May 18, 2018

கல்வி உதவித் தொகை பெற

வரும் கல்வியாண்டில் நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் அதிகபட்சமாக இருபத்தைந்து மாணவர்களுக்கு உதவ முடியும். உதவி தேவைப்படுகிற மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். 

மாணவர்களை பின்வரும் விதிமுறைகளின்படி தேர்வு செய்யவிருக்கிறோம்
    1. பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு மட்டுமே உதவப்படும்.
    2. அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரிகளில் சேரும் மாணவ/மாணவிகளுக்கு மட்டுமே உதவுகிறோம்.
    3. பெற்றோர் இல்லாத அல்லது ஒற்றை பெற்றோர் உடைய மாணவ/மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
கல்வி உதவியைப் பொறுத்தவரையிலும் மாணவர்களுக்கு இரண்டு வகைகளில் உதவுகிறோம்.
   1. கல்லூரி/விடுதி கட்டண உதவித் தொகை.
   2. வாழ்வியல்/திறன் வழிகாட்டு உதவி.
கடந்த சில ஆண்டுகளில் பெற்றிருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் உதவிகளில் சிற்சில மாற்றங்களைச்  செய்ய விரும்புகிறோம்.  

கல்லூரி/விடுதி கட்டண உதவி- மேற்சொன்ன விதிமுறைகளுக்குட்பட்டு கல்லூரி/விடுதி கட்டணத் தொகை வழங்கி உதவப்படும். உதவி பெறும் மாணவர்களுக்கு வருடத்தில் இரண்டு முறை  கூட்டம் நடத்தப்படும். அதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு, அவர்களது செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை பொறுத்தே அடுத்தடுத்த ஆண்டுகளில் உதவ இயலும்.

வாழ்வியல்/திறன் வழிகாட்டு உதவி- கடந்த ஆண்டு பதினாறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இந்தப் பயிற்சியை மேற்கொண்டோம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் நேரடியாக பயிற்சியளிப்பார்கள். இத்தகைய பயிற்சியில் சேர விரும்புகிற மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி அதன் பிறகு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ஒரு வகுப்பு தொடர்ச்சியாக நடைபெறும். அனைத்து கல்லூரிகளிலும் சேர்க்கை முடிந்த பிறகு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம்  முதல் வகுப்புகள் தொடங்கப்படும். 

நிசப்தம் அறக்கட்டளையின் வழியாக செய்யப்படும் கல்வி உதவியின் அடிப்படையான நோக்கத்தை உதவி பெறுகிற மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்- 
   1. வெறுமனே உதவி செய்வதோடு நில்லாமல் மாணவர்களின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்  என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கு மாணவர்கள், பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. 
   2. கல்வி/வாழ்வியல்/திறன் மேம்பாட்டுக்காக அனைத்துவிதமான உதவிகளையும் அவர்களுக்கு வழங்குதல். 
   3. ஒவ்வொரு மாணவருக்கும் அவரது ஆர்வத்துக்கு ஏற்ப தகுதியான வழிகாட்டியை(Mentor) நியமித்து அவர்களின் நேரடி கண்காணிப்பில் மாணவர்களை செதுக்குதல்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைக்கு நாம் உதவி செய்யும் மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தச் சமூகத்துக்கு உதவுகிறவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக இந்த ஆண்டு நிசப்தம் அறக்கட்டளையின் உதவியோடு எம்.எஸ்.சி(வேதியியல்) முடிக்கும் ராஜேந்திரன் ஐஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் முனைவர் ஆராய்ச்சி படிப்புக்கான சேர்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு அவர் ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். இத்தகைய சங்கிலித் தொடரை வருடம்தோறும் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இத்தகைய நோக்கங்களை அடையும் பொருட்டு  நிசப்தம் அறக்கட்டளை செயல்படும் விதமானது ஒவ்வொரு வருடமும் சற்று உருமாறுகிறது. முக்கியமான ஒரு விஷயம்- நிசப்தம் அறக்கட்டளை என்.ஜி.ஓ இல்லை. பலரும் வழங்கும் நன்கொடையை இல்லாதவர்களுக்கு வழங்குகிற ஒரு உதிரி அமைப்பு. இப்படிச் செயல்படுவதுதான் சரியாக இருக்கும். 

உதவி பெற விரும்புகிற மாணவர்கள் பெயர், முகவரி, ப்ளஸ் டூவில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை nisapthamtrust@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது 9741474202 (இந்த எண் குரல் வழி உரையாடலுக்கான உபயோகத்தில் இல்லை) என்ற வாட்ஸாப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வது சிறப்பு.

5 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

அருமை. வாழ்த்துக்கள்.

David D C said...

தொடரட்டும் தங்கள் பணி!
வாழ்க வளமுடன்.

சேக்காளி said...

மகேஸ் said...

Dear Manikandan,
please can you share the list of beneficiary students from nisaptham sofar.

Vaa.Manikandan said...

அன்புள்ள மகேஸ்,

ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொரு மாணவரின் விவரங்களையும் வெளிப்படையாக குறிப்பிடுவது தார்மீக அடிப்படையில் சரியானதாக இருக்காது. ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் வரவு செலவு விவரங்களை எழுதும் போது எந்த மாணவனுக்காக அளிக்கப்பட்ட தொகை என்று குறிப்பிட்டிருக்கிறேன். அந்தளவுக்கு விவரங்களை பொதுவெளியில் வைத்தால் போதும் என நினைக்கிறேன். ராஜேந்திரன், அரவிந்த் மாதிரியானவர்கள் வெற்றியடையும் போது அவர்களை பற்றி எழுதலாம்.