May 24, 2018

நான் இந்துதான்..ஆனால்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எதிர்க்கிறவர்களில் பல சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட், திராவிடர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று சகலரும் இருக்கிறார்கள். கண்டிப்பவர்களில் இந்துத்துவ ஆதவர்களும் கூட உண்டு. ஆனால் துப்பாக்கிச்சூட்டை ஆதரித்து எழுதுகிறவர்கள் பின்னணியை அலசிப் பார்த்தால் 'இந்துத்துவ ஆதரவாளர்' என்ற ஒற்றைப் புள்ளிதான் மையமாக இருக்கிறது. ஒரேயொரு விதிவிலக்கை கூட பார்க்க முடியவில்லை என்பது அலறச் செய்கிறது. 

காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டை ஆதரிப்பவர்கள் 'வன்முறைக்கு பதில் வன்முறைதான்',  'அரசாங்கம் வன்முறையை கையில் எடுப்பது தவறே இல்லை' என்றெல்லாம் பேசுகிறார்கள்.மனிதாபிமானதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அடித்து நொறுக்குங்கள் என்று பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வது? இதில் வெறுமனே சமூக ஒழுங்கு மட்டும்தான் பின்னணியில் இருக்கிறதா? இதன் உளவியல் என்னவாக இருக்கும் என்று யோசித்து பார்க்க வேண்டியிருக்கிறது. 

'காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்' என்று சொல்லும் போது குதூகலிக்கிற மனநிலை, 'ஒடிசாவில் மாவோயிஸ்ட்கள் இறந்தார்கள்' என்னும் போது உற்சாகமடைகிற தேசியவாத சிந்தனையை, தமது தேச பக்தி உணர்வை எந்தவொரு அடிப்படையான புரிதலுமில்லாமல் 'தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு' என்னும் போதும் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்றுதான் ஆரம்பத்தில் தோன்றியது. குருட்டுத்தனமாக இருக்கிறார்கள் என்றுதான் நினைக்க வைத்தது. ஆனால் இது மேம்போக்கான புரிதல். இதில் தேச பக்தி என்பதெல்லாம் எதுவுமில்லை. 'சமூக ஒழுங்கு நிலை' என்பதும் காரணமில்லை. அதையெல்லாம் தாண்டி ஒரு எளிமையான காரணம் இருக்கிறது. அபாயகரமான காரணம்.

'எனது இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவாக நிற்கும் அரசாங்கம் எதைச் செய்தாலும் சரி' என்பதுதான் அடிநாதமாக இயக்குகிறது. இவ்வளவு முரட்டுத்தனமாக இருக்கிறார்கள். இதை நியாயப்படுத்த ஒரு காரணத்தை தேடுகிறவர்கள் 'வன்முறையாளர்கள் ஒடுக்கப்பட்ட வேண்டும்' என்று பேசுகிறார்கள். 

உண்மையிலேயே இவர்கள் வன்முறைக்கு எதிராகத்தான் பேசுகிறார்கள் என்றால் இரண்டு கேள்விகளை முன்வைக்கலாம். நாமும் கேட்டுப் பார்த்துக் கொள்ளலாம். 

இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் இதே  போன்றதொரு பிரச்சினை திமுக ஆட்சியில் இருக்கும் போது நிகழ்ந்திருந்தாலோ அல்லது மேற்குவங்கத்தில் நிகழ்ந்தாலோ இன்று துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஆதரிப்பவர்கள் 'நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம்..' என்றும் 'வன்முறையாளர்களை ஒடுக்க வேண்டும்'  தான் பேசியிருப்பார்களா என்றும் கேட்க வேண்டியிருக்கிறது. திமுகவோ, சமாஜ்வாதி கட்சியோ, திரினமூலோ சிக்கியிருந்தால் பிரித்து மேய்ந்திருக்கமாட்டார்களா? தோரணம் காட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். 

இன்னொரு கேள்வி- இதே தாமிர ஆலையை ஒரு கிறித்துவ அல்லது இசுலாமியரின் நிறுவனம் நடத்தியிருந்தால் 'ஆமாம், தாமிர உற்பத்திதான் முக்கியம்' என்று நிறுவனத்துக்கு ஆதரவாக பேசியிருப்பார்களா என்றும் கேட்கலாம். மனசாட்சிப்படி அவர்கள் பதில் சொன்னால் இரண்டுக்குமே 'இல்லை' என்றுதான் பதில் கிடைக்கும். 

இப்பொழுது மட்டும் ஏன் அரசாங்கத்துக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. மிகத் தெளிவாக மதம், கட்சி சார்ந்த அரசியல் உள்ளேயிருக்கிறது. 

மேலே பாஜக, மாநிலத்தில் அந்த பாஜக என்ன செய்தாலும் விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிற ஆட்சி  இருக்கிறது என்பதால் துப்பாக்கிச் சூட்டை ஆதரிக்கிறார்கள். தூதுக்குடிவாசிகளின் இந்தப் போராட்டத்தை எதிர்க்கிறார்கள், கொச்சைப்படுத்துகிறார்கள். துப்பாக்கிச் சூட்டை ஆதரிப்பவர்கள் அத்தனை பேரும் நுணுக்கமாக புரிந்துதான் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் இதுதான் துப்பாக்கிச் சூட்டை ஆதரிப்பவர்கள் உள்ளிருக்கும் மனநிலை. இதுவே அவர்களை இயக்குகிறது. 

இறந்தவர்கள் நம் மக்கள் என்ற பிம்பம் கூட உருவாகிவிடக் கூடாது என்று 'மிஷனரிகள் பின்னால் இருக்கிறார்கள்' 'இறந்தவர்கள் கிறித்துவர்கள்' என்று மனசாட்சியே இல்லாமல் செய்திகள் பரப்பப்படுகின்றன.

அரசியலும் மதமும் சேர்ந்து நம் மனிதாபிமானத்தைக் கொல்வதைத்தான்  நம்மைச் சூழ்ந்திருக்கும் அபாய மேகம் என்று கருத வேண்டியிருக்கிறது. 'அடுத்தவன் செத்தாலும் பரவாயில்லை..நம் சித்தாந்தம் நிலை பெற வேண்டும்' என்பதுதான் மிகக் குரூரமானது. அதற்காக எப்படியான கலவரம் நடந்தாலும் சரி, எத்தனை பேர் செத்தாலும் பிரச்சினையில்லை என்பதுதான் பயமூட்டக் கூடியது. காட்டுமிராண்டித்தனமானது. இதைச் சொன்னால் 'திமுக செய்யாத அராஜகமா, திரிணமூல் செய்யாத ரவுடித்தனமா' என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். நம் வாயை அடைப்பார்கள். எந்தவொரு அரசியல்கட்சியும் ஏதாவதொரு வகையில் மக்களை வதைத்திருக்கும். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக, மாநிலமே திரண்டு எதிர்க்கும் போதும் துப்பாக்கியைத் தூக்குகிற தைரியம், அதை ஆதரிக்கும் மனநிலை மதவாதத்தை தவிர வேறு எந்தக் சித்தாந்தத்துக்கும் இருக்கும் எனச் சொல்ல முடியவில்லை.

ஒருவன் தம் மதத்தை பின்பற்றுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அவன் தம் மதத்தை உயர்வாக கருதுவதையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதை உணர்ச்சியூட்டும் ஒரு வஸ்துவாக, உங்களையும் என்னையும் பிரித்துவைக்கும் ஆயுதமாக மாற்றும் போது அதன் அபாயத்தை பற்றி பேச வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் அது உருவாக்கவிருக்கும் வினைகளை யோசிக்க வேண்டியிருக்கிறது. 'எல்லாமே மாற்று மதத்தின் சதி' என்று திரும்பத் திரும்பச் சொல்லும் போது எளிய மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள். polarization என்று இதைத்தான் சொல்வார்கள். 'இந்துத்துவம் பேசுகிறவர்கள் எல்லோரும் ஒரு பக்கம்' 'மற்றவர்கள் எல்லோரும் இன்னொரு பக்கம்' என்று நடுவில் தெளிவான ஒரு கோடு போடப் படுகிறது. மேம்போக்கான புரிதல் கொண்ட எளிய மக்களை 'நீ இந்து..இந்தப் பக்கம் வா' என்று இழுப்பதற்கான சூழல் இது. 

'போராட்டத்தை கிறித்துவம் முன்னெடுக்கிறது' 'இசுலாமியன் தீவிரவாதி' என்று திரும்பத் திரும்ப பேசும் போது 'ஒருவேளை அப்படித்தானா' என்று மிக எளிதில் நம்பத் தொடங்குவார்கள் சாமானிய மனிதர்கள். கோட்டுக்கு அந்தப் பக்கம் மக்களின் எண்ணிக்கை சிறுகச் சிறுக அதிகமாகும். 

இந்து மதத்துக்கு எதிராக பேசுகிறவனில்லை நான். இந்து மதத்தைச் சார்ந்தவன். நீ வணங்கும் அம்மனையும், முருகனையும்தான் நானும் வணங்குகிறேன். ஆனால் 'சக மனிதன் சாகும் போது அதைக் கொண்டாடு' என்று என் மதம் எனக்குச் சொல்லித் தந்தாக நினைவில் இல்லை. 'இன்னும் பத்துப் பேரை போடு' என்று எப்படி உனக்கு தோன்றுகிறது? உன் அம்மாவிடமிருந்து நீ உறிஞ்சியதில்லை இவ்வளவு வன்மத்தை. இடையில் உனக்குள் உருவாகி வளர்ந்து நிற்கும் இந்த வன்ம அரக்கனைப் பற்றி ஒரு கனமேணும் யோசிப்பதுண்டா? செத்துப் போனவனின் குழந்தைகளும் நம் குழந்தைகளைப் போலத்தானே? காய்ந்த இரத்தத்துடன் அவன் உடல் வீடு அடையும் போது தவித்துதானே போவார்கள்? குண்டுகள் துளைக்கும் போது அவனுக்கும் நம்மைப் போலத்தானே வலிக்கும்?  அவன் என்ன சித்தாந்தத்தை வேண்டுமானாலும் பின்பறட்டட்டும். அவனது குடும்பமும் நமது குடும்பங்களைப் போன்றதுதானே? எந்த தத்துவம் அடுத்தவனின் மரணத்தை கொண்டாட உனக்குச் சொல்லித் தந்திருக்கிறது? ஆயிரம் ஆண்டுகாலமாக வளர்ந்து வருவதாகச் சொல்லும் ஒரு மதம் இன்னொருவனைக் கொன்றுதான் வளர விரும்புகிறதா? கொல்லாமையை போதிக்கும் மதத்தை பின்பற்றுகிறவனா நீ?

பேச எவ்வளவோ இருக்கின்றன. மதக் கொடி கண்ணை மறைக்கும் போது எதையும் பேச வேண்டியதில்லை. இறந்து கிடப்பவனின் இரத்தம் காயட்டும். விடுங்கள். அவனது குழந்தைகளின் கண்ணீர் உலரட்டும்.

11 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இரத்தம் காயட்டும்//
இரத்தம் காயலாம்
காயம் ஆறலாம்
தழும்புகள் மறையாது.
தடவிப் பார்க்கும் போதெல்லாம் இரத்தத்தையும்,காயத்தையும் அதற்கான காரணத்தையும் ஞாபகப் படுத்திகொண்டே தான் இருக்கும்.

Raja said...

அனைத்து பிரச்சனைகளுக்கும் மதமே மூல காரணம். பல லட்சம் கோடி வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் தோன்றியது. வெறும் 5000 வருடங்கள் வரலாறு தான் உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும்!! மனிதர்கள் தாங்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளிடம் பயப்படுவது போல, தாங்கள் உருவாக்கிய சிலைகளிடம் பயப்படுகிறார்கள், வேண்டுகோள் விடுக்கிறார்கள். உயிரை விடுகிறார்கள்.

அடித்து கொண்டு சாகிறார்கள். இதுவரை எந்த கடவுளும் ஒரே ஒரு தடவை இந்த மக்களை பார்த்தால்தான் என்ன? ஒரு விரலையாவது காட்டலாமே, இந்த பாவப்பட்ட ஜென்மங்களிடம். அது என்ன, எல்லா கடவுளும் இந்த விஷயத்தில் இவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள்!!

Avargal Unmaigal said...

மிக தெளிவாகவும் அழகாகவும் சொல்லி சென்று இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்..... இதை நான் என் தளத்தில்( https://avargal-unmaigal.blogspot.com/) மறுபதிவு செய்யலாமா?

Selvaraj said...

துப்பாக்கிசூட்டை ஆதரிக்க எப்படித்தான் இவர்களுக்கு மனசு வருகிறதோ

MI CREATIONS said...

இந்துத்துவத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள் நாளுக்குநாள் அதிகபடுத்தபடுகிறார்கள், அவர்களின் பகுத்தறிவை முடக்கி. சரி இவர்கள் மற்ற மதத்தினரை என்ன செய்ய முடிவு எடுத்திருக்கிறார்கள். அதை தெளிவாக விளக்கினால். அவ்வாறு சிரமப்படாமல் செய்து விடலாம். எல்லா முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் மறுபடியும் இந்துவாக வேண்டுமா. அவ்வாறு மாறவேண்டும் என்றால் எந்த சாதிக்கு மாறுவது. அல்லது எல்லோரையும் அழித்தாகாவேண்டும் என்றால் எல்லொரையும் ஒரு இடத்தில் கூட்டி அழித்துவிடலாமே.

Anonymous said...

'கோட்டுக்கு அந்தப் பக்கம் மக்களின் எண்ணிக்கை சிறுகச் சிறுக அதிகமாகும்' இதற்கு யார் காரணம்? மதத்தின் பெயரால் தீவிரவாத விதையை விதைத்தது யார்? தடை உத்தரவை மீறி மக்களை போராட்டத்திற்கு அழைத்து சென்றது யார்? கிராம கூட்டங்களில் காவல்துறையை அடித்து விரட்டுங்கள் என்று பொதுமக்களை தூண்டியது யார்?. வழிபாட்டு தலங்களை அரசியல் மையங்களாக மாற்றி கொண்டிருப்பது யார? மக்களின் மரணத்தை கொச்சைபடுத்துபவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராயின் அப்பிறவிகள் இழி பிறப்பே. ஆனால் மக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு குழப்பத்தை விளைவிக்கும் அந்நிய நாட்டின் கைகூலிகளாக இருப்பவர்கள் அவனையும் விட கேடுகெட்ட இழிபிறப்பே...

Unknown said...

இந்தா வந்துட்டாங்கல்ல !!!!

சேக்காளி said...

//மதத்தின் பெயரால் தீவிரவாத விதையை விதைத்தது யார்? தடை உத்தரவை மீறி மக்களை போராட்டத்திற்கு அழைத்து சென்றது யார்? கிராம கூட்டங்களில் காவல்துறையை அடித்து விரட்டுங்கள் என்று பொதுமக்களை தூண்டியது யார்?. வழிபாட்டு தலங்களை அரசியல் மையங்களாக மாற்றி கொண்டிருப்பது யார?//
துப்பாக்கி சூடு நடத்தியாவது ஆலையை நடத்த வைக்கணும் ன்னு துடிப்போட செயல் படுறது யார் ங்கறதையும் சேத்துக்கோங்க
Anonymous எசமான் or எசமானி

Anonymous said...

துப்பாக்கி சூடு நடத்தியாவது ஆலையை நடத்த வைக்கணும் ன்னு துடிப்போட செயல்பட்டது நான் முன்னூறு ரூபாய் வாங்கி வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசாங்கம்தான் சேக்காளி எஜமான். உங்களுடைய கேள்விக்கு பதில் கிடைத்தது என்று நம்புகிறேன். என்னுடைய கேள்விகளை வைத்து என்னை சங்கி சாக்கடையில் இணைத்துவிடாதீர்கள். அவர்களை பகுத்தறிவுள்ள யாரும் அரவணைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கும் சற்றும் குறைவில்லாத அவர்களுடைய இணையர்கள் அனைத்து மதத்திலும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களை காட்டிதான் 'கோட்டுக்கு அந்தப் பக்கம் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறார்கள்' என்பதுதான் என்னுடைய வாதம். நன்றி.

சேக்காளி said...

//உங்களுடைய கேள்விக்கு பதில் கிடைத்தது என்று நம்புகிறேன்//
ஆமா கிடைச்சிடுச்சு.

Anonymous said...

கருத்து சரியானதுதான். ஆனால், இந்த எதிர்வினையும் அவசியம், காலத்தின் கட்டாயம். எதிர் பக்கம் அதிகரித்து வரும் தீவிர மதமாற்ற திருட்டு கும்பல்களின் அட்டூழியங்கல் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.

எதிர் வினை இல்லையென்றால், இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து point-of-no-return வரும் போது காப்பாற்ற ஆளிருக்காது... 1300 AD என்ன நடந்ததோ அது இங்கு நடக்கும். இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே காரணத்தால் தான் அமைதி நிலவுகிறது. எப்போது அது மாறுகிறதோ, அன்று மேற்கு வங்கத்திலும், காஷ்மீரிலும், கேரளாவிலும் நடக்கும் பிரச்னைகள் நாடெங்கும் நடக்கும்.