May 2, 2018

அணு அணுவாக

நான்கு நாட்கள் விடுப்பு எடுத்திருக்கிறேன். உள்ளூரில் மாரியம்மன் பண்டிகை. இதற்கு விடுப்பு எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னால் எதுவும் சொல்ல மாட்டார்கள். அடர்வனம் வேலை இருக்கிறது, அதனால் விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் வீட்டில் உள்ளவர்கள் கடி கடியென்று கடிப்பார்கள். என்னவோ இவர்கள் விடுமுறைகளை நான் பயன்படுத்திக் கொள்வது போல.

இரண்டு நாட்களாக அடர்வனம் வேலைக்குத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். வேகமாக வேலைகள் நடக்கின்றன. நாளையும் வேலை இருக்கிறது. கருவாட்டுக் குப்பை, கம்போஸ்ட் உரம் என சகலத்தையும் கொண்டு வந்து நிரப்பியிருக்கிறோம். நாளை எல்லாவற்றையும் களைத்து, குழைத்து மண்ணை உழுது தயார் செய்துவிடுவோம். அக்னி நட்சத்திரம் முடிந்து நாற்றுக்களை நடுவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது.இப்பொழுது இரண்டு மழை பெய்துவிட்டது. இனி வெக்கை குறைந்துவிடும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இப்பொழுது செடிகளை நட்டுவிட்டால் ஜூன் ஜூலையில் மழை பெய்தால் எல்லாம் சிறப்பாக அமைந்துவிடும்.

உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்புதான் வெகு குறைவாக இருக்கிறது. கொஞ்சம் வருத்தம்தான். 'எங்கிருந்தோ வந்தவர்கள் நம் ஊரில் இவ்வளவு வேலைகளைச் செய்கிறார்கள்' என்று யோசித்தால் கூட போதும். இத்தனைக்கும் ஊர் கூட்டம் நடத்தியிருக்கிறோம். எல்லோருக்கும் இப்படி ஒரு செயல்பாடு உள்ளூரில் நிகழ்வது தெரியும். என்னவோ ஒரு தயக்கம் அவர்களுக்கு. மெல்ல மெல்லத்தான் நம் பக்கம் வருகிறார்கள். மரம், பச்சை, இயற்கை என்பதெல்லாம் உணர்விலேயே ஏற வேண்டும். அதுவும் அடுத்த தலைமுறைக்கு. நம்பிக்கை இருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம். நிறைய சில்லறை செலவுகள் ஆகிறது. ஆயிரம், இரண்டாயிரம் என்றாகிறது. கூலி ஆட்கள் யாருக்கு காசோலை கொடுக்க முடியும்? ஆரம்பத்தில் கைக்காசு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். 'ஆயிரம்தானே' என்று. ஆனால் இன்னமும் நிறைய செலவுகள் இருக்கின்றன. எல்லை மீறிவிடும் போலிருக்கிறது. இப்பொழுதே சில ஆயிரங்களைத் தாண்டிவிட்டது. அதனால் இனிவரும் செலவுகளுக்காக அறக்கட்டளையிலிருந்து இருபதாயிரம் ரூபாய் எடுத்திருக்கிறேன். வேலைகள் முடிந்த பிறகு என்ன செலவு செய்தோம என்று துல்லியமாக எழுதிவிடுகிறேன். 

கரடு முரடாகக் கிடந்த குளம் ஆழப்படுத்தப்பட்டு நீர் நிரம்பி இன்றைக்கு அதன் அருகாமையில் இருபத்தைந்து சென்ட் இடம் செம்மண்ணால் நிரப்பப்பட்டு வனமாக மாறுவதற்கு தயாராவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு செயல் வெற்றியை நோக்கி நகர்வதை அணு அணுவாக ரசிப்பது பேரின்பம். அந்த இன்பத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் - நிழற்படங்களாக. 


 

(தூர்வாரும் பணி )


(அடர்வனத்துக்கான பணி)


(சமன்படுத்தப்பட்டு, மண் நிரப்பட்ட நிலம்)

10 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Neanga pantra work konja peruka tha therium sir

Jaypon , Canada said...

இந்த பதிவை நானும் இருமுறை வாசித்து அணுஅணுவாய் ரசித்தேன். மகிழ்ச்சி. வெற்றியை நோக்கி நகரும் ஒவ்வொரு அடியும் ஆனந்தம் தரும் தருணங்கள்.

dhana said...

எதிர்மறையாக கேட்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம் . மழை பொய்த்து விட்டால் வேறு மாதிரியான திட்டம் இருக்கிறதா ?? போர்வெல் / தண்ணி லாரி ????

சேக்காளி said...

//உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்புதான் வெகு குறைவாக இருக்கிறது//
பெண்களிடம் பேசி உள்ளுக்கு இழுத்து போடுங்க.
கருத்துக்களை எளிதாகவும் உள்வாங்கிக் கொள்வார்கள்.
நகைச்சுவையான பின்னூட்டம் போல் இருந்தாலும் பலனளிக்கும்.

Anonymous said...

Please write something about NEET exam centre issue....

Selvaraj said...

'என்னவோ இவர்கள் விடுமுறைகளை நான் பயன்படுத்திக் கொள்வது போல'... இப்பவெல்லாம் எழுத தொடங்கியவுடன் சிக்ஸர் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்கபோல

Anonymous said...

CONGRATS.

kamalakkannan said...

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், எதிர்காலத்தில் எனது சொந்த நிலத்தில் அடர்வனம் அமைக்க முடிவு செய்துள்ளேன்.

Anonymous said...

Love you brother!

Manoj said...

"உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்புதான் வெகு குறைவாக இருக்கிறது."அண்ணா எங்களுக்கு விடுமுறை இல்லை என்பது மட்டுமே காரணம் ஆகும்.... மரம்,இயற்கை போன்றவை எங்கள் மனதிலும் வெகு ஆழமாக பதிந்தவையே...நேற்றைய கூட்டத்தில் தாங்கள் பேசிய அனைத்தையும் உள்வாங்கி கொண்டேன்... எங்கள் ஊருக்கு மறு உயிர் கொடுத்தவர் நீங்கள் ... இயற்கை சார் இயக்கமாய் உங்களுடன் ஆசைப்படுகிறேன்.....
By
MANOJ.R(9566981423)
கோட்டுப்புள்ளாம் பாளையம்