரு கிராமத்தை தத்தெடுத்து சூழலை வளப்படுத்தி அதை ஒரு சுய சார்புள்ள கிராமாக மாற்றுவது.//

உண்மையான, நல்ல அரசியல்வாதிக்கான சிந்தனை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் இந்த மாதிரியான மனிதனனை தோற்கடித்துவிடுவார்கள் என்பது நிதர்சனம். பார்ப்போம், உங்களை போன்றவர்களை எழுத்தும், செயலும் மக்களுக்கு தாக்கத்தை பின்னாளில் ஏற்படுத்தலாம்.

Murugan R.D. said...

மருத்துவ உதவி கோரும் பயனாளிகளின் சோர்வூட்டும் கதைகளை கேட்க நேர்வதால் அந்த மனச்சோர்வு உங்களுக்கும் தொற்றும் வாய்ப்புண்டா ?

ஆம், பெரிதும் இப்போது இதை குறைத்துக்கொண்டுள்ளோம்,////////////////////////////

பொருளாதார பலம் இல்லாத நபர்களுக்கு நேர்மையான மருத்துவமனைகளில் சிகிச்சை ‌அளித்து அவர்கள் குண‌மடைய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது மிகப்பெரிய சேவைதான்,, இதில் தகுதியான பயனாளர்களை கண்டறிவது பெரும்சிரமமாக இருக்காது என்று நினைக்கிறேன்,,, குறைந்தபட்சம் விபத்துகளில் சிக்கி பொருளாதாரம் உற்றார் உறவினர்களின் உதவி இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு நொடியையும் நரகமாக அனுபவித்து வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பவர்களுக்கு உதவி செய்வது சேவைகளிலேயே மிகப்பெரிய சேவையாக கருதுகிறேன், சிகிச்சை செலவுகளையும் ஏற்க முடியாதுதான் என்றாலும் சிறுதொகை அல்லது உதவி அவர்களுக்கு சிறுதுரும்பாக உதவிடும்,, குறைந்தபட்சம் விபத்தால் பாதிக்கப்பட்டு மாதக்கணக்காக இயல்பான நிலைமைக்கு திரும்ப சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு சிறுதொகையாவது அளித்து உதவி ‌செய்யலாம்,,விபத்து என்பது அவ்வளவு கொடுமையான விசயம்

40 நாட்களுக்கு முன் அதிகாலை 3,00 மணியளவில் பிரேக்டவுன் ஆகி நின்ற பஸ்ஸின் அருகில் மாற்று பேருந்திற்காக காத்திருந்த போது பின்னாலிருந்து வந்த லாரி மோதியதில் என்‌னையும் சேர்த்து 8 பேர் படுகாயம்,, 2 பேர் பலி,,, அரசுமருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டேன்,, கிட்டதட்ட முக்கால்வாசி மயக்கநிலையில் இருந்தும் அங்கு நடைபெறும் சிகிச்சை முறைகளையும் நிர்வாக முறையையும் காணும்போது அப்படி ஒரு வேதனை ஏற்பட்டது,,, என் குடும்பத்தினர் வந்து என்னை வேறு தனியார் மருத்துவமனைக்கு (எனக்கு சில ஆண்டுகளாக நேரிடையாக அடிக்கடி தொடர்பில் உள்ள) அழைத்துசென்றதால்தானோ என்னவோ ஓரளவு விரைவில் தேறினேன், ஆனாலும் செலவு கிட்டதட்ட 1 லட்சம் ஆகிவிட்டது, உறவினர்கள் நண்பர்கள் உதவியுடன் தான் செலவை சமாளிக்க முடிந்தது,, 40 நாளாகியும் இன்னமும் அந்த உடல் வேதனையின் வலி இன்னும் சிறிது சிறிது இருக்கவே செய்கிறது,,, என்னுடைய வருமானமும் ஆண்டுக்கு அதிகபட்சம் 2 லட்சம் தான்,,,

இதுவே ஒரு அடித்தட்டு தினக்கூலி மக்களுக்கு ஒரு விபத்து ஏற்பட்டிருந்தால் அவர்கள் எத்தனை மாதத்திற்கு மருத்துசெலவை தொடர வேண்டியிருக்கும், அவர்களின் உடல்நலகுறைவால் வருமானம் குறைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது,, சுற்றம் எத்தனை நாளைக்கு உதவி செய்ய முடியும்,,, அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மனைவியின் ஏக்கம் வேதனை எல்லாம் எவ்வளவு கொடூரமானது,,? இருக்கும் சிறுநகையை விற்று சமாளிப்பார்கள் நாளைடைவில் அதுவுமில்லாமல் வட்டிக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு செலவு செய்து வாழ்க்கை நகர்த்துவார்கள், திக்கற்ற காட்டில் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் நடந்து செல்வதை போன்ற ஒரு சூழல்தான், இதுபோன்றவர்களுக்கு அளிக்கும் ஒரு சிறுதொகையும் கூட அவர்களுக்க மிகப்பெரிய பலமே,,,,,

ஆனாலும் இப்படி உதவுவதில் நடைமுறைசிக்கல்கள் ஏராளமாக இருக்கவே செய்கின்றது என்றாலும் இதுபோன்ற சூழலை பார்த்தோ அனுபவித்தோ கடந்து வந்த உங்கள் நம்பிக்கையான நண்பர்களையோ தெரிந்தவர்களையோ உறவினார் சுற்றாத்தார்களையோ கலந்து பேசி பாருங்கள்,, அதன் வேதனையும் கொடூரமும் புரியும்,,, அறக்கட்டளை மூலமாக உதவிபுரியாவிட்டாலும் ஆரம்பகட்டத்தில் இயங்கியதை போல அந்தந்த நேரத்தில் ‌உதவிதேவைப்படுவோர்க்கு அந்தசமயத்தில் உதவ முன்வருபவர்களின் உதவிகளையாவது பெற்றுத்தரலாம் என்பது என் ஆலோசனை,,

சேக்காளி said...

// நிசப்தம்வழி உதவிபெற்று படித்த மாணவனொருவன் உள்ளூர் நிறுவனமொன்றில் கணக்காளராக பணிபுரிவதை உதாரணமாக சொல்ல முடியும். அந்த வேலையே தனக்கு நிறைவளிப்பதாக அந்த மாணவன் சொல்லிவிட்டான். அதில் எனக்கும் உடன்பாடே//
இது தான் வெற்றி சின்னையா.

Selvaraj said...


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இன்று காலையே உங்கள் நேர்காணலை படித்துவிட்டேன். மனதிற்கு நெருக்கமான ஒரு எழுத்தாளரை பற்றி தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு எழுத்தாளுமையின் இணையதளத்தில் உங்கள் நேர்காணலை படித்ததது மிக மகிழ்ச்சியாக இருந்தது. தேர்ந்தெடுத்து கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு உங்களின் யதார்த்தமான பதில்களும் அருமை.
(உங்கள் மூலம்தான் அவரின் தளத்தின் அறிமுகம் கிடைத்தது. சிங்கப்பூரில் அவர்மீது கொடுக்கப்பட்ட சிறுபிள்ளைத்தனமான ஒரு புகாரில் அவருக்கு ஆதரவாக நீங்கள் நிசப்தத்தில் கட்டுரை எழுதினீர்கள். கட்டுரை வாசித்துவிட்டு அவர் தளத்திற்கு சும்மா சென்று பார்த்தேன். மனிதர் என்னமாக எழுதிக்குவிக்கிறார்)

senthilkumar said...

//மற்றவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து ஆக்கப்பூர்வமான விமர்சங்களை விவாதிக்கும் திறமையும் உங்களை முழுமனிதனாக என்றோ தயார்படுத்திவிடாது//

மன்னிக்கவும். எனது எழுத்துப்பிழை .."தயார்படுத்திவிட்டது" என்பது சரி.

Saravanan Sekar said...

அன்புள்ள வா. ம ,

அருமையான நேர்காணல், தெளிவான பதில்கள். நிசப்தம் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு நேரடியான பதில்கள். முன்னோட்டமே நன்றாக வந்துள்ளது.

எங்கள் ஊரில் நடைபெறவுள்ள " " நிகழ்வுக்கு வர முடியாமல் போவதை நினைத்தால் வருத்தமே. நான் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை ஈரோட்டில் தான் இருந்தேன். அயல்தேச வாழ்க்கையினால் இது போன்ற மனதிற்கினிய உள்ளூர் நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் போவது வழக்கமாகிவிட்டது.

திரு.ஜெயமோகன் அவர்களோடு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்த போதிலும், எழுத்து பணியில் அவரது அசராத உழைப்பையும், தகுதியுள்ள மற்ற உழைப்பாளிகளை அறிமுகம் செய்யும் இது போன்ற செயல்களையும் பார்க்கும் போது, நிச்சயம் அவர் மீதான மதிப்பு கூடுகிறது. திரு.கிருஷ்ணன் போன்ற அவரது தீவிர வாசகர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

-சே.சரவணன்

ராஜகோபாலன் said...

The approach of GANDHI... Well said words... Congratulations.. Your winning will start once the govt/politicians starts against you..

சேக்காளி said...

//Your winning will start once the govt/politicians starts against you..//
நானும் சொல்லி பாத்துட்டேன் @ராஜகோபாலன் சார். கேக்க மாட்டேன் ங்கறாரு.