May 29, 2018

என்ன பேசினேன்- தொடர்ச்சியான கடிதம்

அன்பு மணி,

மீண்டும் உங்களுக்கு ஒரு கடிதம். (தொடர்புடைய பதிவு. இணைப்பில்)

எல்லோருக்கும் எல்லாம் குறித்த ஒரு புரிதல் இருக்கிறது. உண்மைதான்; அக்கருத்தில் நானும் முழுமையாக உடன்படுகிறேன். எனினும், ‘புரிதல்’ என்பது எத்தனை ஆழம், அகலமாக கொண்டதாக இருக்கிறது என்பது இன்னும் முக்கியம் அல்லவா?

நம் சமயக் கருத்தியலையே எடுத்துக் கொள்வோம். அதுகுறித்த திட்டவட்டமான புரிதல் நம்மிடம் இருக்கிறதா எனப்பார்த்தால்.. இருக்கிறது; ‘பகுதியாய்’ இருக்கிறது. அதுதான் பிரச்சினையே. பகுத்தறிவாளர்கள் பார்வையில் சமயம் என்றால் 'பிராமணிய மேலாதிக்கம்’, சமய அறிஞர்கள் பார்வையில் ‘புனிதத்துவம்’, சமூகவியல் அறிஞர்கள் பார்வையில் 'ஆதிக்க சாதிகளின் சமூக வரலாறு’; தமிழ்த்தேசியர்கள் பார்வையில் ‘வைதீக வல்லாதிக்கம்’; பிற மதபோதகர்கள் பார்வையில் ‘சாதியத்தை நிலை நிறுத்தும் அமைப்பு’. ஆக, சமயத்தை ஒவ்வொருவரும் அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் சித்தாந்தப் புரிதலின் அடிப்படையிலேயே அணுகுகின்றனர்; அதையே முன்முடிவு என நான் குறிப்பிடுகிறேன்.

பகுத்தறிவாளர்களை அல்லது நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம். எங்கு சுற்றினாலும் "பிராமணத்தால்தான் நாம் வீழ்ந்தோம்” எனும் கருத்தையே ஆணிவேராகக் கொண்டு பிரச்சாரங்களைத் தொடர்ந்தபடி இருப்பர்(நாத்திகரான பெரியார் அக்கருத்தை வந்தடைந்ததற்கு அவரின் சொந்த அனுபவங்கள் காரணம். பெரியாரின் அனுபவத்தையே பொது அனுபவமாக்குவதா பகுத்தறிவின் நேர்மை?) சமய அறிஞர்கள் “கடவுளைத் தவிர உயர்ந்த பொருளில்லை; அவனைச் சரணடைந்தால் நம் துன்பங்கள் நீங்கிவிடும்” என்பதான கருத்தையே தொடர்ந்து வலியுறுத்துவர். சமூகவியல் அறிஞர்கள் “சமூகத்தில் நிகழும் ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துவதற்காக ஆதிக்க சாதிகள் ஒருங்கிணைந்து முன் வைத்திருக்கும் ஏற்பாடு சமயம்” என்பதான சிந்தனையையே முன்மொழிவர். தமிழ்த்தேசியர்களோ “வடமொழியால்தான் தமிழ்ச் சமூகம் தேய்ந்து போனது” எனும் கருத்தையே நிலைநாட்ட முயற்சிப்பர். பிற மதபோதகர்கள் “மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதையே நோக்காகக் கொண்டிருக்கும் மதத்தில் நீங்கள் நீடிக்கத்தான் வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பி தங்கள் மதங்களுக்கு ’ஆள்சேர்க்கும்’ பணியைச் செய்வதையே கருமமாகக் கொண்டிருப்பார். இங்கு ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட புரிதலை அல்லது தெளிவை முன்வைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சித்தாந்திகள் எல்லோரும்  'சமூகத்தின் வீழ்ச்சிக்கு’ எதிரிகளாகச் சிலரைக் கைகாட்டும் வேலையையே செய்து கொண்டிருக்கின்றனர். ஒருபோதும், அக்குறிப்பிட்ட சமூகம் இயங்கி வந்த வரலாற்றை ஓரளவேனும் உள்வாங்கிக் கொள்ள அவர்கள் தயாராகவே இல்லை.

இன்னும் எளிமையாய்ச் சொல்ல முனைகிறேன். “நம் வீழ்ச்சிக்கு பார்ப்பனர்கள்தான் காரணம். ஆக, பார்ப்பனர்கள் ஒழிந்தால் நம் சமூகம் மேம்பட்டுவிடும்” என்பதான தோற்றத்தைத் தொடர்து பகுத்தறிவாளர்கள் அல்லது நாத்திகர்கள் உருவாக்கி வருகின்றனர். இது அறிவுப்பூர்வமான தருக்கமாக இருக்குமா எனக் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தாலே விளங்கி விடும். “நம் வீழ்ச்சிக்கு பார்ப்பனர்களும் ஒரு காரணம்” எனச் சொல்லி இருந்தால் கூட நாத்திகர்கள் சொல்வதை நியாயமாகக் கொள்ள முடியும். ஆனால், நமக்கு எதிரியாக ஒருவனைச் சுட்டிக் காட்டி அவனை ஒழித்துக் கட்டினால் நாம் நன்றாக இருப்போம் எனச் சொல்வது பகுத்தறிவுதானா என எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ஆக, எந்தவொரு கருத்தியலை முன்வைப்பவரும் நாம் வீழ்ந்து போனதற்குக் காரணமாய் யாரோ ஒரு எதிரியை முன்நிறுத்துகின்றனர். அந்த எதிரி வீழ்ந்தி விட்டால் நாம் சுபிட்சமாக இருப்போம் என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். ஒருபோதும், "நாம் வீழ்ந்து போனதற்கு நாமே முதற்காரணம்; மற்றவை எல்லாம் துணைக்காரணங்கள்” எனும் ஓரளவு தெளிவான புரிதலுக்கு நாம் நகர அவர்கள் துணை நிற்கவே மாட்டார்கள். ஏனென்றால், மக்களை உணர்ச்சிவயத்திலேயே வைத்துக் கொண்டிருக்க் வேண்டும். அப்போதுதான் அவர்கள் 'அரசியல்’ எடுபட்டபடியே இருக்கும்.

ஒரு கோணத்தில் நாம் வீழ்ந்து போனதாய்த் தோற்றம் இருக்கலாம். உண்மையிலேயே வீழ்ந்திருக்கிறோமா எனப் பார்த்தால்.. எனக்கு அப்படி தோன்றவில்லை. சமூகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது; அப்படி இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தில் பல்வேறு குழுக்களிலும் பண்பாட்டுக் கலப்புகள் என்பது நடந்தே தீரும். பண்பாட்டுக் கலப்புகள் சமூக நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டே தீரும். தமிழ்ச்சமூகம் எனும் உதாரணத்தைக் கொண்டு இதை எளிமையாய் விளக்கப் பார்க்கிறேன். ‘தமிழ்-தமிழர்கள்-தமிழ்நாடு’ என்பதான நிலையில் ஒருபோதும் தமிழச்சமூகம் இருந்தது இல்லை. நமக்குக் கிடைக்கும் வரலாற்றுத் தரவுகளில் தமிழ்ச்சமூகத்தில் பல்வேறு பண்பாடுகள் கலந்ததை இயல்பாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அக்கலப்புகள் நிகழ்வதை நம்மால் தடுத்து நிறுத்தவே முடியாது. அது சரியா, தவறா என விவாதிக்க முயற்சிக்கலாம்; தவறு என்று சொல்லி தமிழ்ச்சமூகத்தைப் புனிதப்படுத்துவதற்கான புதுக்கருத்தியலை தீவிரமாயும் முன்வைக்கலாம். ஆனால், யதார்த்தம் கண்முன்னே நிஜமாய் நிற்கிறது. அதைக் கொஞ்சமும் கவனியாமல் செயல்படுவது எவ்விதத்தில் நடைமுறைக்குப் பொருந்தி வரும்?

சமயத்தளத்துக்கு வருகிறேன். தமிழ்ச்சமயம் என்று தனித்து ஒன்று இருப்பதாகவும் அதை பிராமணர்கள் வலிந்து வேத சமயமாக மாற்றி விட்டதாகவும் 'ஆய்வாளர்கள்’ தீர்மானமாகச் சில கருத்துக்களை முன்வைக்கின்றனர். யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா எனப் பார்ப்போம். உதாரணத்துக்கு என் அம்மாவையே சுட்டுகிறேன். சமய அடிப்படையில் அவர் ஒரு இந்து. அப்படியானால், அவருக்கு வேதம் தெரியுமா என்றால் தெரியாது. இந்துக் கோவில்களுக்கு மட்டும்தான் செல்வாரா என்றால் அப்படியும் இல்லை. அக்கா மகளுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னால் அருகில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று பாடம் போடுகிறார்; கொஞ்சம் தள்ளி உள்ள தேவாலயத்துக்குச் சென்று தனது நோய் நீங்க ஆசீர்வாதம் பெறுகிறார். ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும் செல்கிறார். கிடா வெட்டி பொங்கல் வைக்கும் விழாவையும் கொண்டாடுகிறார். தீட்டு என்பதாக வீட்டை சாணி போட்டு மெழுகிவிட்டு ஆகம அடிப்படையிலான(என்று சொல்லக்கூடிய) கோவில்களுக்கும் செல்கிறார். என் அம்மாவைப் போன்ற 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட எளிய மக்கள் நம் நாட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்கு எவ்விதச் சித்தாந்தமும் தெரியாது. ஆனால், அவர்கள் செய்வதுதான் சரியோ என எனக்குப் படுகிறது. அவர்களுக்கு சமூக இயங்கியல் என்பது பற்றிக் குறைந்தபட்சம் புரிதல் கூட இருக்காது. ஆனால், இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வியங்கியலில் நிகழும் மாற்றங்களை யதார்த்தமாக ஏற்றுக் கொள்கின்றனர். மீண்டும் அழுந்தச் சொல்கிறேன்.. சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் ஏற்புடையதா இல்லையா என்பது விவாதிக்க வேண்டிய விடயம். என்றாலும், பெரும்பாலான எளிய மனிதர்களின் வாழ்வை விவாதங்களோ, சித்தாந்தங்களோ பெரிதும் பாதிப்பதில்லை என்பதே நிதர்சனம். குறிப்பிட்ட அளவிலான மனிதர்களையே சித்தாந்தங்களும், கொள்கைகளும் உணர்ச்சிவய மனநிலையில் கொந்தளிக்க வைக்கின்றன. சோதனைக் காலமாய், அவர்களின் கருத்துக்களே ‘சமூகத்தின் குரலாக’ ஊடகங்கள் வழியாக திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன.

வழிபாட்டு மொழி குறித்த விளக்கமும் இங்கு அவசியம் எனக் கருதுகிறேன். வடமொழியினர்தான் கோவில்களில் தமிழ் அர்ச்சனையை அறவே ஒழித்துவிட்டதாய் கூக்குரலிடுகிறோம். ஒரே ஒரு கேள்விதான் நான் கேட்கிறேன். நம் மண்ணில் புதுக் கோவில்களை உருவாக்குவதற்குத்தான் தடை ஒன்றும் இல்லையே?(புதிது புதிதாய் கோவில்கள் வேண்டுமா என்பது தனி விவாதம்) தமிழ்வழிக்கோவில்களை உருவாக்குவதற்கும், வீடுகளில் தமிழ்வழிபாட்டை மேற்கொள்வதற்கும் யார் நமக்குத் தடைவிதித்து விட முடியும்? தமிழ்வழிபாட்டுக்காகப் போராடுகிறேன் எனக் குதிக்கும் அன்பர்களை நேரடியாகக் கேட்கிறேன் : “ஆகமக் கோவில்களில் தமிழ்வழிபாடு நடைபெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டபடியே, உங்கள் வீடுகளில் தமிழ்வழிபாட்டை ஏன் நீங்கள் மேற்கொள்ளக் கூடாது. மேலும், தமிழ்மண்ணில் தமிழ்க்கடவுளர்க்கான கோவில்களை எழுப்பி ஏன் நீங்கள் நிர்வகிக்கக் கூடாது?”.

தமிழுக்கும், சமற்கிருதத்துக்குமான ஊடாட்டம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் மண்ணில் தொடர்ந்தபடி இருக்கிறது. முருக வழிபாடு குறித்த சில வருட ஆய்வுகளில் நான் சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் ஏராளம், ஏராளம். அவை தீர்மானமான ’ஒரு ஒற்றைப் புரிதலை’ நோக்கி என்னைச் செலுத்தவில்லை. மாறாக, சமூகத்தில் ஊடாடிக் கொண்டிருக்கும் ’பன்முகக் கலப்புகளின்’ ஒருங்கிணைவாகவே வழிபாட்டைச் சுட்டியது. முருகன் சுப்பிரமணியனாக்கப்பட்டு விட்டானா அல்லது சுப்பிரமணியன் ஆனானா என்பதைத் தீர்மானமாகச் சொல்லிவிட முடியாது. என்றாலும், முருகனைத் திரும்பவும் சங்ககால முருகனாக்கிவிடுவதே தமிழ்ச்சமூகத்தை எழுச்சி பெற வைக்கும் என்பதைப் போன்ற சித்திரம் சரியானதுதானா? பகுத்தறிவு கொண்டே யோசிப்போம். மேலும், மொழி என்பது சமூகத்தில் வாழும் மனிதர்களுக்காகத்தானே தவிர.. மொழிக்காக மனிதர்கள் கிடையாது. மொழியை அழித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒழித்து விடலாம் எனும் தட்டையான கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. எளிய மனிதர்களின் வாழ்வையும், யதார்த்த்த்தையும், சமூகத்தின் பன்முகத்தன்மைகளையும் கவனத்தில் கொள்ளாத எந்தச் சித்தாந்தமும் பயனற்றது என்பது என் தீர்மானம்.

தமிழர் சமயம் எது எனும் கேள்வியை எழுப்பிக் கொஞ்சம் யோசிப்போம். ஒரு தமிழர் என்பவர் இந்து, கிறித்து அல்லது இசுலாமியராக இருக்கலாம். அப்படியானால், தமிழர் சமயம் என்பதை எப்படி வரையறுப்பது? முருகனும் கொற்றவையும் தமிழ்க்கடவுளர்கள் என்பதை தமிழ் கிறித்துவர்களும், தமிழ் இசுலாமியர்களும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதை இசுலாமும், கிறித்துவமும் ஒப்புக்கொள்ளுமா? மேலும், முருகனை வணங்குவதற்கு தமிழ்கிறித்துவர்களும், தமிழ் இசுலாமியர்களும் கோவில்களுக்கு வந்துவிட முடியுமா? இங்கிருந்துதான் தமிழ்த்தேசியம் குறித்த நாம் பேசத் துவங்க வேண்டும். தமிழ்-இந்தியத்தேசியங்கள் குறித்து மற்றுமொரு கடிதத்தில் சில விளக்கங்களை முன்வைக்கிறேன்.

கடிதத்தை நிறைவு செய்யும் முன்பு, ஒரே ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அமைப்போ, சித்தாந்தமோ, கொள்கைகளோ முக்கியம் அன்று; அவற்றை முக்கியம் எனக் கருதினால் அமைப்பில் சேர்வதோடு அல்லது சித்தாந்த்த்தை நாம் நிறைவடைந்து விடுவோம். எந்நிலையிலும் நேர்ந்து கொண்ட சித்தாந்தத்துக்கு முரண்பட்டு விடக்கூடாது என்று இறுக்கமாகவே இருப்போம். எவ்வகையிலும் சமூகத்தில் பெரும்பான்மையாய் இருக்கும் எளிய மக்களுக்குப் பயனளித்து விடாது. ஒரு தனிமனிதன் தன்னளவில் இச்சமூகத்துக்காக என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதே முக்கியம். அவ்வகையில், நிசப்தம் மணிகண்டனின் தனிப்பட்ட செயல்களுக்காகவே அவனை நேசிக்கிறேன். ஊடக வெளிச்சத்தால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட அவனை வைத்துச் சந்தர்ப்பவாதிகள் தங்களின் ‘அரசியலை’ நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ள முனைவர். அதற்கு மணிகண்டன் பலியாகிவிடக் கூடாது; அதன்பொருட்டே என் கடிதங்கள்.

நேர்ப்பேச்சில், நாம் இன்னும் விரிவாகப் பேசலாம்.

உயிர் நலத்தை விரும்பும்,
சத்திவேல் ஆறுமுகம், கோபிசெட்டிபாளையம்

8 எதிர் சப்தங்கள்:

senthilkumar said...

மிகவும் ஆழமான சிந்தனை. அணைத்து கோணத்திலும் சிந்தித்தியுள்ளீர்கள். சக்தி வேல் ஆறுமுகம் அவர்களுக்கு மிக்க நன்றி..
//ஊடக வெளிச்சத்தால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட அவனை வைத்துச் சந்தர்ப்பவாதிகள் தங்களின் ‘அரசியலை’ நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ள முனைவர். அதற்கு மணிகண்டன் பலியாகிவிடக் கூடாது; அதன்பொருட்டே என் கடிதங்கள்.//

மிகவும் சரியான கணிப்பு. மணிகண்டன் அவர்கள் நிச்சியமாக இதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய கருத்தாக நான் எண்ணுகிறேன்.

Unknown said...

இந்த பதிவு யருக்கும் பயனளிக்காத ஒரு ஆய்வு கட்டுரை போல் தான் தோன்றுகிறது.

“நம் வீழ்ச்சிக்கு பார்ப்பனர்கள்தான் காரணம். ஆக, பார்ப்பனர்கள் ஒழிந்தால் நம் சமூகம் மேம்பட்டுவிடும்” என்று இங்கு யாரும் சொல்வது இல்லை, அவர்களால் பாதிக்கபட்டோம் அதை மறக்காதீர் அவர்கள் நிலையோ மனமோ மாறவில்லை பாதுகாப்பாக் இருந்துகொள்வோம் என்று தான் எனக்கு தெறிந்த வரை பிரச்சாரம் நடைபெறுகிறது.

மக்கள் தங்களுடைய வாழ்வியலை நேரடியாக பாதிக்காத எந்த விசயத்திற்க்கும் முக்கியத்துவம் தர மாட்டார்கள்.

”தமிழ்வழிக்கோவில்களை உருவாக்குவதற்கும், வீடுகளில் தமிழ்வழிபாட்டை மேற்கொள்வதற்கும் யார் நமக்குத் தடைவிதித்து விட முடியும்?” நமது கலாச்சாரமாகவும் பண்பாடாகவும் இருந்த விசயத்தை நம்மிடம் இருந்து பிடுங்கி வேறு ஒரு கலாச்சார்த்தை தினித்தால் அதை அப்படியே விட்டு விட்டு நாம் புதிதாக ஆரம்பித்து கொள்ள வேண்டுமாம் இதை என்னவென்று சொல்வது.

”மொழியை அழித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒழித்து விடலாம் எனும் தட்டையான கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது.” சமுகம் அழியாது அந்த சமுக அடையாளம் அழிந்து அவர்கள் வரலாறு மறக்கப்படும் வரலாறு அற்ற சமுகமாக நாம் மாறவேண்டுமா.
”தமிழர் சமயம்?” இது ஒரு ஆர்வமிகுதியில் சொல்ல படும் கருத்து.

”தமிழ் கிறித்துவர்களும், தமிழ் இசுலாமியர்களும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதை இசுலாமும், கிறித்துவமும் ஒப்புக்கொள்ளுமா?” அந்த மதம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்காக தான் மதமே, மதத்திற்க்காக மக்கள் அல்ல. நாகூரிலும் , வேளாங்கன்னியிலும் நடக்கும் வழிபாட்டு முறைகளை உலக கிறிஸ்துவமும், உலக முஸ்லீம்களும் ஏற்று கொண்டார்களா. அத்தகைய பகுதி சார்ந்த வழிபாட்டு முறைகள் தமிழகம் முழுவதும் பரவிக்கொண்டு உள்ளது.

”ஊடக வெளிச்சத்தால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட அவனை வைத்துச் சந்தர்ப்பவாதிகள் தங்களின் ‘அரசியலை’ நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ள முனைவர்.” இதுபோன்ற கருத்துகளை மனதில் ஏற்றாதீர்கள். அவர்கள் சொல்வது போல் எதுவும் நடக்காது. உங்கள் சமுக சிந்தனையை உங்களின் தனிபட்ட அரசியல் பாதிக்காத வரை உங்கள் மனதிற்கான அரசியலை விடாதீர்கள். உங்கள் சுயம் பாதிக்க பட கூடாது. அது பாதிக்கபட்டால் எதுவும் மன நிறைவை தராது. சித்தாந்தமும் , கொள்கைகளுமே காலத்தால் மாறும் பொழுது அந்த மாற்றம் தனி மனிதனை பாதிக்காத பொழுது அதற்க்கு பெரிய முக்கியதுவம் தர தேவை இல்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள் யாருக்கும் பாதிப்பு இல்லாத வரை. அன்பு நிறைந்த உங்கள் உள்ளம் மாறத வரை உங்களை எதும் பாதிக்காது.

Murugan R.D. said...

அதையே முன்முடிவு என நான் குறிப்பிடுகிறேன்.//////////////////
இக்கடிதம் எழுதியவரும் ஒரு (முன்)முடிவோடு தான் இருக்கார் போல,,,, நடக்கட்டும்,,, நடக்கட்டும்,

Murugan R.D. said...

அவ்வியங்கியலில் நிகழும் மாற்றங்களை யதார்த்தமாக ஏற்றுக் கொள்கின்றனர். /////////////
தட் மீன்ஸ் மாற்றங்களை ஏற்படுத்துபவர்கள் யார் யார் என்றெல்லாம் கணக்கில் கொள்ளாமல்,,,, அதுதானே,,, யார் யாரோ வந்து மாற்றத்தை திணிப்பார்கள், நம்மவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்ற அர்த்தம்,,, சாயிபாபா ரஜினி(ராக)வேந்திரா விநாயகர் சதுர்த்தி போன்றவை எல்லாம் இப்படி நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதானோ இல்லை திணிக்கப்பட்டதா? இரண்டுமே தான்,,,,, இதன் அடுத்தகட்டமாக தான் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் தமிழ்நாட்டின் எந்தபிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் நாம் இந்து என்று முஷ்டியை முறுக்கி இந்துத்துவா பக்கோடா ஜிலேபி பார்ட்டி (பிஜேபி) க்கு ஆதரவு கொடு என்று கூக்குரலிடுகிறார்கள்,,, நம் பழக்கவழக்கங்கள் மற்றவர்களுக்கு (ஆதாயத்திற்கு) ஏற்றவாறு எப்படி மாற்றியமைக்கப்பட்டது என்பதைதான் மணிகண்டன் தன் பேச்சில் குறிப்பிட்டிருந்தார் என்று நினைக்கிறேன்,,, அது உள்ளங்கை நெல்லிகனியளவு தெளிவான உண்மை,,,

ஆனால் கடிதம் எழுதம் அன்பர் தன் முழு எழுத்தாற்றலையும் காட்ட அல்லது தன் தரப்பை நியாயப்படுத்த கடும் முயற்சிஎடுத்து இந்த இன்னொரு கடிதத்தை எழுதியிருக்கிறார்,, முற்போக்கு கட்டுரையாளர்கள் கதாசிரியர்கள் எழுதுவதுகிற அந்த எழுத்து நடை இதில் தெரிகிறது,, முற்போக்கு எழுத்து நடைக்கும் என்னை போன்ற வெகுஜன மக்களுக்கும் வெகுதூரம்,, இதில கடிதம் எழுதிய அன்பர் சொல்லவருவது என்னால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை,,,, ஒரு வேளை நண்பர் மணிகண்டன் போன்றவர்கள் புரிந்து கொண்டு இதற்கு பதிலுரைத்தால் இதே போன்ற இன்னொரு கடிதம் வரக்கூடும்,,, காத்திருக்கிறோம்,,,

Anonymous said...

மணி அண்ணா மீது கொண்ட அக்கறையில் எழுதியுள்ளார். ஆனால் பலிகடாவாக இருக்கவெல்லாம் சாத்தியமில்லை.

Selvaraj said...

மொழியை அழித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒழித்து விடலாம் எனும் தட்டையான கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது - திரு சக்திவேல் அவர்கள் எப்படி மிக சாதாரணமாக இந்த கருத்தை சொல்லி செல்கிறீர்கள் என்று தெரியவில்லை.
திரு மணிகண்டன் அவர்களின் பேச்சில் முக்கியமான கருத்து ‘மதவாத அரசியல் என்பது நேரடியாக மத மாற்றம் செய்வதில்லை. 'எல்லோருக்கும் ஒரே மொழி' 'எல்லோருக்கும் ஒரே வரி' 'எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம்' என்று எல்லாரையும் வலுக்கட்டாயமாக பின்னிப் பிணைப்பதுதான் அபயாகரமான அரசியல்’
மக்களின் பண்பாட்டை நுண்ணரசியல் வழியாக அழிப்பதையும், அடையாளங்களை சிதைப்பதையும், எல்லோரும் ஒரே குடை -அது காவிக் குடையோ அல்லது பச்சை குடையோ- ஒற்றைக் குடைக்குள் தமது வலுவான கரங்கள் கொண்டு இழுத்து வருவதைத்தான் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

சேக்காளி said...

//மொழியை அழித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒழித்து விடலாம் எனும் தட்டையான கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது.//
ஒங்களுத்தானே இல்லை.ஆனா எனக்கு இருக்கு சார்வாள்.
ஏம்ன்னா பை பாஸ் ரோடு வந்து ஊர்களை பிரிச்சு, இல்லே ன்னே ஊரையே இல்லாம பண்ணுனத பார்க்கிறேன்.
இதுல தமிழ் மொழியை அழிச்சிட்டா "தமிழினம் ஒன்று இருந்தது" ங்கறத வேற மொழி மூலமா தானே வாசிச்சி தெரிஞ்சிக்கணும்.
தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள். "அவர்களின் இனம் தமிழினம்" என்பதாகத்தான் இதுவரை நினைத்து கொண்டிருக்கிறேன்.அது தவறு எனில் "தமிழினம்" என்பதற்கான வரையறை என்ன?

Muthu said...

So first line of sanghi defence on the floor.

I very well remember Manikandan batted for BJP & Modi. I waited.

Credits to him that he realized that in quick time about BJP & Allies and their agenda.

By design Sanghis and Bhaktals have several line of defense and we see one such tactics here. Friendly fire. It is a friendly warning to say"Do whatever you do...but dont mess with us....""

Now I will wait to see Real Manikandan