May 17, 2018

என்ன பேசினேன் - குறித்து

அன்பு மணிக்கு,

வணக்கம்.

உனக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுவேன் என நான் நினைத்துப் பார்த்ததில்லை. இக்கடிதத்தை நீங்கள் முழுமையாகப் படிப்ப்பீர்களா என்றும் தெரியாது. எனினும், சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேயாக வேண்டும் எனக் கருதியதால் எழுதுகிறேன். உங்கள் பேச்சு எப்படி அமைய வேண்டும் என்பதில் உங்களுக்கு முழு உரிமை உண்டு; என்றாலும், அதை அரங்கத்தில் அமர்ந்து கேட்டவனாய் அதை விமர்சிக்க எனக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

வைதீகம், அவைதீகம், ஆதிசங்கரர் போன்ற சொற்களைக் கொண்டு நம்மால் மதத்தைக் குறித்து ஒரு சித்திரத்தை உருவாக்கிவிட இயலும்; என்றாலும், அது பொருந்தக்கூடிய வரலாற்றுச் சித்திரமா என அலசியும் ஆய்வும் செய்வது மிக முக்கியம். வழிபாட்டு வரலாற்றைச் சில ஆண்டுகள் கள அனுபவங்களோடு ஓரளவு விளங்கிக் கொண்டிருப்பவன் எனும் முறையில், ஆதி சங்கரர்தான் ஆறு சமயங்களை ஒருங்கிணைத்தார் எனும் கருத்தை நான் திட்டவட்டமாக ஆய்வுக்கு உட்படுத்த விரும்புகிறேன். ஆதிசங்கரர் முன்வைத்த தத்துவம் வேதாந்த அத்வைதம்(இதைப் பற்றி விளக்க சிலமணி நேரங்கள் தேவைப்படும். சுருக்கமாக, பிரம்மம் மட்டுமே உண்மை; மற்றவையெல்லாம், அதன் பிமபங்கள். பிரம்மம் நிர்க்குண்மானது). அத்வைதத்தை வலுவாக முன்வைத்த உத்திர மீமாம்சரான ஆதிசங்கரர் வழிபாட்டுச் சடங்குகளை உள்ளடக்கிய சைவம் உள்ளிட்ட சமயங்களை ஒருங்கிணைத்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.

இவ்விடத்தில் ஒன்றை அழுத்தமாய்ச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் அத்வைதி அல்ல; ஆதிசங்கரரைக் குறை சொல்லக் கூடாது என்கிற கருத்தும் கொண்டவன் அல்ல. கடவுள் உட்பட அனைத்து விடயங்களும் விவாதிக்கப்பட வேண்டியவை. ஆனால், அதில் குறைந்தபட்ச நியாயம் இருக்க வேண்டும் அல்லவா? உங்கள் பேச்சைக் கேட்கும் அல்லது படிக்கும் ஒருவருக்கு நாட்டார் தெய்வங்களை ஒழித்துக் கட்டிய 'பெருமைக்குரியவர்' ஆதிசங்கரர் என்பதான சித்திரம்தானே தோன்றும்?

வைதீகம் அவைதீகப் பிரிவுகளுக்கு வருவோம். வைதீகம் என்றால் வேதத்தை ஒப்புக்கொள்பவர்; அவைதீகம் என்றால் வேதத்தை மறுப்பவர். உங்களுக்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்ட பிரிவுகளாக மட்டுமே அவை தோற்றம் தருகின்றன. எதைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கப் புகும் முன்பு அதைக் குறித்த தரவுகளைக் கொஞ்சம் தேடி வாசித்து, தருக்கப்பூர்வமாக சுயஆய்வு செய்து ஓரளவு உறுதி செய்து கொண்டு வெளியிடுதல் சிறப்பு. ஒரு குறிப்பிட்ட அடிப்படையை மட்டுமே மனதில் கொண்டு, அதை ஒட்டிய வரலாற்றுச் சித்திரத்தை அளிப்பது பெரும்பிழையாகவே முடியும் என நான் கருதுகிறேன்.

வைதீக அவைதீகம் தொடர்பான நுட்பமான மற்றுமொரு கோணத்தை உங்கள் முன் வைக்கிறேன். வைதீகம் ஆணாதிக்க மரபு(நிறுவன மரபு); அவைதீகம் தாய்வழிச் சமூக மரபு (நாட்டார் மரபு / சித்தர் மரபு / நிறுவனமயத்தை விரும்பாத மரபு). வைதீக மரபில் கடவுளை வணங்குவதற்கென குறிப்பிட்ட ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும்; அவைதீகத்தில் அப்படி எல்லாம் எவ்வித வரையறையும் பெரிதும் இல்லை. வைதீகம் என்பது ஆகம மரபு; அவைதீகம் தந்திர மரபு. கேரளாவில் இன்னும் தந்திர வழிபாடு இருக்கிறது. வைதீக, அவைதீகப் போக்குகள் குறித்து நேர்ப்பேச்சிலேயே மேலும் சில தகவல்களை விளங்கிக் கொள்ள முடியும். இன்றைய இந்து மதம் வைதீக, அவைதீகக் கூறுகளைக் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது. தத்துவச் சொற்களை அல்லது சமயச் சொற்களை எழுத்தை விட உரையாடல்களில்தான் ஓரளவேனும் அணுகும் அனுபவம் பெற முடியும்; உரையாடல்களுக்குப் பின் நமது யதார்த்த அனுபவங்களிலேயே அவற்றின் மெய்ப்பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.  

விநாயகன், முருகனைக் காட்டி பலியிடுவதைத் தடுத்து விட்டார்கள் எனும் வாதம் குழந்தைத்தனமானது. வழிபாட்டின் இயங்கியலை வரலாற்றோடு பொருத்திப் பார்த்தபடி வந்தால், பலியிடுதல் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளலாம். கோவில்கள் நிறுவனமயமாக்கப்படும்போது, அவை 'புனிதப்படுத்தப்பட்டே’ தீரும். அவ்வகையிலும் பலியிடல் தீட்டு என்று கருதப்பட்டு ஒதுக்கப்படும். உண்மையான இந்து மதம் என்பதில் ஒற்றைத் தன்மையிலான கடவுளோ, சித்தாந்தமோ, வழிபாட்டு முறையோ இல்லை; பன்மைத்துவ வழிபாட்டு முறைகளையும் ஒருங்கிணைத்த மாபெரும் (நிறுவனப்படுத்திவிட முடியாத) அமைப்பு அது. அதை நிறுவனமயமாக்க முயற்சி செய்பவர்களால் அது முடியாது. எனினும், சமூக மையப்பரப்பில் சில அதிர்வலைகளை 'மதவாதிகள்’ எனச் சொல்லிக் கொள்ளும் 'அடிப்படைவாதிகளால்’ ஏற்படுத்த முடியுமே தவிர, மதத்தின் வேர்களை ஒருபோதும் ஆட்டங்காணச் செய்துவிட முடியாது என நான் அழுத்தமாக நம்புகிறேன்.

ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம், தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் தொடர்பான உங்கள் கருத்துக்கள் மிக மேலோட்டமானவை. மேலும், வேல்முருகன் கட்சியினர் சுங்கச் சாவடியை உடைத்த சம்பவத்தை மத்திய அரசோடு ஒப்பிட்டு நியாயப்படித்திய பாங்கு வேதனையை அளித்தது.  அவற்றை  'தமிழ்த்தேசிய’க் கண்ணோட்டத்தில் நீங்கள் அணுகி இருப்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன். நேர்ப்பேச்சு வாய்க்குமாயின், அவை குறித்தும் நாம் உரையாடலாம்.

சொல்ல நினைத்தவற்றில் மிகச்சிலவற்றைக் கூட எழுத்தின் வழியாகப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால், சமயம் குறித்து பல ஆண்டுகள் தொடர்ச்சியான தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருந்தவன்(கொண்டிருப்பவன்) எனும் வகையில் என்னிடம் சமயம் குறித்த ஒரு வரலாற்றுச் சித்திரம் ஓரளவு தெளிவாகவே இருக்கிறது. அச்சித்திரத்தைச் சில நிமிடங்களில் ஓரிரு பத்திகளில் புரிய வைத்து விடலாம் என்பது நிச்சயம் இயலாது. அச்சித்திரத்தை முன்முடிவுகள் இன்றிக் கவனிப்பவர்களாலேயே அதை ஓரளவு அணுக முடியும். நாமோ எல்லாவற்றிலும் முன்முடிவு கொண்டவர்களாகவே கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். மிகச் சமீபமாகத்தான் நான் இதை உள்ளவாறே புரிந்து கொண்டேன்.

மேலும், நான் கொண்டிருக்கும் வரலாற்று சித்திரம் ஒருபோதும் திட்டவட்டமானது அன்று; இயங்கக் கூடியது.  

உயிர் நலத்துடன்,
சத்திவேல் ஆறுமுகம்
                                                                        ***

வணக்கம்,

எழுத்து வழியாகவும், பேச்சு வழியாகவும், செயல்பாடுகள் வழியாகவும் தொடர்ந்து உரையாடலை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய விருப்பமாக இருக்கிறது. பெரும்பாலும் எது குறித்தான முன்முடிவுகளையும் உருவாக்கிக் கொள்வதில்லை. முடிவுகள் எந்தக் காலத்திலும் முடிவானவை இல்லை என்று முழுமையாக நம்புகிறேன். வாசிக்கிறேன். வாசிப்பின் வழியாக எனக்கு உண்டாகியிருக்கும் புரிதல்களை சில நெருக்கமான நண்பர்களிடம் முன்வைக்கிறேன். அதன் வழியாக உருவாக்கிக் கொள்ளும் கருத்தை பொதுவெளியில் முன்வைப்பதுதான் வழக்கம்.

எல்லோருக்கும் எல்லாம் குறித்தும் ஒரு புரிதல் இருக்கிறது. எதைப் பேசினாலும் ஒரு தரப்பு ஆதரிக்கும். இன்னொரு தரப்பு எதிர்க்கும். தவறில்லை. 

வெளிப்படையான விமர்சனங்களும் கருத்து மாற்றங்களும் நம்மை இன்னமும் ஆழமான தேடலுக்கு உள்ளாக்கும். ஆதிசங்கரர் குறித்தும், ஷண்மதங்கள் குறித்தும், நாட்டார் தெய்வங்கள், பாரம்பரியச் சிதைவுகள் என ஒவ்வொன்றும் குறித்தும் தொடர்ச்சியான ஆய்வுகளும், விவாதங்களும் அவசியம். ஷீரடி சாயிபாபா இங்கே அடையும் இடம், விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பெருக்கு, தைப்பூசம், புனிதமாக்கல் என பல கூறுகளைப் பற்றியும் நாம் பேச வேண்டியிருக்கிறது. ஆனால் சலிப்பில்லாமல், மனச்சாய்வு இல்லாமல் உரையாட வேண்டும். 

குழந்தைத்தனமானது, மேம்போக்கானது என்று சொல்லும் போது 'ஏன் அப்படிச் சொல்கிறேன்' என்று என்று விளக்கினால் புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும். இல்லையெனில் எதை வேண்டுமானலும் ஒற்றைக் கையில் எல்லாவற்றையும் ஓரமாகத் தள்ளிவிட்டு போய்விடலாம். 

பேசுவதற்கான திறப்புகளைக் கொண்ட கடிதம் உங்களுடையது.  நீண்ட கடிதத்துக்கு நன்றி. பள்ளிக் காலத்திலிருந்தே எனக்கு முன்னேர் நீங்கள்.

எல்லாவற்றையும் குறித்து வாசித்தும் எழுதியும் பேசியபடியே இருப்பேன். எதிர்கொள்ளும் போது உரையாடுவோம். விவாதிப்போம். 

அன்புடன்,
மணிகண்டன்.

3 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

மனச்சார்பு-அருமையான சொல் கையாடல். வாழ்க வளமுடன்

ராஜகோபாலன் said...

கோபாலகிருஷ்ணனின் நிலைதான் எனக்கும். இருவரின் கருத்துகளுக்கு முன் சொற்பொருள் மனதை வெகு பலமாக ஈர்த்தன. நன்றி

senthilkumar said...

தான் பேசுவதுதான் சரி, எழுதுவதுதான் சரி என்றில்லாமல், உண்மையான வரலாறு என்ன என்று இதில் ஆராச்சியும், சரியான அறிவும் கொண்ட நபர்களின் பதில்களை இங்கே பதிவு செய்துஉள்ளது உண்மையில் நல்ல விஷயம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெருமான்மையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதம் என்ற பெயரில் ஒன்று தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் அல்லது சரியான கருத்தை பதிவு செய்யாமல் விவாதத்தை திசை மற்ற நெறிமுறையாளரும், மற்றவர்களும் முற்படுவார்கள். இந்தமாதிரியான உரையாடல்கள்தான் ஆரோக்கியமான இரண்டுதரப்பிலிருந்தும் புரிதல்களை ஏற்படுத்தும். சத்திவேல் ஆறுமுகம் அவர்களிடம் இருந்து நமது உண்மையான வரலாற்றையும், மறைக்கப்பட்ட/மாற்றப்பட்ட வரலாறும், இதன் அரசியலும் உங்களுக்கு புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று நம்புகின்றேன்.