May 4, 2018

வரிசையாக...

வேமாண்டம்பாளையம் என்ற ஊரை நினைவில் இருக்கிறதா? மிகச் சரியாக ஒரு வருடத்துக்கு முன்பாக அந்த ஊரில் இருந்த குளத்தில் இருந்த சீமைக் கருவேல மரத்தையெல்லாம் நிசப்தம் சார்பில் அழித்துக் கொடுத்தோம். குளம் மட்டுமில்லை- பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலம் அழிக்கப்பட்டன. 


கிட்டத்தட்ட அறுபது ஏக்கர் குளம். சில ஊர்களில் இருக்கும் குளங்கள் அக்கம்பக்கத்து ஆறுகளில், ஓடைகளில் நீர் ஓடினால் நிரம்ப வாய்ப்பிருக்கிறது. இந்தக் குளத்துக்கு அந்த வாய்ப்பில்லை. மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை. வானம் பார்த்த பூமி. காய்ந்து கருவாடாக்கிக் கிடந்தது குளம். 


அந்தக் குளம் இப்பொழுது கிட்டத்தட்ட பாதி நிரம்பிவிட்டது. இன்னுமொரு மழை பெய்தால் போதும். 




கடந்த ஒரு வருடமாக 'மழை பெய்யும்' என்ற கணிப்பைக் கேள்விப்படும் போதெல்லாம்  ஊர்காரர்களை அழைத்துக் கேட்பேன். 'சே..என்னடா இது கொஞ்சம் கூட தண்ணீர் வரல' என்று வருத்தமாகத்தான் இருக்கும். கேட்டு கேட்டு வாய் வழித்ததுதான் மிச்சம். ஆறு மாதங்களுக்குப் பிறகு கேட்கவேயில்லை. எது எப்பொழுது நடக்க வேண்டுமோ அது அப்பொழுது மட்டுமே நடக்கும். நடந்தே தீரும். அப்படி ஒரு வருடக் காத்திருப்புக்குப் பிறகான பெரு மகிழ்ச்சி இது. 

நீர் நிரம்பிக் கிடப்பதை பார்க்க யாருக்குத்தான் மகிழ்வாக இருக்காது?

'ஹேய்..எப்பூடி?' என்று அங்கீகாரம் கோருவதெல்லாம் அர்த்தமில்லாத செயல். நாம் சுத்திகரித்திருக்காவிட்டாலும் மழை பெய்து குளம் நிரம்பியிருக்கக் கூடும்தான். ஆனால் குளத்துக்கான நீர் வரத்துப் பாதைகளையெல்லாம் சற்று ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறோம் என்று சந்தோஷமில்லாமல் இல்லை. குளம் நிரம்புவதற்கு சிறு பங்களிப்பு நம்முடையது என்றாலும் கூட அது சந்தோஷம்தானே?  'நம்' என்றால் நிசப்தம். 

உடன் நின்ற ஒய்ஸ்மென் சங்கம் உட்பட அந்தச் சமயத்தில் நின்று பணியாற்றிய அத்தனை பேருக்கும் இது சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுது நீதிபதியாக இருந்த திரு.பழனிவேலுக்கு இந்தப் படங்களை அனுப்பி வைக்கிறேன்.  அவர் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் அவ்வளவு வேகமாக பணிகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. 

'என்னடா இவன்..தினமும் ஏதாவது ஒன்றைக் காட்டிக் கொண்டிருக்கிறான்' என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நல்ல செய்திகள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. நீர் நிரம்பும் இரண்டாவது குளம் இது. இத்தகைய செய்திகள் எங்கேயாவது ஒரு மனிதனை கொஞ்சமாவது சலனப்படுத்திவிடாதா என்ன? அவ்வளவுதான். அதுதான் பலன். அந்தப் பலனைத்தவிர வேறு எந்த அங்கீகாரமும் வெளிச்சமும் அவசியமேயில்லை. எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் நம் ஓட்டத்தில் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். இன்னமும் செய்ய எவ்வளவோ இருக்கின்றன. 

6 எதிர் சப்தங்கள்:

Thirumalai Kandasami said...

மகிழ்ச்சி

Anonymous said...

Have you properly designed these bunds atleast with experienced persons? Are these bunds are safe enough against failure and leakage?

Jaypon , Canada said...

மனம் குளிர்ந்தது.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

தொடர்ந்து சலிப்பு இன்றி ஓடிக்கொண்டிருக்க வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்

Anonymous said...

kuppai mettil vairam enbathu pola, seithithaal seithigalukku mathiyil vairam pondra oru seithi intha pathivu.
aanandham...peranandham...paramanandham...

dhana said...

மிக்க மகிழ்ச்சி .... தொடரட்டும் உங்கள் பணி ... வாழ்த்துக்கள் மணி அண்ணா .....



அப்புறம் இந்த 'ழி' சரி தானா ??? - "கேட்டு கேட்டு வாய் வழித்ததுதான் மிச்சம்"