May 29, 2018

அரசியலுக்கு வருவீங்களா?

கடந்த நான்கு நாட்களாக ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள். 'அரசியலுக்கு போறானா' என்று அம்மாவிடம் வேறு விசாரித்திருக்கிறார்கள். 'இவன் வீட்டிலேயே தங்குவதில்லை' என்று சும்மாவே சாமி ஆடுவார். இதில் திருநீறு அடித்திருக்கிறார்கள். எல்லாம் சவுக்கு சங்கர் செய்த வேலை. கடந்த வாரம் பொழுது போகாமல் மீம்ஸ் தயாரித்து என்னை தாளித்துவிட்டார். யாரோ அதை எடுத்து உள்ளூர் வாட்ஸாப் குழுமங்களில் போட்டுவிட்டார்கள். ஃபேஸ்புக்கில் இருக்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. வாட்ஸாப்ப்புக்கு வந்தால் எதுவுமே வேறொரு அவதாரம் எடுத்துவிடுகிறது. பின்னணி தெரியாமல் புரட்டி போட்டுவிடுகிறார்கள். அது பரவி சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் என்று ஒரு சுற்று வந்துவிட்டது. 'ஐ திங்க் ஹி இஸ் என்டரிங் இன்டு பாலிடிக்ஸ்' என்று ஒருவர் சொல்கிறார்.

'யா..ஐ ஆல்சோ திங்கிங் சேம்' என்று இன்னொருவர் சொல்கிறார். 

இவன் பெரிய ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவானா இல்லையா என்று இவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 'முழுசா முன்னூறு ஓட்டு வாங்குவியா?' என்று கண்ணாடியைப் பார்த்து என்னை நானே கேட்டுக் கொள்ள வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. 'அது காமெடிக்கு போட்டு இருக்காருங்க' என்று சொன்னாலும் நம்பாதவர்கள்தான் அதிகம். இரண்டு நாட்களாக 'ஐயோ சாமீ..என்னை ஏன்யா மூலையில் நிறுத்தி கும்முறீங்க' என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

அரசியல் தொடர்புகள் இல்லையென்றெல்லாம் சொல்ல மாட்டேன். 'இவங்க கூட எல்லாம் இவனுக்கு தொடர்பு இருக்குமா?' என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்காத பெருந்தலைகளிடம் கூட தொடர்பில் இருக்கிறேன். ஆனால் எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் இல்லை. எனக்கான தனிப்பட்ட காரியங்கள் என்று எதற்கும் போய் நின்றதில்லை. அப்படி இருக்கும் வரைக்கும்தான் நமக்கு மரியாதை இருக்கும். அதே சமயம் பொதுக்கரியங்கள் என்றால் தயங்காமல் தொடர்பு கொள்வதுண்டு. இவ்வளவுதான் என்னுடைய நேரடியான அரசியல்.

என்னைப் போய் ஜமுக்காளத்தில் சுருட்டி உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

'அரசியலில் ஈடுபடுவீர்களா' என்று எப்பொழுதாவது கேட்பார்கள். மக்களுடன் இறங்கி வேலை செய்தால், பொது நிகழ்ச்சிகளில் வேட்டி கட்டினால் அடுத்தவர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றும் போலிருக்கிறது. யாராவது அப்படி கேட்கும் போது சில கேள்விகள் மனதுக்குள் எழும். இன்றைய அரசியல் சூழலில் தேர்தலில் நின்றால் சில கோடிகளாவது செலவு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் தேர்தலை சந்தித்தால் படு தோல்வியைச் சந்திக்க நேரும். பணத்தை எப்படியோ புரட்டிவிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். சில கோடிகளை செலவு செய்துதான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நாம் வாய் கிழிய பேசும் அறம், நேர்மை என்பதெல்லாம் பல்லிளித்துவிடாதா? எழுதும் போது மட்டும் நேர்மை நாணயம் வெங்காயம், பருத்திக்கொட்டை எல்லாம். களத்தில் என்ன தகிடுதத்தம் வேண்டுமானாலும் செய்யலாமா?

களத்தில் மாறுதலை உருவாக்க வேண்டும். 'மக்கள், நல்லவனா கெட்டவனா என்று பார்த்துத்தான் வாக்களிப்பார்கள்' என்ற நம்பிக்கை வர வேண்டும். அதெல்லாம் நம் காலத்தில் நடக்கிற காரியமா என்று சந்தேகமாக இருக்கிறது. மிகத் திறமையாக பணத்தால் ஆட்களை வாங்கக் கூடியவர்களே தொடர்ந்து வென்று கொண்டிருக்கிறார்கள். ஒதுங்கி நிற்பதுதான் நல்லது. ஆனால் அரசியல் பேசாமல், எழுதாமல், தொடர்புகள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவருக்கும் அரசியல் இருக்கிறது. அதை நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும். 

தூத்துக்குடி எரிந்து கொண்டிருக்கும் போது 'மழை அழகாக பெய்கிறது' என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்பொழுது நம் நிலைப்பாடு என்ன என்பதை நேரடியாக பேச வேண்டும். அப்படி அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் போது நமக்கு முத்திரை விழும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. எது சரி என்று நம் மனதுக்கு படுமல்லவா? அதைப் பேசலாம். எதிர்ப்பு குரல்கள் வரத்தான் செய்யும். விவாதிக்கலாம். விவாதங்களின் முடிவில் நம்முடைய நிலைப்பாட்டினை புரிதலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் தயங்க வேண்டியதில்லை. 

வாட்ஸாப்பில் பட்டையைக் கிளப்பும் உறவினர்கள், நண்பர்களுக்காகவாவது இந்த விளக்கத்தை எழுதியாக வேண்டியிருக்கிறது. கலாய்க்க எழுதியிருக்கிறார்கள் என்று கூட புரிந்து கொள்ளாமல் அர்னாப் கோஸ்வாமி கணக்கில் என்னை வைத்து கொத்து புரோட்டா போடுகிறவர்களிடமிருந்து தப்பிக்க வேறு உபாயம் எதுவும் தென்படவில்லை. அப்படியே இருந்தாலும் என்னிடம் விளக்கம் கேட்டால் பரவாயில்லை. அம்மா, தம்பியிடமெல்லாம் கேட்டால் நான் உண்மையிலேயே பாவம். அவர்கள் அப்படியே நம்பிவிடுகிறார்கள். 'இவன் என்னவோ பிளான் பண்ணிட்டு இருக்கான்' என்று எதிரியைக் கேள்வி கேட்பது போலவே கேட்கிறார்கள். 'எலெக்ஷனுக்கு காசு கொடுங்க' என்று நம்மைக் கேட்டுவிடுவானோ என்று உள்ளுக்குள் பதறுகிறார்கள் போலிருக்கிறது. 

'சிவனேன்னுதானய்யா இருக்கேன் ஏன் இப்படி?' என்று மீம்ஸ் வந்த மாலையில் சங்கரை அழைத்துக் கேட்டேன். அவர் எங்கேயோ செல்லும் போது வழி நெடுகிலும்  உதயநிதியை வரவேற்று மிகப்பெரிய கட்-அவுட்டுகளை வைத்திருந்தார்களாம். 'அதுல நான் டென்ஷன் ஆகிட்டேன்..மீம்ஸ் போட்டேன்' என்றார். சொல்லிவிட்டு 'இப்போதான் கூல் ஆனேன்' என்றார். 'ஆவீங்க..ஆவீங்க' என்று நினைத்துக் கொண்டேன். அவர் கூல் ஆகிவிட்டார். நான் தான் சிக்கிக் கொண்டேன். ஏதோவொரு பயணத்தில் யாருமில்லாத மலையின் மொட்டைப்பாறையில் இன்னொருவரின் ஓசி கண்ணாடியை வாங்கி போட்டு பந்தாவுக்கு எடுத்துக் கொண்ட படம் அது. பிஞ்சு முகமய்யா அது. அதைப் போய்...

8 எதிர் சப்தங்கள்:

Kannan said...

சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்குது 😂😂😂

மதன் said...

வருங்கால துணை முதல்வர் வாழ்க!!!!

ஏன் துணை முதல்வர்னா, முதல்வராக நீங்க அந்த குடும்பத்துல பொறக்கலியே ராசா!!!!

சேக்காளி said...

// 'இவங்க கூட எல்லாம் இவனுக்கு தொடர்பு இருக்குமா?' என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்காத பெருந்தலைகளிடம் கூட தொடர்பில் இருக்கிறேன்.//
நிர்மலா தேவி யோட வா இருக்குமோ???

அன்பே சிவம் said...

யோவ் கொ.ப.செ. அந்தளவுக்கெல்லாம் நம்மாளு வொர்த்தில்லை.

நம்மாளுக்கிருக்குற அறிவுக்கும் 'அளகு'க்கும்.

ஜார்ஜ் புஸ்ஸு, பில் கிளிண்டன், ஒபாமா, கடேசியா ட்டிரம்பு

இவிங்களோட போட்டி போடனும்யா.

இதெல்லாம் ஊருக்குள்ள போயி நீர்தான் சொல்லனும், முக்கியமான மோடி வகையறா கிட்ட சொல்லும்.

Selvaraj said...

@சேக்காளி செம... நிர்மலாதேவியோடா இருக்குமோ ஹா ஹா ஹா ஹா ஹா

Selvaraj said...

வேட்பாளராக நிற்பதற்கு கோடியை செலவுசெய்பவனிடம் நேர்மையை எதிர்பாக்க முடியுமா ? 'மக்கள், நல்லவனா கெட்டவனா என்று பார்த்துத்தான் வாக்களிப்பார்கள்' என்ற நம்பிக்கை வர வேண்டும். மக்களின் மனதில் மாற்றம் வருமென்று நம்புவோம்

சேக்காளி said...

//ஜார்ஜ் புஸ்ஸு, பில் கிளிண்டன், ஒபாமா, கடேசியா ட்டிரம்பு

இவிங்களோட போட்டி போடனும்யா.//
அதெல்லாம் வேண்டாமாம்.
நம்ம தல இப்போ தூத்துக்குடி மாவட்ட துணைவட்டாட்சியரா ஆகுற மொயற்சி ல இருக்கார் அவைத்தலைவரே

சேக்காளி said...

//யோவ் கொ.ப.செ. அந்தளவுக்கெல்லாம் நம்மாளு வொர்த்தில்லை.//
பேஸ்மெண்ட் வீக்கு ங்கறது ஒங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா அவைத்தலைவரே.