எந்த ஆரவாரமும் இல்லாமல் மரம் நடும் நிகழ்வை நடத்துவது என முடிவு செய்திருந்தோம். 'இதெல்லாம் வெளியில் தெரிவது இன்னமும் பலரை உத்வேகப்படுத்தும்' என்று சொன்னார்கள். துண்டறிக்கை மட்டும் அச்சடித்து விநியோகம் செய்யலாம் என யோசித்திருந்தோம். இப்பொழுது நான் எதுவும் செய்யப் போவதில்லை. ஊர்மக்கள் சேர்ந்து அடர்வனம் அமைக்கும் நிகழ்வை பிரமாதப்படுத்துவதாக முடிவு செய்திருக்கிறார்கள். நேற்று உள்ளூர் இளைஞர்கள் குளக்கரையில் கூடி பேசியிருக்கிறார்கள்.
'நம்ம ஊர்ல நடக்குற நிகழ்ச்சி...நாம பார்த்துக்குவோம்' என்று பேசினார்களாம். பந்தல் அமைத்து, மைக் செட் கட்டி, வெள்ளி, சனி என இரண்டு நாட்களுக்கு நூறு பேருக்கு சமையல் செய்து என என்னவோ பெரிய திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இரண்டு பேர் ஆளுக்கொரு மூட்டை அரிசியை வாங்கி கொண்டு வந்து கொடுத்துவிட்டார்களாம்.
ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு உற்சாகமாக ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
நேற்று வேறொரு ஊருக்குச் சென்றுவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தேன். இருபது கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு மூன்று இடங்களில் காவல்துறையினர் பரிசோதனைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். முதலில் குழப்பமாக இருந்தது. ஒரு காவலர் 'நீங்க பார்த்து போய்க்குங்க' என்றார். அவர் சொன்னதன் அர்த்தம்- குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள்; கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்று. மிகைப்படுத்திச் சொல்லவில்லை. தமிழகம் முழுக்கவும் இதுதான் நிலைமை. 'இந்த சமூகத்தை என்ன செய்ய முடியும்' என்றால் 'சத்தியமாக எதுவும் செய்ய முடியாது' என்றுதான் சொல்வேன். பெருமொத்தமாக கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விடுமுறை தினங்கள் என்றாலே குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதுதான் என்று பெருவாரியான இளைஞர்களை நினைக்க வைத்துவிட்டார்கள். இதில் நாம் என்ன பெரிய மாறுதலை உருவாக்கிவிட முடியும்? சிறுகச் சிறுக முயற்சிக்கலாம்.
ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் என்றெல்லாம் நடத்தினால் காக்கா குருவி வராது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் வேலை செய்யத் தொடங்கிய போதும் இதைத்தான் சொன்னார்கள். 'பசங்க சரக்கு அடிப்பாங்க..இதுக்கெல்லாம் வரமாட்டாங்க' என்று. அடர்வனத்துக்கு என்று உருவாக்கிய வாட்ஸாப் குழுமத்தில் கூட 'என்னத்தைடா நட்டுறீங்க..மழை பேயுது..போய் சோத்தை தின்னு போட்டு படுங்கடா' என்று குரல் பதிவு செய்து அனுப்பினார்கள். அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்தநாள் 'ஏதோ போதையில் செஞ்சுட்டான் போலிருக்கு' என்று சொன்னார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் இவ்வளவும் நடந்திருக்கிறது. கூட்டமாகச் சேர்ந்திருக்கிறார்கள்.
சந்தோஷப்படாமல் என்ன செய்வது?
அடுத்த சனிக்கிழமையன்று அத்தனை பேரும் மொத்தமாக ஒவ்வொரு வீடாகச் சென்று அழைப்பு விடப் போவதாக இன்று காலையில் அழைத்துச் சொன்னார்கள். 'நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சுக்குங்க' என்று சொல்லியிருக்கிறேன். இவ்வளவு பேர் ஆர்வம் காட்டும் போது தடை எதுவும் போட வேண்டியதில்லை. அவர்களின் விழா; எப்படி வேண்டுமானலும் கொண்டாடட்டும்.
அழைப்பிதழை வாட்ஸாப் குழுமங்களில் பகிர ஆரம்பித்துவிட்டார்கள். நேற்றே கோபி கலை அறிவியல் கல்லூரியிலிருந்து 'நாங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிறோம்' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அழைப்பது பிரச்சினையில்லை; 'வருகிறவர்களுக்கு சாப்பாடு எதாவது வழி செய்ய வேண்டுமே' என கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இப்பொழுது அது குறித்தெல்லாம் எந்தக் கவலையும் பட வேண்டியதில்லை. இந்த இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
'ஐம்பது மாணவர்களை அனுப்பி வையுங்கள்' என்று கோரியிருக்கிறோம். சனிக்கிழமைதான் மரம் நடும் நிகழ்வு. ஆனால் இரண்டு நாட்கள் வேலை இருக்கும். வெள்ளிக்கிழமையன்றே செடிகளை எடுத்துச் சென்று, குழி தோண்டி, எந்தச் செடி எங்கே வைக்க வேண்டும் என முடிவு செய்துவிடுவார்கள். சனிக்கிழமையன்று எல்லோரும் கூடி இருக்கும் போது செடிகள் நடப்படும். இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மில் வேலைகளுக்கும், கம்பெனிகளுக்கும் வேலைகளுக்குச் செல்கிறவர்கள். தினசரி கூலிகள்.
'வெள்ளி, சனி என ரெண்டு நாளுமே விடுப்பு எடுத்துக் கொள்வதாக முடிவு செய்திருக்கிறோம்' என்று சொன்ன போது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. மனப்பூர்வமாகச் சொல்கிறேன்- 'இது நம்ம ஊர்' என்று இறங்குகிற இந்த சக்தியைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். திரண்டு வந்திருக்கிறார்கள். தனித் தனியாகவெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. கூட்டமாக கைகளைக் கோர்க்க வேண்டும். ஒவ்வோர் ஊரிலும் இத்தகைய குழுக்கள் அமைந்தால் அதுதான் அடிப்படையிலான மாற்றமாக இருக்கும். இப்படி இணைந்து நிற்கும் இளைஞர்களை அரசியல் எதுவும் குழப்பிவிடமால் பார்த்துக் கொள்ள வேண்டும். 'எங்க ஊருக்காக சேர்ந்து நிற்கிறோம்' என்ற உணர்வு அப்படியே நிற்க வேண்டும். இருக்கும். நம்பிக்கை இருக்கிறது.
எந்த ஊரிலும் இளைஞர்கள் மோசமில்லை. இறங்கி வேலை செய்தால் அவர்கள் திரண்டு வருவார்கள். அவர்களின் ஒரே தயக்கம் முன்னாடி வருவதுதான். அதற்கு ஓர் ஆள் தேவையாக இருக்கிறது.
அடுத்த வாரம்தான் அழைப்பிதழை வெளியிட வேண்டும் என நினைத்திருந்தேன். இரண்டு வாரங்கள் முன்பாகவே சொல்லியாகிவிட்டது. 'முன்னாடியே சொல்லியிருந்தா வந்திருப்பேன்' என்று சொல்லித் தப்பிக்க முடியாது. வருக! வருக!!
5 எதிர் சப்தங்கள்:
// அவர்களின் விழா; எப்படி வேண்டுமானலும் கொண்டாடட்டும்.//
இப்படி விட்டுக்கொடுக்கும் மனம் தலைவர்களுக்கு தான் வரும்.
சுற்று சூழல் வல்லுனர்கள் இங்கு அதிகம். இப்படிச் செய்ய வேண்டும் அப்படி செய்ய கூடாது என்பார்களே தவிர முன் மாதிரியாக எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால் நீங்கள் மிக சிறந்த முன்னெடுப்பை தொடங்கி சரித்திரத்தில் இடம் பெற்று விட்டீர்கள். வாழ்த்துகள். நிசப்தம் வாசிக்கும் பத்திரிகை நண்பர்கள் இதனை தங்கள் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.
அழைப்பிதழில் கூட பேர் போட்டுக் கொள்ளவில்லையா? நீ மனுஷன்யா...
ARUMAI ARUMAI
தட்டி வேல வாங்குறதுல எங்காளு எப்பவுமே சுட்டி.
அடக், இருந்து ஜெயிச்ச பிறகு அடுத்த வேலைய பாக்குறதுல கெட்டி.
இப்பவே அடர்வனத்த பாத்த சந்தோஷம்.
வாழ்க.
Post a Comment