எவ்வளவு மோசமான நிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? எவ்வளவு பெரிய முரடர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஒன்றை எதிர்த்துக் குரல் கொடுக்கும் போது அரசாங்கம் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டுக் கொல்கிறது. கொன்றுவிட்டு 'வன்முறையை தடுக்கதான் சுட்டோம்' என்கிறார்கள். கலவரங்களை ஒடுக்கும் போது ஒன்றிரண்டு பேர்கள் இறந்து போனதாகச் சொல்வார்கள். ஆனால் தூத்துக்குடியில் இதுவரைக்கும் எட்டு அல்லது ஒன்பது பேர்கள் செத்திருக்கக் கூடும் என்கிறார்கள். முழுமையான கணக்கு தெரியவில்லை. ஒன்பது குடும்பங்களைத் தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள். அவர்களது குழந்தைகளை அனாதைகளாக்கியிருக்கிறார்கள். பச்சையான அநீதி இது. மாலை வரைக்கும் போலீஸ் வேட்டையாடிக் கொண்டிருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மேலிடத்துக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவ்வளவு குரூரமான அரச வன்முறை சமீப காலத்தில் இன்றுதான் நிகழ்ந்தேறியிருக்கிறது. அவரவர் சொந்த ஊரிலேயே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவதை போன்ற அவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழக அரசு அதைச் செய்து காட்டியிருக்கிறது.
முழுமையான விவரங்கள் நாளை தெரியக் கூடும் அல்லது கடைசி வரைக்கும் விவரங்கள் வெளியில் தெரியாமலேயே பார்த்துக் கொள்வார்கள். இனி கதைகள் கட்டவிழ்த்துவிடப்படும். இறந்து போனவர்கள் மீதுதான் தவறு என்று வரிசையாக செய்திகள் வரும். 'அவர்கள் ஒன்றும் தியாகிகள் இல்லை' என்று எழுதுவார்கள். இப்பொழுதே கூட 'மக்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்கள்' என்று ஒரு தரப்பினர் பேசாத தொடங்கியிருக்கிறார்கள்.
இப்படியான polarizationதான் மிக அபயாகரமானது. நமக்குள்ளேயே பிரிந்து கிடக்கிறோம். தம் சொந்த மக்களையே குருவி சுடுவதைப் போல சுட்டுத் தள்ளியவர்களை எதிர்த்துதான் இந்தத் தருணத்தில் பேச வேண்டுமே தவிர மக்களை குற்றவாளிகளையாக்கி கூண்டில் ஏற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதை 'தூத்துக்குடி சம்பவமாக' மட்டும் பார்க்க முடியவில்லை. சகல மக்களுக்கும் இதுவொரு எச்சரிக்கை மணி. எதிர்த்து பேச எத்தனித்தால் 'இதுதான் கதி' என்று நேரடியாக மிரட்டியிருக்கிறது அரசாங்கம்.
ஒன்றைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாமானிய மனிதனின் மனதில் பயத்தை விளைவித்து அவனை ஒடுக்கிவிடலாம் என்று நம்புவதை போன்ற முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. தனிமனிதர்களை அப்படி மிரட்டலாம். சமூகத்தையே வன்முறையைக் கட்டி மிரட்ட முயற்சித்தால் ஒரு கட்டத்தில் திமிறிவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு. நீறு பூத நெருப்பாக விரவிக் கிடந்த வெறுப்பை ஊதி விட்டிருக்கிறார்கள். இந்த வடு என்றைக்கும் அழியாது. தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு தினம் இன்று. தமிழக அரசு தனது முடிவுரையை தூத்துக்குடி மக்களின் ரத்தத்தில் எழுதியிருக்கிறது.
துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலிகள். அவர்களது குடும்பங்கள் மனவுறுதி பெறட்டும்.
போராட்டக்காரர்கள் மீது 'பிரிவினைவாதிகள்' 'தேசத்துரோகிகள்' என்று தயவு செய்து முத்திரை குத்த வேண்டாம். ஸ்டெர்லைட் மீது போராட்டக்காரர்கள் மட்டுமே எதிர்ப்பைக் காட்டவில்லை. அது சூழலைக் கெடுத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் நூறு கோடி ரூபாய் தண்டம் விதித்திருக்கிறது. ஆலை இனி இயங்க அனுமதிக்க முடியாது என்று மாசுக் கட்டுப்பட்டு வாரியம் சொல்லியிருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஆலை இனி இயங்கக் கூடாது என்றுதான் அந்த ஊர் மக்கள் கேட்கிறார்கள். அதுவும் திடீரென்று கிளம்பி வரவில்லை. ஆண்டுக்கணக்கில் ஆலையை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் மனசாட்சியே இல்லாமல் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.
ஒரு வினாடி யோசித்துப் பார்க்கலாம்- வீட்டு முன்பாக குப்பை கிடந்தால், வீதியில் சாக்கடை தேங்கினால் புகார் அளிக்க விரும்புகிறவர்கள்தான் நாம். அந்த ஊரில் காற்றும் நீரும் கெட்டு, மக்களுக்கு அதன் பாதிப்புகள் தெரிகின்றன என்கிறார்கள். தம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று பயப்படுகிறார்கள். அவர்கள் அந்த ஆலையை மூடச் சொல்லிக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? நாமாக இருந்தாலும் அதைத்தானே கேட்டிருப்போம்?
ஒரு வினாடி யோசித்துப் பார்க்கலாம்- வீட்டு முன்பாக குப்பை கிடந்தால், வீதியில் சாக்கடை தேங்கினால் புகார் அளிக்க விரும்புகிறவர்கள்தான் நாம். அந்த ஊரில் காற்றும் நீரும் கெட்டு, மக்களுக்கு அதன் பாதிப்புகள் தெரிகின்றன என்கிறார்கள். தம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று பயப்படுகிறார்கள். அவர்கள் அந்த ஆலையை மூடச் சொல்லிக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? நாமாக இருந்தாலும் அதைத்தானே கேட்டிருப்போம்?
இன்றைய அரசு எந்தவிதத்திலும் வலுவில்லாதது. மக்களின் போராட்டங்களை, எதிர்ப்புணர்வை கையாளத் தெரியாத அரசு இது. வலுவில்லாதவன் தன்னை எதிர்த்து பேசுகிறவனை கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பதைப் போல இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர்களிடமும் துப்பாக்கியும் சுட்டுத் தள்ள காவலர்களும் இருக்கிறார்கள்.
தூத்துக்குடி சம்பவங்களின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது. விரல்களுக்குள் பயம் பரவுகிறது. குரூரமான காட்சிகள் அவை. காவல்துறையின் வேகம் அச்சமூட்டுகிறது. மக்களைக் காக்க வேண்டியவர்கள் சர்வசாதாரணமாக துப்பாக்கியின் ரவைகளை அவர்கள் நெஞ்சில் செலுத்துகிறார்கள். இவையெல்லாம் ஆட்சியாளர்களுக்குத் தெரியாமலா நடந்திருக்கிறது?. இன்றைக்கு தூத்துக்குடியில் நிகழ்ந்தது நாளை எந்த ஊரில் வேண்டுமானாலும் நடக்கலாம். அங்கு பாய்ந்த தோட்டாக்கள் நம் நெஞ்சங்களை குறி பார்க்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?
எழுதியும் பேசியும் வருவதனால் எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை. ஒவ்வொரு தரப்பு மக்களும் இந்த அநியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும். சகல திசைகளிலும் அக்கிரமங்களைப் பற்றி பேச வேண்டும். அதுதான் ஒரே வழி. படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே பயமூட்டுகிற சம்பவம் இது. எதிரிக்கும் கூட இப்படியொரு சூழல் அமைந்துவிடக் கூடாது என்று பதறுகிறேன்.
தமிழக அரசுக்கு கடுமையான கண்டனங்கள். இப்படியொரு சம்பவத்துக்கு முழுமையான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்சியில் தொடர தமிழக அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையுமில்லை. எதிர்காலத்திலாவது தார்மீகம் என்ற சொல்லுக்கெல்லாம் அர்த்தம் தெரிந்தவர்கள் நம்மை ஆள வேண்டும் என்று கடவுளை பிரார்தித்துக் கொள்கிறேன்.
10 எதிர் சப்தங்கள்:
பேயாளும் நாடு. பிணம் தானே விரும்பும்.
காவல்துறை தன்னிச்சையாக செயல்பட்டு இருக்க முடியாது....ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் ஆணையிட்டு இருக்க முடியும் அவர்கள் கண்டிப்பாக் தண்டிக்கப்படவேண்டும்
எடப்பாடியோ பன்னிர் செல்வமோ அல்லது அவர்கள் சார்பாக அமைச்சர்களோ போராட்ட குழுவை அல்லது அவர்கள் சந்திக்க மறுத்தால் 3,4 விளக்க கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்றைய வன்முறையை தடுத்து இருக்கலாம். எடப்பாடிதான் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார் என்று எனக்கு தோன்ற வில்லை. ஆனால் பிரச்சனையில் இருந்து தப்பி ஓடும் அவர் குணம் இன்று அவருக்கு முடிவுரையை எழுதி விட்டது.
நேற்று கலெக்டர் 144 போடும்போதே எடப்பாடி, பன்னி செல்வமும் உஷார் ஆகி இருக்க வேண்டும். முடிந்தால் நேற்று இரவு கூட அமைச்சர்களை அனுப்பி போராட்ட குழுவோடு பேச முயற்சி செய்து இருக்க வேண்டும். இன்றைய துப்பாக்கி சூடு எடப்பாடியின் முழு பொறுப்பு.
தமிழ் நாட்டை யாழ்ப்பாணம் போல சுடுகாடாக மாற்ற சில சக்திகள் முயற்சி செய்வதாக சிலர் கூறி வருவது உண்மையாகி வருகிறதோ என்ற பயம் வருகிறது. உயிரழந்த சகோதர சகோதரிகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்
கோபமும் வெறுப்பும் வேதனையும் கலந்த மனநிலையாக இருக்கிறது. காக்கா குருவிய சுடுறது மாதிரி சுட்டு கொன்னுருக்கானுங்க.
Every **** has a share or link with these business men in a way or other. Both the parties haven't stopped it when they are /were in power. Don't know if people will realize that 500 , 1000 given to them during vote is to get full hold on their livelihood. Even now all the focus is on police , but the real reason is the Govt. Collector, CM to be specific.
- Somesh
இளைஞர்கள் இந்த பணமுதலைகளிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் காலம் வந்துவிட்டது.
நம் மனநிலையும் மாற வேண்டும். போலீஸ் யாரையாவது என்கவுண்ட்டர் செய்யும் போது (அது ரௌடியாக இருக்கலாம்,சமூக விரோதியாக இருக்கலாம் அல்லது வெறும் பழி சுமத்தப்பட்டவர்களாக கூட இருக்கலாம்) பெரும்பாலோனோர் என்கவுண்டர்க்கு ஆதரவாகவே கருத்து தெரிவிப்பார்கள். போலீஸின் கடமை குற்றவாளியை பிடித்து குற்றத்தை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தி அதிகபட்ச தண்டனை வாங்கி தருவது மட்டும்தான் கொலை செய்வது அல்ல. சாதாரண மனிதனின் கைக்கு அதிகாரம் கிடைத்தால் அவனின் குணநலன் மாறுவது போன்று காவல்துறையினரின் கையில் உச்சபடிச்ச அதிகாரம் இருக்கும்போது தன் அதிகாரத்தை சக மனிதன்மீது காட்டுகிறான் - இன்னொரு உண்மை - மேலதிகாரிகளின் உத்தரவுக்கு பணிவதுமட்டும்தான் கீழ்நிலை காவலர்கள் வேலை அதைத்தவிர அவர்களுக்கு செய்வதற்கொன்றுமில்லை.
மதுபான எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தவனுக்கு பதவி உயர்வு கொடுத்தது இந்த அரசாங்கம் இதை பார்த்துக்கொண்டிருக்கும் கீழ்நிலை காவலன் என்ன செய்வான் தன் பதவி உயர்வுக்காக யாரையாவது பொதுவில் வைத்து அடிக்க நல்ல சந்தர்பத்திற்காக காத்திருப்பான். வேண்டுமென்றால் பொறுத்திருந்து பாருங்கள் உரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்ற காவலர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கிறார்களா இல்லையா என்று.
இனியாவது காவல்துறை யாரையாவது என்கவுண்டர் செய்தால் அது ரவுடியாகவே இருந்தாலும் எதிர்த்து குரல் கொடுங்கள். என்கவுண்டர் என்ற கொலைக்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள்.
அடுத்தவாரத்திலிருந்து பின்வரும் சில செய்திகளை பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் நாம் எதிர்பாக்கலாம்.
1. விபத்தில் காயம்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்த மனிதநேயமிக்க காவல்துறையினர்.
2. உணவில்லாமல் தவித்த ஆதரவற்ற முதியவருக்கு உணவு வழங்கிய மனிதநேயமிக்க காவல்துறையினர்
3. திடீரென வலியால் துடித்த கர்ப்பிணி பெண் ஒருவரை தங்கள் வாகனத்தில் மருத்துவமனையில் சேர்த்த மனிதநேயமிக்க காவல்துறையினர்
4. சாலையை கடப்பதற்காக குழந்தைகளுக்கு உதவிசெய்த மனிதநேயமிக்க காவல்துறையினர்
5. கொட்டும் மழையில் மக்களுக்காக தங்கள் இன்னல்களையும் பாராமல் பணிசெய்யும் மனிதநேயமிக்க காவல்துறையினர்.
6. கடுமையான வெய்யிலிலும் மக்களுக்காக பணி செய்யும் மனிதநேயமிக்க காவல்துறையினர்
Worst is FIR on people are going to hospital... Nothing is learned by this Govt from the incident.
ஒரு மூதாட்டியை ஈவு இரக்கமின்றி கூட்டம் சேர்ந்து கொன்ற சமூகம்தான் இது. தனி ஒருவனாய் இருக்கும்போது கைபிடிக்கும் நேர்மை குழுவில் இருப்பதில்லை. குழு உளவியல் போலீசுக்கும் பொருந்தும். போலீஸ்காரர்கள் கொஞ்ச பேராக இருக்கும்போது போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். போலீஸ் குவிக்கப் பட்டவுடன் எப்போதோ தம் மீது பொதுமக்கள் காட்டிய வெறுப்புணர்வுக்கு பழி வாங்க தலைப் படுகிறார்கள். மேலிட ஆணை என்றாலும் கண்மூடித் தனமாக சுட வேண்டிய அவசியம் இல்லை. நம்மவர்கள்தானே என்ற உணர்வு போலீஸ்காரர்களுக்கு இருந்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்தருக்க க்க முடியும். இது போன்ற போராட்டங்களில் வலுவான தலைமை அவசியம். அப்படி இல்லாமல் போனதே இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம்.
Post a Comment