Apr 5, 2018

கேள்வியும் பதிலும்

பொறாமையாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருக்கிறது உங்களது செயல்பாடுகளை பார்க்கும் பொழுது. வாழ்த்துக்கள். எனக்கும் ஆசை இருக்கிறது. பொது சேவை செய்ய. செய்ய என்ன.... செய்வேன் விரைவில். ஆனால் ஆரம்பிக்கும் முன்னமே ஒரு பயம் இருக்கிறது. தொடர்ந்து செய்ய முடியுமா என்று...அந்த சிந்தனையே இந்த செயலை ஆரம்பிக்க முடியாமல் ஆக்கிவிடுகிறது. நிறைய யோசிக்கிறேன். உ.தா. TEDx தமிழ்ப்படுத்தி கிராமப்புற மாணவர்களுக்கு காண்பிப்பது என்பது போன்ற எனக்கு சில வார்த்தைகள்... பொருளாதார ரீதியாக தன்னிறைவு இருக்கிறது. 

ஆசைப்பட்டுக் கொண்டேயிருந்தால் கனவுதான் பெரிதாகும். ஒரு காரியமும் நடக்காது. துணிந்து களத்தில் கால் வைத்துவிட வேண்டும். ஒரு வேலையைத் தொடங்கிவிட்டால் அது தானாக நம்மை இழுத்துக் கொண்டு செல்லும். 

ஓர் உதாரணம் சொல்கிறேன்- சனிக்கிழமை நடக்கவிருக்கும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான நிகழ்வை வெகுகாலம் முன்பெல்லாம் திடடமிடவில்லை. எதேச்சையாக புளியம்பட்டி மையத்தில் குழந்தைகளைப் பார்த்து வரலாம் என்றுதான் சென்றோம்.  அந்தக் குழந்தைகளைப் பார்த்தவுடன் 'இவர்களுக்கு ஏதாவது செய்யலாம்' எனத் தோன்றியது. ஒரு நிகழ்ச்சி. அவ்வளவுதான். இருபது குழந்தைகள்தானே இருக்கிறார்கள் இரண்டு அல்லது மூன்று மையங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது. பிறகு ஒவ்வொரு வேலையாக மடமடவென்று செய்யத் தொடங்கினோம். அரசு அனுமதி- அதை கல்வித் துறையில் பணியாற்றும் நண்பர் செய்து கொடுத்தார், உணவு ஏற்பாடு- ஒரு தலைமையாசிரியர் பார்த்துக் கொள்கிறார், கார்த்திகேயன் என்ற வாசகர் 'உணவுக்கான செலவை நான் பார்த்துக்கிறேன்' என்று சொல்லிவிட்டார், கதை சொல்கிறவர்களுடன் பேசுதல், மையத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஏற்பாடுகள் என எல்லாமும் மின்னல் வேகத்தில் நடக்கின்றன. எதற்காகச் சொல்கிறேன் என்றால் ஆரம்பிக்கும் வரைக்கும் 'இதைச் செய்ய முடியுமா' என்ற சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கும். 'நம்மால் செய்ய முடியவில்லையென்றால் யாரால் செய்ய முடியும்?' என்ற கேள்வியை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  எந்தவொரு பொதுக் காரியமும் இப்படித்தான் வேகம் பிடிக்கும். 

இப்பொழுதெல்லாம் நிகழ்ச்சியாக நடத்தி சிலர் கலந்து கொள்ளும்படியாக ஏற்பாடு செய்வதே கூட இன்னும் நான்கு பேருக்கு உந்துதாக இருக்க முடியும் என்பதால்தான். சனிக்கிழமை விடுமுறை என்றால் கலந்து கொள்ளுங்கள். ஒரு ஐடியா கிடைத்தாலும் கிடைக்கும் 

உங்களுக்கு தலையில் முடி இல்லை என்று கவலை பட்டதுண்டா? அப்படி கவலை பட்டால் எதற்காக கவலை படுகிறீர்கள்?

மாதம் ஒரு முறை- அவ்வளவு வேகத்தில்தான் வளர்கிறது- அழுந்த வெட்டிக் கொள்வேன். தலைக்கவசத்தைக் கழட்டும் போதும், பேருந்திலிருந்து இறங்கும் போதும் தலை வாராமல் இருப்பதே பெரிய சந்தோசம் எனக்கு. இப்பொழுதெல்லாம் முடி களைந்து இருக்கிறதா என்கிற கவலையே இல்லை. அது பெரிய சுதந்திரம். நமக்கு எது நிலைக்குமோ அதுதான் நிலைக்கும். முடி நிலைக்காது என்று விதிக்கப்பட்டிருக்கிறது. கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது. 

"இந்த பாட்டை கேட்டா, கூடவே சேர்ந்து மனசுக்குள் பாடுவேன்" அப்படின்னு நீங்க சொல்லுற பாடல் எது

'காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்..வானின் நீலம் கொண்டு வா...'
'சொல்லிட்டாளே அவ காதல..சொல்லும் போதே..'
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'
'அந்திமழை பொழிகிறது..'
'முத்துமணி மாலை...' 

- நிறையப்  பாடல்கள் இருக்கின்றன.

அன்னா ஹஜாரேயின் ஊழலுக்கெதிரான போராட்டம் குறித்து..

அவர் நல்ல மனிதர் என்று நம்புகிறேன். ஆனால் அவர் அரசியல்வாதிகளை-அரசியவாதிகள் ஆக விரும்புகிறவர்களை முழுமையாக நம்புகிறார். தனக்கான மரியாதையை தானே குறைத்துக் கொண்டார். இனி அவரால் துரும்பைக் கூட அசைக்க முடியும் என்று தோன்றவில்லை. காலிப் பெருங்காய டப்பாவாகிப் போனார்.

உங்கள் வாழ்க்கையில் நீங்க ஏதாவது கஷ்டம் அனுபவிச்சிருக்கீங்களா?

கஷ்டமில்லாத மனிதர்களா? உடல் ரீதியிலான கஷ்டங்களை சமாளித்துவிட முடியும். பொருளாதார கஷ்டங்களையும் கூட சமாளித்துவிடலாம். மனரீதியிலான பிரச்சினைகள்தான் முடக்கிப் போட்டுவிடும். கடைசியாக மனதளவில் கஷ்டப்பட்டது அப்பாவின் உடல்நலம் சீர் கெட்ட போது.

சராசரியான ஐடி பணியாளர் தமது வாழ்க்கையில் எதையாவது இழக்கிறாரா? (உதாரணம்: உடல்நலம், சொந்த ஊர்)? தனிப்பட்ட/சமூக வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்- மாதம் இரண்டு முறையாவது பயணிக்க வேண்டும். ஏதாவதொரு ஊருக்கு. தேசாந்திரியாகச் சுற்றாமல்  'இவரைச் சந்தித்துவிட்டு வரலாம்' என்பது மாதிரியான இலக்கு ஒன்றை வைத்துக் கொண்டு சென்று வர வேண்டும். மனிதர்களைப் பார்ப்பதுதான் நம் பெரும்பாலான சுமைகளை இறக்கி வைக்க உதவும். தினசரி நான்கு நண்பர்கள்/ மனத்துக்குப் பிடித்தமானவர்களுடன் அலைபேசியில் பேசி விட வேண்டும். 'ஊர்ல மழையா?' 'அவர் என்ன பண்ணிட்டு இருக்காரு' 'ஆபிஸ்ல பெரிய டார்ச்சருங்க' 'மாரியம்மன் கோவில் நோம்பி எப்போ?' என்பது மாதிரியான ஊர் சார்ந்த உரையாடல் இருப்பதும் அவசியம். தினமும் நாற்பது நிமிட நடைபயணம், நம் உடல் பற்றி நாம் புரிந்து வைத்திருப்பது என்பதெல்லாமும் அவசியம். இது பற்றி விரிவாக எழுத விரும்புகிறேன். எழுதுகிறேன். 

உங்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரம் என்று எதை நினைக்கிறீர்கள்?

மணிகண்டனாகப் பிறந்திருப்பது- எனக்கு கிடைத்திருப்பது எல்லாமே வரம் என்று நம்புகிறேன். அந்த அர்த்தத்தில் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தலையில் கொம்பு முளைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 

ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்- எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழுந்து மண்டை சிதறிவிடும் வாய்ப்பு இருக்கிறது என்பதால்.

Sarahah வந்த கேள்விகள்  

5 எதிர் சப்தங்கள்:

karthickg said...

சராசரியான ஐடி பணியாளர் தமது வாழ்க்கையில் எதையாவது இழக்கிறாரா? (உதாரணம்: உடல்நலம், சொந்த ஊர்)? தனிப்பட்ட/சமூக வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?


இது பற்றி விரிவாக எழுத விரும்புகிறேன். எழுதுகிறேன்.

Thank you for the suggestions. We will wait for the detailed write-up.

சேக்காளி said...

இன்னைக்கு "டக்ளஸ் அண்ணன்" பதவியிலிருந்து "நம்ம தல" க்கு லீவு

சேக்காளி said...

யோவ்!! பொறாம+குத்த உணர்ச்சி,
TEDx ன்னா என்ன?
ன்னு வெளக்கி கூட ஒம்ம பொதுச்சேவையை ஆரம்பிக்கலாம்.

MARUTHAPPAN said...

எனக்கு பிடித்த பாடல் வெற்றி வேண்டுமா போட்டுப்பாறடா எதிர் நீச்சல்

அன்பே சிவம் said...

தலயோட பெருமையை பரப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் வழங்கப்பட்ட
கொ.ப.செ. பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி பேசலாமா.