May 17, 2018

எப்படி பிழைப்பது?

படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை என்று எழுதிய கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள். இவ்வளவு மின்னஞ்சல்கள் வரும் என எதிர்பார்க்கவில்லை. பாராட்டுகிறவர்கள் மட்டுமே இருப்பார்களா? 'படிக்க வேண்டாம்ன்னு எப்படி சொல்லலாம்' என்று கூட கேட்டிருந்தார்கள். படிக்க வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? படிப்பு அவசியம். ஆனால் அதுதான் பிழைப்பதற்கான ஒற்றை பாதை என்று நம்ப வேண்டியதில்லை என்றுதான் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது அல்லது எந்தப் படிப்பாக இருந்தாலும் அதை வைத்து பிழைத்துக் கொள்ள முடியும்.

ஜெயராஜ் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். செம எனர்ஜெட்டிக் மனிதர். நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். பம்பரமாகச் சுழல்வார். அவருக்கு சமையலில் ஆர்வம் அதிகம். கேட்டரிங் படித்திருக்க வேண்டிய ஆள். ஆனால் திருச்சியில் வேறு என்னவோ ஒரு படிப்பை படித்தார். அவரது  தம்பி பனிரெண்டாம் வகுப்பு முடித்த போது அவரை கேட்டரிங் சேரச் சொல்ல அவர் கேட்டரிங் முடித்தார். திருமணம், வேலை என்று அவரவர் பாதையில் பயணிக்க சில வருடங்கள் பிடித்தது. அண்ணனுக்கு அச்சிறுப்பாக்கத்தில் தொழில். இடம் வாங்கி விற்பது, தன்னம்பிக்கை வகுப்பு என கலந்து கட்டிய தொழில். தம்பிக்கு சென்னையில் ஒரு ஹோட்டலில் வேலை.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக அண்ணனும் தம்பியுமாகச் சேர்ந்து 'நம்ம ஊரிலேயே ஒரு மெஸ் ஆரம்பிக்கலாம்' என்று முடிவு செய்து மன்னா மெஸ் என்று ஆரம்பித்துவிட்டார்கள். கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனால் துணிந்தார்கள். தம்பி ஜெய்குமார்தான் மொத்த சமையலும். அவரது படிப்பு அவருக்கு உதவுகிறது. வரவு செலவு உள்ளிட்ட மேல் விவகாரம் அண்ணன் ஜெயராஜ். உள்ளூரில் அவருக்கு இருக்கும் தொடர்புகள் அவருக்கு உதவுகிறது. அச்சிறுபாக்கம் லூப் ரோட்டில் காவல் நிலையத்துக்கு எதிரில் கடை இருக்கிறது.  அந்தப் பக்கத்துக்கு ஆட்களுக்குத் அநேகமாகத் தெரிந்து இருக்கலாம். 

எந்தத் தொழிலைச் செய்தாலும் அடுத்தவன் செய்யாத சில நுட்பங்களை நாம் புகுத்திவிட வேண்டும். 

பிராய்லர் கோழி கிடையாது; அஜினோமோட்டா கிடையாது; செயற்கை நிறமிகள் கிடையாது- உங்க வீட்டு சமையல் என்பதுதான் இவர்களது கான்செப்ட். காலையில் எட்டு மணிக்கு வேலையை ஆரம்பிக்கிறார்கள். வாழை இல்லை வாங்கி வர, மீன், இறைச்சி வாங்கி வர என றெக்கை கட்டி பறக்கிறார்கள். பனிரெண்டு மணிக்கு சமையல் முடிகிறது. மதியம் நூறு அல்லது நூற்றைம்பது பேர்கள் சாப்பிடுகிறார்கள். பார்சல் காட்டுகிறார்கள். அவ்வளவுதான். நான்கு மணிக்கு கடையை மூடிவிடுகிறார்கள். மிச்சமிருக்கும் நேரம் எல்லாம் குடும்பத்துக்கு. எந்த அலட்டலும் இல்லை. ஐந்தாறு உள்ளூர்வாசிகளை பணிக்கு வைத்திருக்கிறார்கள். இளநீர்ப்பாயசம் மாதிரி சில பண்டங்கள் இந்த மெஸ்ஸில் மட்டும்தான் கிடைக்கும். இந்த இளநீர்ப்பாயசம் ஜெயராஜின் ரெசிப்பி. 

'ருசி..சாப்பிட்டா உடம்புக்குத் தொந்தரவு இல்லை..இதை மட்டும் மனசுல வெச்சுட்டு மெஸ் ஆரம்பிச்சா எந்த ஊரில் ஆரம்பிச்சாலும் கொடி பறக்கும்' என்றார் ஜெயராஜ். உண்மைதான். ஏகப்பட்ட வாடிக்கையாளர்களைப் பிடித்துவிட்டார்கள். 'நீங்க நெடுஞ்சாலைக்கு கடையை மாத்துங்க' என்றேன். 'வளர்ச்சி வளர்ச்சி மேலும் வளர்ச்சி' என்ற நினைப்பில் சொன்னேன். 'வளர்ச்சி மெதுவா இருந்தா போதும்' என்று சொல்லிவிட்டார்கள். 


துக்கினியூண்டு கடைதான். 

'ஏ.சி எல்லாம் வேண்டியதில்லைங்க மணி...சாப்பிடும் போது வேர்வை கொட்டக் கொட்ட சாப்பிட வேண்டும்..அதுல ஒரு ருசி இருக்கு' என்றார். இதைக் கேட்டபிறகு எப்பொழுது சாப்பிடும் போதும் இந்த வாக்கியம்தான் நினைவில் வருகிறது. 

ஜெயராஜ் மாதிரியான ஆட்களை பார்க்கும் போது எனக்கு உற்சாகம் பற்றிக் கொள்ளும். சலிப்பு தட்டும்போதெல்லாம் அழைத்துப் பேசலாம் என்று நினைக்க வைக்கிற மனிதர். இத்தகைய உற்சாகம் நம்மை ஓட வைத்துக் கொண்டே இருக்கும். நான்கு பாட்டில் விட்டமின் டானிக்கை ஒன்றாகக் குடித்து போல. 

உண்மையிலேயே, வெற்றியடைவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஒன்றை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. சற்று மெனக்கெட்டால், கொஞ்சம் துணிந்தால் நம் விருப்பம் என்னவோ அதிலேயே நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அப்படி அமைத்துக் கொண்டால் வேலை செய்கிறோம் என்ற எண்ணமே இருக்காது. நமக்கு பிடித்தத்தைச் செய்கிறோம் என்ற எண்ணம்தான் இருக்கும். 

அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஒரு நண்பர் என்ன தொழில் செய்யலாம் என்று கேட்டார். அவரும் கேட்டரிங் படித்துவிட்டு நாடு தாண்டி வேலையில் இருந்தவர். 'நீங்க ஜெயராஜ்கிட்ட பேசுங்க' என்று சொன்னேன். அதற்கு அவர் சரியான ஆள். 'இதெல்லாம் ஓடுமா?' 'இதெல்லாம் நடக்குமா?' 'வருமானமே வராதுங்க' என்று நம்மை தட்டி வைத்துப் பேசுகிற ஆட்கள்தான் சுற்றிச் சுற்றி இருக்கிறார்கள். எதை முயற்சித்தாலும் தடை சொல்வார்கள். நமக்கு நல்லது செய்வதாக நினைத்து பெரிய பாறாங்கல்லைத் தூக்கி நம் பாதையில் வைப்பார்கள். எதிர்படுகிறவர்களிடமெல்லாம் அறிவுரை கேட்பதை நிறுத்தினாலே நமக்கு பாதித் துணிச்சல் வந்துவிடும். 

பையனை பி.ஈ சேர்த்தவர்கள் எல்லாம் பொறியாளர் ஆகி அட்வைஸ் செய்யத் தொடங்கிவிடுவார்கள். டி.என்.பி.எஸ்.சிக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களின்  பெற்றோர்கள் எல்லாம் கலெக்டர் ஆகிவிடுவார்கள். முதலில் இத்தகைய ஆட்களின் சகவாசத்தைக் குறைத்தாலே போதும். நாம் நுழைய விரும்புகிற துறையில் இருக்கும் ஆட்களிடம் பேச வேண்டும். உண்மையிலேயே நம் பாதையில் சிறு வெளிச்சத்தை காட்டுகிற ஆட்களிடம் ஆலோசனை பெற வேண்டும். படிப்பாக இருந்தாலும் சரி; தொழிலாக இருந்தாலும் சரி. அதுதான் தப்பிக்க வழி. கண்டவர்களிடமெல்லாம் கருத்து கேட்பது என்பது பாறாங்கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிப்பது போலத்தான்.  

ஜெயராஜ் பற்றி எதற்குச் சொல்கிறேன் என்றால்- இத்தகைய மனிதர்களை உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம். பயப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. இந்த உலகத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதெல்லாம் மனிதர்களிடம் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும் என்பதைத்தான். பெற்றவர்களும், படிப்பும், கல்லூரியும் அதைத்தான் சொல்லித் தர வேண்டும். எந்தப் படிப்பாக இருந்தாலும் சரி- சக மனிதர்களிடம் பழகத் தெரிந்துவிட்டால் போதும். வருமானம் பற்றி பயப்படத் தேவையில்லை. அதற்கான வழிகள் எப்படியும் நம் கண்ணில் பட்டுவிடும் அல்லது யாராவது காட்டிவிடுவார்கள்.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இந்த உலகத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதெல்லாம் மனிதர்களிடம் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும் என்பதைத்தான்.//
எந்த பள்ளிக் கூடத்துல சொல்லி(கற்று)க் குடுக்காங்க?

சேக்காளி said...

//சக மனிதர்களிடம் பழகத் தெரிந்துவிட்டால் போதும். வருமானம் பற்றி பயப்படத் தேவையில்லை//
வருமானம் பற்றி மட்டுமல்ல.
வாழ்வை பற்றிய கவலையும் வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

Saravanan Sekar said...

//கண்டவர்களிடமெல்லாம் கருத்து கேட்பது என்பது பாறாங்கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிப்பது போலத்தான். //

//உலகத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதெல்லாம் மனிதர்களிடம் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும் என்பதைத்தான். //

Well said..

Santhanam said...

Nice and thought provoking article. Thanks Manikandan.

raja said...

உங்களுக்கு பிடித்ததை செய்தால் நேரம் போதவில்லை என்று நீங்களே உணருவீர்கள். படித்து பொழைக்க வேண்டுமே, சாதிக்க வேண்டுமே என்று படிக்க கூடாது. ஒரு பறவையின் இறகில் இருக்கும் வர்ணங்களை விட என்ன சாதனையை நாம் செய்து விட முடியும்!!

ஆகவே பிடித்ததை செய்யுங்கள். என்ன தனக்கு வருகிறது என்பதை கண்டுபிடிப்பதே பெரிய சவால்தான். இருப்பது ஒரு வாழ்க்கை என்று சொல்வது எளிது.அது போல் வாழ்வது உங்கள் முழு உழைப்பும் தேவைப்படும் விஷயம். தினம் தினம் நாம் உயிரோடு இருப்பதே பெரிய சாதனைதான். சாதிக்கிறேன், பட்டையை கிளப்புகிறேன் பேர்வழி என்று உங்களை நீங்களே துன்புறுத்தி கொள்ளாதீர்கள்.

எஞ்சினீரிங், டாக்டர் படித்து முட்டி மோதி வீடு, கணவன், குடும்பம், குழந்தைகள் என்று உழைத்து களைத்து, பிறகு மண்டையை போடுவதற்கு பயந்து கொண்டே வாழ்வது வாழ்க்கை ஆகாது.

இறப்பு என்பது மரத்தில் இருந்து உதிரும் இலையை போல் இருக்க வேண்டும். அதற்கு தனக்கு உண்மையிலேயே என்ன வருகிறது என்று கண்டுபிடித்து அதில் பயணம் செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்.