Apr 5, 2018

பலியாடுகள்

பொதுவாக இன்றைய தலைமுறையினர் சமநிலையில் இருக்க முடிவதில்லை என்று புலம்புவது வாடிக்கைதான். (Work-Life imbalance) கடந்த வருடம் எனக்கு அப்படியொரு சூழல் உருவானது. வேலை மீது வேலையாகக் குவியும். நம் மீதான அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். காலையில் எழுந்தவுடனேயே அலுவலக மின்னஞ்சலைப் பார்க்கத் தோன்றும். அமெரிக்காவிலிருந்தோ, லண்டனிலிருந்தோ மின்னஞ்சல் வந்திருக்கும். பழைய வேலையே முடியாமல் இருக்கும் போது இது புது வேலையாக இருக்கும். அலுவலகத்துக்குச் சென்றவுடன் 'எப்போ முடிச்சு தருவ?' என்று நாள் குறிக்கச் சொல்வார்கள்.'அது என்னன்னே புரியல' என்று சொன்னால் 'மேனேஜ்மண்ட்டுக்கு கொடுத்தாகணும்' என்பார்கள். இரண்டு வாரம் ஆகும் என்றால் 'எதுக்கு அவ்வளவு நாள்? வெள்ளிக்கிழமைன்னு குறிச்சுக்குறேன்' என்பார்கள். சரியென்று சொன்னாலும் வம்பு; முடியாதென்றாலும் வம்பு. இப்படியான அழுத்தம்தான் எல்லாவற்றையும் மறக்கச் செய்யும். குடும்பம், குழந்தை என்பதெல்லாம் ஓரங்கட்டிக் கிடைக்கும். பெரும்பாலும் வேலை குறித்தான நினைப்பே ஓடிக் கொண்டிருக்கும். கோவிலுக்கு நேர்ந்துவிட்ட பலியாடாய் திரிந்து கொண்டிருப்போம்.

வேலை என்பது நாம் வாழ்வதற்கான ஒரு காரணி. அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. வேலை இல்லையென்றால் கஷ்டம்தான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இந்த வேலை இல்லையென்றாலும் கூட நம்மால் பிழைத்துக் கொள்ள முடியும். முதலில் இந்தத் தெளிவு வேண்டும். 

'என் குடும்பம் சொகுசா இருந்து பழகிடுச்சு' 'என் பையனுக்கு நல்ல ஸ்கூல்ல இடம் வேணும்' - நாமாகவே உருவாக்கிக் கொள்ளும் இத்தகைய அழுத்தங்கள் நம்மை அலுவலகங்களில் அடிமையாக்கி வைத்திருக்கின்றன. 'ரேட்டிங் குறைச்சுடுவான்' 'வேலையை விட்டு தூக்கிடுவான்' என்று நடுங்குகிறோம். போனால் போகட்டும். நம்முடைய அம்மாவும் அப்பாவும் நமக்கு எதைக் கொடுத்தார்களோ அதைவிடவும் ஒரேயொரு படி அதிகமாக நம் பிள்ளைகளுக்கு கொடுத்தால் போதும். அதானிகளுடனும் அம்பானிகளுடனும் போட்டியிடத் தேவையில்லை.  இதை மனதில் நிறுத்திக் கொண்டால் போதும். 

அறிவுரையாக இதைச் சொல்லவில்லை. ஆனால் வேலை செய்வதற்காக மட்டுமே நாம் பிறப்பெடுக்கவில்லை. அதைத் தாண்டி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள, நாம் செய்ய எவ்வளவோ காரியங்கள் இருக்கின்றன.

ஆயிரம் வேலைகள் இருந்தாலும் மண்ணுக்கும் நமக்குமான தொடர்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும். அது அறுபடும் போதுதான் எதையோ இழந்துவிட்ட உணர்வு உண்டாகும். பயணிக்க முடியவில்லையென்றால் தினசரி உள்ளூர்க்காரர்கள் இரண்டு பேரிடமாவது பேசிவிட வேண்டும். அலைபேசி, ஸ்கைப், வாட்ஸாப் என்று எவ்வளவோ வந்துவிட்டன. என்ன பேசுவது? வெட்டி நியாயம்தான். இன்றைக்கு திமுகக்காரர்களை அழைத்து 'போராட்டம் எப்படி இருந்துச்சு' என்று கேட்டால்,  எடப்பாடி அணியினரை அழைத்து 'அமைச்சர் எப்போங்க வர்றாரு' என்று கேட்க வேண்டியதுதான். நம் ஊருடனான தொடர்ச்சியான தொடர்பு அவசியம். இப்படியான ஓர் உறவை நம் மண்ணுடன் உருவாக்கிக் கொண்டால் 'ஊரை மிஸ் செய்கிறேன்' என்ற உணர்வே உண்டாகாது. அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள்தான் தேவைப்படும். பதினைந்து நிமிடங்களை ஒதுக்க முடியாதா? 

நாம் சமூகப் பிராணிகள். சக மனிதர்கள்தான் நம் பாரங்களை இறக்கி வைக்க சரியான சுமைதாங்கிகள். வேறு எப்படியும் நம்முடைய சுமைகளை இறக்கி வைப்பது சாத்தியமில்லை. பிரச்சினையை பிரச்சினையாகவே அடுத்தவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை. வெறுமனே பேசினால் போதும். எதையாவது பேசலாம். பலூனிலிருந்து காற்று இறங்குவது போல அழுத்தம் குறையும். 

இன்னொரு முக்கியமான விவகாரம்- உடல்நலம். இதில் கோட்டை விட்டுவிடுகிற ஆட்கள் அதிகம். கண்டதையும் தின்பது, அசிரத்தையாக இருப்பது என சாவகாசமாக விட்டுவிட்டு அகப்பட்டுவிடுகிறார்கள். 'எப்படி அவ்வளவு அசால்ட்டா இருந்தான்' என்று கேட்பார்கள். 'நீங்களும் நானும் அசால்ட்டா இல்லையா?' என்றால் பதில் இருக்காது. புகை, குடி, நேரங்கெட்ட நேரம் தூக்கம், மன அழுத்தம் என்று நம் சோலியை முடிக்கும் சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன. 

முப்பதுகளைத் தாண்டியவுடன் நம் உடலில் சில வித்தியாசங்களை உணர முடியும். அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்தால் மூச்சு வாங்கும். இதுவரையிலும் இல்லாத படபடப்பு எட்டிப் பார்க்கும். அயர்ச்சி, உடல்வலி, அசதி என்பதெல்லாம் அறிமுகமாகும். ஜீரண சக்தி குறைவது உள்ளிட்ட சில விஷயங்களை நுட்பமாக கவனித்தாலே நம் உடலில் மெல்ல பிரச்சினைகள் உண்டாகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். 'வரும் போது பார்த்துக்கலாம்' என்று இருந்தால் மொத்தமாக வந்துவிடும். 

சர்க்கரை, ரத்தம் அழுத்தம் உள்ளிட்ட முழுமையான உடற்பரிசோதனை, மருத்துவர்களின் ஆலோசனை உள்ளிட்டவற்றை வருடம் ஒரு முறையாவது செய்து கொள்ளவது உசிதம் . தினசரி நாற்பது நிமிடங்களாவது நடக்கச் சொல்கிறார்கள். நிறையத் தண்ணீர் அருந்தச் சொல்கிறார்கள். அளவோடு உண்ணச்  சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அரை மணி நேரமாவது எது குறித்தும் கவலைப்படாமல் மனதை நிறுத்தி வைத்துப் பழக்க வேண்டும்.  எந்நேரம் பார்த்தாலும் மனதை போட்டு அலட்டிக் கொண்டேயிருந்தால் அது என்னத்துக்கு ஆகும்?

முப்பத்தைத் தாண்டியவுடன் கவனத்தோடு இருந்து கொள்ளலாம். அதையும் மீறி வெள்ளம் நம் தலைக்கு மேலாகப் போனால் விதி. ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் கவனமேயில்லாமல் இருந்து ஏமாந்து போனால் நம் குடும்பத்துக்கு எதிராக நாமே செய்யும் சதிதான். குடும்பம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பரை வெகு நாட்களுக்குப் பிறகு பார்க்கிறேன். வீட்டுக்கு வந்திருந்தார். இன்னமும் இரண்டு மூன்று பேர்கள் உடனிருந்தார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் செல்போனை நோண்டிக் கொண்டிருக்கிறார். அவராகச் செய்யவில்லை. மனம் அப்படிப் பழகிக் கிடக்கிறது. அவரை உதாரணத்துக்காகச் சொல்கிறேன். பெரும்பாலானவர்கள் அப்படிதான். குடும்பத்தோடு இருக்கும் போதும் அப்படித்தானே இருக்கும்?

பேசுவதற்கு மட்டுமே செல்போன். எப்பொழுதாவதுதான் வாட்ஸாப். லேப்டாப்பில் மட்டும்தான் ஃபேஸ்புக்கும், டுவிட்டரும் என்பதையெல்லாம் ஒரு விதியாகவே வகுத்துக் கொள்ளலாம். நம்முடைய நேரத்தை நாம்தான் நேர்த்தி செய்து கொள்ள வேண்டும். அப்படி நேர்த்தி செய்தால்தான் முதலாளிகள் உறிஞ்சிய நேரத்தைத் தவிர மிச்சமிருக்கும் நேரத்தை நமக்கும், நம் நலனுக்கும், குடும்பத்துக்கும், வாழ்கிற சமூகத்துக்கும் கொடுக்க முடியும். பொறுமையாக யோசித்துப் பார்த்தல் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தை மட்டும் ஒழுங்கு செய்தால் போதும். அந்த இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் மனம் வேலையை விட்டு விலகினால் நிறையச் செய்துவிட முடியும். அப்படி எந்தவிதமான நேர ஒழுங்குமில்லாமால் நம் கவனத்தையும் நேரத்தையும் லேப்டாப்புக்கும் செல்போனுக்கும் முதலாளிக்கும் அடமானம் நம் சமநிலை குழையத்தான் செய்யும். இந்தச் சமநிலை குழைவுதான் நம் இழப்புகளின் முதல்படி.   

(இன்னமும் பேசுவோம்)

9 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

super PLEASE continue this

Anonymous said...

VERY VERY SUPER

Anonymous said...

//வெறுமனே பேசினால் போதும். எதையாவது பேசலாம். பலூனிலிருந்து காற்று இறங்குவது போல அழுத்தம் குறையும்.//
Dear Mani anna,
Today only i was thinking about "talking to others", it is free, even though we are restricting ourself from interacting with others. Interacting with others and explaining details are an art, if we practice those things we will be relieved from unknown pressures.

karthickg said...

Wonderful write-up

Catherine Augustine said...

மெகா சீரியல் பாக்குறதுல வர்ற மனஅழுத்தம் இருக்கே ... ' அப்புறம் என்ன ஆச்சு ?' னு ஒரு curiosity ல ஆரம்பிச்சு அப்டியே போய்ட்ருந்துச்சு .. கஷ்டப்பட்டு 100 எபிசொட் பாக்காம இருந்தேன் .. அப்புறம் கதை புரியல .. அப்டியே விட்டுட்டேன் . சரி , அதே நேரம் நியூஸ் பாக்கலாம் னா விவாத நேரம் பாத்தா சீரியலே தேவலாம் ... இப்போல்லாம் நோ டிவி . நோ FB . நோ twitter . அரை மணி நேரம் நியூஸ் பாப்பேன் . அவ்ளோ தான். அதுக்கு மேல வேண்டாம் .. too much of info from too many sources. as far as work is concerned, i just think it as a source of income. I dont stress too much on performance. coz that is giving more stress. very difficult to have work-life balance otherwise .

அன்பே சிவம் said...

ஊருக்கு வழி சொல்லுற யூத் தமிழ் ராசா.,

Anonymous said...

I read this article fully about the comparison of newest and preceding technologies,
it's amazing article.

Anonymous said...

Add insurance too

Asok said...

/ஆயிரம் வேலைகள் இருந்தாலும் மண்ணுக்கும் நமக்குமான தொடர்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும். அது அறுபடும் போதுதான் எதையோ இழந்துவிட்ட உணர்வு உண்டாகும். /
மண்ணுக்கும், நமக்குமான தொடர்பு விட்டு போகும்போது, பயம் வருகிறது. அதாவது நமக்கு வேண்டிய உணவை நாமே விளைவிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கும்வரையிலும், நமக்கு பயம் இருக்காது. எப்ப நாம பிறரை நம்பி வாழ ஆரம்பித்து விட்டோமோ, அப்ப மன அழுத்தம், பயம் இருந்துகொண்டேதான் இருக்கும்.