May 10, 2018

முப்பாட்டன் முருகன்

'பழனியில் இன்னமும் நவபாஷாண சிலையை வைத்து இருக்கிறார்களா?' என்று கேட்டால் தொடர்ச்சியாக கோவிலுக்கு சென்று வருகிறவர்கள் பலருக்குமே கூட பதில் தெரிவதில்லை. 

'மூலவர் சிலையை ராஜ அலங்காரத்தில் பார்த்திருக்கிறோம், மலர் அலங்காரத்தில் பார்த்திருக்கிறோம் ஆனால் அது நவபாஷாண சிலையா என்று தெரியவில்லை' என்றுதான் நிறையப் பேர் சொன்னார்கள். 

நூறு ரூபாய் கொடுத்தால் பக்கத்திலேயே நின்று பார்க்கலாம், இருநூறு ரூபாயை அங்கே இருப்பவர்களிடம் கொடுத்தால் கருவறைக்கு முன்பாகவே அமர வைத்துவிடுவார்கள் என்றும் கூடுதல் தகவல்களைச் சொன்னார்கள். 

ஒட்டன்சத்திரத்திலிருந்து விக்னேஷ் அழைத்துச் சென்றார். நாங்கள் சென்றிருந்த போது கோவிலில் கூட்டமில்லை. 'டிக்கெட் வாங்கினால் பக்கத்திலேயே பார்க்கலாம்' என்றார்கள். தூரத்தில் இருந்து பார்த்தாலே போதும் என்று நினைத்துக் கொண்டேன். மடமடவென்று கும்பிட்டாகிவிட்டது.

கருவறையில் ஒரு பெரிய சிலை இருந்தது. அதுதான் நவபாஷாண சிலையா என்று தெரியவில்லை.

பாஷாணம் என்றால் விஷம். விஷத்தை முறையாகப் பயன்படுத்தினால் அது அற்புதமான மருந்து என்பது சித்த மருத்துவத்தில் ஒரு தத்துவம். ஆங்கில மருத்துவத்துதிலுமே இது உண்டு. விஷத்தை முறிக்க விஷத்தையே உள்ளே செலுத்துவது மாதிரி. பாஷாணத்தை அறுபது நான்கு வகைகளாக பகுத்திருக்கிறார்கள். அதில் முப்பத்தியிரண்டு வகை இயற்கையானவை. இன்னுமொரு முப்பத்தியிரண்டு வகை மனிதனால் உருவாக்கப்பட்டவை. அறுபத்து நான்கு வகைகளில் இருந்து ஒன்பது வகை பாஷாணங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கட்டி  முருகரின் சிலையை போகர் வடித்தார் என்பது நம்பிக்கை. 

பாஷாணங்களைக் கட்டுவது அவ்வளவு சுலபமில்லை. முறையாக சித்தமருத்துவம் கற்றுக் கொண்டவர்களிடம் பேசினால் சொல்வார்கள். அரைத்து, வேக வைத்து, புடம் போட்டு என பல செயல்களைச் செய்ய வேண்டும். ரஸவாதம் தெரிந்த ஆட்களுக்குத்தான் சாத்தியம். புடம் போட்டு- என்று ஒற்றைச் சொல்லில் எழுதிவிட்டேன். சேரும் பொருளுக்கு ஏற்ப புடம் மாறுபடும். ஒவ்வொரு புடத்துக்கும் எரிக்கப்படும் வறட்டிகளின் எண்ணிக்கை கூட முக்கியம். அந்த வறட்டியின் அளவு, எரிக்கப்படும் விதம், நேரம் என எல்லாமும் கணக்கில் வரும். 

அது வேறு உலகம். 

இந்தக் காலத்தில் ரஸவாதம் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. கொஞ்சம் நஞ்சம் தெரிந்தாலும் கூட வெளியில் சொல்ல பயப்படுவார்கள். கடத்திச் சென்று  'எல்லாத்தையும் தங்கமா மாத்திக் கொடு' என்று நம்மவர்கள் ஒரு வழியாக்கிவிடுவார்கள்.

பழனி முருகனின் நவபாஷாணச் சிலை சிதிலமடைந்திருக்கிறது என்பதால் பதினைந்து ஆண்டுகளுக்கு  முன்பாக  'இனிமேல் அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டாம்' என்ற முடிவுக்கு வந்தார்கள்.  ஐம்பொன்னால் வேறு சிலையைச் செய்துவிடலாம் என முடிவு செய்து இருநூறு கிலோ எடையில் புதிய சிலை ஒன்றைச் செய்து கருவறைக்குள் வைத்து பூசையும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

'ஒரே கருவறைக்குள் ரெண்டு சிலை எப்படி வைப்பீங்க?' என்று எதிர்ப்பு வலுக்க வேறு வழியில்லாமல் சிலையை அகற்றியிருக்கிறார்கள். புதிதாகச் செய்த அந்தச் சிலை நிறம் மாறத்  தொடங்கியிருக்கிறது. என்ன காரணமென்றால் சிலை தயாரிப்பில் மோசடி செய்திருக்கிறார்கள். 'கோவில் சொத்து குலநாசம்' என்பார்கள். அயோக்கியர்களை அதெல்லாம் பொருட்டா? ஒதுக்கப்பட்ட தங்கத்தை திருடியிருக்கிறார்கள். அது கூடத் தொலைகிறது. மெதுவாக நவபாஷாண சிலையை கருவறையிலிருந்து எடுத்து கடத்திவிடுவதுதான் அவர்களின் திட்டமாக இருந்திருக்கிறது என்று செய்திகளை வாசிக்கும் போது திக்கென்றிருக்கிறது.

ஆன்மிகம் என்பது இரண்டாம்பட்சம்- பழனி என்பது எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் சென்று வரும் கோவில். போகிற போக்கில் சொல்லப்படுகிற வாக்கியமில்லை இது. காலங்காலமாகவே கொங்கு நாட்டின் தென் எல்லையாக பழனி இருந்திருக்கிறது. எத்தனையோ படையெடுப்புகள், போர்களையெல்லாம் தாண்டி தப்பித்திருக்கிறது. அப்படியான சிறப்புமிக்க வரலாற்றை ஒரு சில குடும்பங்கள் வயிறு வளர்ப்பதற்காக திருடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் சென்று வருகிற கோவிலிலேயே இத்தனை திருட்டு வேலைகள் என்றால் கைவிடப்பட்ட கோவில்களில் எவ்வளவு திருடப்பட்டிருக்கும்.  

நம்மைச் சுற்றி எல்லாமே இப்படித்தான். 

கோவிலுக்கு  வெளியில் வந்து 'உள்ள இருந்ததுதான் நவபாஷாண சிலையா' என்றேன் நண்பரிடம். 

'அது எனக்கு தெரியாது..ஆனா ரெண்டு சிலை இருக்குல்ல' என்றார். 

'இரண்டா?' - எனக்கு ஒன்றுதான் தெரிந்தது. 

'இன்னொருக்கா போய்ட்டு வரட்டுமா' என்றேன். 

'விடமாட்டாங்க' என்றார். முருகனை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. முருகன் கைவிடவில்லை. கூட்டமில்லை என்பதால் கேட்கவும் ஆள் இல்லை. யாரையோ தேடுவது போல ரிவர்ஸிலேயே நுழைந்துவிட்டேன். 

இரண்டு சிலைகள்தான். திருநீறு கொடுத்துக் கொண்டிருந்த குருக்களைக் கேட்ட போது 'பெரிய சிலைதான் நவபாஷாணம், சிறிய சிலை உற்சவர்' என்றார்.  

'சிதிலமடைஞ்சு இருக்குன்னு சொன்னாங்களே'

'ஆமாங்க'

'பார்க்கலாமா?' 

'இங்க நின்னு பாருங்க..எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான்'

'கிட்ட போகட்டுமா..டீட்டெயில்ஸ் வேணும்' - கேட்டவுடன் அவர் கொஞ்சம் கடுப்பாகிவிட்டார்.

'நீங்க என்ன சார் ரிப்போர்ட்டரா?' என்றார்.

திருநீறை முகத்தில் அடித்தாலும் அடித்துவிடுவார். 

'நீங்க திருநீறைக் கொடுங்க' என்று நானே கேட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் நெற்றி நிறைய பூசிக் கொண்டேன்.

'சாமி கும்பிடத்தான் வந்தேன்' என்ற போது அவர் கண்டுகொள்ளவேயில்லை. நம்பினால்தானே கண்டு கொள்வார். 

ஊர் திரும்பிய பிறகு  உறவினரிடம் நவபாஷாண சிலை குறித்து பேசிக் கொண்டிருந்தேன். 'நீங்க சிலை சிதிலமடைஞ்சிருக்கிறதை பார்த்திருக்கீங்களா?' என்றேன். அவர் தெரியவில்லை என்றார். ஒரு படத்தை அனுப்பியிருந்தார். இணையத்திலும் அதையொத்த ஒரு படம் கிடைத்தது. உண்மையான படமா என்று தெரியவில்லை. 


நன்கு தெரிந்தவர்கள் இருந்தால் உறுதிப்படுத்தலாம். வேறு ஏதேனும் விவரம் இருந்தாலும் தெரிந்து கொள்கிறேன்.

4 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

புதிய ஒரு திசையில்-பலர் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பும் நிலையில்-உங்கள் ஆய்வு போற்றுதலுக்கு உரியது ஆகும். விரைவில் அந்த பழனியாண்டி அருள் புரியட்டும். வாழ்க வளமுடன்

ilavalhariharan said...

இன்னும் சரியான உண்மை தெரியவில்லையே .....

YogAnand said...

Tata sumo வீட்டுக்கு ராம பாத்துக்கோங்க

Murali said...

https://www.facebook.com/groups/aathirainayagan/?multi_permalinks=1989694364590543&notif_id=1530295773087622&notif_t=feedback_reaction_generic

Visit this page for more details