May 8, 2018

உன்னால் முடியும் தம்பி

ஜீவகரிகாலனும் அகிலாவும்  'உன்னால் முடியும் தம்பி பாருங்க' என்று சொன்னார்கள். அந்தப் படத்தை எப்பொழுதோ பார்த்திருக்கிறேன். ஒரு காட்சியில் கமல் தலையில் எலுமிச்சம்பழத்தை வைத்துக் கொண்டு சாதகம் செய்வார். என் தலையில் பலாப்பழத்தை வைத்தால் கூட நிற்காது. அந்த ஒரு காட்சிக்காத்தான் சொல்கிறார்களோ என்றுதானே நினைக்கத் தோன்றும்.  

எம்.எஸ்.உதயமூர்த்தி மீது எனக்கு  அலாதியான மரியாதை உண்டு. அவரது எழுத்துக்களில்  Factual Errors இருக்கும். இருந்துவிட்டுப் போகட்டும்.  ஆனால் அவர் உருவாக்கிய பாஸிடிவிட்டி மிக முக்கியமானது. பதினெட்டு வயது தொடங்கி முப்பது வரைக்குமான பருவத்தில் 'எல்லாமே சாத்தியம்தான்' என்ற முரட்டு நம்பிக்கை உருவாக வேண்டும். அதுதான் துணிச்சலைக் கொடுக்கும்.  'நம்மால் முடியும்' என்று இளந்தலைமுறையை நம்ப வைக்கும் வேலையை எம்.எஸ்.உதயமூர்த்தி அளவுக்கு இன்றைக்கு வேறு யாரும் செய்வதாகத் தெரியவில்லை. 

இப்பொழுதெல்லாம் பெரும்பாலானவர்கள் அறிவை மட்டுமே காட்டுகிறார்கள். எல்லாவற்றிலும் டேட்டாவை மட்டுமே வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். புள்ளிவிவரங்களை எடுத்து வைத்துக் கொண்டு நாம் அத்தனை பேரும் ஒரு வகையில் கணினிகள் ஆகிக் கொண்டிருக்கிறோம். அறிவைத் தாண்டி, டேட்டாக்களைத் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. மனம். அதனை பக்குவப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் வலுவூட்டவும் யாராவது பேசியும் எழுதியும் களத்திலும் இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமில்லை எல்லாக் காலத்திலும் பெரும்பாலான இளைஞர்களுக்குத் தேவையானதும் அதுதான். 

புள்ளிவிவரங்களை எடுத்து வைத்துக் கொண்டு, உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் வெறுமனே 'அவன் மோசம் இவன் மோசம்' என்று பேசிக் கொண்டிருப்பதால் நம்மைச் சுற்றி எதிர்மறையான சிந்தனைகள்தான் உருவாகுமே தவிர அதைத் தாண்டி உருப்படியாக எதுவும் நடக்காது. அப்படியான எதிர்மறை சிந்தனை உருவாகும் போது ஐந்தாண்டு கால ஆட்சி முடிகையில் வேறொரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம். ஐந்தாண்டுக்குப் பிறகு இன்னொரு கட்சி. அவ்வளவுதான். 

ஆக்கப்பூர்வமான மாறுதல் என்பது ஒவ்வொருவரின் மனத்தளவிலுமிருந்தும் உருவாக வேண்டும். ஆழமான புரிதலின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாறுதலாக இருக்க வேண்டும். அதுதான் உறுதியானதாகவும் இருக்கும், நிலைத்ததாகவும் இருக்கும்.

உன்னால் முடியும் தம்பி படத்தை பார்த்த போது இறுதிக் காட்சியில் என்னையுமறியாமல் அழுது கொண்டிருந்தேன்.

கடந்த வாரத்தில் கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் இளைஞர்கள் கூட்டத்தை நடத்தினோம். ஊர்கூட்டம் என்றுதான் பெயர். ஆனால் இளைஞர்கள்தான் இருக்க வேண்டும் என உள்ளூர விருப்பமிருந்தது. ஒரு வாட்ஸப் குழுமம் தொடங்கி அதில்  இளைஞர் பட்டாளத்தை இணைத்து அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து வரச் சொல்லியிருந்தோம். ஆட்களைத் திரட்டுவது உள்ளிட்ட வேலைகளை உள்ளூர் இளைஞர்களேதான் செய்தார்கள். அதுவொரு குக்கிராமம். அங்கேயிருக்கும் ஒரு கோவிலில் வட்டமாக அமர்ந்தபடிதான் உரையாடல் நிகழ்ந்தது. 


நம்மைச் சுற்றி நிகழும் அரசியல்கள், அவற்றை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும், நாம், நம் வீடு, நம் குடும்பம் என்பதைக் கடந்து தெருவுக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் நம் பங்களிப்பு என்ன என்பதெல்லாம்தான் உரையாடலின் அம்சம். அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். கவனம் சிதறாமல் கவனிக்கிறார்கள். நம் மண் பற்றியும், நம் வரலாறு பற்றியும் அதன் தொடர்ச்சி பற்றியும் நாம் பேச எவ்வளவோ இருக்கின்றன. வாட்ஸாப் புரட்சியைக்  விட்டு மண்ணில் கால் வைக்க வேண்டிய தருணம் இது. சாதி, மதம், அரசியல் தாண்டிய, ஆழமான புரிதல் கொண்ட, நம்மால் முடியும் என்று நம்புகிற குழு பரவலாக உருவாகும் போது நம்மால் இன்னமும் மிகப்பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.

'இதெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை...அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர நாம் செய்யக் கூடாது' என்று பேசுகிற ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் அலர்ஜியாக இருக்கும். இந்தக் காலத்து அரசாங்கம் எப்பொழுதும் மக்களுக்கான காரியங்களைச் செய்யாது. திருடர்களும், கொள்ளையடிப்பவர்களும் அரசை கைப்பற்றும் போது எப்படிச் செய்வார்கள்? அரசாங்கம் செய்யவில்லையென்றால் அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா? தமக்கான தேவைகளை மக்களாக இறங்கி பூர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கும் புரிதல் ஏற்படும். இன்னொரு முறை அதே திருடன் வாக்கு கேட்க வந்தால் வாலில் வற ஓலையைக் கட்டி விரட்டுவார்கள். அரசியல் மாற்றம் என்பது கூட இப்படி கீழ்மட்டத்திலிருந்து, புரிதல் சார்ந்து ஆக்கப்பூர்வமானதாக ஏற்பட வேண்டுமே தவிர மேம்போக்காக இந்தக் கட்சி இல்லையென்றால் அந்தக் கட்சி என்றிருக்கக் கூடாது.  


'நம்மால் முடியும்' என்ற பாஸிட்டிவிட்டி இல்லாமல் இத்தகைய காரியங்கள் சாத்தியமில்லை. எம்.எஸ்.உதயமூர்த்தி மாதிரியானவர்களை அதனால்தான் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில் நேர்மறையான நம்பிக்கை உருவான பிறகு  'இது நம்முடையது' என்ற உணர்வுப்பூர்வமான பிணைப்பு எல்லாவற்றின் மீதும் உருவாக வேண்டும்- நம் கிராமம், நம் ஊர், நம் மாநிலம், நம் தேசம் என்கிற பிணைப்பு. இவை இரண்டும் கட்டமைக்கப்பட்ட பிறகுதான் டேட்டாவும், புள்ளிவிவரங்கள் குறித்தும் பேச வேண்டும். அதுதான் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை நோக்கி நகர்த்தும்.

குமணன், அரசு தாமஸ், சுடர் நடராஜ், கார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கூட்டத்தில் பேசினார்கள். உள்ளூரில் தூண்களாக நிற்கும் கணேசமூர்த்தி, பொன்னுசாமி, கனகு, மகேஷ், தனபால் போன்றவர்கள் இல்லையென்றால் இதையெல்லாம் செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. 

வந்திருந்த இளைஞர்கள்தான் வெகு முக்கியம். இனி அடிக்கடி கூடி ஏதாவதொரு பொது விஷயத்தை விவாதிப்பது என முடிவு செய்திருக்கிறோம். உரையாடல் கூட்டங்கள் ஓரளவுக்கு வடிவம் பெற்றவுடன் இத்தகைய நிகழ்வினை அவர்களுக்குள்ளாக அவர்களாவே நிகழ்த்தலாம். தம் கிராமத்துக்கு தேவையான செயல்பாடுகளுக்காக அவர்களாகவே களமிறங்கலாம். குழு வலுவடைந்த பிறகு நான் இன்னொரு கிராமத்தை நோக்கி நகர விரும்புகிறேன். நம்பிக்கையிருக்கிறது. இந்த இளைஞர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடுவார்கள் 

யாராவது என்னிடம் அவ்வப்போது கேட்பதுண்டு. 'ஏன் கவிதை எழுதறதில்லை?' என்று. களத்தில் இறங்கி வேலை செய்வது வேறு எதைவிடவும் மனத்திருப்தி அளிக்கிறது. 'நம்மால் முடியும் ' என்கிற திருப்தி. 

4 எதிர் சப்தங்கள்:

raja said...

உன்னால் முடியும் மணிகண்டன்!!

Anonymous said...

nammaalvaar solvathai pola rail pettigal inaiya kaathirukkindrana namakku thevai Engine thaan.

Anonymous said...

Absolutely correct way to look at present day and future world. This is what we need to show the next generation. Just show them how to learn things by having a positive attitude towards everything. They will go learn new stuff that we can't even imagine and they will do things that we would never be able to do!

Vijai said...

can you list down the books of Mr.udayamurthy? Would love to read them.