Apr 26, 2018

ஜெயிச்சுடு செவல

கர்நாடக தேர்தலில் யார் வெல்வார்கள்? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் ஒரே பதிலைத்தான் சொல்கிறார்கள். 'யாருக்கும் மெஜாரிட்டி வராது..குமாரசாமி கிங் மேக்கராக இருப்பார்'. ஆனால் தினசரி சூழல் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஆரம்பத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புகள் அருமையாக இருப்பது போலத் தெரிந்தது. பாஜகவும் அசமஞ்சமாக இருந்தது போலத் தெரிந்தது.

சித்தராமைய்யாவின் சில அதிரடிகள் பாஜகவை ஆட்டம் காணச் செய்தது. இந்திரா கேன்டீன், லிங்காயத் சமூகத்தை தனி மதம் என அங்கீகரிப்பது போன்ற மாஸ் திட்டங்களால் பாஜக அலர்ட் ஆகியது. அதே சமயம் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டங்கள் கூட கூட்டமில்லாமல் காற்று வாங்கியது அவர்களை இன்னமும் அலறவிட்டன. தமது வியூகங்களை கடைசி நேரத்தில் மாற்றியிருக்கிறது பாஜக. 


எடியூரப்பாவின் மகனுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் வருணா தொகுதியில் (இப்பொழுது வரைக்கும் சித்தராமையாவின் தொகுதி இது. இதில் அவரது மகன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்) பாஜக சார்பில் போட்டியிடுவார் எனச் சொல்லப்பட்டு அவர் பரப்புரையைக் கூட ஆரம்பித்திருந்தார். அதே போல இப்பொழுது எம்.பி ஆக இருக்கும் எடியூரப்பாவின் வலது கை ஷோபா எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு யஷ்வந்தபுராவில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. கடைசியில் அவருக்கும் சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. எடியூரப்பாவின் ஆட்களுக்கே சீட் தரவில்லை என்பது அதிசயம்தான். 


'ஜெயிக்கிற வழியை மட்டும் பாருங்க' என்றுதான் பாஜகவின் தலைமை சொல்லியிருக்கிறது. இதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 'குவாரி மாஃபியா' ரெட்டி சகோதரர்களின் ஆட்கள் ஏழு பேருக்கு பாஜக சீட் கொடுத்திருக்கிறது. கடந்த பாஜகவின் ஆட்சியில் 'முடிஞ்சா பெல்லாரி பக்கம் வந்து பாருங்க' என்று ரெட்டி சகோதர்கள் சித்தராமைய்யாவை மிரட்டியதும் அவர் துணிந்து பிரமாண்டமான பாதயாத்திரை அவர்கள் கோட்டையிலேயே நடத்தியதும் அதன் பிறகு ரெட்டி சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டு சித்தராமையா முதலமைச்சர் ஆனதெல்லாம் கர்நாடக அரசியலின் சுவாரசியமான நிகழ்வுகள். அதில் ரெட்டி சகோதர்கள் கடும் எரிச்சலில் இருக்கிறார்கள். கட்சி அரசியல் தாண்டி 'ரெட்டிக்கும் சித்துவுக்குமான போட்டி'யாக மாறியிருக்கிறது. ரெட்டிகளின் எரிச்சலையும் கடுப்பையும் பாஜக அறுவடை செய்யப் பார்க்கிறது. சித்தராமையா போட்டியிடும் பாதாமி தொகுதியில் ரெட்டியின் தளபதி ஸ்ரீராமுலுவே எதிர்த்து நிற்கிறார் என்பதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.

(ஸ்ரீராமுலு)

பாஜக மட்டுமில்லை. காங்கிரசும் அப்படிதான். வெற்றி மட்டும்தான் நோக்கம். ஒவ்வொரு தொகுதியும் முக்கியமானதாகியிருக்கிறது. 

(ஹாரிஸ்)

சாந்தி நகர் தொகுதியின் எம்.எல்.ஏ ஹாரிஸின் மகன் இரண்டு மாதங்களுக்கு முன்பாக பாரில் ஓர் இளைஞனைப் போட்டு கும்மி எடுத்துவிட்டான். கடந்த இரண்டு மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் பரப்பன அக்ரஹார சிறையில் கிடக்கிறான். தேர்தல் சமயத்தில் இது காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக மாறிப் போனது. ஹாரிஸுக்கு தேர்தலில் இடம் கிடைக்காது என்றார்கள்.  ஆனால் ஹாரிஸ் பண முதலை. 'உங்களை நிறுத்தினா அக்கம் பக்கம் நான்கைந்து தொகுதிகளில் தோற்க வாய்ப்பிருக்கிறது' என்று தலைமை  சொன்ன போது 'என்னை நிறுத்தலைன்னா பதினைந்து இருபது தொகுதிகளில் உங்களை என்னால தோற்கடிக்க முடியும்..தெரியும்ல' என்று பன்ச் அடித்ததாகச் சொல்கிறார்கள். ஹாரிஸ் செய்தாலும் செய்துவிடுவார்.  224 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் வைத்திருந்தார்கள். அதில் ஹாரிஸின் சாந்திநகரும் ஒன்று. கடைசியில் அவருக்கே இடம் கொடுத்துவிட்டார்கள். வேட்பு மனுத் தாக்கலுக்கு மட்டும் பத்தாயிரம் பேரைத் திரட்டி வந்தார். 

அசோக் கேணி என்றொரு தொழிலதிபர். அவர் மீதான  பல கோடி ரூபாய் ஊழல் வழக்கு விசாரணையை சித்தராமையாவின் அரசுதான் முடுக்கிவிட்டது.  இப்பொழுது அவரே காங்கிரஸ் வேட்பாளர்.  பீதர் தொகுதியில் நிற்கிறார். எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்பார்கள் என்று தெரியவில்லை. அரசியலில் வெட்கமாவது மானமாவது. வெற்றிதான் முக்கியம். நல்லவன் கெட்டவன் என்றெல்லாம் எதுவுமில்லை. பணம் படைத்தவர்கள், சாதிய வாக்குகளை அள்ளக் கூடியவர்கள் என்று ஒவ்வொரு கட்சியினரும் பற்களை வெருவிக் கொண்டு வேலை செய்கிறார்கள்.

இவர்கள்தான் வெல்வார்கள்.

எளியமனிதர்கள் அரசியலைப் பார்த்து பயப்படும் அளவுக்கு பணத்தாலும் பலத்தாலும் முறுக்கேறிக் கிடக்கிறது இந்த தேசம். ஜனநாயம் என்பதெல்லாம் வெறும் பேச்சுதான். இல்லையா?  

(குமாரசாமி)

காங்கிரசும் பாஜகவும் அறுதிப் பெரும்பான்மைக்காக சண்டை கட்டுகிறார்கள். 2019 நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு கர்நாடக தேர்தல்தான் ஒத்திகை என்கிற அளவுக்கு பேசுகிறார்கள். அதனால் இரண்டு கட்சிகளுமே 'ஜெயிச்சுடு செவல' என்று இறங்கி அடிக்கிறார்கள். அதே சமயம் மதச்சார்பற்ற ஜனதாதளம் முப்பது தொகுதிகளைப் பிடித்துவிட தம் காட்டுகிறது. குமாரசாமி பிடித்துவிடுவார் என்றுதான் சொல்கிறார்கள். அவர்களது கட்சிக்கு என செல்வாக்கான தொகுதிகள் இருக்கின்றன. எந்த அலையும் இப்பொழுது இல்லை. முன்பெல்லாம் எடியூரப்பா மேஜிக் என்று சொல்வார்கள். அது இப்பொழுது வேலைக்கு ஆகவில்லை. காங்கிரஸ், ராகுலைவிடவும் சித்தராமையாவை நம்புகிறது. காங்கிரசும் பலவீனம்தான். இந்தச் சூழலில் குமாரசாமியின் கட்சி முப்பதுக்கும் அதிகமான தொகுதிகளில் வென்றாலும் கூட ஆச்சரியப்பட  வேண்டியதில்லை. கடைசியில் இரண்டு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது குமாரசாமிதான் கிங் மேக்கராக இருப்பார். எந்தக் குதிரை வலிமையானதாக இருக்கிறதோ அதில் ஏறிக் கொள்வார். சித்தராமையா முன்பு ஜனதாதள கட்சியில் இருந்து காங்கிரசுக்குச் சென்றவர் என்பதால் அவருக்கும் குமாரசாமிக்கும் ஏழாம் பொருத்தம். எனவே காங்கிரஸ் பெரும்பான்மை பெறாவிட்டால் குமாரசாமி எடியூரப்பாவின் முதுகில் ஏறவே வாய்ப்புகள் அதிகம்.

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Very interesting....Please keep on writing about the karnataka politics....

Vaa.Manikandan said...

கட்சி மாறியவர்களுக்கு வாய்ப்பு, வாய்ப்பு கிடைக்காதவர்கள் போராட்டம், பண பலம், சாதிய பலம், கட்சி தாவுவது என்று சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் கூர்ந்து கவனித்தால் அரசியல் மீது மிகக் கடுமையான அயற்சியும் வெறுப்பும் உண்டாவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.

சேக்காளி said...

என்ன "...."!
இப்பல்லாம் பின்னூட்டங்களுக்கு பதில் ஆரம்பிச்சாச்சு போல.