May 3, 2018

அயோக்கியத்தனம்

முடிந்தவரை தேர்வுகளை நமக்கு பழக்கமான இடங்களில் எழுத வேண்டும். அது நம்மை மனதளவில் கூடுதல் பலமிக்கவர்களாக உணரச் செய்யும். தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் பேசிப் பார்த்தால் தெரியும். 'நம்ம ஸ்கூலிலேயே சென்டர் இருந்தால் நல்லா இருக்கும்' என்பார்கள். அதற்காக பகீரத முயற்சிகளையும்  எடுப்பார்கள். நமக்கே தெரியுமல்லவா? ஏதேனும் தேர்வுகளை வெளியிடங்களில் சென்று எழுதும் போது நம் விரல்களுக்குள் ஊடுருவியிருக்கும் இனம்புரியாத பதற்றம் குறித்து. அந்த இடத்திலும் சூழலிலும் ஒட்டிக் கொள்ளவே சாத்தியமில்லாமல் இருக்கும். கல்லூரிக் காலங்களிலேயே இப்படியென்றால் பள்ளி மாணவர்கள் இன்னமும் பிஞ்சுகள். தேர்வு எழுதும் போது அவர்கள் செளகர்யத்துக்கு ஏற்ப எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அப்படியெல்லாம் ஓர் அமைப்பினால் செய்து தர முடியவில்லையென்றால் நீதிமன்றங்கள் காறி உமிழ்ந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ம்க்கும். 

என்ன நடக்கிறது இங்கு? 

தமிழக மாணவர்களை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி தேர்வு எழுதச் சொல்லும் உரிமையை சி.பி.எஸ்.இ அமைப்பு தானாக எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பல தேர்வுகளை நடத்தும் சி.பி.எஸ்.இ மாதிரியான பெரிய அமைப்புகளுக்கு மாணவர்களின் அடிப்படை மனநிலை கூடத் தெரியாது என்றால் அவர்களுக்கு தேர்வுகளை நடத்த என்ன யோக்கியதை இருக்கிறது என்று புரியவில்லை. ஒரு மாநிலத்தில் எவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் தேர்வு எழுதப் போகிறார்கள், உத்தேசமாக எவ்வளவு தேர்வு மையங்கள் தேவைப்படும் என்பதைக் கூடக்  கணிக்க முடியாத ஒரு அமைப்பை எவ்வளவு கேவலமாக அர்ச்சித்தாலும் தகும். ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் சி.பி.எஸ்.இ செய்திருப்பது பச்சையான அயோக்கியத்தனம். 

நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் மிகக் கடினமாக இருக்கின்றன. அதற்கு மாணவர்கள் தயாரிப்புகளைச் செய்வதே பெரும்பாடாக இருக்கிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு இந்தத் தேர்வுமுறையே பழக்கப்படவில்லை. தனியாக ஆசிரியர்களை வைத்து தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த லட்சணத்தில் திருச்சி மாணவனுக்கு எர்ணாகுளமும், மதுரை மாணவனுக்கு கொச்சினும் தேர்வு மையங்கள் என்றால் அவன் பயணித்து, புது இடம் பழகி, தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது எவ்வளவு தூரம் சாத்தியம்?

வேறு எந்த மாநிலத்துக்கும் இந்தப் பிரச்சினை இல்லை. அந்தந்த மாநில மாணவர்கள் அவரவர் மாநிலத்திலேயே தேர்வு எழுதுகிறார்கள்.தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தவொரு இளக்காரம்? எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. 'தூக்கி கனம் பார்க்கிறார்கள்' என்று. அப்படிதான் இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஏற்கனவே தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. பலவிதங்களில் எதிர்ப்பினைக் காட்டிவிட்டது இந்த மாநிலம். அப்படியிருந்தும்  'நீ என்னவோ செஞ்சுக்க.நான் இப்படித்தான் இருப்பேன்' என்று தமிழர்களிடம் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது? திமிர் இல்லையா? யாருடைய எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறது இந்த சி.பி.எஸ்.இ?

இத்தகைய சில்லறைத்தனத்தை வெறுமனே நிர்வாகக் காரணங்கள் என்று மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அது அப்பட்டமான சால்ஜாப்பு. கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட இருபது லட்சம். இவ்வளவு மாணவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்கி தேர்வுகளை நடத்துகிறார்கள். பத்தாம் வகுப்புக்கு மட்டுமே இந்த எண்ணிக்கை. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை தனிக்கணக்கு. ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தேர்வு நடத்துகிற அனுபவமும், திறனும் கொண்ட அமைப்புதான் சி.பி.எஸ்.இ. நீட் தேர்வினை தமிழகத்தில் அதிகபட்சம் ஐம்பதாயிரம் பேர் எழுதக் கூடுமா? அந்த எண்ணிக்கை ஒரு லட்சமாகவே இருக்கட்டுமே. இருபது லட்சம் மாணவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்குகிற ஒரு அமைப்பினால் ஒரு லட்சம் பேருக்கு தேர்வு மையங்களை ஒதுக்க முடியாதா என்ன? நம்புகிற மாதிரியாகவே இருக்கிறது? யாரிடம் பூ சுற்றுகிறார்கள்?

இந்த கூத்துக்குள் நம் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேறு பல்லைக் கெஞ்சுகிறார். 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்காதாம்'. அப்படியென்றால் சி.பி.எஸ்.இ மாணவர்களும் மெட்ரிகுலேஷன் மாணவர்களும் நாசமாகப் போகட்டும் என்று அர்த்தமா? அவனும் தமிழ்நாட்டு மாணவன் தானே? தன் மாநிலத்தைச் சார்ந்த எந்தவொரு மாணவனுக்கு பிரச்சினை என்றாலும் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டியதில்லையா? 'இவனுக்கு பாதிப்பில்லை..அவனுக்கு மட்டும்தான் பாதிப்பு' என்று பேசுவது எவ்வளவு மோசமானது? இது ஒரு வகையில் தமிழக மாணவர்கள் மீதான மனரீதியிலான தாக்குதல் என்பதைக் கூடவா புரிந்து கொள்ள முடியவில்லை? 

மிகக் கடினமான தேர்வு ஒன்றை எழுதப் போகிற மாணவனை மாநிலம் கடத்துவது போன்ற பாவம் வேறில்லை. அதை எந்தவிதமான கூச்சமுமில்லாமல் செய்கிறார்கள். சமீப காலமாக தமிழகத்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் சதிகள் அரங்கேறுகின்றன. அப்பட்டமாகத் தெரிகிறது. வடக்கத்திய அமைப்புகள் என்ன செய்தாலும் மாநில அரசு ஒத்து ஊதுகிறது. இவ்வளவு மோசமான மத்திய- மாநில அரசு கூட்டணியை இதுவரை தமிழகம் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. இது தமிழகத்துக்கு பேராபத்தை விளைவிக்கப் போகிறது. தமிழகம் இப்பொழுது காட்டிக் கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வு எந்தவிதத்திலும் போதுமானதில்லை. எல்லாவற்றையும் அசிரத்தையாக எடுத்துக் கொள்கிறார்கள். 'இவனுக இவ்வளவுதான்' என்று நினைத்தபடியே நம் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் இத்தகைய அயோக்கியத்தனங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவதைத் தவிர வேறு எதுவும் வழியில்லை. 

12 எதிர் சப்தங்கள்:

Suresh said...

கண்டிப்பாக மிக பெரியா எதிர்ப்பை அனைத்து வழிகளிலும் காட்ட வேண்டும்.... மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமையை அனைத்து வழிகளிலும் ஆரம்பிக்க வேண்டும்...

Unknown said...

Simply we condemn and pass the situation. Definitely this is a big very injustice to our kids.. We are in a great need to fight against this..

Anonymous said...

யோவ், அங்க ஒருத்தர்தான் வெளி மாநிலங்களுக்கு வர்றவங்களுக்கு வசதி செஞ்சு தர்றேன்னு பந்தி விரிச்சிருக்காரு. அவருகிட்ட போவ வேண்டியதுதானே. ஆனா அவரு ஆளோட சாதி பாத்துதான் பண்ணுவாரு.

Kumar said...

It's painful.. What ongoing in the court now a days... Even court ask government to follow and they not follow.. Why court are expecting to follow only a common man... The central government have big strartagy to destroy Tamilnadu...

Unknown said...

அயோக்கியத்தனத்தை தவிர வேறொன்றும் இல்லை

Selvaraj said...

மத்திய,மாநிலஅரசு மற்றும் நீதிமன்றங்களின் மோசமான கூட்டணி

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொரு நிலையிலும் கூட்டாச்சி தத்துவம் அடி வாங்கி கொண்டு உள்ளது என்பதை நாம் அனைவரும்-உச்ச நீதிமன்றம் உட்பட-கையை பிசைந்து கொண்டு செய்வது அறியாமல் திகைத்து போய் நிற்கிறோம்.. வாழ்க வளமுடன்

Anonymous said...

Modi down! down !

அன்பே சிவம் said...

யோவ்னு கூப்புடற அளவுக்கு எங்கத் தலைவன் இன்னாப் பண்ணாருய்யா. தில் இருந்தா ஒண்டிக்கொண்டி வாங்க.இதெல்லாம் எங்காளு அமேரிக்க சனாதிபதி ஆவுற வேல.

சேக்காளி said...

நம்மை காஷ்மீர் மாநிலம் போல் ஆக்கி அதன் மேல் குளிர்காயப் போகிறார்கள்.
வேறென்ன.
காவிரி படுகையில் துணை ராணுவத்தை குவிப்பவர்கள் அதே ராணுவத்தை வைத்து நான்கு டிஎம்சி தண்ணீரை வாங்காமல் இருப்பதன் பிண்ணனி என்ன?

மணிவண்ணன் - கோவை said...

தரையை, டயரை , தலைதாழ்ந்து கும்பிட்டு கூழைக் கும்பிடு போட்ட தலைவர்கள் இருக்கையில், என்ன தான் புலம்பி என்ன பயன். ? வந்ததும் சரியில்லே, வாய்த்ததும் சரியில்லை மொமண்ட்.......

தமிழகம் சின்னா பின்னம் ஆகி, சீர் கேடு ஆக, எல்லாம் முயற்சிகளும் ஆரம்பம் ஆகிவிட்டனவே!

கூலிக்கு ஓட்டுப் போட்டு,டாஸ்மாக்கில் மல்லாந்து கிடக்கும் , நம் மாக்கள் என்று உண்மையிலேயே மக்கள் ஆக மாறுகிறார்களோ அன்று தான், நன்மை கிட்டும். அதுவரை புலம்பிக்கொண்டேதான் இருக்கவேண்டும்.

Madhan said...

I have seen posts supporting this decisions ( 100% are Brahmins - no wonder why people don’t like their agenda) in Facebook and I just blocked them. No one views this from the student perspective.