Apr 13, 2018

சாதியும் குணமும்

சாதீய அடிப்படையில் மனிதர்களைப் பொதுமைப்படுத்தினால் அதைவிடவும் மோசமான மனநிலை வேறு இருக்க முடியாது என நம்புகிறேன். 'இந்தச் சாதிக்குன்னு ஒரு குணம் இருக்கு...' என்பார்கள். குறிப்பிட்ட சாதிக்கு என்றில்லை; ஒவ்வொரு சாதிக்கும் சொல்வார்கள். 'அப்படித்தானோ' என்று சந்தேகம் எழுவதும் தவிர்க்க இயலாதது.  

ஒரு குடும்பத்துக்கு என குணம் இருக்கும் அல்லவா? வளர்ப்பின் அடிப்படையில், பெற்றவர்கள் எப்படி இருக்கிறார்களோ அவர்களைப் பார்த்து வளரும் பிள்ளைகளின் குணம், அண்ணனைப் பின்பற்றும் இளவல்கள் என குடும்பத்தில் ஒருவாறான குண ஒற்றுமை இருக்கும். அதே போல மேல் வீதி, கீழ் வீதி, வளவு, அக்ரஹாரம் என்று ஒரே சாதியைச் சார்ந்த குடும்பங்கள் காலங்காலமாக ஒன்றாக வாழும் போது சாதியக் குழுக்களிடமும் அப்படியானதொரு குண ஒற்றுமை உருவாவதில் வியப்பேதுமில்லை. இன்றைக்கு வீதிகள், வளவுகள் என்பதெல்லாம் நகர்ப்புறத்தில் ஒழிந்திருந்தாலும் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸாப்பிலும் மீண்டும் நம்மை குறுகிய வட்டத்துக்குள் இணைக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவையெல்லாம் பாவனைகள்தான். பிம்பங்கள். உடைந்துவிட எல்லாவிதமான சாத்தியங்களும் இருப்பதாக நம்பலாம்.

நீட் தேர்வுக்காக சுமார் பத்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறோம் இல்லையா? அதில் ஒரு பழங்குடியின மாணவன் இருக்கிறான். மலைப்பகுதியைச் சார்ந்த மாணவன். அவன் உள்ளூரில் வேறொரு பள்ளி ஆசிரியரின் கண்காணிப்பில் இருப்பவன். அவ்வப்பொழுது அவரிடம் அவனைப் பற்றி விசாரிப்பதுண்டு. இத்தனை நாட்களாக அவன் ஹரிஜன விடுதியில் இருந்தான். 

ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்த பிறகு அவன் எங்கு தங்கியிருக்கிறான் என்று சொன்னால் நம்புவது அவ்வளவு எளிதாக இருக்காது. அவனைக் கண்காணிக்கும் ஆசிரியரின் வீட்டில் தங்கிப் படிக்கிறான். ஆசிரியர் தொடக்கப்பள்ளியொன்றில் பணியாற்றுகிறார். பிராமணர். அவர்களது குடும்பம் கூட்டுக் குடும்பம். பெற்றோர்கள், சகோதரர்கள் என இணைந்து வாழும் ஆச்சாரமான அய்யங்கார் குடும்பம். உள்ளூர் கோவிலில் அவர்களது குடும்பத்தினர்தான் அர்ச்சகர்கள். இந்தக் குடும்பத்தினர் ஒரு பழங்குடியின மாணவனைத் தம்மோடு தங்க வைத்து அவனுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து கொடுத்து நீட் தேர்வுக்கு படிக்க வைக்கிறார்கள். தனிமனிதன் செய்வது பெரிய காரியமில்லை. ஒரு குடும்பமே ஏற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய செயல்? எத்தனை குடும்பத்தினரால் செய்ய முடியும்? சாதியை விடுங்கள். அந்நிய மனிதனை தம்மோடு தங்க வைக்கிற மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது? சத்தியமாகச் சொல்ல முடியும்-  என் வீட்டில் இதைச் செய்வதற்கான சாத்தியமில்லை. 

இத்தகைய செயலை நேரடியாகப் பார்க்கும் என்னால் எப்படி பிராமணரை பொதுமைப்படுத்தி வெறுக்க முடியும்.

ஹரிஜன விடுதி என்று சொன்னேன் அல்லவா? தக்கர் பாபா விடுதி. அதனை நிறுவியர் ஜி.எஸ்.லட்சுமண அய்யர். காந்தியவாதி. பல நூறு ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக் காரர். அய்யரின் தந்தையார் அந்தக் காலத்தில் வங்கி ஒன்றைச் சொந்தமாக நடத்தி வந்தவர் என்றால் கணித்துக் கொள்ளலாம். அய்யர் தம் காலத்தில் எல்லாவற்றையும் தானம் செய்தார். அரசுக் கட்டிடங்களுக்கு நிலங்களை எழுதி வைத்தார். பள்ளிகளுக்கு இடம் கொடுத்தார்.  தலித் மக்களுக்காக இறுதி வரை போராடினார். 

எங்கள் அப்பா திரும்பத் திரும்ப ஒன்றைச் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் எஸ்.எஸ்.எல்.சியில் தேர்ச்சி பெற்றுவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சமயம் அது. அப்பொழுது அய்யரை யதேட்சையாகச் சந்திருக்கிறார். அப்பாவின் படிப்பை எல்லாம் விசாரித்துவிட்டு 'உங்க ஊர்ல எம்பேர்ல எட்டு சென்ட் இடம் இருக்கு..உம்பேர்ல எழுதிக்குறியா' என்று கேட்டாராம். 'எதாவது தொழில் செஞ்சு பொழைச்சுக்க' என்று சொல்லியிருக்கிறார் அவர். 'என் கால்ல அப்போ செருப்பு கூட இல்லை..ஆனால் என்னை நம்பிக் கேட்டாரு' என்று அப்பா சொல்வார். அய்யர் இதை வாய் ஜாலத்துக்காகச் சொன்னதில்லை. அவரது தாராள குணத்தைச் சுட்டிக் காட்டுவதற்காகச் சொல்கிறேன். 

இன்றைக்கு அவரது குடும்பத்துக்கு என்று எந்தச் சொத்துமில்லை. அவரது மறைவின் போதும் கூட்டமில்லை. எம்.எல்.ஏ தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அய்யரின் சிலையை, அவர் நிறுவிய காந்தியின் சிலைக்கு முன்பாக நிறுவ இடம் கேட்ட போது ஆண்ட சாதியினரின் சிலர் மறுத்துவிட்டார்கள். இத்தனைக்கும் சிலை நிறுவ கோரப்பட்ட இடம் அய்யரால் பள்ளிக் கூடத்துக்கு ஒதுக்கப்பட்டது. 

அவரது மறைவை உதாசீனப்படுத்திய, அவரைத் தோற்கடித்த, இடம் தர மறுத்த பிற மக்களை வெறுக்கலாம். இந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டவன் எப்படி பிராமணரை பொதுமைப்படுத்தி வெறுக்க முடியும். அப்படி வெறுத்தால் அது லட்சுமண அய்யரையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? இந்த ஆசிரியரையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்?

ஜி.எஸ்.லட்சுமண அய்யருடைய மனதுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது மேற்சொன்ன ஆசிரியரின் குணம். பெயரைக் குறிப்பிட்டு எழுத்துவத்தைக் கூட அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை. 'சிவக்குமார் எங்க தங்கியிருக்கிறான் சார்' என்று கேட்ட போது தயங்கியபடி 'எங்கள் வீட்டில்தான் இருக்கிறான்' என்றார். அடுத்த இரண்டு நாட்களுக்கும் இதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். 

அந்தணர்கள்/ப்ராம்மணர்கள்/பார்ப்பனர்கள் அவர்கள் பாட்டுக்கு யார் வம்புக்கும் போகாமல் செயல்படுகிறார்கள். அப்பேர்பட்ட ஒரு பாவப்பட்டசாராரிடம் உங்களுக்கென்ன கோபம்? என்று ஒரு கேள்வி Sarahah வில் வந்திருந்தது. 

தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது அமர்ந்திருந்த காஞ்சி மடத்து விஜயேந்திரனின் செயல் வெறுப்பை உண்டாக்கினால் அதை விமர்சனம் செய்யத் தோன்றுகிறது. அது எப்படி அத்தனை பிராமணர்களையும் எப்படி வெறுப்பதாகும்? மடத்தனமாக வெறுப்பை விதைக்கும் ராஜா, எஸ்.வி.சேகர் வகையறா மீது எரிச்சல் வரத்தான் செய்கிறது. இந்துத்துவம் என்ற பெயரில் பிற மதங்கள் மீது வெறுப்பைக் கக்குகிறவர்கள் மீது கோபம் வருகிறது. Minority Appeasement என்று மிக இலாவகமாகச் சொல்லிவிடுகிறார்கள். ஒரு வீட்டில் சவளைக் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கு அதிகக் கவனம், பிடி சோறு கூடுதல் என்பதுதான் மனிதாபிமானம். அதைத்தான் சிறுபான்மை மக்களுக்குச் செய்ய வேண்டும். இதனை எதிர்த்தால் எந்தச் சாதிக்காரனாக இருந்தாலும்  அவன் மீது கோபம் வரத்தான் செய்யும். ஒரு கட்சியை, அதன் கொள்கையை, சித்தாந்தத்தை எதிர்ப்பது என்பது தனிப்பட்ட மனிதர்களைப் பொதுமைப்படுத்தி வெறுப்பது ஆகாது. 

மனித இனத்துக்குள் நிலவும் அத்தனை பிரிவினைகளையும் தாண்டி மனிதம் மட்டுமே அழியாச் சுடராக எரிந்து கொண்டிருக்கும். எப்பொழுது அந்தச் சுடர் அணைந்துவிடுமோ அப்பொழுது இந்த பூமி நாம் வாழத் தகுதியற்றதாகிவிடும். இதனை முழுமையாக நம்புகிறேன். சுடர் அணைந்துவிடாமல் காப்பதுதான் மனிதத்தை விரும்பும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதே தவிர ஏதேனும் ஒரு அடையாளம் குத்தி குழுவாதத்தை ஊக்குவிப்பதில்லை. இங்கே கடவுளர்களும் சாத்தான்களும் மனிதர்களின் உருவில்தான் உலவுகிறார்கள். கடவுளருக்கும் சரி; சாத்தான்களுக்கும் சரி -சாதி முக்கியமில்லை. மனிதர்களின் குணங்கள்தான் பிரதானம். 

14 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Minorities are not "Savalai pillais" as you said and also all in majority community are not well nourished in terms of wealth, knowledge etc.,
If your point is nourishing the "savalai pillais" then try to nourish all "savlais" across community, that would be fair and equality.

Please note the name of the Kanchi Madathipathi is Vijayendra Saraswathi @ Vijayendrar and not Viayayendran, it would be correct if you call by proper name and not by a name you think it fits well.
Verrappan is Verrappan only and not Veerappar
Bharathiyar is Bharathiyar and Bharathiyan

Kannan said...

//ஒரு வீட்டில் சவளைக் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கு அதிகக் கவனம், பிடி சோறு கூடுதல் என்பதுதான் மனிதாபிமானம். அதைத்தான் சிறுபான்மை மக்களுக்குச் செய்ய வேண்டும். இதனை எதிர்த்தால் எந்தச் சாதிக்காரனாக இருந்தாலும் அவன் மீது கோபம் வரத்தான் செய்யும்.// பிரச்னை அந்த சவலை குழந்தைக்கு கொடுப்பதில் இல்லை. அது போல இருக்கு மற்ற சவலை குழந்தைகளுக்கு உணவு அவர்களின் பிறப்பால் மறுக்கப்படும்போது வருகிறது. எதாவது ஒரு வருடம் சொல்லட்டுமே. அதுவரை இந்த ஒதுக்கீடுகள் இருக்கும் என்று. இப்படி மறுத்து கொண்டே இருந்தால், பிற்காலத்தில் இவர்களின் சந்ததியினருக்கு ஒதுக்கீடு கொடுக்க வேண்டி வரும். உங்கள் உதாரணம் சரி அல்ல.

Anonymous said...

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/article8266914.ece

Anonymous said...

இன்றைக்கு வீதிகள், வளவுகள் எல்லாம்
நகர்புறத்தில் ஒழிந்திருந்தாலும்.//
நல்ல ஜோக்
பிராமணர், முதலியார், கவுண்டர்
எல்லாம் ஒழிச்சாச்சு.
கவுன்சிலர், அரசு ஊழியர், தொழிலதிபர்கள்னு
புது சாதிக வந்திருச்சல்ல.
அக்ரஹாரம், குடித்தெரு, சேரியல்லா
இல்லைனா என்ன?
விஐபி ஏரியா, ஐஏஎஸ் ஆபிசர் குடியிருப்பு,
புறநகர், ஸ்லம்னல்லா வந்திருச்சல்ல.
உடனே போராளிக வானத்துக்கும், பூமிக்கும்
குதிக்காதிங்க.
அது பிறப்பின் அடிப்படையில் உண்டான
பாகுபாடு. ஆனா இது முயற்சி, திறமைனல்லா
கம்பு சுத்த கூடாது.
உங்க முயற்சி திறமையெல்லாம் மூனாவது
தலைமுறையொன்னு முடிசூடறுதுக்கு ஹம்மர்
கார்ல வரும் போதே தெரிஞ்சுகட்டம்.
இனி இது பரம்பரை பரம்பரையா
தொடரும்.
இந்த திராவிடிஸ்ட்களும், தலித்திஸ்ட்களும்
ஏதோ தாங்கள்தான் இந்த சாதிபாகுபாடுகளக்கெதிரா
போராடி மாற்றம் கொண்டு வந்த மாதிரி
தங்களை நம்பும் இளைஞரகள் மத்தியில
குறிப்பிட்ட சமூகத்து மேல வெறுப்ப வளர்த்து
விடறாங்க.
ஆனா உண்மை எனனன்னா உலக, இந்திய
அரசியல் சூழ்நிலை இந்தியாவில் பிரிட்டீஷ்
ஆட்சி அதோடு பிராமணர்களில் இருந்த
முற்போக்கு எண்ணங் கொண்டவர்களாலும்தான்
இந்த சமூக மாற்றங்கள் சாத்தியமாகி இருக்கிறது.

raja said...

மணிகண்டன் சொன்னதில் தவறேதும் இருப்பதாக தோன்ற வில்லை. சாதி பார்த்து சகலத்தையும் செய்யும் ஆதிக்க சாதிக்காரர்கள்தான் இனிமேல் பிரச்சனையே தவிர பிராமணர்கள் அல்ல. ஏனென்றால் இனி வருங்காலத்தில் நடக்க போகும் சகல சாதி பிரச்சனைகளுக்கும் ஆதிக்க சாதிகள்தான் காரணமாக இருக்க போகிறார்கள்.

அடங்கி இருந்த தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சியை தாங்க முடியாமல் பொறாமையால், ஆற்றாமையால் ஏங்குவது தேவையற்றது. இது மஹாபாரதத்தில் எல்லாம் இருந்தும் துரியோதனன் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தம் கட்டி வாழ்வதை பொறுக்க முடியாமல் மாமா சகுனியிடம் புலம்பி அது கடைசியில் குல நாசத்திற்கே கொண்டு போய் விட்டு விட்டது.

மணிகண்டனின் கட்டுரையின் சாராம்சம், சாதிகளின் அடிப்படையில் மனிதர்களின் குணத்தை கணிக்க முடியாது என்பதே. இந்த பூமி என்னும் அற்புத கிரகத்தில் ஒவ்வொரு நாளும் முற்றிலும் புதியதே. அதை நாம் எவ்வளவுதான் அற்புத அனுபவ அறிவாக இருந்தாலும் சரி, அதை கொண்டு ஒரு விஷயத்தை அணுகினால், முற்றிலும் புதிய சவாலுக்கு பழைய பதில் அளிப்பது போல் இருக்கும்.

நேற்று ஒருவர் கெட்டவர் என்றால் அவர் நாளையும் அப்படித்தானா அல்லது நேற்று ஒருவர் நல்லவர் என்றால் அவர் நாளையும் நல்லவரா? இல்லையே. இப்படி குடும்பத்தில் ஆரம்பித்து நண்பன், காதலி, கணவன் என்று எல்லோரையும் நாம் நேற்றைய அனுபவத்தில் நமக்கு உள்ள கணிப்பை, எதிர்பார்ப்பை வைத்து அணுகுவதால்தான் சண்டை சச்சரவு வருகிறது.

அப்படி இருக்கும் போது செட்டியார் என்றால் கணக்கு பார்ப்பார், நாடார் என்றால் நன்றாக தொழில் செய்வார், தேவர் என்றால் கத்தியை எடுப்பார், கவுண்டர் எல்லாம் சாதி பார்ப்பார் என்று சொல்வது எவ்வளவு மடத்தனம்!!

Anonymous said...

நமது நன்றிகெட்ட தன்மையினால், இன்றைக்கு மோசமான ஆட்சியர்களால் ஆளப்படுகிறோம். தரங்கெட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளினால் நிர்வாகம்
செய்யப்படுகிறோம். (எந்நன்றி கொன்றார்க்கும் . . . .) நாம் நம் தரப்புக்கு லட்சுமண அய்யரை நன்றியோடு நினைவு கூறுவோம்.

Anonymous said...

குடந்தையில் மகாமகம் நியாபகம் வருகிறது. இந்துக்களில் பல தரப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்தானே கலந்து கொண்டார்கள். ஒரு 10, 20 மகா மகத்திற்கு முன்பு கூட இப்படித்தானே நடந்திருக்கும். கொஞ்சம் அதிக களேபரமான கூட்டமாக இருந்திருக்கலாம். சாதியைப் பார்த்துப் பார்த்து விசாரித்து ஒவ்வொருவராக குளத்தில் குளிக்க அனுமதிக்கப் பட்டிருப்பார்களா? நம்ப முடியவில்லை.

Anonymous said...

இங்கே கடவுளர்களும் சாத்தான்களும் மனிதர்களின் உருவில்தான் உலவுகிறார்கள். கடவுளருக்கும் சரி; சாத்தான்களுக்கும் சரி -சாதி முக்கியமில்லை. மனிதர்களின் குணங்கள்தான் பிரதானம்.
TRUE.100%TRUE. SAME IS APPLICABLE TO OTHER COUNTRIES AND STATES ALSO.
I WILL BE FAILING IN MY DUTY AND COMMITTING A BREACH OF TRUST IF I DO NOT SHARE NOW AT LEAST MY EXPERIENCES.
IN LANKA MORE THAN ONCE MY ENTIRE FAMILY HAS BEEN FED BY SINHALA STRANGER FAMILIES.
TWICE IT WAS AT 'MATHRA' RAJAPAKSHE'S HOME TOWN/CONSTITUENCY.
THE KINDNESS SHOWN BY LANKAN ARMY TO MY WIFE /SONS WAS REMARKABLE.
DURING MY STAY IN LANKA MANY SUCH INCIDENTS WERE THERE.
NOT ELABORATING THEM FOR FEAR OF BEING MISTAKEN.
IN CHINA (OUR SWORN ENEMY ) ALSO SIMILAR THINGS HAPPENED.
SELF/WIFE LOST OUR WAY. AT NIGHT AN YOUNG GIRL WALKED US BACK THOUGH SHE HAD TO IN THE OPPOSITE DIRECTION.
SIMILAR THING HAPPENED ON OUR VISIT TO 'GREAT WALL OF CHINA'.WE WERE STANDING IN THE WRONG BUS STOP.
AN YOUNG STUDENT COUPLE WALKED US BACK TO THE CORRECT BUS STOP AND GIFTED US ONE BOTTLE OF DRINKING WATER.
BOTTLED WATER IS VERY COSTLY IN CHINA. OUR OFFER TO PAY WAS TURNED DOWN SINCE WE ARE THEIR GUESTS.
AT MUMBAI DURING 'SHIV SENA' BANDH MY WIFE WENT OUT (WITH OUT KNOWING OF THE BANDH)TOBR7NG MILK FOR MY VERY YOUNG SONS. THE BANDH WAS AGAINST SOUTH INDIANS.
A SHIV SHAINIK ESCORTED MY WIFE BACK HOME TELLING LIFE WAS MORE IMPORTANT THAN MILK.
IN ASSAM MANY TIMES MYSELF AND COLLEAGUES HAVE BEEN HELPED BY 'ULFA' ASSAMESE TERRORIST GROUP.
மனிதம் மட்டுமே அழியாச் சுடராக எரிந்து KONDU IRUPPATHAL THAN THIS IS POSSIBLE.
IVARGAL THAN கடவுளர். VALTHUVOM.
ANBUDAN,
M.NAGESWARAN.

சேக்காளி said...

தனது ஆளுமைக்கு ப்ரச்னை வரும் என்ற எண்ணம் வரும் போது தான் அடக்கி வைக்கும் எண்ணம் வருகிறது என நினைக்கிறேன்.
இதை
மாமியார் - மருமகள்
ஆண் - பெண்
முதலாளி - தொழிலாளி
மேல் சாதி - கீழ் சாதி
பறையன் - சக்கிலியன்
என தொடரலாம்.
இயற்கையாகவே உதவும் எண்ணம் உடைய ஒருவருக்கு மேற்சொன்ன எதுவுமே தடையாக இருக்காது.ஏனென்றால் அது (உதவி) ஆதாயம் கருதி செய்யும் முதலீடு அல்ல. உதவி பெற்றவர் நன்றாக இருப்பதை பார்க்கும் போது ஏற்படும் திருப்தி அல்லது போதை.
இது சொந்தக்காலில் நிற்பவர்களுக்கு எளிதில் அமைந்து விடும். அதற்கு உழைப்பு அவசியம். உழைப்பின்றி வாழ வேண்டுமென்றால் இன்னொருவரை அடிமையாக்கியே ஆக வேண்டும்.
அந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர் மற்றும் அந்த கூட்டு குடும்பத்தை அப்படியே விட்டு விடுங்கள். அந்த உதவியின் ஆத்ம சந்தோசத்தை அனுபவிக்கும் உரிமையை அவர்களுக்கே அவர்களுக்கு என்று விட்டு விடுங்கள். பாராட்டு என்பது அவர்களை பொறுத்த வரை மனம் கூசச் செய்யும் செயலாகவே அமையும்.
முரண்டு பிடிப்பவர்களுக்கு உழைப்பை கற்றுக் கொடுப்போம்.
அதற்கு முன் "னின்" என்பதை "ரின்" என மாற்றினால் நன்றாக தான் இருக்கும்.
இந்த ஐயங்கார் ஆசிரியருக்கு மணியை எப்படி "பிடித்து போனது".
இதற்கு விடை இருக்கிறதா மணி உங்களிடம்?

Anonymous said...

"சவலை பிள்ளை " வாதம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

அவர்கள் சிறுபான்மையினர் இல்லை... இரண்டாவது பெரிய பெரும்பான்மை.

இங்கு பெரும்பான்மையினரில் 10 இல் 9 பேர் secular . ஆனால் நீங்கள் சொல்லும் சிறுபாண்மையினரில் 10 இல் 1 தான் செகுலர். சிறுபான்மையிலினரில் பெரும்பான்மை உள்நோக்கம் இந்த தேசத்தை அவர்களுடைய தேசமாக மாற்ற வேண்டும் என்று வெறியுடன் திரிபவர்கள்.

உங்களால் இதை இல்லையென்று ஆணித்தரமாக மறுக்க முடியுமா...

(Anyways, just curious if you will post this comment)

RL said...

இங்க மதச்சார்பின்மை பேசுவது ஹிந்துக்கள் மட்டுமே. சிறுபான்மையினர் (most of them) என்று நீங்கள் சொல்கிறீர்களே, அவர்களுடைய மத வெறிதான், இங்கே ஹிந்துக்களை தங்கள் மதம் நோக்கி தள்ளுகிறது, எதிர் பக்கம் நம்பிக்கையின்மை அதிகரிக்கின்றது .

Anonymous said...

LOL on the first comment! Not sure what he is trying to say through Fair and Equality!
Example given in the article is completely different and taken in wrong sense!

raja said...

நாகேஸ்வரன்,

உங்கள் பதிவு அருமை. மணிகண்டனின் இந்த கட்டுரைக்கு உங்கள் கருத்து அருமை. எனக்கும் சீனர்கள் மேல் கோபம் உண்டு. நாட்டு பற்றினால் அல்ல. அவர்களின் திபெத்திய ஆக்கிரமிப்பு, விலங்கு கடத்தல், மனித உழைப்பு சுரண்டல் போன்றவற்றால் வந்தது.

நான் அமெரிக்காவில் இருந்த காலத்தில், என்னிடம் கார் லைசென்ஸ் இல்லை. எனவே வேறு வழி இல்லாமல், பக்கத்தில் உள்ள சீன முடி வெட்டுபவரிடம் சென்றேன். அவர் ஒரு வயதான சீன பெண். உங்கள் முடி கொட்டுவதற்கு சத்து இல்லாத உணவே காரணம் என்று ஏதேதோ சொல்லியபடி இருந்தார். வழக்கமாக பார்பரிடம் நான் கேட்கும் அறிவுரை என்பதால் கடமையே என்று கேட்டு கொண்டு இருந்தேன். கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி விட்டு எங்கிருந்தோ அரிசி கொண்டு வந்தார். ஜவ்வரிசி போன்று தோற்றம். தயவு செய்து இதை பொங்கி சாப்பிடுங்கள் என்றார்!! அவர் நீட்டிய அந்த நிமிடங்கள், அந்த குரலின் கனிவு இன்றும் என் கண்ணில் நிற்கிறது.

வெளியில் வந்து வானத்தை பார்த்தேன். நம் அனுபவ அறிவு, கடவுள்கள், சின்னங்கள், கொடிகள் எல்லாம் எவ்வளவு குறுகியது!! அதை வைத்து கொண்டு, தொடக்கமும் முடிவும் இல்லாத இந்த பிரபஞ்சத்தை அணுகுவது எவ்வளவு மடத்தனமானது, எவ்வளவு ஆபத்தானது என்று உணர்ந்தேன்.

அதே நேரத்தில் எல்லா சீனர்களும் நல்லவர்கள் என்று வாதிடவும் முடியாது. நேற்றைய அனுபவ அறிவே இன்று பழசு என்று ஒதுக்கும் போது, மனிதர்களை எப்படி பொதுமைப்படுத்த முடியும் என்பதுதான் என் கேள்வி. மணிகண்டன் சொல்ல வருவதும் அதைத்தான் என்று நினைக்கிறேன்.

Tamil Us said...

உங்களது பதிவு www.tamilus.com திரட்டியில் பகிரப்பட்டுள்ளது