தமிழகத்தில் 890 பள்ளிகள் மூடப்படும் என செய்தி உலவிக் கொண்டிருக்கிறது. அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை குறைவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் மாணாக்கரைக் கொண்ட பள்ளிகள் அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துக்கிறதாம். கல்விக்கு செலவிடப்படும் தொகை உங்களுக்கு சுமையா? எவ்வளவு கேவலமான சாக்கு இது?
ஓர் அரசாங்கம் அப்படிக் கருத்துமானால் அது மிகப்பெரிய சாபக் கேடு. கிராமப்புற கல்விக்கான செலவு என்பது இந்தச் சமூகத்துக்கான முதலீடு இல்லையா? இல்லாதவர்களுக்கும், எளியவர்களுக்கும் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது கூடுதல் சுமையா?
ஓர் அரசாங்கம் அப்படிக் கருத்துமானால் அது மிகப்பெரிய சாபக் கேடு. கிராமப்புற கல்விக்கான செலவு என்பது இந்தச் சமூகத்துக்கான முதலீடு இல்லையா? இல்லாதவர்களுக்கும், எளியவர்களுக்கும் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது கூடுதல் சுமையா?
தமிழகத்தில் இன்னமும் சிறு கிராமங்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. ஐம்பது அல்லது நூறு மக்கள் வாழ்கிற ஊர்களில் கூட அரசுப்பள்ளிகள் உண்டு. இந்தப் பள்ளிகள் இருப்பதனால்தான் அடிப்படைக் கல்வியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்கிறார்கள். இப்பொழுது அந்தப் பள்ளிகளில் பத்து அல்லது பதினைந்து பேர்கள் படிக்கிறார்கள் எனில் மூடப் போகிறார்கள். அந்த மாணவர்களை பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளிகளுக்கு மாற்றுவார்கள். இது அனைவருக்கும் கல்வி என்கிற கொள்கைக்கு எதிரான மிகப்பெரிய செயல்பாடு. பெண் குழந்தைகளாக இருந்தால் நம்மவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியாதா? 'பொம்பள புள்ளைய வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டியதில்லை' என்று படிப்பை நிறுத்தும் சாத்தியங்கள் மிக அதிகம். இதையெல்லாம் யோசிக்காமல் பள்ளிகளை மூடுவதற்கான பூர்வாங்க செயல்பாடுகள் தொடங்கப்படுமானால் அது குறித்து தீவிரமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். எதிர்ப்புகள் காட்டப்பட வேண்டும்.
ஊருக்கு ஊர் சாராயக் கடையைத் திறக்க பிரயத்தனப்படும் இதே அரசாங்கம்தான் பல ஊர்களில் இருக்கும் பள்ளிகளை மூட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்று தெரிய வரும் போது எரிச்சல் வராமல் என்ன செய்யும்?
தமிழகம் அத்தனை செலவுகளையும் உருப்படியாகத்தான் செய்து கொண்டிருக்கிறதா?
ஆர்.டீ.ஈ (Right to Education) என்றொரு திட்டம். ஒவ்வொரு தனியார் பள்ளியும் இருபத்தைந்து சதவீத இடங்களை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட வேண்டும். அதில் படிக்க வசதியில்லாதவர்கள் தமது பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். அந்த இடங்களுக்கான பணத்தை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பள்ளிகளுக்கு கொடுத்துவிடும். தனியார் பள்ளிகள் பள்ளிக்கூடம் நடத்த அரசாங்கம் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? இது புரியவே இல்லை. 2016-17 ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட தொகை மட்டும் நூற்றியென்பது கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டு கொடுக்கப்பட்ட தொகை நூற்றியிருபத்தைந்து கோடி ரூபாய். இப்படி ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய்களை தனியார் கல்வி முதலாளிகளுக்கு அரசாங்கம் தாரை வார்க்கிறது. தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படாமல் இருந்த தொகையை ஒதுக்கிக் கொடுத்ததற்காக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு தனியார் பள்ளிகள் இணைந்து மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்தின. இதையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது? பின்னணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
கல்வி முதலாளிகளுக்கு எடுத்து நீட்டும் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டியதுதானே? தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும் இருநூறு கோடியை அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கி, கணிப்பொறி, நூலகம், விளையாட்டு என வசதிகளை மேம்படுத்தி, ஆசிரியர் திறனை ஊக்குவித்து 'தனியார் பள்ளிகளை விட நாங்கள் சிறப்பு' என்ற சூழலை உருவாக்குவதற்காக அரசாங்கம் செயல்படுமெனில் அது நல்ல அரசாங்கம். புள்ளிவிவரங்கள் எழுதுகிற வேலைகளை ஆசிரியர்களுக்கு கொடுப்பதை நிறுத்தி 'கற்பிக்கின்ற வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள்' என்று சொல்லி, அலுவல் ரீதியிலான வேலைகளையும், புள்ளி விவரங்கள் எடுக்கிற வேலைகளையும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஒதுக்கிக் கண்காணித்தால் அது உருப்படியான அரசாங்கம். ஆனால் இதையெல்லாம் செய்து அரசுக் கல்வியை மேம்படுத்தினால் ஆட்சியாளர்களுக்கு என்ன வருமானம் கிடைத்துவிடப் போகிறது?
பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தால் அது வருமானம் கிடைக்கக் கூடிய செயல். அரசாங்கமே தனியார் பள்ளிகளுக்கு பணத்தையும் கொடுத்து மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்குவித்தால் முதலாளிகள் கரன்சிகளால் குளிப்பாட்டுவார்கள். பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆசிரியர்களை பந்தாடினால் 'இடமாற்றத்துக்கு இவ்வளவு லட்சம்' என்று கொழிக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு அரசுப்பள்ளிகளில் தரங்களை மேம்படுத்தினால் என்ன இலாபம்?
கல்வித்துறையில் ஏன் இப்படியெல்லாம் அவலம் நடக்கிறது? தவறுகளையெல்லாம் நாம் செய்துவிட்டு அரசாங்கப் பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது என்று புலம்பினால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும்? ஒவ்வொரு பெற்றோரும் தனியார் பள்ளிகளில் தம் பிள்ளைகளைச் சேர்த்துவிட முடியுமா என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். அரசுப்பள்ளிகள் மோசம் என்று இன்னமும் அழுத்தமாக நம்பத் தொடங்குகிறார்கள். இவையெல்லாம் தமிழகத்தின் அடிப்படைக் கல்வியின் பொடனியிலேயே அடிக்கும் நிகழ்வுகள். அரசாங்கம் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதும், கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப்பள்ளிகளை மூடுவதும் என அரசு கல்வியின் இருள்காலத்துக்கு தமிழகம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
புதிதாக பள்ளிக்கூடங்களை தொடங்கவிட்டாலும் பரவாயில்லை. இருக்கிற பள்ளிகளை மூட அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒரு பள்ளிக்கூடம் அவசியம். அந்தக் கிராமத்தில் எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள், எவ்வளவு பேர் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்ற விவரங்களை அரசாங்கம் எடுத்து வைத்திருக்க வேண்டும். ஐம்பது மாணவர்கள் இருக்கும் ஊரில் பதினைந்து மாணவர்கள் மட்டும் அரசுப் பள்ளியில் படித்தால் பள்ளியின் ஆசிரியரை விசாரிக்கலாம். என்ன பிரச்சினை என்று கேட்கலாம். பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தராத உள்ளூர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளை விசாரிக்கலாம். மாற்றம் நிகழ்கிறதா இல்லையா என்று பாருங்கள். ஆங்கில வழிக் கல்வி என்பது அரசுப்பள்ளிலேயே வந்துவிட்டது. இவை ஏன் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை என்று யோசிக்க வேண்டும். இவையெல்லாம்தான் ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சியாக இருக்குமே தவிர குருட்டுவாக்கில் பள்ளிகளை மூடுவதில்லை.
4 எதிர் சப்தங்கள்:
பிஎஸ்என்எல் போஸ்ட் பெய்ட் சிம் வாங்க போயிருந்தேன். மூன்று நாள் ஆகுமென்றார்கள்.அப்போது அங்கே முகம் குடுத்து பேசுன நல்ல மனுசன் ஒருத்தர் இருந்தாரு. அவரிடம் ,"ஏங்க தனியார் சிம் ஒரே நாளுல கெடைச்சிருதே. இந்த சிம் முக்கு மட்டும் ஏன் மூணு நாளு ? " ன்னு கேட்டேன்.
அதுக்கு அவரு "நாங்களும் அவங்கள மாதிரி ஒடனே குடுத்துட்டா அவங்க பொழைப்பு எப்படி நடக்கும் ?" ன்னு என்னிடம் திரும்ப கேட்டாரு?
// அரசாங்கமே தனியார் பள்ளிகளுக்கு பணத்தையும் கொடுத்து மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்குவித்தால் முதலாளிகள் கரன்சிகளால் குளிப்பாட்டுவார்கள். பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆசிரியர்களை பந்தாடினால் 'இடமாற்றத்துக்கு இவ்வளவு லட்சம்' என்று கொழிக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு அரசுப்பள்ளிகளில் தரங்களை மேம்படுத்தினால் என்ன இலாபம்?//
இதுக்கு பெறவும் அரசாங்க பள்ளிகளை ஏன் ஊக்குவிக்க மாட்டேன் கிறார்கள் ன்னு கேக்கக் கூடாது சென்ட்ராயன்.
மாணவர்களை சேர்க்க வீட்டுக்கு செல்லும் போது அக்குழந்தை மூன்று வயது முதலே தனியார் பள்ளியில் எல் கே ஜி படித்து கொண்டு இருக்கும். ஆனால் அரசு பள்ளிகளில் ஐந்து வயதில் ஒனறாம் வகுப்புத்தான் சேர்க்க முடியும் இந்த குறையை தீர்க்க அரசு பள்ளிகளில் நர்சரி வகுப்புகளை தொடங்கலாம் என்று கூறியதை அரசு நிராகரித்து விட்டது .
×-%8ல்
இது கல்வி உரிமை சட்டத்தில் உள்ள குறைபாடு. இதற்கான நிதியை மத்திய அரசு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக வழங்குகிறது. நாடு முழுக்க இதைத்தான் பின்பற்றவேண்டும். 25% தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு செய்து சேர்க்கை வழங்கப் படவேண்டும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசாங்கம் கல்விக் கட்டண நிர்ணயக் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணத்தை மத்திய அரசு பள்ளிகளுக்கு கொடுத்து விடுகிறது.
நீங்கள் கேட்ட கேள்வியைத்தான் இத் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம் இலவசமாக அனைத்து தனியார் பள்ளிகளும் நலிவடைந்த பிரிவினருக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னால் கூட பரவாயில்லை இங்கே ஏராளமான உபரி ஆசிரியர்கள் இருக்கும்போது தனியார் பள்ளிகளில் சேர்க்கப் பட்டால் ஏராளமான நிதி இழப்பு அரசுக்கு. ஆனால் அதை ஏன் சிந்தித்துப் பார்க்கல்லை என்று புரியவில்லை. இதற்கான விளம்பரங்களை அரசு அதிகாரிகளே செய்ய வேனித்யா சூழல் உள்ளது. ஒரு பக்கம் இவ்வளவு இலவசம் கொடுக்கிறோமே மக்கள் ஏன் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது நெருக்குதல் கொடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. மறுபுறம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நெருக்குதல் ஒருபுறம் . இன்னொரு 25 % சேர்க்கை முழுமையாக இல்லையே ஏன் குறைவாக உள்ளது. நீங்கள் பொது மக்களுக்கு ஏன் சரியாக தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டிய சூழலில்தான் கல்வி அதிகாரிகள் இருக்கிறார்கள். இச்சட்டத்தின் மற்ற பல அம்சங்கள் சிறப்பானவை. தனியார் பள்ளிகளாக இருந்தாலும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி பெற்றவர்கலகத் தன் இருக்க வேண்டும்.ஆசிரயர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவராகத் தான் இருக்க வேண்டும் போன்ற இன்னும் பல.
மூட வேண்டிய பள்ளிகளைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளீர்கள். உண்மையில் அந்தப் பள்ளிகளில் 10 பேர் கூட பெய்ரளவில்தான் இருப்பார்கள். சரியாக சொல்வதென்றால் அந்தப் பள்ளிகளில் மாணவர்களே இல்லை எனபதுதான் உண்மையாக இருக்க முடியும். கல்வி உரிமை சட்டப் படி 1 கி.மீ சுற்றவிற்குள் ஒரு தொடக்கப் பள்ளி இருக்க வேண்டும் அப்படி இல்லாத கிராமங்கள் மிகக் குறைவாக இருக்கும் என்றே கருதுகிறேன். நிதி ஒதுக்கப் பட்டு விட்டது என்பதன் காரணமாக தேவையின்றி கட்டாயப் படுத்தி பள்ளிகள் தொடங்குவார்கள். பல பள்ளிகளில் மாணவர்களே இல்லை. மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளை எல்லாம் மாணவர்கள் குறைவு என்றாலும் மூட மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.. இந்த 890 பள்ளிகளில் நிறைய பள்ளிகள் நகர்ப்புறத்தில் உள்ளன என்பதும் உண்மை. 20 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் சென்னை யிலேயே இருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடியுமா எனத் தெரிய வில்லை. ஏதாவது ஒரு மாவட்டத்தில் 10 க்கும் குறைவான பள்ளிகளின் பட்டியலை RTI மூலமாக பெற்று சும்மா பார்வையிட்டுப் பாருங்கள் பள்ளிகள் மூடப்பட வேண்டியதன் அவசியத்தை தெரிந்து கொள்வீர்கள். பள்ளிகள் மூடப்படுவதை எதிர்க்கிறார்களே தவிர ஆனால் ஏராளமான உபரி ஆசிரியர்களோடு அரசு பள்ளிகள் இருக்க RTE இன்படி தனியார் பள்ளிகளில் 25% சேர்க்கையை ஏன் வலியுறுத்த வேண்டும் அதற்கு அரசு ஏன் பணம் செலவழிக்க வேண்டும் என எந்த சமூக ஆர்வலரோ கல்வியாளரோ இது வரை கேட்டதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க அரசு பள்ளிகளில் மாணவர் எப்படி சேர்வார்கள். மூடுவதை எதிர்ப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்களா எனத் தெரியவில்லை.
Post a Comment