'காவிரி நீர் பிரச்சினை என்பது அரசியல்...இதில் மத்திய அரசு என்ன செய்துவிட முடியும்?' என்று பா.ஜ.க அனுதாபிகள் கேட்கிறார்கள்.
கடந்த நூற்றைம்பது வருட கால காவிரியின் வரலாற்றைத் தேடினால் கூட போதும். 1890 களில் இருந்தே தமிழர்களுக்கும் கன்னடர்களுக்குமான காவிரி பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு தொடங்கி யாராவது மத்தியஸ்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். கர்நாடகம் (அன்றைய மைசூர் சமஸ்தானம்) காவிரியின் மீது அணை கட்ட விரும்பிய போது அதற்கு மதராஸ் ராஜதானி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரிட்டிஷ்காரர்கள் தலையீட்டின் அடிப்படையில் கர்நாடகம் கே.ஆர்.எஸ் அணையைக் கட்ட, தமிழகம் மேட்டூர் அணையைக் கட்டியது. 1934 ஆம் வருடம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. நான்கு வருடங்கள் கழித்து 1938 ஆம் ஆண்டு கே.ஆர்.எஸ் அணை திறக்கப்பட்டது.
காவிரியில் யாருக்கு எவ்வளவு நீர் உரிமை இருக்கிறது என்பது குறித்து 1924 ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 75 சதவீதம். ஐம்பதாண்டுகள் கழித்து, 1974 ஆம் ஆண்டில் 'இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது' என்று சொல்லி கர்நாடகா கைவிரித்ததுமில்லாமல் இனிமேல் 'நீங்களும் நாங்களும் தலா 47 சதவீத நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று அறிவிக்கவும்தான் தமிழகம் நீதிமன்றத்தை நாடியது. 'காவிரியில் வரும் நீரை நம்பி நிறைய விளைநிலங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த நீரை நம்பி இருக்கிறார்கள்..இப்படி நீரின் அளவைக் குறைப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும்' என்பது தமிழகத்தின் வாதம்.
அதன் பிறகுதான் 1990 ஆம் ஆண்டு காவிரி நீர் பங்கீட்டு வாரியம் அமைக்கப்பட்டது, இரு மாநிலங்களிலும் தொடர்ச்சியாகக் கலவரங்கள் உண்டானது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். காவிரி நீர் பங்கீட்டு வாரியம் 2007 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி என்கிறது. இந்த அளவானது கர்நாடகா தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய அளவான 192 டி.எம்.சி, தமிழகத்தில் பெய்யும் மழையின் அளவு என அனைத்தையும் உள்ளடக்கியது. அதாவது காவிரியில் 740 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீர் இருந்தால் அதில் 419 டி.எம்.சி தமிழகத்துக்குச் சொந்தம். இதிலிருந்து ஏழு டி.எம்.சி நீரை தமிழகம் பாண்டிச்சேரிக்கு கொடுத்துவிட வேண்டும்.
தீர்ப்பை அமல்படுத்துவதற்கும், செயல்படுத்துவதற்கும் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவிக்கிறது. கர்நாடகா எதிர்க்கவும் மீண்டும் இழுத்துக் கொண்டிருந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று ஒரு தீர்ப்பை எழுதுகிறது. 'கர்நாடகா அடுத்த பதினைந்து வருடங்களுக்கு தலா 177 டி.எம்.சி நீரை தமிழகத்துக்குக் கொடுத்தால் போதும்' என்றும் 'இதுதான் இறுதித் தீர்ப்பு என்றும்' சொல்லி இது சம்பந்தமாக பிற அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறது. அதாவது 192 டி.எம்.சி என்ற அளவிலிருந்து 177 ஆகக் குறைக்கிறார்கள். கடந்த நூறாண்டுகளில் மட்டும் காவிரியில் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு எவ்வளவு குறைந்திருக்கிறது என்று கணக்குப் பார்த்துக் கொள்ளலாம்.
அளவு குறைந்தாலும் தொலைகிறது என்று விட்டுவிடலாம். 'தீர்ப்பை எப்படிச் செயல்படுத்தப் போகிறீர்கள்' என்று மத்திய அரசிடம் அதன் திட்ட வரைவை தாக்கல் செய்யச் சொல்கிறது நீதிமன்றம். அதை மத்திய அரசு செய்திருக்க வேண்டுமல்லவா? ஒவ்வொரு தீர்ப்பும் ஏதாவது ஒரு காரணத்துக்காக செயல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படும் போதும் தமிழகத்துக்கான நீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கலாம். இப்பொழுதும் கூட அப்படிதான் இழுத்தடிக்கிறார்கள் என்று தமிழகம் பயப்படுகிறது. இங்கு மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்பதுதான் பிரச்சினையே. பிப்ரவரியில் வழங்கப்பட்ட தீர்ப்பில், அடுத்த ஆறு வாரங்களில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை முறையாக வடிவத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த காலக்கெடு மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காலக்கெடு முடிந்தவுடன் 'எங்களுக்கு இன்னமும் மூன்று மாதம் அவகாசம் வேண்டும்' என்று மத்திய அரசு பல்லிளிக்கிறது.
'இதில் மத்திய அரசு என்ன செய்ய முடியும்?' என்று கேட்டால் இதைத்தான் செய்திருக்க வேண்டும். நாற்பது நாட்கள் எனக் கிடைத்த அவகாசத்தில் காவிரி தீர்ப்பை எப்படிச் செயல்படுத்தப் போகிறோம் என்ற வரைவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். கால அவகாசம் போதாது என்றால் அப்பொழுதே நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. கால அவகாசம் முடியும் வரைக்கும் காத்திருந்துவிட்டு மீண்டும் நீட்டிப்பு கேட்கிறார்கள்.
இதில் நிர்வாகக் காரணங்களைவிடவும் அரசியல் காரணங்கள்தான் நிறைய இருக்கின்றன. ஏற்கனவே கர்நாடகாவில் பாஜக கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இதில் தீர்ப்பை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டால் கன்னடர்கள் வாலில் வற ஓலையைக் கட்டிவிட்டு துரத்தியடிப்பார்கள். அதனால்தான் ஆனவரைக்கும் ஆறட்டும் என்று டபாய்க்கிறார்கள். இப்பொழுது, மே மூன்றாம் தேதிக்குள் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான சட்ட வரைவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உறுதியாகச் சொல்லியிருக்கிறது. மே பனிரெண்டாம் தேதிதான் கர்நாடகத் தேர்தல் என்பதால் அதற்கு முன்பாக எப்படி தாக்கல் செய்வார்கள் என்று தெரியவில்லை.
அரசுகள் செய்ய வேண்டியதைச் செய்யாமல் தாமதப்படுத்தும் போதுதான் மக்கள் சாலைகளில் இறங்குகிறார்கள். இப்பொழுது தமிழகத்தில் இறங்கியிருக்கிறார்கள். அடுத்து கர்நாடகத்தில் இறங்குவார்கள். இரு தரப்புக்கும் பாதிப்பு உண்டு. பாதிக்கப்படப் போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் சாமானியர்களாகத்தான் இருப்பார்கள். கஷ்டம்தான். ஆனால் தமிழகத்தின் குரல் இப்பொழுதான் வடக்கில் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இப்படி உரக்கக் கத்தவில்லையெனில் தொடர்ந்து வஞ்சகம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
மத்திய அரசின் இழுத்தடிப்பை தமிழகம் மட்டுமில்லை- உச்ச நீதிமன்றமும்தான் விமர்சித்திருக்கிறது. ஏப்ரல் ஒன்பதாம் தேதியன்று 'இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்' என்று கடிந்திருக்கிறது.இதையேதான் தமிழக மக்களும் கேட்கிறார்கள். கர்நாடகாவில் வாக்கு அரசியலுக்காக லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை அடமானம் வைக்கிறீர்களா என்கிறார்கள்.
மோடிக்கும் பாஜகவுக்கும் ஆதரவாக இருப்பது அவரவர் உரிமை. ஆனால் தமிழகத்தில் கால் பதிக்க விரும்பினால் தயவு செய்து தமிழர்களின் உரிமைகளைப் புரிந்து கொள்ளுங்கள். இங்கு அத்தனை பேருமே நீங்கள் நினைப்பது போல உணர்ச்சிவசப்படுகிறவர்கள் இல்லை. முட்டாள்களும் இல்லை. தமிழகம் வஞ்சிக்கப்படும் போது குரல் எழுப்பாவிட்டாலும் குறுக்கு சால் ஓட்டாமல் அமைதியாக இருங்கள். மத்திய அரசு செய்கிற காரியங்கள் எல்லாவற்றிற்கும் மனசாட்சியே இல்லாமல் 'இது சரிதானே' என்று முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்ததால் தமிழகத்தில் இன்று மட்டுமில்லை- எந்தக் காலத்திலும் பாஜகவால் நோட்டாவை வெல்ல முடியாது.
3 எதிர் சப்தங்கள்:
என்ன சின்னையா!!!
வஞ்சகத்தை நெனைச்சு ராத்திரி பூரா ஒறங்கல போலருக்கு.
மத்திய அரசு செய்கிற காரியங்கள் எல்லாவற்றிற்கும் மனசாட்சியே இல்லாமல் 'இது சரிதானே' என்று முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்ததால் தமிழகத்தில் இன்று மட்டுமில்லை- எந்தக் காலத்திலும் பாஜகவால் நோட்டாவை வெல்ல முடியாது....அநேகமாக அப்படியே தான் நிகழுமென நினைக்கிறேன்.
வாழ்க வளமுடன்
மழை நன்றாக பெய்து கொண்டிருந்தபோது கர்நாடகத்தில் பல அணைகள் கட்டப்பட்டன. நாமும் நமது பங்கிற்கு அமராவதி, பவானி அணைகள் கட்டி காவேரி கடைமடை செல்லும் நீரை தடுத்து விட்டோம். கர்நாடகத்தில் கூடுதல் பாசனப்பரப்பு செய்தபோது பல அரசியல் காரணங்களால் வாய்மூடி இருந்து விட்டோம். எந்த ஒரு தனிமனிதரையும் குறிப்பிடவில்லை. இப்போது வந்த போர்க்குணம் அப்போது இல்லை என்பதே நிதர்சனம். இதற்கு முக்கிய காரணம் அப்போது மழை நன்றாக பெய்து கடைமடை வரை தண்ணீர் கிடைத்தது. வடகிழக்கு பருவமழையும் கைகொடுத்தது.
தற்போது மழையின் அளவு குறைந்ததே பிரச்சனையின் முக்கிய புள்ளி. கடைமடைக்கு தண்ணீர் இல்லையென்றால் பவானி, அமராவதி அணைகளை திறந்து தண்ணீரை விடவேண்டும் என்றால் நமது தமிழக விவசாயிகள் சம்மதிர்ப்பார்களா ?
வைகை பாசன பகுதிகளில் மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மழை குறைவாக பெய்யும் காலங்களில் இராமநாதபுரத்திற்கு தண்ணீர் வந்து சேருவதில்லை.அங்கே மாவட்ட ஆட்சியர்கள் தண்ணீருக்காக தங்களுக்குள் அடித்து கொள்வார்கள். இந்த பிரச்னை தான் காவேரியில் நிரந்தரமாக உள்ளது.
உடனே CMB அமைத்து விட்டால் இந்து பிரச்னை தீருமா என்றால் இல்லை. எனவே நிரந்தர தீர்வுக்கு வழி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில், மற்றும் டெல்டா மாவட்டங்களில் மரங்களை வளர்த்து மழை கூடுதல் பெற வழி செய்ய வேண்டும். (குறைத்த பட்சம் 20 ஆண்டுகள் ஆகும் என்றாலும், கடந்த 50 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனைக்கு இன்னும் 20 ஆண்டுகளிலாவது தீர்வு கிடைக்கும்.)
தமிழக பொதுப்பணி துறையில் நீர் பாசனத்தில் பொறியாளராக சில ஆண்டுகள் பணி புரிந்ததாலும், இப்போதும், நீர் வளங்களை மேம்படுத்தும் ஆர்வம் இருப்பதாலும் எனதும் கருத்துக்களை பதிவு இட்டுஇருக்கிறேன்.
பிஜேபி கர்நாடகத்தில் காங்கிரசை வெற்றி கொண்டாலும், தமிழகத்தில் நோட்டாவை வெற்றி கொண்டாலும் எனக்கு எந்த லாபமும் இல்லை. வீணாக மக்களை உணர்ச்சி வசப்படுத்தி வன்முறை செய்வதில் எந்த லாபமும் இல்லை. அன்றாடம் காட்சிகள் தான் அவதி படுவார்கள்.
Post a Comment