Apr 12, 2018

எறும்புகளை மிதித்துவிடாதீர்கள்

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழ்நாடே திரண்டு நிற்கும் போது 'கொங்கு மண்டலத்தின் பிரச்சினைகள்' என்று எழுதுவது சரியா என்று கேட்பது நியாயமானதுதான். ஆனால் தீர்ப்பு வந்த 2007 ஆம் ஆண்டிலிருந்தே இந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் ஒரு விவகாரம் சூடு பிடிக்கிறதோ அப்பொழுது மட்டும்தான் கவனிப்போம் என்பது தமிழ்நாட்டின் சாபக் கேடு. மற்ற சமயங்களில் அதை பொருட்படுத்தவே மாட்டோம். இந்த விவகாரத்திலும் அப்படித்தான்.

காவிரியின் முக்கியமான துணை ஆறுகளில் ஒன்றான பவானியின் மீது பவானிசாகர் அணை இருக்கிறது. இந்த அணையிலிருந்து மூன்று பகுதிகள் பாசனம் பெறுகின்றன.
  • கீழ் பவானி கால்வாய்  - சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலம்
  • தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய்கள்  (மற்றும்)
  • காளிங்கராயன் கால்வாய் - இந்த மூன்று பாசனப் பகுதிகளையும் சேர்த்தால் சுமார் ஒரு லட்ச ஏக்கர் நிலம். 



இந்த நிலப்பரப்புகளுக்கான நீர்த் தேவை 60 டி.எம்.சி. பவானிசாகர் அணையின் மொத்தக் கொள்ளளவு 32 டி.எம்.சி. அணை வருடத்துக்கு இரண்டு முறை நிரம்ப வேண்டும். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கான விவரங்களை எடுத்து சரி பார்த்துக் கொள்ளலாம். ஒரு முறை அணை நிரம்புவதே அதிசயமாகிக் கொண்டிருக்கிறது. சராசரியாகக் கணக்கெடுத்தால் நாற்பது டி.எம்.சி தண்ணீர் கிடைக்கிறது. இதில் ஆறு டி.எம்.சியை கேரளாவுக்கு கொடுத்துவிடுங்கள் என்று சொன்னால் எப்படி விவசாயம் நடக்கும்? 

காவிரியின் மொத்த நீரான 720 டி.எம்.சியுடன் ஒப்பிடும் போது ஆறு டி.எம்.சி என்பது சொற்பம்தான். ஆனால் பவானிசாகரில் இருக்கும் நாற்பது டி.எம்.சியில் ஆறு டி.எம்.சி என்பது வெகு அதிகம். 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது' என்று யாரும் எதிர்க்கவில்லை. எங்களுக்கான தீர்வைச் சொல்லுங்கள் என்கிறார்கள். கேரளாவுக்கு, கபினியிலிருந்து 21 டி.எம்.சியை கொடுக்கச் சொல்லி தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழகம் கேரளாவிடம் பேசி 30 டி.எம்.சியையும் கபினியிலேருந்தே எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறதா எனப் பார்க்கச் சொல்கிறார்கள். 

பவானி நதியிலிருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் குடிநீர்த் தேவைகளுக்காக மேலும் சில கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படப் போவதாகச் சொல்கிறார்கள். 'குடிநீரா? பாசனமா?' என்ற கேள்வி வரும் போது குடிநீருக்குத்தான் முன்னுரிமை. அப்படி சில டி.எம்.சி போய்விடும். இரு போகம் விளைந்து கொண்டிருந்த பகுதி இப்பொழுதே ஒரு போகமாகிவிட்டது. இன்றைக்கு விவசாயத்தை நம்பி யாரும் பிழைக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. விவசாயக் கூலிக்கு வருடத்தில் நூறு நாட்களைத் தாண்டி வேலை இல்லை. சிறு குறு விவசாயிகள் திணறுகிறார்கள். நிலத்தடி நீர் அதலபாதாளத்தில் கிடக்கிறது. 

எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. 

இன்றைக்கு மாநிலமே நீர்ப் பிரச்சினையைப் பேசிக் கொண்டிருக்கும் போது இதையெல்லாம் பேசாமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் நிலைமை மோசமாகி 'பவானி பாசனப்பகுதிகள் காய்கின்றன' என்று குரல் எழுப்பும் போது 'ஒரு சிறு நிலப் பகுதிக்கான பிரச்சினை' என்று மற்றவர்கள் கருதுகிற வாய்ப்பு மிக அதிகம். பவானி பாசன விவசாயிகள் அப்படி அனாதைகளாக்கப்பட்டுவிடக் கூடாது என்றுதான் இந்தத் தருணத்தில் பேச வேண்டியிருக்கிறது. 

அரசியல் இயக்கங்களுக்கும், தலைவர்களுக்கும் இன்றைய நோக்கம் எல்லாம் 'காவிரியில் தண்ணீர் கொண்டு வந்துவிட்டோம் பார்த்தீர்களா' என்று மட்டுமே இருந்தால் யானை நடக்கும் போது எறும்புகள் சாகத்தான் செய்யும் என்பது போலாகிவிடும்.

பிரச்சினை மிகச் சிக்கலானது. 

தீர்ப்பை பொறுத்தவரைக்கும் 'இந்த தீர்ப்பு மாநிலங்களுக்கிடையிலானது. ஒரு மாநிலத்திற்குள்ளான நீர் பிரச்சினையை அந்தந்த மாநிலங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள். 30  டி.எம்.சி என்பது கேரளாவுக்கான உரிமை. எங்களுக்கு கபினியிலிருந்து 21 டி.எம்.சி போதும்.  மிச்சத்தை தீர்ப்பின்படி பவானியிலிருந்தும், பம்பாரிலிருந்தும் கொடுங்கள்' என்று கேரளா முரண்டு பிடித்தால் வேறு வழியே இல்லாமல் போய்விடும். எறும்புகள் நசுங்கித்தான் தீர வேண்டும்.

'ஆறு டி.எம்.சி எங்கள் உரிமை, அதைச் சேகரிக்கும் அளவுக்கு அணை காட்டுவதும் எங்கள் உரிமை' என்று கட்டத் தொடங்கினால் இந்த அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்?. இவற்றையெல்லாம் குறித்துதான் பேச வேண்டியிருக்கிறது.

தண்ணீரைப் பொறுத்தவரைக்கும் நமக்குள்ளேயே ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. மேட்டூருக்குத் தண்ணீர் கொடுத்தால் தஞ்சாவூர்காரர்கள் கோபப்படுவார்கள். 'எங்களுக்கு மிஞ்சித்தான் உங்களுக்கு' என்று மேட்டூர்காரர்கள் தஞ்சாவூர்க்கார்களிடம் சொல்வார்கள். ஒரு கால்வாய் பாசனக்காரர்களுக்கும் இன்னொரு கால்வாய் பாசனக்காரர்களுக்குமிடையிலான தகராறுகள் பொதுவாக வெளியில் தெரியாது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும்  விவசாய சங்கங்களிடமும் பேசினால் கதை கதையாகச் சொல்வார்கள். 

தடப்பள்ளியும், கீழ்பவானியும் பவானிசாகர் அணையிலிருந்துதான் நீர் பெறுகின்றன. ஆனால் இந்த இரண்டு கால்வாய் வழியாக பாசனம் செய்யும் விவசாயிகள் எலியும் பூனையுமாகத்தான் இருப்பார்கள். அது இருக்கத்தான் செய்யும். ஒரே கிணற்றில் நீரெடுக்கும் உழவர்கள் தமக்குள்ள கசந்து கொள்வது போல இது வழமைதான். 

நீர் இருந்து அதற்காக சண்டை பிடிப்பது வேறு. நீரே இல்லாமல் போவது வேறு.

'இப்போ அமைதியா இரு..மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு பேசிக் கொள்ளலாம்' என்று சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கும். நாளை வாரியம் அமைந்துவிடும். தமிழகத்துக்கான நீரும் கிடைத்துவிடக் கூடும். கர்நாடகாவிலிருந்து கிடைத்திருக்கும் 177  டி.எம்.சியில் மேட்டூருக்கு எவ்வளவு, தஞ்சைக்கு எவ்வளவு என்று பங்கிடுவது எளிது. அது நமக்குள்ளான பிரச்சினை.

பவானியில் இருக்கும் நாற்பது டி.எம்.சியில் ஆறு டி.எம்.சியைக் கேராளாவுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னால் அது மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினை. தீர்க்கவே முடியாத தலைவலியாக இருக்கும். அதற்கு என்ன மாற்று ஏற்பாடுகளை இந்த அரசாங்கம் வைத்திருக்கிறது என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. இது பற்றி இன்னமும் விரிவாக, தரவுகளுடன் எழுத இயலும். ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டத்தில் குறுக்குசால் ஓட்டுவதாக ஆகிவிடக் கூடாது என்று தயக்கமாக இருக்கிறது. 

மீண்டும் சொல்கிறேன். 

காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருதுமில்லை. ஒருங்கிணைந்து குரல் எழுப்புவோம். போராடுவோம். அதே சமயம் நசுக்கப்படும் எறும்புகள் குறித்தும் கவனத்தைக் கோர வேண்டியிருக்கிறது. ஒரு பகுதியின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அதற்கான சரியான பதிலைச் சொல்ல வேண்டியது அரசின் கடமையாகிறது. பதிலையும் தீர்வையும் கேட்க வேண்டிய தருணமிது.

தொடர்புள்ள பதிவு : காவிரி மேலாண்மை வாரியமும் கொங்கு மண்டலமும்

3 எதிர் சப்தங்கள்:

Karthik R said...

உங்கள் இடுகை எனக்கு எங்கள் ஊரை ஞாபகப்படுத்துகிறது (மேலூர், மதுரை மாவட்டம்). முன்பு பெரியார் கால்வாயில் இருந்து தண்ணீர் வரும், கரும்பு விளைந்த காலம் அது. இன்று பெரியார் கால்வாயில் தண்ணீர் வருவது அரிது. சின்னமனூர் சுற்றி corporate விவசாயம் பெருகியது காரணமா இல்லை மழை பொய்த்தது காரணமாம் இல்லை ஆசை அதிகரித்தது காரணமா தெரியாது.

Water sharing becomes difficult with corruption, greed, failing monsoon and d(r)ying patriotism.

Asok said...

When you want water from Other state, we are ready to share our water too. Even though we have less water, still it has to be shared. We have to think about how to find the water sources and plan accordingly.

சேக்காளி said...