May 21, 2018

ஆள் பிடிக்கும் கூட்டம்

சில மாணவர்களைச் சந்திக்க நேர்ந்தது. கிராமப்புற, அரசுப் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள். ஆயிரத்து நூறைத் தாண்டியவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் கட்- ஆஃப் குறைந்திருக்கிறது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் அத்தனை பாடங்களுக்கும் ஒரே முக்கியத்துவம்தான் தருவார்கள். தமிழுக்கு எவ்வளவு உழைப்போ அதே உழைப்புதான் கணக்குக்கும், இயற்பியலுக்கும். இதில்தான் தனியார் பள்ளிகள் தில்லாங்கடி வேலையைக் காட்டிவிடுகின்றன. தமிழ், ஆங்கிலத்தை ஓரங்கட்டி வைத்துவிடச் சொல்கிறார்கள். கட்-ஆஃப் வாங்குவதற்கு தேவையான பாடத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்தச் சொல்கிறார்கள். தனியார் பள்ளிகளில் தொள்ளாயிரத்து ஐம்பது மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் கூட கட்-ஆஃப் 195 ஐத் தாண்டியிருப்பதைப் பார்க்க முடியும்.

தமிழக கல்வித்துறையை குறை சொல்ல முடியாது. நிறைய நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். இதற்கும் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும். கட்- ஆஃப் கணக்கிடுதலில் மொத்த மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது போன்ற 'செக்' ஒன்றை வைத்தால் அது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.  

இந்த விவகாரத்தை தனியாகப் பேசலாம்.

இந்த வருடமும் பிள்ளை பிடிக்கும் கூட்டம் பெருகியிருக்கிறது. விசாரித்த வரையில் ஒவ்வொரு மாணவரையும் ஏதாவது ஒரு அமைப்பினர் வந்து சந்திருக்கிறார்கள். விழுது, விதை, சிறகு என்று ஏதாவது ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டு வருகிறார்கள். பள்ளிகள் வழியாக மாணவர்களின் முகவரியைப் பிடித்து தேடி வந்து பெற்றோரிடம் பேசுகிறார்கள். 'உங்க பையனுக்கு/பொண்ணுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது கஷ்டம்...கலந்தாய்வு வழியாக தனியார் கல்லூரிகளில் சேர்ந்தால் லட்சக்கணக்கில் கட்ட வேண்டும்' என்று இழுத்து 'கலை அறிவியல் படிப்பெல்லாம் படித்தால் வேலை கிடைக்காது' என்று குழப்பிவிடுகிறார்கள்.

எளிய மனிதர்கள் மண்டை காயும் போது 'இவ்வளவு மார்க் வாங்கிட்டு படிக்காம இருக்கிறதும் நல்லா இருக்காது' என்று சொல்லி பிறகு பிறகு வேறொரு கொக்கியை வீசுகிறார்கள்.

'ஒரு இன்ஜினியரிங் காலேஜ் இருக்கு..இந்த மார்க்குக்கு அங்க சீட் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்..ஆனா நாங்க சொன்னா சேர்த்துக்குவாங்க...பத்து பைசா நீங்க ஃபீஸ் கட்ட வேண்டியதில்லை' என்கிறார்கள். இது பெற்றோர்களுக்கு மிகப் பிடித்துப் போகிறது. அடுத்து மாணவரை அழைத்துப் பேசி சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆள் சிக்கியாகிவிட்டது. சான்றிதழல்களைக் கொடுத்த பிறகு இனி ஏதும் செய்வதற்கில்லை என்று அடுத்த வாய்ப்புகள் குறித்துக் கூட இந்த மாணவர்கள் யோசிப்பதில்லை. இப்படி ஆள் பிடிக்கிறவர்கள் தனியார் கல்லூரிகளின் கமிஷன் ஏஜெண்ட்கள். ஒரு மாணவனை/மாணவியை பிடித்துக் கொடுத்தால் இவ்வளவு பணம் என்று கல்லூரிகள் விலை பேசுகின்றன. என்.ஜி.ஓக்கள் என்ற பெயரில் இத்தகைய ஆள் பிடிக்கும் வேலையை நிறையப் பேர் செய்கிறார்கள்.  நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவர்களைத் தேடித் தேடிப் பிடித்து ஆகாவழி கல்லூரியில் சேர்க்கும் சில்லறைத்தனம் இது-  காசுக்காக மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் விபச்சாரம்.

மாணவனைத் தேடிப் பிடித்து கல்லூரியில் சேர்த்துப்  படிக்க வைப்பது தவறில்லை. ஆனால் அவை மிக மோசமான, தரமற்ற கல்லூரிகளாக இருக்கின்றன. அத்தகைய கல்லூரிகளில் இடங்கள் நிரம்புவதேயில்லை. இவர்களுக்கு எப்படியாவது இடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அதற்காகத்தான் இத்தகைய ஆட்களை நியமிக்கிறார்கள். அரசாங்கத்தில் சில திட்டங்கள் இருக்கின்றன. மாணவர்களை இலவசமாகப் படிக்க வைப்பதாகச் சொல்லி அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார்கள். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களும், மாணவிகளும் இத்தகைய பாழுங் குழிகளில் விழுவதை நேரடியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பல கல்லூரிகளில் பேராசியர்களே இந்த வேலையைச் செய்கிறார்கள். 'இந்த வருஷம் ஆளுக்கு நாலு பேரைச் சேர்க்கணும்' என்று கல்லூரி அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்தால் என்ன செய்வார்கள். 'தம்பி எங்க காலேஜ்ல சேர்த்துக்க ஐயாயிரம் ரூபாய் நான் தர்றேன்' என்று கெஞ்சி ஆள் பிடிக்கிற ஆசிரியரைக் கூடத் தெரியும். 

விவரங்களை எடுத்துச் சொன்னால் பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. 'எங்க படிச்சா என்னங்க? அங்கதான் காசில்லாம படிக்க வைக்கிறாங்களே..எங்கயாச்சும் படிக்கட்டும்' என்று சொல்லி வாயை அடைத்துவிடுகிறார்கள். அவர்களது சூழல் அப்படி. அப்படித்தான் பேசுவார்கள். நம்மிடம் பதில் இல்லை.  குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றால் அரசாங்கம் உதவித் தொகையளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் வங்கியில் கூட கடன் தருவார்கள் என்று சொன்னால் 'தருவாங்க..ஆனா நாங்கதான் திருப்பிக் கட்டணும்' என்று கேட்கிறார்கள். 

இலவசம் என்றால் தரம் என்பதெல்லாம் பின்னால் போய்விடுகிறது. நம் மக்களின் மனநிலை அப்படித்தான். கல்வியில் தொடங்கி அரசியல் வரைக்கும் எல்லாவற்றிலும் இதுதான் நிலைமை. 

இந்த ஆள்பிடி பட்டாளம் குறித்து மாணவர்களுக்கு ஓரளவுக்காவது எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. போனாம்போக்கி கல்லூரியில் ஆகாவழி படிப்பை படித்து வெட்டியாக இருப்பதற்கு பதிலாக கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். படிப்பை விடவும் கல்லூரி முக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு வெளியுலகத்தைக் கற்றுத் தருகிற கல்லூரிகளாக இருக்க வேண்டும். வசதிகள் நிறைந்த கல்லூரிகளாக இருக்க வேண்டும். அனுபவம் கொண்ட பேராசியர்களிடம் பயில வேண்டும்.

எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் ஓசியில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று தானாவாதிக் கல்லூரியில் சேர்வது என்பது ஓசியில் கிடைக்கிறதே என்று ஃபினாயிலைக் குடிப்பது போலத்தான். மாணவர்களிடம் இதை விளக்க வேண்டியிருக்கிறது. எப்படிப் பரவலாகச் செய்வது என்று தெரியவில்லை. நமக்குத் தெரிந்து ஒரு மாணவன்- அதுவும் கிராமப்புற மாணவன்- வாழ்க்கையைத் தொலைப்பதை பார்த்துக் கொண்டு அசால்ட்டாக இருப்பதைப் போன்ற பாவம் எதுவுமில்லை. 

7 எதிர் சப்தங்கள்:

Selvaraj said...

இதற்கு 'படிக்கிற பிள்ளைங்க எங்க படிச்சாலும் நல்லா படிக்கும் என்ற ஒரு மனநிலையும் காரணம்' என்று நினைக்கிறன். (போனவருடமும் நிசப்தத்தில் இதேபோன்றதொரு விழிப்புணர்வு கட்டுரையை பதிவிட்ட நியாபகம். வாழ்த்துக்கள்.)

Siva said...

ஆமாம். சென்ற வருடம் நிசப்தத்தில் இப்படி ஒரு கட்டுரை வந்தது...

Vaa.Manikandan said...

கடந்த வருடம் அய்யாவு என்கிற மாணவன் சிக்கியிருக்க வேண்டியது..கடைசி கட்டத்தில் தப்பித்தான். இத்தகைய சில கட்டுரைகளை ஒவ்வொரு வருடமும் எழுத வேண்டியிருக்கிறது.

Paramasivam said...

பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

பொன்.முத்துக்குமார் said...

சம்பந்தப்பட்ட பெற்றோர் / மாணவர்களது ஒப்புதல் இல்லாமல் அவர்களது முகவரியை எவருக்கும் தரக்கூடாது என்று பள்ளிகளுக்கு அரசு உத்தரவிடவேண்டும். மீறி கொடுத்தால் கொடுத்த பள்ளி ஆசிரிய / ஊழியர்களின் முட்டியைப் பெயர்க்கவேண்டும்.

அதேபோல, வருகின்ற பிள்ளைபிடிப்பான்களிடம், கல்விமாமாக்கள் (தந்தை என்று இருக்கும்போது மாமா இருக்கக்கூடாதா ?) யார் (முன்னாள்/இன்னாள் சாராயம் காய்ச்சுபவர்களா ? கழக பினாமிகளா ? .....) கல்லூரி ஆசிரியர்களின் தகுதி (அவர்களது பட்டம், அவர்கள் படித்த கல்லூரி, எத்தனை ஆண்டு அனுபவங்கள் போன்றவை), கல்லூரி முன்னாள் மாணவர்களுள் எத்தனை பேருக்கு அல்லது எத்தனை சதவீதம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது, என்னவிதமான நிறுவனங்களில் .. போன்ற தகவல்களை எழுத்துபூர்வமாக தரச்சொல்லவேண்டும் என்று மாணவ மணிகளுக்குச் சொல்லவேண்டும்..

Anonymous said...

Sir, your point is very valid. But for the people with less exposure, something is better than nothing. May be more sessions have to be conducted to the +1 +2 students before the exams, about these kind of issues and educate them on the opportunities available.

- Somesh

Anonymous said...

இலவசமா என்ஜினியூரிங் காலேஜ் சேர்ந்தால் என்ன கஷ்டம்? இதனால அவர்களது கல்வி சுமையும் குறையும் தானே. Am i failing to understand something? On a lighter note, anyone can be a philanthropist, not just Mani.