Apr 11, 2018

காவிரி மேலாண்மை வாரியமும் கொங்கு மண்டலமும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கொங்கு மண்டலத்தில் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பவானி நதி நீரை நம்பி பாசனம் செய்கிறவர்கள் எதிர்க்கிறார்கள். ஏன் எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள காவிரி நதி நீர் பங்கீட்டு வாரியத்தின் தீர்ப்பின் சாராம்சத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். 

சரியாக மழை பெய்யுமானால் ஒரு வருடத்துக்கு காவிரியின் மொத்த நீர் அளவு 726  டி.எம்.சி. இதில் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி; தமிழகத்துக்கு 419 டி.எம்.சி; கேரளாவுக்கு 30 டி.எம்.சி மற்றும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. இதில் கேரளாவுக்கு கொடுக்கும் 30 டி.எம்.சி இருக்கிறதல்லவா? அதில்தான் கொங்கு மண்டலத்துக்குச் சிக்கல். 21 டி.எம்.சியை கபினி ஆற்றிலிருந்து கொடுக்கச் சொல்கிறார்கள். அமராவதியின் துணை ஆறான பம்பாரிலிருந்து 3 டி.எம்.சி நீர் கேரளாவுக்கான உரிமை. மீதமிருக்கும் 6 டி.எம்.சியை பவானியிலிருந்து கொடுக்கச் சொல்லி தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள். இதுதான் பிரச்சினை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் காவிரியின் நீர் மட்டுமில்லாமல் அதன் துணையாறுகளும் வாரியத்தின் கட்டுக்குள் சென்றுவிடும். அப்படியென்றால் பவானி ஆற்றிலிருந்து ஆறு டி.எம்.சி தண்ணீரைக் கேரளாவிற்கு கொடுத்தே தீர வேண்டும். அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியம் தேவை என்கிற கோஷம் மேற்கு மண்டலத்தில் சூடு பிடிக்கவில்லை. 

6 டி.எம்.சி என்பது அதிக அளவுதான். வேளாண்மைக்கு மட்டும் பவானிசாகர் அணையிலிருந்து 3.2  டி.எம்.சி தண்ணீர் தேவை. பவானிசாகர் அணையை  மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து  நதி இறங்கி சமவெளியில் பாயும் இடத்தில கட்டியிருக்கிறார்கள். அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ் பவானி உள்ளிட்ட கால்வாய்கள் வழியாக நீரை பிரித்து வேளாண்மைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக தேவையான நீரின் அளவை பாசன விவசாயிகளுக்கு முழுமையாகக் கொடுக்க முடிவதில்லை என்பதுதான் நிதர்சனம். நீர் வரத்து வருடாவருடம் குறைந்து கொண்டே வருகிறது. எப்பொழுதும் பசுமையாக இருந்த பவானியின் பாசனப்பகுதிகளில் கடந்த சில வருடங்களாகவே வேளாண்மை பொய்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு போகம் விளைந்தாலே பெரிய விஷயம்தான். அந்த விவசாயிகளிடம் 'இனி பவானியிலிருந்து ஆறு டி.எம்.சியை எடுத்துக் கொள்வார்கள்' என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? 

இப்பொழுதும் கூட கேரளா, பவானியிலிருந்து நீரை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இப்போதைக்கு 6 டி.எம்.சி நீரைத் தேக்குகிற அளவுக்கு வசதி இல்லை. அதனால்தான் அவ்வப்பொழுது 'கேரளா அணை கட்ட முயற்சிக்கிறது' என்று யாராவது குரல் எழுப்புகிறார்கள். அணையைக் கட்டினால் நீரைத் தேக்கிவிடுவார்கள். தற்பொழுது பவானியிலிருந்து கேரளாவுக்கு எவ்வளவு நீர் செல்கிறது என்று கணக்குப் பார்க்க வேண்டும். ஒருவேளை ஆறு டி.எம்.சி என்ற அளவை கேரளா எடுத்துக் கொண்டிருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. அப்படியில்லாமல் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமானால் கொங்கு மண்டலத்தின் நலன்கள் எவ்வாறு காக்கப்படும் என்று யாராவது விளக்கினால் பரவாயில்லை.  

பவானி நதி மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கும் நதி. நீரின் அளவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அல்லது அதைவிடவும் முக்கியமாக பவானியின் ஜீவனையும் காக்க வேண்டியிருக்கிறது என்பதைக் கொங்கு மண்டல மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

215 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில்தான் குன்னூர், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய நகரங்களின் கழிவுகள் அப்படியே கலக்கின்றன. பல நூறு கிராமங்களின் சாக்கடைகளைத் திறந்துவிடுகிறார்கள். சத்தியமங்கலம் நகராட்சி பாதாளச் சாக்கடை அமைத்துக் கொண்டிருக்கிறது. கழிவுகளை ஆற்றில் கலக்கவிடப் போகிறார்கள். இந்த நதியில்தான் யுனைடெட் ப்ளீச்சர்ஸ் மாதிரியான சாயத் தொழிற்சாலையின் கழிவுகள் திறந்துவிடப்படுகின்றன. இந்த நதியில்தான் ஐடிசி மாதிரியான காகித ஆலையின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. 'நாங்க சுத்தம் செஞ்சுதானே கலக்குகிறோம்' என்றுதான் ஒவ்வொருவரும் சொல்வார்கள். நமக்குத் தெரியாதா உண்மை என்னவென்று? தமிழகத்தில் மிக மோசமாகச் சீரழிவுக்கு உட்படுத்தப்பட்ட நதிகளில் பவானி முக்கியமானது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளி விவரக் கணக்குப்படி மட்டும் 1316 டன் கரைக்கப்பட்ட திடக் கழிவுகள் சேர்க்கிறது. 2 டன் எண்ணெய் கொட்டப்படுகிறது. இவை தவிர ஏகப்பட்ட மாசுக்கள் கலக்கின்றன. அரசாங்கத்திடம் இருக்கும் புள்ளிவிவரம் மட்டுமே இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தருகிறது என்றால் துல்லியமான புள்ளிவிவரம் எவ்வளவு பெரிய அபாயத்தைக் காட்டும் என்று புரிந்து கொள்ளலாம். கண் முன்னால் இறந்து கொண்டிருக்கும் நதியைக் காக்க என்ன செய்துவிட்டோம்? அரசாங்க அமைப்புகளும், பெருமுதலாளிகளும் செய்கிற அத்தனை அழிச்சாட்டியங்களையும் கண்டும் காணாமல் இருக்கிறோம். சாக்கடையோ, விஷமோ- எங்களுக்கு நீர் வந்தால் போதும் என்கிற மனநிலைதானே நம்மிடம் இருக்கிறது? 

சமவெளிக்கு வருவதற்கு முன்பாகவே எஸ்டேட்களுக்கு உறிஞ்சப்படும் நீரின் அளவு என்ன? கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு எடுக்கப்படும் நீரின் அளவு என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஏதேனும் விவாதங்கள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. மேட்டுப்பாளையம் அருகில் செயல்பட்ட விஸ்கோஸ் என்ற ஆலை இருப்பது வருடங்களுக்கு முன்பாக பெரும் போராட்டங்களுக்குப் பிறகு மூடப்பட்டது. பவானி நதி பெரும் அபாயத்திலிருந்து தப்பியது. அப்பொழுது நதிக்கான நேரடி எதிரி விஸ்கோஸ் என்ற பெயரில் கண்ணுக்கு முன்பாக இருந்ததால் எதிர்த்து போராடினார்கள். இன்றைக்கு நிறைய எதிரிகள் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் யாருமே நேரடியாக கண்களுக்குத் தெரிவதில்லை.

நதியைக் காக்க வேண்டியது நம் கடமை. 

காவிரி மேலாண்மை வாரியம் என்பது தமிழ்நாட்டின் உரிமை. அதில் மாற்றுக் கருத்தில்லை. அதைக் கோரும் அதே சமயத்தில் தீர்ப்பில் பவானி நதிக்கான விளைவுகள் குறித்து தெளிவான புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது. கொங்கு மண்டலத்துக்காரர்களுக்கு இனி பெரிய வேலை இருக்கிறது. 

5 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

இதுபோல, மொத்த தகவலும் பொது தளத்தில் வைக்க வேண்டும். இதில் ஆற்றில் மணல் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு உட்பட

Anonymous said...

திமுகவும் காங்கிரஸும் மத்தியிலும் மாநிலத்திலும் இருந்தால் தமிழர்க்கு நன்மை கிடைக்கும்

Anonymous said...


த்திக்கடவு-அவினாசி திட்டத்தையே எதிர்த்தவர்கள் தானே....
சகோதரர்களையே வஞ்சித்தவர்கள்....

சேக்காளி said...

//திமுகவும் காங்கிரஸும் மத்தியிலும் மாநிலத்திலும் இருந்தால் தமிழர்க்கு நன்மை கிடைக்கும்//
இத ஏம்ய்யா மெல்ல சொல்லுற. நல்ல சத்தமா சொல்ல வேண்டிய(து)தானே.
திமுகவும் காங்கிரஸும் மத்தியிலும் மாநிலத்திலும் இருந்தால் தமிழர்க்கு நன்மை கிடைக்கும். அதானே
Anonymous : ஆமாண்ணே
சரி சரி அண்ணனுக்கு ஒரு டீ சொல்லு.

thiru said...

அந்தியூர் அருகே கர்நாடக வாகனங்களை சிறைபிடித்த கொங்கு நாடு மக்கள் கட்சியினர்

https://tamil.oneindia.com/news/tamilnadu/karnataka-registration-vehicles-are-boycotted-near-erode-317102.html

..எனில் கொங்கு பகுதி மக்களும் மேலாண்மை வாரியம் அமைவதையே விரும்புகிறார்களா ?